2023 Feb 27
சமைப்பதெல்லாம் ஒரு பிரச்சினையா ? பூட்டி பாட்டி, அம்மா என தலைமுறை தலைமுறையாக பெண்கள்தானே சமைத்துக்கொண்டிருக்கின்றார்கள்? இது அவர்களுடைய வேலைதானே? ஏன் இப்போது மட்டும் இத்தனைதூரம் அலுத்துக்கொள்கின்றார்கள்? ஆண்களும்தான் சமைக்கின்றோம் என்றைக்காவது ஆண் சமைப்பது பற்றி அலட்டிக்கொள்வதில்லையே, பெரிய பெரிய நட்சத்திர விடுதிகள்தொடக்கம் சாதாரண உணவகங்கள்வரையிலும் ஆண்கள்தானே சமையல் கலை நிபுணர்களாக இருக்கின்றார்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைப்பதே பெண்களுக்கு வலிக்கிறதா என்ன?!
இப்படி கூறும் பலரையும் நாம் அன்றாடம் கடந்து கொண்டுதான் இருக்கின்றோம்! ஆம் பெரிய பெரிய ஐந்து நட்சத்திர விடுதிகள் தொடங்கி சாதாரண உணவகங்கள்வரையிலும் சமையலில் ஆண்கள்தான் கோலோச்சுகின்றார்கள். ஆனால் அவர்கள் கரண்டியை கையிலிடுத்திருப்பது “தொழில் / வருமானம் “என்கிற ஒன்றிற்காக. காசு மட்டும் கிடைக்காது என்றால் எந்த ஆணும் அந்த கரண்டியை கையிலெடுக்கமாட்டான் என்பதே நிதர்சனம்.
பெண்களின்பாடோ அதுவல்ல அன்பு பாசம் கடமை என்கிற இன்னோரன்ன பெயர்களின்மூலம் சமையல் மற்றும் வீட்டுவேலைகள் என்பது மேலே சொல்லப்பட்டதுபோல பூட்டி பாட்டி காலத்திலிருந்தே தலைமுறைதலைமுறையாக “இது உன்னுடைய உனக்கு மட்டுமே உரித்தான கடமை “எனும் பெயரில் திணிக்கப்பட்டிருக்கின்றது என்பது ஜீரணிக்கமுடியாதவொன்று. கல்வியறிவும் பொருளாதாரா சுதந்திரமும் இல்லாத காலத்தில் பெண்ணானவள் தனக்கு விதிக்கப்பட்டதுதான் இது என எல்லாவற்றையும் சகித்துக்கொண்டாள் தன்னுடைய சுயகௌரவம் காவு கொள்ளப்படுவது உற்பட அனைத்தையும். ஆனால் இன்றோ நிலைமை வேறு
இந்த நிலைப்பாட்டினை அண்மையில் உரத்துச் சொன்ன ஓர் திரைப்படம் பற்றியே இன்று நாம் பார்க்கப்போகின்றோம்
.
மலையாள இயக்குநர் `ஜோ பேபி’ இயக்கி Neestream தளத்தில் 2020ஆம் ஆண்டு வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதங்களுக்குள்ளாகி மாபெரும் வெற்றியை கொடுத்த, முக்கியமாக பலராலும் பரவலாக கண்டுகொள்ளப்படாத பெண்ணின் பிரச்சினையை கூறிய The Great Indian Kitchen திரைப்படம், இந்த ஆண்டு தமிழில் R.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்தர் மற்றும் பலரது நடிப்பில் வெளியாகியுள்ளது. படத்திற்கு பெண்கள் தரப்பிலிருந்து தொடர் ஆதரவும் ஆண்கள் மீது குற்றச்சாட்டுகளும் குவிந்து வருகின்றன.
நம் வீட்டிலும், அக்கம்பக்கத்து வீடுகளிலும் நடக்கும் காட்சிகள்தான் கதை . மலையாளத்தில் நிமிஷா சஜயனும், சூரஜ் வெஞ்சரமுடுவும் கணவன் மனைவியாக நடித்திருந்த இந்தப் படம், `பிக் பாஸ்’ பார்ப்பது போல, அவர்களின் அன்றாட வாழ்க்கையை தினமும் பார்ப்பது போன்றதோர் உணர்வைக் கொடுக்கிறது. மணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் நிமிஷா, காலையில் தூங்கி எழுகிறார். தேநீரில் தொடங்கி காலை மதியம் இரவு என நாள் முழுக்க மூன்று வேளையும் மாமியார் துணையோடு விதவிதமாய் சமைத்து கணவனுக்கும் மாமனாருக்கும் பரிமாறுகிறார். அவர்கள் உண்ட மிச்சங்களையும் சமைத்த பாத்திரங்களையும் கழுவுகிறார்.
இரவு உறங்கி, மறுநாள் காலை எழுந்து, தேநீரில் தொடங்கி காலை மதியம் இரவு என சமைக்கிறார். பாத்திரங்களை தூய்மை செய்கிறார். மறுநாள் காலை எழுந்து திரும்பவும் மூன்று வேளை சமைத்து, பாத்திரம் கழுவி இரவில் அடுக்களையைத் தூய்மை செய்கிறார். மறுநாளும் அதையே செய்கிறார். இதை திரும்பத் திரும்பப் படிக்கும் போதும், திரைப்படத்தில் இதே காட்சிகளை திரும்பத் திரும்பப் பார்க்கும் போதும் நமக்கு ஒரு சலிப்பு தட்டுகிறதில்லையா? அந்த சலிப்புதான் படத்தின் மையப்புள்ளி. திரும்பத் திரும்பப் பார்ப்பதற்கே அலுப்பாயிருக்கும் விஷயங்களை நாள் கணக்கில் வருடக்கணக்கில் ஓயாமல் செய்து கொண்டேயிருக்கும் வீட்டுப் பெண்களுக்கு அது எவ்வளவு சலிப்பாய் இருக்கும்?
ஒரு குடும்பத்தில் சமையலும் வீட்டு வேலைகளும் பெண்களுக்கு மட்டுமே உரியவையா என்று யோசிக்க வைப்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம் வழக்கமான திரைப்படங்களில் வருவதுபோல் கொடுமைக்கார மாமியார் மாமனார் நாத்தனார் கணவர் என்கிற கதாபாத்திரங்களை கொண்டதல்ல இத்திரைப்படம் . அழகான, அன்பான, பாரம்பர்யமும் பண்பாடும் கொண்ட, ஊருக்குள் மரியாதையான குடும்பம்தான் அது. ஆனால் உற்று கவனித்தால் மட்டுமே அந்த மரியாதை, குடும்பம் என்ற அமைப்பிற்கும் அதன் தலைவர்களான ஆண்களுக்கும் மட்டுமே உரியது, பெண்கள் அவ்வமைப்பின் அடிமட்ட உறுப்பினர்களாகவோ அல்லது அடிமைகளாகவோதான் இருக்கிறார்கள் என்ற உண்மை கண்களுக்குப் புலப்படுகிறது.
படத்தில் மாமனாராக வரும் வயோதிபர் தன் குடும்பத்திற்க்காய் ஓடாய் உழைத்து களைத்து தற்போது தன் முதுமையில் மிக ஓய்வாக நாள் முழுக்க ஈஸிசேரில் அமர்ந்து பேப்பர் படிக்கிறார். phoneல் whatsapp பார்க்கிறார். இறைவழிபாடு செய்கிறார். மருமகளை வாய்நிறைய `மகளே’ என்றழைக்கிறார். அவருக்கு வீட்டில் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள்தான். மிக்ஸியில் சட்னி அரைத்தால் சுவையாக இராது அதனால் அம்மியில்தான் அரைக்கவேண்டும், குக்கரில் சோறு சமைக்கக்கூடாது அதை மட்டும் விறகடுப்பில் பாத்திரத்தில் சமைக்க வேண்டும். அவருடைய துணிகளை மட்டுமாவது வாஷிங்மெஷினில் போடாமல் கையில் துவைக்க வேண்டும்.
நேற்று வைத்த குழம்பை ஃப்ரிட்ஜில் வைத்து இன்று சூடு பண்ணிக் கொடுக்கக் கூடாது. காலையில் பிரஷையும் டூத் பேஸ்டையும் மனைவியோ மருமகளா கொண்டு வந்து கையில் கொடுக்க வேண்டும். அவர் வெளியே கிளம்பும்போது, குரல் கொடுத்ததும் மனைவியோ மருமகளா செருப்பைக் கொண்டு வந்து காலருகே வைத்தால் போதும். அவரே போட்டுக் கொள்வார். வீட்டுப் பெண் வேலைக்குப் போவது அவருடைய கவுரவத்திற்கு ஆகவே ஆகாது. அவரது எண்ணப்படி பெண்கள் குடும்பத்தை நன்றாக கவனித்து குழந்தைகளை சான்றோர்களாய் வளர்த்து ஆளாக்குவதே பெண்களது தலையாய கடமை .
கணவர் எப்படி ? அடேங்கப்பா … குடித்த தேநீர் குவளையை கூட அதே இடத்தில வைத்துவிட்டு செல்லும் அவன் மனைவி என்பவள் சமையலறைக்கும் , படுக்கையறைக்கு மட்டுமே உரித்தானவள் எனும் எண்ணம் கொண்டவன் . தினமும் நிமிஷா சமையலறையில் சமைத்துமுடித்ததும் அவளது தலையாய பிரச்சினை சமையலறை குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் அதிலிருந்து வடியும் கழிவு நீரினை ஒரு பக்கற்றில் பிடித்து வீட்டுக்கு வெளியே ஊற்றுவது . காலையில் எழுந்ததும் நாற்றமடிக்கும் அந்த கழிவுநீரினை கொட்டிவிட்டு வரும் நிமிஷா திருமணம் ஆனதிலிருந்து தினமும் சுமார் மூன்றுமாதம் வரைக்கும் தன்னுடைய கணவரிடம் அந்த குழாயினைத் திருத்துவதற்காக பிளம்பரை அழைத்துவரும்படி கூறுகின்றாள்.
ஆனால் அவனோ தினமும் மறந்துவிடுவதென்பது அந்த கணவனது மெத்தனப் போக்கினை தெள்ளத் தெளிவாக படம்பிடித்து காட்டிவிடும் . மேலும் இரவில் தினமும் மின்விளக்கினை அணைத்துவிட்டு தன் இஷ்டப்படி மாத்திரம் தன் மனைவியிடம் உறவு வைத்துக்கொள்ளும் கணவரிடம் ஒருமுறை நிமிஷா மனம் விட்டு பாலியல் உறவிற்கு முன்னதான முன் விளையாட்டுக்கள் பற்றி தயக்கத்துடன்கூற கணவனுக்கோ அது ஓர் சுடுசொல் போல் மனதை தைக்கவே “ஓஹ் உனக்கு இதெல்லாம் கூட தெரியுமோ?”என்பதுடன் உன்னைப்பார்த்தால் எனக்கு அப்படியெல்லாம் செய்யத் தோன்றவில்லை “என ஈட்டியாக வார்த்தைகளை செருகுகின்றான்.
அதுமட்டுமன்றி அந்த வீட்டில் இருக்கும் இன்னுமோர் வழக்கம்தான் மாதவிடாயின்போது வீட்டுக்கு புறம்பேயுள்ள ஓர் பழைய அறையில் நிமிஷா தங்கிக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம். அப்போது அவள் சமைப்பதை உண்டால் தீட்டு எனும் கருத்தைக்கொண்ட அந்தவீட்டு ஆண்கள் அந்த மூன்று நாட்களுக்கு மட்டும் சமையலுக்காக வேலையாள் பெண் ஒருவரை வரவழைத்துக்கொள்கிறார்கள் . அந்த மூன்றுநாட்களும் அவள் யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில் ஓர் நாள் மோட்டார் சைக்கிளிலிருந்து தடுமாறி விழப்போகும் கணவனை நிமிஷா ஓடிவந்து தாங்கிப்பிடிக்கின்றாள் .
ஆனால் அப்போது அவள் கணவனோ அவளை உதறித்தள்ளிவிட்டு கடும்கோபத்துடன் தன்னை அவள் தொட்டு தீட்டாக்கிவிட்டாள் என எகிறுகின்றான். தன்னை வெளியில் எங்கேயும் விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து வேலை வாங்கும்போதுகூட சகித்துக்கொள்ளும் நிமிஷா அந்த இடத்தில தன்னுடைய சுயமரியாதை தீண்டப்பட்டவளாய் உணர்கின்றாள் . ஒருகட்டத்தில் தேநீர் ஊற்ற சொல்லும் மாமனாருக்கும் கணவருக்கும் கழிவு நீரினை குவளைகளில் ஊற்றிவைத்துவிட்டு தான் வெளியேற முடிவெடுக்கின்றாள். அப்போது ஆத்திரத்துடன் அவளருகே வரும் கணவன் மற்றும் மாமனாரின் தலையில் அதே சமையலறையில் வடிந்து சேர்ந்திருக்கும் கழிவுநீரினை கொட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறிவிடுகின்றாள்.
இதுவே இப்படத்தின் கதை .குடிக்கும் தண்ணீரைக்கூட வீட்டுப் பெண்கள் எடுத்துக்கொடுக்கவேண்டும் எனும் ஆண்களின் மனசாட்சியை கேள்வி கேற்கும் இத்திரைப்படம் நிச்சயம் காலத்தின் கண்ணாடி என்றே கூறவேண்டும்.