அனைத்தையும் நாடி  இருமல் | விக்கல் | ஏப்பம் | கொட்டாவி | குறட்டை

இருமல் | விக்கல் | ஏப்பம் | கொட்டாவி | குறட்டை

2020 Jul 16

லகில் புதிரானதும் வியக்க வைக்கும் ஒன்றாகவும் மனித உடல் விளங்குகிறது. இது தினம் சக்கரம் போல் நில்லாது ஓடிக் கொண்டேயுள்ளது. நாம் உறங்கும் போது கூட நம் உடலுள் உறுப்புகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
நம் உடலில் நம் கட்டுப்பாட்டினை மீறி தன்னிச்சையாக சில செயல்கள் நிகழ்கின்றன. அவ்வாறாக தன்னிச்சையாக இடம்பெறும் செயல்களே தும்மல், இருமல், விக்கல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை என்பன விளங்குகின்றன.

தும்மல்

தும்மல் சாதாரணமாக இடம்பெறும் உடலியல் சார்ந்த நிகழ்வுகளில் ஒன்று. நம் மூக்கினுள் காணப்படும் முடியிழைகள் காற்று தவிர்ந்த வேறு ஏதும் தூசு, துகள் வரும் போது அவற்றை வடிக்கட்டி அனுப்புகிறது. அளவுக்கதிகமான தூசு,துகள் மூக்கினுள் நுழையும் போது சவ்வுப் படலம் தூண்டப்பட்டு நிறமற்ற ஓர் திரவம் சுரக்கப்படுகிறது. இதனால் வயிற்றுத் தசைகள், தொண்டை, வாய் மற்றும் நுரையீரல் ஆகியன ஒன்று சேர்ந்து சுவாசப் பாதையில் உள்ள காற்றினை வேகமாக வெளித்தள்ளுகிறது. இதனை தான் நாம் தும்மல் என்கிறோம். இந்த தும்மல் மணிக்கு 250 கி.மீ வேகம் கொண்டது. சாதாரணமாக ஏற்படும் தும்மல் சில நிமிடங்களில் நின்று விடுகிறது ஆனால் சிலர் தொடர்ந்து தும்முவதை கண்டிருப்போம் அவ்வாறாக தொடர்ச்சியாக தும்முவதை ஒவ்வாமைத் தும்மல் என அழைப்பர்.

தும்மல் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக சூழலில் இருந்து வெளிவரும் மாசு தான். அதைத் தவிர்ந்த வேறு காரணங்களாக குளிர்ந்த காற்று, வீட்டின் செல்லப்பிராணிகளிலிருந்து வெளியேறும் எச்சம், செதில்கள் மற்றும் முடிகள், பூக்களின் மகரந்தங்கள், கற்பூரம், சாம்பிராணி, ஊதுபத்தி, படுக்கை விரிப்புகள், பாய், தலையணைகளில் காணப்படும் உண்ணி (Mites) பூச்சிகள் ஆகியன காணப்படுகின்றன.

இன்றைய நவீன யுகத்தில் சமூகத்தில் பிறர் மத்தியில் சத்தம் கேட்கும் படி தும்முவது அநாகரிகமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் நம்மில் பலர் மூக்கு துவாரத்தை இறுக்க மூடி தும்ம முனைகிறோம். இவ்வாறான பழக்கம் உங்களை மரணம் வரை கூட்டிச் செல்லும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
தும்மலை அடக்குவதால் சுவாசப்பாதையில் அதிக அழுத்தத்தோடு வெளியேறும் காற்று தடைப்பட்டு காது சவ்வுகள் வழியில் அல்லது மூளைக்குச் செல்லும் குருதி குழாய் வழி செல்ல முனைகிறது. இதனால் காதின் சவ்வுகள் கிழியும் அபாயம் ஏற்படுகிறது. தும்மும் போது உடலில் உள்ள நோய்க்கிருமிகளும் வெளியாகின்றன. ஆகையால் கைக்குட்டை ஒன்றினைக் கொண்டு தும்முதல் மூலம் பிறர்க்கு அந்த நோய்க்கிருமிகள் பரவாத வண்ணம் காத்துக் கொள்ள முடிகிறது.

ஆழமான உறக்கத்தில் இருக்கும் போது தும்மல் ஏற்படுவதில்லை. ஏனெனில் இரவில் சூழலில் மாசின் அளவு குறைவாகயிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

தும்மும் போது எம் கண்கள் தானாகவே மூடிக் கொள்வதை நீங்கள் அவதானித்தது உண்டா? இதற்கான காரணம் நாம் தும்மும் போது கண்களின் பின்புறம் ஏற்படும் அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், தும்மலின் போது வெளியாகும் நோய்க்கிருமிகள் நம் கண்களிற்குள் செல்லாதபடி காத்துக் கொள்ளவதற்காகவும் ஆகும்.

தும்மல் இயற்கையானதே சத்தமன்றி தும்முதல் நாகரிகமான செயலென எண்ணி உங்களுக்கு நீங்களே பாதக விளைவுகளினை தேடிக் கொள்ளாதீர்கள்…!

விக்கல்

நாம் விக்கும் போது “யாரோ நினைக்கிறார்கள் அதனால் தான் விக்குகிறது…!” என கணித்துக்கொள்கிறோம். உண்மையில் விக்கல் ஏற்படுவதற்கான காரணம் என்ன…? நம் வயிற்றினையும் மார்பகத்தையும் பிரிக்கும் பகுதியான உதரவிதானம் எனும் தசை நாம் சுவாசம் உள்ளெடுக்கும் போது சுருங்கி சுவாசத்தை வெளியிடும் போது தளர்கிறது. இவ்வாறாக சாதாரணமாக சுருங்கி விரியும் உதரவிதானம் (diaphragm) திடீரென ப்ரனிக் நர்வ் (phernic nerve) எனும் நரம்பில் ஏற்படும் ஒருவித எரிச்சலினால் வேகமாக சுருங்கும் போது அதிகப்படியான காற்று நுரையீரலுக்குள் செல்கிறது. இதனை சமாளிக்கும் பொருட்டு எபிக்லோட்டீஸ் (epiglottis) எனும் சுவாசக் குழாய் மூடி வேகமாக மூடிக் கொள்கிறது. அதனால் ஏற்படும் ‘விக்’ எனும் சத்தத்தை தான் விக்கல் என்கிறோம்.

காரமான அல்லது சூடான பானங்கள் பருகுதல், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மது அருந்தும் போது, வயிறு உப்பிசம் போன்றவற்றினால் விக்கல் ஏற்படலாம். இந்த விக்கல் சாதாரணமானது தான் ஆனால் விக்கல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தொடர்ந்திருந்தால் வைத்தியரை நாடல் வேண்டும். ஏனெனில் தொடர் விக்கல் வயிற்றில் அசிரிட்டி அல்லது மூளைப் பாதிப்புக்கு அறிகுறியாகவும் இருக்கலாம்.

இருமல்

இருமல் மூச்சுக்குழாயிலுள்ள நோய்களால் அல்லது தூசுகள் படிதலால் உருவாகலாம். இது உடலில் தீடிரென அல்லது அடிக்கடி ஏற்படும் ஓர் நிகழ்வு. இது காற்றுப் பாதையினை அடைக்கும் எரிச்சலூட்டும் பொருட்கள், நுண்ணுயிர்கள் போன்றவற்றை சுத்தம் செய்கிறது.

இருமலை குரல் வளை மூடிக்கு எதிராக சக்தி வாய்ந்த வெளியேற்றம், நுரையீரலில் இருந்து காற்று பலமாக வெளியேறி குரல் வளை மூடித் திறக்கும் போது உண்டாகும் ஓசை, தன்னிச்சையாகவும் அன்னிச்சையாகவும் உண்டாதல், தொடர் இருமல் என பாகுபடுத்தி பார்க்க முடியும்.

புகைப்பிடித்தல், காற்று மாசு, ஆஸ்துமா, இரைப்பை மற்றும் உணவுக் குழாயில் ஏற்படும் எதிர்வினை நோய், பின் நாசி நீர்ச் சொட்டு, நீடித்த மூச்சுக் குழாய் அலற்சி, நுரையீரல் கட்டிகள், மாரடைப்பு போன்ற காரணங்களாலும் இருமல் ஏற்படுகிறது.

திடீரென ஏற்படும் சைனஸ், சளிக் காய்ச்சல் மற்றும் மூச்சுப் பாதைகளில் வைரஸால் ஏற்படும் தொற்று நோய்களினால் கடும் இருமல் ஏற்படுகிறது.

மிதமான கடும் இருமல் மூன்றிலிருந்து எட்டு வாரங்கள் வரை நீடித்திருக்கும் இதன் போது வைத்தியரை நாடுதல் கட்டாயமன்று. ஆனால் எட்டு வாரங்களுக்கு மேல் இருமல் தொடருமானால் உடன் வைத்தியரை நாடுதல் சிறந்தது.

சளி வெளி வராமை, களைப்பு, தொண்டை வரண்டு புண்ணாதல், எரிச்சல் ஊட்டும் தன்மை போன்ற அறிகுறிகள் காணப்படின் அது வரட்டு இருமல் ஆகும். வரட்டு இருமல் சைனஸ், விமோனியா, சுவாசப் பாதை தொற்று, தூசி அல்லது மகரந்த அலர்ச்சியினால் உருவாகிறது.

நம்மில் சிலருக்கு இரவில் தூங்கும் போது இருமல் ஏற்படுகிறது. இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இது உங்களை மரணம் வரை கூட்டிச் செல்லும்.இது இரவு நேரங்களில் சளி மூச்சுக் குழாயிலிருந்து நுரையீரலுக்கு செல்வதாலும், இரவு வேளை உணவு சமிபாடடையாது அதன் துகள் மூச்சுக் குழாய்க்குள் செல்வதாலும், இதய செயலிழப்பினாலும் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இருமல் ஏற்பட்டால் அவதானமாக செயற்படுவதோடு வைத்தியரை நாடுங்கள்.

ஏப்பம்

பொதுவாக நாம் ஏப்பம் ஏற்படும் போது நாம் உண்ட உணவு சமிபாடடைந்து விட்டதாக நினைக்கிறோம். நீங்கள் ஏப்பம் பற்றி அறியாத பல சுவாரசியமான அதிர வைக்கும் தகவல்கள் சில,

நம்மில் பலர் மூன்று வேளை உணவுகளில் இரு வேளைகளை மட்டுமே ஒழுங்கான முறையில் உண்கிறோம். அநேகமானோர் காலை வேளை உணவினை தவற விடுகிறோம். இதனால் வயிற்றில் அமிலங்கள் சுரந்து உணவு சரியான நேரத்தில் கிடைக்காமல் போகையில் வாயுவினை நிரப்புகிறது. இதனால் நேர தாமதமாக உணவினை உள்ளெடுக்கும் போது அந்த வாயு ஏப்பமாக வெளியாகிறது. நாம் உண்ணும் போது கூட மெதுவாக மென்று உண்பதில்லை அவசர அவசரமாக உணவினை விழுங்குகிறோம். இதனால் உணவுடன் காற்றும் சேர்ந்து நம் இரைப்பைக்கு சென்றடைவதாலும், அதிகமான கொழுப்பு உணவுகள், புகைப்பிடித்தல், நீர் அருந்தும் போதும், இரவு நேரங்களில் வாயு அடங்கிய உணவுகள் (முளைக்கட்டிய தானியம், ப்ரோக்கோலி) ஆகியவற்றை உண்பதாலும் ஏப்பம் ஏற்படுகிறது.

வயிற்றில் அல்சர், வயிற்றில் புற்று நோய், அஜீரண கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றின் அறிகுறியாகவும் ஏப்பம் வெளியாகிறது.

இரைப்பையில் சிறிதளவில் காற்று காணப்படின் அது சிறு குடல் வழியாக சென்று விடும். அதிகமான காற்று ஏப்பமாக வெளியாகிறது. அவ்வாறு ஏப்பம் வெளியாகத பட்சத்தில் வயிறு உப்புகிறது (பெரிதாகிறது). இதனை வயிற்று உப்பிசம் என்கிறோம்.

கொட்டாவி

நம் உடல் சோர்வாக இருப்பதற்கும் தூக்கம் வருவதற்குமான அறிகுறியாக கொட்டாவியினை நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அவை மட்டும் காரணம் கிடையாது. கொட்டாவி வருவதற்கு பல காரணங்கள் உண்டு.

உடலில் ஒட்சிசன் குறையும் போது அதனை சரி செய்துக் கொள்வதற்காக காற்றினை உள்ளெடுப்பதற்காகவும், சோர்வாக இருக்கும் போது மூளையிற்கு புத்துணர்ச்சி வழங்குவதற்காகவும், எம்.எஸ் தாக்கம் ஏற்படும் போது உடல் வெப்ப சமநிலையை பேண முடிவதில்லை இதனை சரி செய்து கொள்வதற்காகவும், நாம் உள்ளெடுக்கும் மருந்துகளால் உடல் சோரும் போதும், களைப்பு, தூக்கமின்மை போன்றவற்றாலும் கொட்டாவி வருகிறது.

அடிக்கடி கொட்டாவி வருவது கல்லீரல் பலவீனமாக அல்லது செயலிழந்து கொண்டிருப்பதற்கும், ஸ்டோர்க், மூளையின் ஆரோக்கியம் குன்றுதல், கைகால் வலிப்பு, மூளை தண்டில் புண்கள் ஏற்படல் போன்றவற்றிற்கான அறிகுறியாகவும் இருக்கிறது.

  • கொட்டாவி விடுவதால் சில நன்மைகளும் உண்டு,
    அதிகமான ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டு குருதியில் உள்ள காபனீரொட்சைட் வெளியாகிறது.
  • நுரையீரலில் இருக்கும் நுண்ணறைகள் சுருங்காமல் தவிர்க்கப்படுகிறது.
    மூளைக்கு தேவையான பிராணவாயு கிடைக்கிறது.
    மூளை புத்துணர்ச்சி பெறுகிறது.

தூங்க செல்வதற்கு முன் கொட்டாவி வருவதற்கான காரணம் என்ன? என சிந்தித்தது உண்டா?
நம் உடல் அசைவினில் இருக்கும் போது உடலுக்கு தேவையான ஒட்சிசன் கிடைக்கப் பெறுகிறது. ஆனால் தூங்குவதற்கு முன் நம் உடலில் பெரிதாக அசைவுகள் இருப்பதில்லை. இதனால் கொட்டாவி மூலம் தேவையானளவு ஒட்சிசனை உடல் பெற்றுக் கொள்கிறது.

கொட்டாவியால் சில நன்மைகள் கிடைக்கப் பெற்றாலும் அலுவலகம் மற்றும் இன்னும் சில இடங்களில் கொட்டாவி விடும் போது உங்களை சோம்பேறிகள் என கணக்கிடவும் வாய்ப்புண்டு. இவ்வாறான இடங்களில் கொட்டாவி வரும் போது எவ்வாறு அதனை கட்டுப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

  • உடல் சோர்வாகயிருப்பதால் கொட்டாவி வரக் கூடும் ஆகையால் அதை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளும் பொருட்டு அதிகமாக நீர் அருந்துங்கள்.
  • உடலில் ஒட்சிசனின் அளவு குறைவதாலும் கொட்டாவி வரக் கூடும் ஆகையால் பெருமூச்செடுத்து விடுங்கள். குறிப்பாக சுவாசம் உள்ளெடுக்கும் போது சிறிது நேரம் தாக்குப் பிடித்து வைத்து அதன் பின் வெளியிடுங்கள்.
  • உங்களை நீங்களே Busy ஆக வைத்துக் கொள்ளுங்கள்.

குறட்டை

நாம் உடல் ரீதியான அல்லது மன ரீதியான பிரச்சனைகளால் தூக்கத்திலிருந்து முழித்த நாட்களை விட அருகில் இருப்பவரின் குறட்டை சத்தம் கேட்டு முழித்த நாட்கள் தான் அதிகம். நாம் அனைவரும் குறட்டை விடுபவர்கள் அமைதியாக ஆழ்ந்து தூங்குவதாக நினைக்கின்றோம். உண்மையில் அவர்களின் தூக்கம் ஆரோக்கியமற்ற ஓர் தூக்கமாகவே இருக்கிறது. மூச்சுப் பாதை தடைப்பட்டு வாய்வழியாக சுவாசம் உள்ளெடுக்கும போது ஏற்படும் சத்தத்தை தான் குறட்டை என்கிறோம். குறட்டை ஓர் ஆரோக்கியமான விடயமல்ல. வைத்தியர்களை நாடி சரி செய்து கொள்ள வேண்டிய ஒன்று.

  • குறட்டை வருவதற்கு பல காரணங்கள் உண்டு,
    உடற் பருமன் அதிகமாகயிருப்பதால் தைரொயிட் ஹோர்மன் மற்றும் மற்றைய ஹோர்மன்களும் சமநிலையற்று மேலுள்ள மூச்சுப் பாதையை தளர்வடைய செய்கிறது. இதில் ஏற்படும் ஒலி தான் குறட்டை.
  • தூங்கும் போது தாடை, நாக்குப் பகுதி என்பன பின்தள்ளப்படுவதால் மூச்சுப் பாதை தடைப்பட்டு குறட்டை வருகிறது.
  • புகைப்பிடித்தல்
  • மது அருந்துதல்

உடலுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் ஒட்சிசனின் அளவு குறைதலை நமக்கு தெரியப்படுத்தும் ஓர் செய்கையே குறட்டை. இதனை அலட்சியப்படுத்தும் போது அடிக்கடி தூக்கத்தில் விழித்தல், உடற்சோர்வு, உயர் குருதியழுத்தம், சக்கரை வியாதி, இதய நோய்கள், பக்கவாதம், ஞாபகமறதி, தலைவலி போன்றன ஏற்படுகின்றன.

சக்கரை வியாதி உள்ளவர்கள் குறட்டையிற்கான முறையான வைத்திய ஆலோசனையை பெறாத விடத்து கண், கிட்னி போன்ற உறுப்புகள் பாதிப்படைய நேரிடும்.

இந்த குறட்டையினை குறைப்பதற்கான சில வழிகள்

  • உடற்பருமனை குறைத்தல்.
  • உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபடல்.
  • மது பழக்கம், புகைப் பழக்கத்தை தவிர்த்தல்.
  • ஒரு பக்கமாக தூங்குதல்.

குறட்டைக்கு முறையான சிகிச்சைகள் பெறுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். உடலில் ஏற்படும் மாற்றங்களிற்கான காரணங்களை உடனுக்குடன்தேடியறிந்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php