2020 Nov 14
தீபங்களின் வரிசையில் இருள் நீக்கி ஔியின் வரவில் மனதில் இறைவனை குடியேற்றும் நன்னாள் தீபாவளி ஆகும். அதுவே தீபாவளியின் உள் அர்த்தமும் ஆகிறது. கிருஷ்ண பகவான், நரகாசுரனை வதம் செய்து தீயது கழித்து நன்மை பயந்த, ஐப்பசி மாத கிருஷ்ணபட்சத் திரயோதசி இரவுப் பொழுது கழிந்து வரும் சதுர்த்தசி தினம் “நரக சதுர்த்தசி” அதுவே தீபாவளியாகும்.
தீபத்தில் பரமாத்மாவும் , நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்வதாக மக்கள் நம்பிக்கை உள்ளது. இந்த தீப ஜோதி இருளை நீக்கி எவ்வாறு ஔி பரப்புகிறதோ, அதுபோல மக்கள் மனத்தில் உள்ள அகங்காரம், பொறாமை,கோபம் போன்ற இருள் குணங்களை அகற்றி சிறந்த குணங்களால் மனிதர்களும் ஔி வீச வேண்டும் என்பது நம் முன்னோர் உரைத்த நல்வழியாகும்.
தீபாவளி கொண்டாடிடும் மக்கள், மனதின் இருள் நீக்கி நல் எண்ணங்களால் நிரப்பும் மார்க்கத்தை தீபாவளி வழிக்காட்டுகிறது.
இந்நாளில் மக்கள் நல் எண்ணங்களுக்கு ஒப்பாய் நல்லெண்ணெய் தேய்த்து நீராடுதல் அவசியமாகிறது. தேவையற்ற சிந்தனைகளை ஒழித்து குடும்பம் மற்றும் உறவுகளுடன் மகிழ்வை பகிர்ந்து இந்நாளை கொண்டாடவேண்டும்.
இந்த வருடம் “கொரோனா” தொற்றின் தாக்கத்தால் பல பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தலின் காரணமாாக கோவில் செல்வது, உறவுகளை சந்திப்பது, பலகாரங்கள் பகிர்வது முடியாத செயல்களாக இம்முறை மாறியுள்ளது.
நாட்டின் நிலையுணர்ந்து வீட்டிலேயே பாதுகாப்பாய் இறைவனை நினைத்து வழிபட்டு உலக நன்மைக்காக பிரார்த்திப்போம். பிரிந்திருக்கும் உறவுகளுடன் தொலைபேசிகளின் வாயிலாக ஒன்றிணைந்து பிரிந்திருப்பது உடல்களே தவிர, உறவுகளல்ல என்பதை உணர்த்துவோம். இந்த தீபாவளி நன்னாளில், உலகை அச்சுறுத்தும் அரக்க தொற்று விரைவில் அழிந்து , ஔிமயமான எதிர்காலத்தை அடைய பிரார்த்திப்போம். உலக நன்மையை வேண்டுவோம்.