அனைத்தையும் நாடி  இளைஞர்களின் கணினி அறிவு முக்கியத்துவம்!

இளைஞர்களின் கணினி அறிவு முக்கியத்துவம்!

2022 Dec 23

இன்றைய நவீன உலகில் அனைத்தும் இயந்திரமயமாகி விட்டன. இன்று உலகில் எங்கும் இயந்திரம் எதிலும் இயந்திரம் என்ற அளவில் இயந்திரங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதில் மிக முக்கியமானது கணினி என்றால் மிகையாகாது.

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் இன்றைய அறிவியல் தகவல் வளர்ச்சி உலகத்தை ஒரு சிற்றூராக மாற்றிவிட்டது. தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் நம்வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தகவல் தொடர்புச் சாதனங்களால் ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூட உடனுக்குடன் மற்றோரிடத்தில் அறிய முடிகிறது. இவற்றில் கணினியின் பங்கு அளப்பரியது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுப்பிடிப்பான கணினி, சில நொடிகளில் மில்லியன் கணக்குகளைச் செய்து காட்டும். இதை முறையாக இயக்கினால் மனித மூளையைப்போன்று நுண்ணறிவுத் திறனோடு வேலைச் செய்யும். கணினி இன்று எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

1946இல் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்ற கணினிதான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி (first general-purpose electronic computer). அது அமெரிக்க ராணுவம் பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்டது. ENIAC பிரம்மாண்டமான ஒரு கணினி. அதன் எடை 27,000 கிலோகிராமுக்கு (60,000 பவுண்டுகளுக்கு) மேல் இருந்தது; அது ஒரு பெரிய அறையையே நிரப்பக்கூடியதாக இருந்தது. தரவைச் செயலாக்க (To process data), ENIAC சுமார் 18,000 வெற்றிடக் குழாய்களைப் (vacuum tubes) பயன்படுத்தியது. இதில் ஒவ்வொரு குழாயும் ஒரு சிறிய பல்பின் அளவு இருக்கும். அந்தக் குழாய்கள் எளிதில் தீர்ந்துபோனதால் (burned out) தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது.

பாரிசு நகரை சார்ந்த பிளேஸ் பாஸ்கல் என்னும் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார். கி.பி. 1833 இல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் கணினியை முதலில் வடிவமைத்தார். ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்லேஸ் என்பவர் கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால், முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்பட்டார். மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, ஹார்வார்டு பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் ஹோவார்டு ஜாக்கன் என்பவரை ஐ.பி.எம். பொறியாளர் துணையுடன் எண்ணிலக்கக் கணினியைக் கண்டறித் தூண்டியது. இதற்கு ஹார்வார்டு மார்க்-1 எனப் பெயரிட்டனர். தற்போது அமெரிக்காவும் ஜப்பானும் மீத்திறன் கணினியை உருவாக்கப் போட்டியிடுகின்றன.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகக் கணினியிலும் புதுமையான அமைப்புகள் தோன்றிய வண்ணம் உள்ளன. இன்றைய நிலையில், பல்லூடக வசதிகொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி முதலிய கணினிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. கணினியைப் பயன்படுத்துவோரின் தேவை அதிகரிக்க அதிகரிக்க கணினியின் வளர்ச்சியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன் இணையத்தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் பெறமுடிகிறது.

இன்றைய காலகட்டத்தில் அங்கும் கணினி எதிலும் கணினி என்ற அளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்விக் கூடங்கள் போன்றவற்றில் பாடம் புகட்டுவதற்காக கணினியையே பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாது சில்லறை கடைகள் முதல் பெரிய காரியாலயங்கள் வரை அனைத்திலும் வேலைகள் செய்வதற்கு கணினியே துணை நிற்கிறது.

இவ்வாறு கணினியின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டு செல்லும் இன்றைய காலகட்டத்தில் அவற்றை முறையாகப் பாவிக்கவும் கையாளவும் தெரிந்திருக்க வேண்டியது மிக முக்கியம். அதுவும் கணினி அறிவு இன்றைய இளைஞர்களுக்கு மிக முக்கிய தேவை ஒன்றாக உள்ளது. கணினியை எவ்வாறு பயன்படுத்துவது, இயக்குவது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அதை இன்றைய இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு சவால்களுக்கு அவர்கள் முகங்கொடுக்க நேரிடுகிறது.

இன்று கணினி குறும்பர்/ஹேக்கர்(hacker)களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்த நிலையில் உள்ளது. ஹேக்கர்கள் பாவனையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களது தகவல்களை கடத்தி பிறருக்கு அனுப்புகின்றனர். இதில் அவர்களின் தனிப்பட்ட தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், முக்கிய ஆவணங்கள் என்பன உள்ளடங்கும். இவ்வாறு ஹேக்கர்கள் தகவல்களை திருடி பயனாளிகளை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்கின்றனர். அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்காத பட்சத்தில் தகவல்களை வெளியிட்டு விடுவதாக பயமுறுத்துகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும், வங்கிக் கணக்குகள், வியாபாரக் கணக்குகள் போன்றவற்றை ஹேக் செய்து பல லட்சம் ரூபாய்களையும் கொள்ளை அடிக்கின்றனர்.மேலும் இது போன்று பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணம் கணினியை எவ்வாறு உபயோகிப்பது என்ற அறிவு இல்லாமையே ஆகும்‌. கணினியை எவ்வாறு கையால்வது, எவ்வாறு இயக்குவது, தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தெரியாததால் தால் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் கடத்தப்படுகின்றன.

மேலும், பல இளைஞர்கள் கணினியை முறையாக பாவிக்கத் தெரியாது பாவிப்பதால் பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுப்பதோடு, தற்கொலைகளும் செய்து கொண்டுள்ளனர். இவ்வாறான இள வயது மரணங்களை தடுக்க வேண்டும் எனில், கணினி பற்றிய அறிவு அவசியம் ஆகும்.இன்று கணினி பற்றி பல்வேறு இடங்களில் கற்றுக் கொடுக்கிறார்கள். அதை சரிவர கற்று கணினியை பாவிப்பதால் கணினியால் ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம்.

எனவே, இன்றைய இளைஞர் சமூகத்திற்கு கணினி அறிவு மிக முக்கியமான ஒன்றாகும்.

F. முனீரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php