2020 Aug 10
தமிழ், சிங்களவர் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் மூங்கில் அல்லது ஈக்கிள் குச்சிகளால் கூடு கட்டி, வண்ண வண்ண காகிதங்கள் ஒட்டி, மின் விளக்குகளை உள்ளே ஔிர விட்டு அதன் ஔியில் மகிழ்ந்திருக்கும் நாளாக வெசாக் தினம் விளங்குகிறது. இதில் இன்னும் சிறப்பான நிகழ்வாக வெசாக் தோரணை விளங்குகிறது. இந்த வெசாக் தோரணைகளை இலட்ச்சகணக்கில் பணம் செலவு செய்து புத்தரின் வாழ்க்கை வரலாற்றின் பகுதிகளை ஓவியங்களாக வரைந்து, மின்னலங்காரங்களுடன் பிரமாண்டமானதாக வடிவமைப்பர். கொழும்பில் புறக்கோட்டை அரசமரத்தடிச் சந்தி, கிராண்ட்பாஸ் சந்தி, தெமட்டகொடை சந்தி, பொரல்லை சந்தி, வெள்ளவத்தை, பேலியகொடை சந்தி ஆகிய இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் வெசாக் தோரணைகள் கட்டுவர். இந்த வெசாக் தோரணைகளை பார்ப்பதற்கெனவே கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவர். இந் நாளில் தானம் அதாவது தன்சல் வழங்கும் நிகழ்வும் இடம்பெறும். சிலர் உணவுப் பண்டங்களையும், சிலர் குளிர்பானங்களையும் தன்சலாக வழங்குவர். இதனை மத பாகுபடின்றி மக்கள் வாங்கி உண்டு மகிழ்வர். இவ்வாறாக மின்னொளிகளின் நடுவே கோலகலமாக கொண்டாடப்படும் வெசாக் பண்டிகை பற்றிய சில தகவல்கள் இதோ…! உங்களுக்காக,
வெசாக் பண்டிகை எப்போது கொண்டாடப்படுகிறது?
ஒவ்வொரு வருடமும் மே மாதம் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது. இத்தோடு புத்தர் பிறந்த காலமாக கருதப்படும் கி.மு. 563யிலிருந்து நடைமுறையிலுள்ள பௌத்த காலக் கணிப்பீட்டு முறையினைக் கொண்டும் வெசாக் பண்டிகைக்கான நாள் கணிக்கப்படுகிறது.
வெசாக் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணம் என்ன?
புத்தர் பிறந்த நாள் (இடம் – லும்பினி), புத்தர் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள் (இடம் – புத்தகாய), புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள் (இடம் – குசிநகர்) ஆகிய மூன்று நிகழ்வுகள் நிகழ்ந்த நாட்களுமே மே மாதத்தின் பௌர்ணமி நாளாக பௌத்தர்கள் நம்புகின்றனர். இதனால் மே மாதத்தின் பௌர்ணமி நாள் வெசாக் தினமாக கொண்டாடப்படுகிறது.
வெசாக் தினத்தன்று இடம்பெற்றதாக நம்பப்படும் வேறு சில வரலாற்று நிகழ்வுகள்,
புத்தர் கிம்புல்வத்புரவிற்கு விஜயம் செய்த மனித வர்க்கத்தினருக்கு வழிகாட்டிய நாள்.
- புத்தரின் மூன்றாவது இலங்கை விஜயம் இடம்பெற்ற நாள்.
- புத்தர் சிவனொளிபாத மலைக்கு விஜயம் செய்த நாள்.
- விஜயன் 500 தோழர்களுடன் இலங்கைக்கு வருகை தந்த நாள்.
- துட்டகைமுனு மன்னன் ருவன்வெலிசாயவை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டிய நாள்.
வெசாக் பண்டிகையினை கொண்டாடும் விதம் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றது. இலங்கையர்களால் கோலகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் வெசாக் பண்டிகையும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது.