2020 Aug 4
நம் முன்னோர்கள் சற்று வளர்ந்து தெளிவுடன் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாது மூன்று வயதிற்கும் குறைவான அல்லது அதே வயதுடைய குழந்தைகள் விளையாடக் கூடிய விளையாட்டுக்களையும் நமக்கு தந்து சென்றுள்ளனர். நாம் அனைவருக்கும் நம்முடைய சிறு வயதுப் பருவ காலங்களில் “இது சோறு, இது பருப்பு” என ஒவ்வொன்றாக கூறி நம் வீட்டின் பெரியவர்கள் கைவிரல்களைப் பிடித்து நிமிர்த்தி விளையாடிய நினைவு இருக்கும். நாம் பெரியவர்களான பின் சிறிய குழந்தைகளிடம் கைகளைப் பிடித்து இதே விளையாட்டினை விளையாடி இருப்போம். நம்மில் சிலருக்கு இந்த விளையாட்டின் பெயர் என்ன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விளையாட்டின் பெயர் பப்பு கஞ்சி. இது மூன்று வயதிற்கும் குறைவான அல்லது அதே வயதுடைய குழந்தைகளுடன் விளையாடப்படும் விளையாட்டு.
பப்பு கஞ்சி விளையாடுவது எப்படி…?
குழந்தையின் ஓர் கையினை எடுத்து வீட்டில் சமைக்கப்படும் ஒவ்வொரு உணவின் பெயரையும் “இது சோறு, இது பருப்பு, இது ரசம்” என கூறி ஒவ்வொரு விரலாக நீட்ட வேண்டும். அதன் பின் குழந்தையின் உள்ளங்கையை தட்டாக பாவித்து அனைத்து உணவையும் கொட்டி பிசைவது போல் பாவனை செய்ய வேண்டும். பின் “இது காக்கைக்கு, இது அப்பாக்கு, இது தாத்தாவுக்கு, இது எனக்கு” என வீட்டிலிருக்கும் ஒவ்வொரு உறவையும் கூறி அதிலிருந்து ஒவ்வொரு பிடியாக கொடுத்து “இது செல்ல பாப்பாவுக்கு” என கூறி ஊட்ட வேண்டும்.
பப்பு கஞ்சி விளையாடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன…?
பப்பு கஞ்சி விளையாடுவதால் குழந்தைகள் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளின் பெயர்களை அறிந்துக் கொள்கின்றனர். தம் வீட்டில் உள்ள உறவு முறைகள் பற்றியும் தெரிந்துக் கொள்கின்றனர். குழந்தைகளிடம் பிற உயிர்களுக்கு ஓர் பிடி அளித்து உண்ணும் பண்பும், மற்றவருடன் பகிர்ந்தளிக்கும் பண்பும் வளர்கிறது.
இனி நம் வீட்டில் உள்ள குழந்தைகளை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து விட்டு நம் கடமைகளை முடிக்கும் தவறான வழக்கத்தினை மாற்றிக் கொள்வோம். நம் குழந்தைகளின் வயதுக்கேற்ப தேவையான அறிவினை வழங்கும் பாரம்பரிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்துவோம்.