2020 Aug 5
இன்றைய காலகட்டத்தில் மனதினையும் உடலினையும் வலிமையாக வைத்துக் கொள்வது என்பது சவாலான ஒன்றாகவே உள்ளது. நம்மில் சிலர் உடல் வலிமை மீது அக்கறை காட்டுவதோடு நிறுத்தி மனதினை வலிமையானதாக பேண மறந்து விடுகிறோம். வேறு சிலர் மனதின் வலிமை மீது அக்கறை காட்டுவதோடு நிறுத்தி உடலினை வலிமையானதாக பேண மறந்து விடுகிறோம். உண்மையில் ஆரோக்கியமான வாழ்வானது உடல் மற்றும் மனதின் வலிமைகளில் தான் தங்கியுள்ளது. இரண்டில் ஒன்று தன் வலுவினை இழந்தாலும் அது ஆரோக்கியமற்ற வாழ்விற்கான ஓர் அறிகுறியே. நம் கண்களுக்கு தென்படும் வகையில் உடலினை வலிமை செய்ய போதுமான உடற்பயிற்சி உபகரணங்களுடன் Gymகள் காணப்படுகின்றன. மனதினை அமைதிப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான ஓரிரு தியான சாலைகளும் உண்டு. தனித் தனியே இரண்டிற்கும் செல்வதால் நிரந்தர தீர்வு கிடைக்குமா? ஆரோக்கியமான வாழ்வினை வாழ முடியுமா…?
சற்று சிந்தித்து பார்ப்போம். உடல் எடையை குறைப்பதற்காக உடற் பயிற்சி நிலையங்களிற்கு சென்று உடற்பயிற்சி செய்து எடையை பாதிக்கு பாதியாக குறைத்த பலரது எடை உடற்பயிற்சி நிறுத்தியதும் கண்ணிமை நொடியில் அதிகமாகுவதை நம் கண்களுக்கு நேர் கண்டுள்ளோம். தியான சாலைகள் சென்று மனதினை அமைதிப் படுத்தி வருவோர் கூட தியான சாலை வாசலை தாண்டியதும் உணர்ச்சிகளினால் ஆட்கொள்ளப்படுவதை கண்டிருப்போம். “சரி… அவ்வாறெனில் என்ன தான் தீர்வு…?” என உங்கள் மனதில் எழும் கேள்விக்கு எங்களிடம் பதில் உண்டு.
வாழ்வு முழுவதும் நிரந்தரமாக உடலினையும் மனதினையும் வலிமையுடையதாக பேணுவதற்கான ஒரே வழி யோகாப் பயிற்சிகள் தான். யோகாப் பயிற்சிகளில் காணப்படும் ஒவ்வொரு பயிற்சிகளும் உடலின் சிறுசிறு நரம்பு மண்டலங்களையும் ஆரோக்கியமானதாக பேணுவதற்கு உதவுகின்றது. அத்தோடு உடற்பயிற்சியின் போது மனதினையும் பயிற்சிக்கு உட்படுத்தி வலிமை செய்யும் உத்திகள் யோகாப் பயிற்சிகளில் உண்டு. யோகாப் பயிற்சிகளின் மூலம் ஓர் தனி மனிதன் தனது உன்னத நிலையினை உணர முடியும். தன் மனதில் எழும் எதிர்மறையான எண்ணங்கள் தேவையற்ற ஆசைகள் ஆகியவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும். இதனிலும் மேலாய் மனிதன் தன் ஆயுள் நாட்களை நீடித்துக் கொள்வதற்கான பயிற்சிகளும் யோகாப் பயிற்சிகளுக்குள் அடங்கும்.
பொதுவாக யோகா ஏழு வகைப்படும். அவையாவன,
1.ஜப யோகா
2.கர்ம யோகா
3.ஞான யோகா
4.பக்தி யோகா
5.ராஜ யோகா
6.குண்டலினி
7.நாடி
உடற் தசைகளில் கட்டுக்கட்டான மடிப்புகளை உருவாக்கி கொள்வதோ அல்லது துன்பம் நேரும் போதும் மறைத்து சிரித்து நடித்து வாழ்வதோ ஆராக்கியமான வாழ்க்கை ஆகுவதில்லை. வயது முதிர்ந்திடினும் உடலில் சீரான இயக்கம் நடந்துக் கொண்டிருப்பதும் எரிமலைப் போல் கோபத்தினை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களிலும் பொறுமையாக சிந்தித்து செயலாற்றவும் கூடிய உடல், உள வலிமை நிறையப் பெற்று வாழ்வதே சீரான ஆராக்கியமான வாழ்வாகும். எம்மால் இயன்றவரை நேரத்தினை ஒதுக்கி யோகாப் பயிற்சிகளில் ஈடுபடுவோம். ஆரோக்கியமான சமுதாயமாக நம் சமுதாயத்தினை மாற்றுவோம்.