அனைத்தையும் நாடி  சத்தமின்றி முன்னேறும் இணைய வர்த்தகம்!

சத்தமின்றி முன்னேறும் இணைய வர்த்தகம்!

2023 Feb 23

பண்டிகைகள் என்றாலே எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். அதிலும் வணிகர்களுக்கு இரட்டிப்புக் கொண்டாட்டம் என்றால் அது மிகையில்லை. ஏனெனில் முன்பைபோல அல்லாமல் மக்களின் நுகரும் தன்மை மற்றும் பொருட்களை வாங்கிக்குவிக்கும் ஆற்றல் அதிகப்பட்டிருந்தாலும் இன்னுமே “பண்டிகைக்கால விற்பனை” எனும் ஒன்றிற்கான அந்த எதிர்பார்ப்பு மக்களிடம் குறையவேயில்லை என்றுகூட கூறலாம்.

(நம்முடைய சிறுவயதிலெல்லாம் புத்தாடை வாங்குவது என்றால் அது ஏதேனும் பண்டிகை அல்லது பிறந்தநாள் கொண்டாட்டம் எனும் வரையறை இருந்தது இப்போதெல்லாம் அப்படியல்ல அடிக்கடி ஏதேனும் ஒரு ஆடையைகூட அவசியம் இருக்கிறதோ இல்லையோ கண்ணில்படுவதை வாங்கும் ஓர் போக்கு நம்மிடம் உள்ளது ) இப்படி நுகர்வோர் மற்றும் விற்பனையாளரின் எதிர்பார்ப்பினை கடந்த இரண்டரை வருடகாலமாக ஆட்டிப்படைத்த கொரோனா தகர்த்தெறிந்துள்ளது என்பதே உண்மை.

கொரோனா தொற்று கெடுபிடிகளினால் அனைத்து பண்டிகைக்கால விற்பனைகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டதென்பது அனைவரும் அறிந்தவொன்று. ரம்ஜான் , வெசாக், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என விற்பனை களைகட்டும் நேரத்தில் வர்த்தகம் பாதியாக குறைந்தது கடந்த காலங்களில். மிக இக்கட்டான நிலைமையை உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் சந்தித்துவரும் இந்த நிலைமையில் சத்தமேயில்லாமல் ஓர் “வணிகமுறைமை” கடந்துசென்ற பெண்டமிக் சூழ்நிலையினை சாதகமாக்கிக்கொண்டு அசுர வளர்ச்சிகண்டுள்ளது.

ஆம் ஒன்லைன் எனப்படும் இணைய வர்த்தகம்!

கொரோனா காலகட்டத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று தெரிவித்த காரணத்தினால், அனைவரும் இணைய வர்த்தகம் மூலம் அதிக அளவு பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் தற்போது நிலைமை சீரடைந்து நிலையிலும் தொடர்ந்தும் இணையம் மூலமாகவே மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர் .

இதனால் இணைய வர்த்தகமானது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையை பிடித்துள்ள காரணத்தினால் உள்ளூர் வியாபாரிகளின் தொழில் நலிவடைந்து வருகின்றது . சிறு வணிகத்தையும், சில்லரை வணிகத்தையும் இந்த இணைய வர்த்தகம் நசுக்குவதாக பலர் குற்றம் சாட்டிவருகின்றனர் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் உண்மைதான்.
தொடர்ந்து மக்கள் இணைய வர்த்தகத்திற்கு ஆதரவு தெரிவித்தால் உள்ளூர் வியாபாரிகளின் தொழில் அழிந்து போகக் கூடிய சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது.

புத்தகங்களில் ஆரம்பித்த ஆன்லைன் வியாபாரம்

தற்போது கார் முதல் உணவு பொருட்கள் வரை அனைத்தும் இணைய விற்பனைக்கு வந்து விட்டன. இணைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இணைய வர்த்தகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பண்டிகை காலம் துவங்கி உள்ளதால் இணைய வர்த்தக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக போட்டி போட்டிக் கொண்டு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றன.

இந்த வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் நம் நாட்டினைப்பொறுத்தவரையில் தராஸ் போன்ற சில இணைய வர்த்தக நிறுவனங்கள் , வெளிநாடுகளைபொருத்தமட்டில் அமேசான் , ஈ பே , அலிபாபா , பிளிப்கார்ட், வால் மார்ட் என பட்டியல் நீண்டுகொண்டே செல்லக்கூடியது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பல இணைய வர்த்தக நிறுவனங்கள் சிறப்பு விற்பனைகளை அறிவித்துள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சில மோசடி வலைதளங்களும் களம் இறங்கியுள்ளன. வழங்கவே முடியாத சலுகைகளை அறிவித்து, மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த மோசடி வலைதளங்கள் தங்களின் சலுகை, தள்ளுபடி அறிவிப்புகள் குறித்து மின்னஞ்சல்கள் குறுஞ்செய்திகள் வாட்ஸ் அப் ஆகியவற்றில் தகவல் அனுப்புகின்றன. இதுகுறித்து இணைய வர்த்தகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது “வழங்கவே முடியாத சலுகைகளை அறிவிக்கும் வலைதளங்களை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது.

இந்த வலைதளத்திடம் கிரெடிட், டெபிட் கார்ட விபரங்களைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம். இந்த வலைதளங்களை, ‘கிளிக்’ செய்வதால் நிதி தொடர்பான விவரங்கள் முறை கேடாக பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது. மேலும் சில மோசடி வலைதளங்கள், பிரபல நிறுவனங்களின் பெயர்களை, முறைகேடாக பயன்படுத்துகின்றன. அதனால், இணையத்தில் பொருட்களை வாங்குவோர், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மோசடி வலைதளங்களை நம்பி ஏமாறாமல் இருப்பது பற்றி மற்றொரு பிரபல வலைதள நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது “பொது இடங்களில் அல்லது இலவசமாக கிடைக்கும், ‘வைஃபை’யைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இவை மூலமும் தகவல்கள் திருடு போகலாம். அனைத்துவிதமான இணைய வர்த்தகத்துக்கும் ஒரே கடனட்டையினை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் என்ன பொருட்கள் வாங்கி இருக்கிறோம், எவ்வளவு வாங்கி இருக்கிறோம் என்பதை மதிப்பிட முடியும். தள்ளுபடியோ, சலுகையோ நம்ப முடியாதபடி இருந்தால் விற்பனையாளரைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். அவர்கள் சட்டப்பூர்வமாக இயங்குகின்றனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அந்த விற்பனையாளரிடம் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்களின் மதிப்புரைகளை இணையத்தில் தேடி, படித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்து ஆசைப்படாமல், எச்சரிக்கையுடன் இருந்தால்தான், இந்த மோசடிகளில் இருந்து தப்ப முடியும். இந்த மோசடிகளில் படிக்காதவர்களை விட படித்தவர்கள்தான் அதிகளவில் ஏமாறுகின்றனர்” என்று எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php