2020 Nov 16
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் தலைவலியாக இருப்பது சளி பிரச்சனை தான். பொதுவாக அனைவரது உடலிலும் சளி உருவாகிக் கொண்டிருப்பது வழக்கம் சாதாரண சளி பிரச்சனையாக இருப்பதில்லை அதன் அளவும் வீரியமும் கெட்டி தன்மையும் கூடும் போது பெரும் பிரச்சனையாக மாறி விடுகிறது. இதனால் பெரிதும் தொண்டை, மூக்கு, நுரையீரல் ஆகிய உடற்பகுதிகள் தொற்றுக்கள் மற்றும் ஒவ்வாமையினால் பாதிப்புக்குள்ளாகின்றன. இதன் விளைவாக தொண்டை வறட்சி, தலைவலி, மூக்கடைப்பு, சுவாசப் பிரச்சனை போன்றவை ஏற்படுகின்றன.
எம்மை படாத பாடுபடுத்தும் சளியின் வீரியத்தை குறைப்பதற்கான சில பாட்டி வைத்திய முறைகள்,
இதோ! உங்களுக்காக,
இஞ்சி
ஓர் சிறிய இஞ்சி துண்டில் சிறிதளவு உப்பினை சேர்த்து ஒரு துளசி இலையினையும் வாயிலிட்டு மெல்லவும். இஞ்சிக்கு வறண்ட தொண்டையினை சரி செய்யவும், சளி மற்றும் இருமலினை போக்கும் தன்மையும் உண்டு.
பூண்டு
நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்து சிறிதளவு நெய்யூற்றி பொறித்து எடுக்கவும். பொறித்தெடுத்த பூண்டுகளை சூடாற முன் உண்ண வேண்டும். குழம்பு அல்லது சூப்பில் பூண்டினை நசுக்கி சேர்த்தும் உண்ணலாம். இவ்வாறு செய்து வந்தால் சளி, இருமல் குணமாகும்.
பால் மற்றும் மஞ்சள்
பொதுவாக சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் கலந்து குடிப்பது ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் அதிலும் சளி மற்றும் இருமலினால் பாதிக்கப்படும் சமயங்களில் உடன் நிவாரணம் தரும். பாலில் மஞ்சளுடன் சிறிதளவு மிளகு தூள் மற்றும் பனக்கற்கண்டு கலந்து குடிப்பது இன்னும் சிறப்பான பலனை தரும்.
தேன்
சளியினால் பாதிக்கப்பட்டோர் அதிகாலை எழுந்தவுடன் மிதமான சூடுள்ள நீரில் சிறிதளவு தேன் மற்றும் மிளகு தூள் கலந்து குடித்தால் சளி பிரச்சனை நீங்குவதோடு வறண்ட தொண்டையின் தன்மையும் சரியாகிவிடும்.
கருமிளகு டீ
ஒரு கப் வெந்நீரில் இரண்டே கரண்டி தேன் மற்றும் சிறிதளவு கருமிளகு சேர்த்து 15 நிமிடங்களுக்கு மூடி வைத்தப் பின் குடிக்கவும். இது சளி மற்றும் இருமலுக்கு சிறந்த மருந்தாகும்.
வெங்காய சிரப்
ஓரிரு சின்ன வெங்காயங்களை உரித்தெடுத்து நசுக்கி ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதன் பின் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அழிந்து விடும்.
மிளகு ரசம்
சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டோர் மதிய உணவுடன் மிளகு ரசம் சேர்த்து அல்லது ஒரு கோப்பை மிளகு ரசம் தினமும் அருந்தி வந்தால் சளியிலிருந்து நிவாரணம் பெற முடியும்.