2020 Jul 16
பெண்களுக்கு அழகு சேர்ப்பது கூந்தல் தான். அந்த கூந்தல் நீளமானதாக அடர்த்தியாக கருமையானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. இன்று நாம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளில் முடி உதிர்வு என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. நாம் நாளாந்தம் கடைப்பிடிக்கும் சில தவறான பழக்க வழக்கங்களும் இதற்கு ஓர் காரணமாக அமைகிறது. அவ்வாறாக நாம் தவிர்க்க வேண்டிய சில பழக்க வழக்கங்கள்..
குளித்தவுடன் கூந்தலில் காணப்படும் சிக்கெடுத்தல். இது ஓர் தவறான வழக்கம். குளித்தவுடன் கூந்தல் சற்று பலவீனமாக காணப்படும் ஆகையால் சிக்குகளை சீப்பு அல்லது கைகளால் எடுக்கும் போது தலைமுடி உதிர்வதற்கான வாய்ப்பு அதிகம்.
குளிக்கும் போது தலையில் ஷேம்பு போட்டு அதிக நேரம் கழுவாமல் இருக்க கூடாது. இங்கு ஷேம்பு தலையில் ஊறி தலைமுடியின் வேர்களை பலவீனமானதாக மாற்றக் கூடும்.
தலைமுடிக்கு எண்ணெய் வைக்காதிருக்க கூடாது. தலை முடியின் ஆழம் வரை சென்று ஊட்டமளிப்பது எண்ணெய் தான். அதையும் நாகரிகம் என்ற பெயரில் தவிர்த்துக் கொண்டு வருகிறோம். இதனால் கூந்தல் வளர்வது தடைப்பட்டு தலைமுடி உதிர்வும் அதிகமாகிறது.
தலைமுடியில் சிக்கெடுக்கும் போது அவசரம் வேண்டாம். இன்று சிக்கெடுப்பதாக கூறி பலமான முடியினையும் வேரோடு அறுத்து எடுக்கின்றோம். எப்போதும் சிக்கெடுக்கும் போது மேலிருந்து கீழாக சீவுவதை தவிர்த்து நுனி முடியில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சீவி சிக்கெடுக்க வேண்டும்.
தலையில் சூடான எண்ணெய் வைப்பதை தவிர்க்கவும். அதிக சூடுடன் எண்ணெய் வைப்பதால் தலைமுடியின் வேர்கள் பலவீனமாகும். காய்ச்சிய எண்ணெயை ஆறவிட்டு வைத்தல் நன்று.