அனைத்தையும் நாடி  நாய்கள் எப்படி செல்லப்பிராணிகளாக ஆகியது?

நாய்கள் எப்படி செல்லப்பிராணிகளாக ஆகியது?

2023 Jan 21

கற்கால மனிதன் முதல் கம்ப்யூட்டர் கால மனிதன் வரை மனித குலத்துடன் தொடர் உறவுகொண்ட விலங்கினம் எது என்றால் அது நாய்தான். வீட்டுச் செல்லப் பிராணிகளில் முதல்இடம்பெறும் நாய்கள் நன்றி உணர்ச்சிக்கு என்றென்றும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.

தன் எஜமானனையே எல்லாமுமாக நினைத்து வாலைக் குழைத்து வாஞ்சை காட்டும் நாய்கள் பற்றி கூறுவதாயின் நவீன மனிதர்களின் முன்னோடியான ஹோமோ சேப்பியன்ஸ் தமது பூர்விக நிலமான ஆபிரிக்காவினை விட்டு உலகெங்கிலும் பரந்துவாழ முற்பட்டபோது வேட்டையாடிகளான அவர்களது மிகப்பெரிய எதிரியாக இருந்த விலங்கினம்தான் கேனிஸ் லூப்பீஸ் எனப்படும் சாம்பல் நிற ஓநாய்கள் அதாவது இன்றைய நாய்களின் மூதாதைகள்.

வேட்டைக்கு காடுகளுக்குள் புகும் மனிதர்களை சரமாரியாக தாக்கிய சாம்பல் நிற ஓநாய்கள் நீண்டகால மனிதர்களின் எதிரியாகவே காணப்பட்டன. ஆனாலும் மனிதர்கள் போன்றே கூட்டம்கூட்டமாக வாழ்ந்துவந்த இந்த ஓநாய்களின் கூட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருந்த சில கட்டாக்காலி ஓநாய்கள் தமது உணவுத் தேவைக்காக மனிதர்களை சார்ந்துவாழ ஆரம்பித்தன.

மனிதர்கள் உண்டு மீந்துபோன எச்சங்கங்களை உணவாக மாற்றிக்கொள்ள ஆரம்பித்த இந்தகட்டாக்காலி ஓநாய்களுக்கு வேட்டையாடாது எளிதாக கிடைத்த  உணவுகளுக்காக மனித குடியிருப்புகளுக்கு அருகாமையில் வாழ ஆரம்பித்தன.மனித குடியிருப்புக்களில் கிடைத்த தீயின் வெம்மையும், உணவும் மேலும் மேலும் ஓநாய்களை மனித குழுக்களை நோக்கி ஈர்க்க தொடங்கவே தம்மை பின் தொடர்ந்த ஓநாய்களினுள் ஓரளவு அமைதியான இயல்புடையவற்றை தம்முடன் மிக அருகில் வைத்துக்கொண்டான் ஆதி மனிதன்.

தொடர்ந்து சீற்றம் குறைந்த ஓநாய்களை தம்முடன் வைதிருந்ததன் விளைவாக அவற்றின் அடுத்த சந்ததி மேலும் சீற்றம் குறைந்ததாக இருந்தது. தொடர்ந்து நடந்த இந்த செயற்பாடு ஓநாய்களை தங்களின் காட்டு மூதாதை ஓநாய்களிடமிருந்து தோற்ற அளவிலும், குணவியல்புகளிலும் வெகுவாக மாற்றியமைத்தது.

காலப்போக்கில் அவற்றின் உருவ அமைப்பில் வெகுவான மாற்றங்கள் உண்டாகலாயின. ஓநாய்களை காட்டிலும் இந்த நாய் மூதாதைகள் உருவத்தில் சிறியதாகவும் சிறிய மூக்கும், தாடையும், பற்களையும் கொண்டனவாகவும் மாறின. மேலும் அவற்றின் வால்கள் சுருளவும் , காது மடல்கள் மடியவும் ஆரம்பித்தன. தோல் மற்றும் மயிர் நிறமும் வெளிர் நிறம் கொண்டனவாக மாறின. இதற்கு காரணம் அவற்றின் அதிரினலின்எனும் ஹார்மோன் செறிவு குறைந்து வந்தமையே.

இந்த மாற்றங்கள் குடிமைப்படுத்தல் குறிகள் என வரையறுக்கப்படுகின்றன. மேலும் ஓநாய்கள் போலில்லாமல் நாய்கள் அதிகளவு எலும்பு போன்ற கடினமான உணவுகளை உட்கொண்டமையால், செரிமான அமைப்பிலும் கணிசமான மாற்றங்கள் உண்டாகின.மனித குடியேற்றங்கள் உலகம் முழுவதும் பரவிய காலங்களில் நாய்களும் மனிதருடன் உலகெங்கும் பரவின. அவை அங்கு வாழ்ந்து வந்த ஏனைய நாயினங்களுடனும், ஓநாய்களுடனும் கலந்து புதுவகை நாய்களை உருவாக்கியபோதே இன்றைய இதனை நாய்களின் வகையறாக்கள் உருவாகியதாக கூறப்படுகின்றது.

எனினும் நாய்களுக்கும் சாம்பல்நிற ஓநாய்களுக்குமான பொதுவான ஒரு மூதாதை 34,000 வருடங்களுக்கு முன்பிருந்து 9,000 வருடங்களுக்கு வாழ்ந்திருக்கிறது என்றும் அந்த விலங்கிலிருந்து இரண்டு பிரிவுகள் பரிணமித்ததாகவும் ஒன்று நாயாகவும் மற்றொன்று ஓநாயாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்ததாகவும் கூட அறிவியல் ரீதியில் கூறப்படுகின்றது.

நாய்களுடன் மனிதர்கள் பல விளையாட்டுகளை விளையாடுவதுண்டு. எவருமே விளையாடும் பொதுவான விளையாட்டு ஒன்று இருக்கிறது. ஒரு பொருளை தூரப் போட்டு அதை நாய் எடுத்து வரச் செய்யும் விளையாட்டு! இந்த விளையாட்டு, நாயை தம் கட்டளைக்கு பணிய வைப்பதற்கு மனிதகுலம் பயன்படுத்திய ஆரம்பகால பயிற்சியாக இருக்கலாம். அந்த பயிற்சியின் நினைவே மரபு ரீதியாக நமக்குள் தங்கி நீண்டு காரணமே இன்றி இன்றும் ஒரு நாயை கண்டதும் ஒரு பொருளை தூக்கி போட்டு எடுத்து வர கட்டளை இட வைப்பதாகவும் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php