2023 Jan 24
“உணவே மருந்து” எனும் பாரம்பரியத்தினைக்கொண்ட சமூகம் நம்முடையது. ஆனால் தற்போது அந்த உணவே விஷமாகிக்கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை. இதற்கு என்ன காரணம்? இதன் பின்னணியில் இருக்கும் உணவு அரசியல் என்ன? ” உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் “என்கிற வள்ளுவனின் வாக்குப்போல் உழவன் தலைநிமிர்ந்து நின்றகாலம்போய், உழவுத்தொழில் மழுங்கடிக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டு வணிகத்தின் பின்னால் சுழன்றுகொண்டிருந்த நமக்கு தற்போதைய இலங்கையின் நிலை உணவு உற்பத்தி பற்றியெல்லாம் கொஞ்சம் சிந்திக்கத்தான் செய்திருக்கின்றது.
நம்முடைய நாட்டில் செயற்கையாக தயாரிக்கப்படும் உரங்களை நம்பியே தேயிலை உற்பட அனைத்து விவசாயமும் நடைபெறுகிறது . நாட்டின் மொத்த இறக்குமதியில் இந்த செயற்கை உரங்களின் இறக்குமதியும் பாரிய பங்களிப்பைச் செய்கிறதெனலாம். தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையினால் எந்தெந்த இறக்குமதியிலெல்லாம் கை வைக்கலாம் என சிந்தித்த இலங்கை அரசு இந்த செயற்கை உரங்களின் இறக்குமதியிலும் கைவைத்தது.
“இயற்கை உரங்களை நம்பி இனி விவசாயம் செய்வோம்” எனும் கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது . இது நல்ல விடயம்தான். ஆனால் , அவசரமாக இது சாத்தியப்படுமா? ஏனெனில் அதுவொரு நீண்டகால திட்டமாக அமையவேண்டிய ஓர் செயன்முறை. தமிழ்த் திரைப்படங்களில் வரும் ஒரேயொரு பாடலிலேயே பணக்காரராக மாறும் பார்முலாவோ அல்லது ஒரே இரவில் நடந்துவிடும் மேஜிக்கோ அல்ல.
இயற்கை உரங்களை உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை இலங்கை அரசு முதலில் நடைமுறைப்படுத்தவேண்டும். அதன் உற்பத்தியாளர்களுக்கு மானியங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கவேண்டும். அதைவிடுத்து ஒரு நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த ஒரு சிஸ்டமான செயற்கை உரங்களை நம்பியே விவசாயம் செய்துபழகியபின் அதனை சடுதியாக தடைசெய்வதென்பது பதுக்கி வைத்தல், அதிக விலையேற்றம், விளைச்சலின்மை விவசாயிகள் நட்டமடைதல் மற்றும் அவர்களின் கடன் சுமை என இனி விவசாயமே வேண்டாம் எனும் அளவிற்கு மனஉளைச்சல் உற்பட பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஓன்று.படிப்படியான மாற்றங்களை செயற்படுத்த முன்வருவதே ஒரு நல்ல ஆட்சியாளர்களின் அழகு ஆனால் தற்போது இவர்கள் போட்டிருக்கும் “சடன் பிரேக்” நாட்டின் விவசாயத்தை எந்த அளவிற்கு அதல பாதாளத்திற்கு கொண்டுசென்றதென்பதை வருட ஆரம்பத்தில் பார்த்தோமல்லவா?
நாட்டின் பொருளாதார பிரச்சினையினை மையப்படுத்தி நம் நாட்டின் ஆளும்கட்சி உறுப்பினரொருவர் இனி இலங்கை மக்கள் தம்முடைய ஒருவேளை உணவினை தியாகம்செய்துவிட்டு இரண்டுவேளைகள் மட்டுமே உணவு உண்ணவேண்டும் எனக்கூறிய கருத்து சமூகவலைதளமெங்கும் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம் . ஆட்சிக்கு வருபவர்கள் ஒரு சிறந்த வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புவார்கள் என்கிற நம்பிக்கையிலேயே, ஒவ்வொரு குடிமகனும் வாக்களித்துக்கொண்டிருக்கின்றோம் . ஆனால், ஆட்சிக்குவந்தபின் அவர்கள் மக்களைப்பற்றி யோசிக்காமல் பொறுப்பற்ற ரீதியில் கூறும் கருத்துக்களும் எடுக்கும் முடிவுகளும் வாக்காளர்களை ஓர் அயர்ச்சி நிலைக்கு தள்ளிவிடுகின்றதெனலாம். ஒருவரது உணவை சுருக்கிக்கொள்ளவேண்டும் என யாரும் கட்டளையிடுவதென்பது ஒருவித அடிப்படை மனிதஉரிமை மீறலே என்னைப் பொறுத்தவரையில்.
பொருட்களுக்குத் தட்டுப்பாடா? அதற்கான மாற்றுத்தீர்வுகள் முன்மொழியப்படவேண்டும் . தட்டுப்பாட்டில் இருக்கும் உணவிற்கு பதிலாக வேறு உணவுகளை மாற்றீடாக பயன்படுத்துவது பற்றி அறிவுறுத்தல் , வீட்டுத்தோட்டங்கள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுதல் போன்றவற்றை எடுத்துக்கூறலாம் . ஆனால் , எடுத்த எடுப்பில் இனி எல்லோரும் இரண்டுவேளைகள் மட்டும் உண்ணுங்கள் என ஒரு ஆட்சியாளர் கூறுவதென்பது பொறுப்பற்றசெயல். ஏற்கனவே இந்திய ஊடகங்கள் தங்களுடைய Trp ரேட்டிங் என்கிறவொன்றுக்காக இலங்கையில் கடும் பஞ்சம், மக்கள் எல்லோரும் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என அள்ளிவிட்டுக்கொண்டிருந்த நிலையில் உள்நாட்டுக்குள் ஒரு அமைச்சரின் இப்படியான கருத்துக்களும் வருமாயின் இலங்கையை நம்பி யாரும் முதலீடுகளை செய்யவதில் ஒரு தயக்கநிலை தடங்கள்நிலை ஏற்படக்கூடும் இல்லையா?
வளர்ந்த நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் உணவு அரசியலை எப்படியெல்லாம் நம்மீது திணித்துவருகின்றன என்பது பற்றி சற்று தேடிப்பார்த்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியாக இருந்தன. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில் ஏராளமான எதிரி நாடுகளை தாக்கவைத்திருந்த வெடிபொருட்கள் “டன்” கணக்கில் மீதமாயினவாம் . அந்த வெடிபொருட்களையெல்லாம் என்ன செய்வது என அந்த நாடுகள் யோசித்துக்கொண்டிருந்தபோது அவற்றை பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்தலாம் என அறிவியல் அறிஞர்கள் தெரிவித்ததையடுத்து , பூச்சிகளால் உணவு உற்பத்தி குறைவு பற்றி கவலையடைந்திருந்த ஆபிரிக்க மற்றும் கீழைத்தேய நாடுகளுக்கு, குப்பை என கழிக்கப்பட்டஇந்த வெடிபொருட்கள் உள் நுழைந்தன.
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லர் பல லட்சம் மக்களை கொன்றுகுவிக்க பயன்படுத்திய ஓர் வேதியல் பொருளை தயாரித்துக்கொடுத்த ஜெர்மனியின் ஒரு பிரபலமான கெமிக்கல் நிறுவனம்தான் இன்றுவரையில் செயற்கை உரங்களை தயாரிப்பதில் முன்னோடி என்றால் இனி சொல்வதற்கென்ன இருக்கிறது ?
ஒரு காலத்திற்குமுன் அமேரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் மண்ணில் சத்தில்லாமல் விவசாயம் மேம்படாமல் இருக்கவே , என்ன செய்வதென்றறியாமல் கல்லறைகளில் இருக்கும் மனித எலும்புகளையெல்லாம் எடுத்து பொடியாக்கி அதனை உரமாக பயன்படுத்தினார்கள். பின் இந்த மனித எலும்புகளை வேட்டையாடுவதற்காகவே கல்லறை மயானங்களை வேட்டையாடினர் , இப்படி இவர்கள் எந்தெந்த நாட்டுக்குள்ளெல்லாம் நுழைந்து வேட்டையாடினார்களோ அந்தந்த நாடுகளின் மண் சத்து இல்லாமலாகி அங்கெல்லாம் விவசாயம் வீழ்ந்துவிட , மேலை நாடுகளில் விவசாயம் தப்பித்துக்கொண்டது .
பின்பு ஒரு அறிவியலாளர் பறவைகளின் எச்ச்சத்தில் நைட்ரஜன் இருக்கிறது அதை வைத்து விவசாயம் செய்யலாம் என கண்டறிந்தபோது ஆளாளுக்கு பறவை எச்சத்தினைத் தேடி பல தீவுகளையும் அடிமைப்படுத்திக்கொண்டன இந்த நாடுகள். இப்படி மேலைநாடுகளெல்லாம் தம் நாட்டு மண்ணையும் விவசாயத்தையும் ஏதொவொருவகையில் பேணிப்பாதுகாத்துக்கொள்ள , (அவர்கள் விற்கும் செயற்கை உரங்களை இறக்குமதி செய்துகொண்டு ) மூன்றாம் உலக நாடுகள் மட்டும் வல்லரசுகளினதும் பன்னாட்டு நிறுவனங்களினதும் சூழ்ச்சியில் சிக்குண்டு சின்னாபின்னமாகியுள்ளதென்றே கூறவேண்டும் .
விவசாயப்பொருட்கள்மீது தெளிக்கப்படும் பூச்சி மருந்துகள் எவ்வளவுதான் மழை பெய்தாலும் எவ்வளவுதான் கழுவியெடுத்தாலும் அந்த கிரிமிநாசினிகளின் எச்சங்கள் முழுதுமாக அகன்றுவிடுவதில்லை . காலப்போக்கில் கண்ணுக்குத் தெரியும் அளவில் அவை மாறிப்போயின . உதாரணம் நாம் உண்ணும் grapes போன்ற பழங்களில் படிந்திருக்கும் வெள்ளைநிறமான படிமம் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?
உலக நாடுகள் பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பையுணர்ந்து தடைவிதித்த நிலையில் நம்முடைய நாட்டில் “DTTA” என்கிற அபாயகரமான பூச்சிக்கொல்லி வீட்டைச் சுற்றியுள்ள எறும்புகளைக் கொல்லக்கூட சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் யதார்த்தம் . உண்மையில் , பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படும் உணவை உண்பவர்களின் நூறுபேரில் முப்பது பேருக்கு புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது . உணவும் உடல்நலமும் ஒன்றோடுஒன்று சேர்ந்தே இயங்கும் வாழ்வியலைகொண்ட நமது நாட்டில் இன்று உணவு தனியாகவும் ஆரோக்கியம் தனியாகவும் பிரிந்து வணிகம் செய்கிறது என்பதுதான் நிஜம் .
இப்படி பூச்சிக்கொல்லிகள் அதிகரிக்க உணவுக்குப் பின்னால் இருக்கும் நுண்அரசியலே காரணம் எனலாம் . முன்பெல்லாம் நெல் போன்ற பிரதான பயிர்களை பயிரிட்டதன்பின் விவசாயிகள் உபபயிர்கள் என்கிற பேரில் பருப்பு மற்றும் பயறு வகைகளை அதிகமாக பயிரிட்டனர். உண்மையில் அதன் பின்னிருக்கும் சூட்சமம் என்ன தெரியுமா ? இயற்கையாகவே காற்றில் இருக்கும் நைட்ரஜன் , பொஸ்பரஸ் போன்ற சத்துக்களை உறிஞ்சும் பருப்புவகை பயிர்கள் அவற்றை பூமியின் அடியில் சேமித்துவைக்கும்போது நிலம் அதற்குத்தேவையான தழைச்சத்தினை இயற்கையாகவே பெற்றுக்கொள்ளும்.
ஆனால் , இன்றோ நிலைமை தலைகீழ் ! இலங்கையில் தாராளமாக பருப்புவகைகளும் சிறு தானியங்களும் இறக்குமதி செய்யப்படுவதால் அதன் விளைவு ? பன்னாட்டு நிறுவனங்களால் விற்கப்படும் செயற்கை உரமான நைட்ரஜனை காசுகொடுத்து வாங்கி நிலத்தையும் பாழ் படுத்திக்கொண்டிருக்கின்றோம் . யூரியா என்கிற விஷத்தை உரம் என்கிற பெயரில் பலதலைமுறைகளாக விவசாயிகள் நம்பி பயன்படுத்திவந்தனர் .
இவ்வாறு ஒரு நாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அந்நாட்டின்மீது போர் தொடுத்துதான் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நிலைமைமாறி உணவே பேராயுதம் என்கிற மோசமான ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது சர்வாதிகார நாடுகள் என்றால் மிகையில்லை . பெரியபெரிய பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க நம் மண்ணை நாமே விஷமாக்கிக்கொண்டிருக்கின்றோம் . உணவு மற்றும் மருத்துவ வணிகத்தின் லாப நோக்கத்தினால் உணவானது நஞ்சாகமாறி பல நோய்களையும் இயற்கை சீர்கேடுகளையும் உருவாக்கியுள்ளது. இந்தநிலையில் இயற்கை உணவினை நாடியும் இயற்கை விவசாயத்தை நாடியும் மக்கள் பயணப்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.