2020 Dec 15
இலங்கை தீவில் கொண்டாடப்படும் பிரபல்யமான பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் ஒன்றாகும்.
இந்தப் பண்டிகை காலமானது, வருடத்தில் மக்களை பரபரப்பாக காணக்கூடிய காலங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஒவ்வொரு வருடமும் ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஆகிய இடங்களில் பலர் குடும்பங்களுடனும் நண்பர் பட்டாளத்துடனும் நிறைந்திருப்பர். தன் குடும்பங்களை பிரிந்து வெளிநாடுகளில் வாழும் உறவுகளின் கிறிஸ்துமஸ் பண்டிகை கால வருகை பலருக்கு சந்தோஷத்தினை தரக்கூடியதாக இருக்கும்.
எதிர்ப்பாராத விதமாக இந்த வருடம் இவை அனைத்திலும் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட கொவிட்-19, சமூகத்தோடு கலந்து வாழ்ந்து கொண்டிருந்த நம் வாழ்வில் பல தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளையும் சுகாதார ரீதியான எச்சரிக்கைகளையும் உருவாக்கியுள்ளது. சமூகத்தோடு இணைந்து ஆரவாரித்து கொண்டாடும் பண்டிகையாக கிறிஸ்துமஸ் பண்டிகை திகழ்கிறது. இவ்வாறான தனிமைப்படுத்தல் சூழ்நிலைக்கு மத்தியில் எவ்வாறு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவது?
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதில் ஆர்வத்துடன் இருக்கும் எவரும் கவலை கொள்ள வேண்டாம்! இந்த மாதிரியான சூழ்நிலையில் எப்படி பாதுகாப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாடலாம் என உங்களுக்காக சில டிப்ஸ்.
ஒன்லைன் ஷோப்பிங்
கிறிஸ்துமஸ் காலமானது பிறருக்கு அன்பளிப்புகளை கையளிக்கும் காலம். இந்த அன்பளிப்புகளை கொள்வனவு செய்வதற்கு ஷாப்பிங் முதற்படியாகும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கால ஷாப்பிங்கானது புதிய அனுபவத்தினை மட்டுமல்லாது அபாயத்தினையும் ஒருங்கே தரக்கூடியதாக உள்ளதை நாம் மறுத்திட முடியாது.
தற்போது அதிர்ஷ்டவசமாக நம்மால் ஒன்லைன் ஷாப்பிங் செய்யக்கூடிய வசதியுள்ளது. இந்த கொவிட்-19 நிறைய ஆன்லைன் தளங்களைத் திறக்கச் செய்துள்ளது. அவற்றில் பல இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் உள்ளன. ஒன்லைன் ஷாப்பிங்கில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் நாம் வேறொன்றை தெரிவு செய்வோம். அதாவது பெரிதாக கூட்டங்கள் கூடாத நேரங்களில் ஷாப்பிங் மால்களுக்கு சென்று ஷாப்பிங் செய்வது வசதியானதாகவும், ஆறுதலாக ஷாப்பிங் செய்யக் கூடியதாகவும், உங்களை கிருமி தொற்றிலிருந்து பாதுகாப்பதாகவும் அமையும்.
உணவு மற்றும் பானங்களை பரிமாறுவதற்காக ஒருமுறை பாவனைக்கு உட்படுத்தக் கூடியவற்றை உபயோகிக்கலாம்.
இது சுகாதார கிருமி பரவலை தடுப்பதாகவும் நீங்கள் சுத்தம் செய்வதற்கான நேரத்தை மீதப்படுத்துவதாகவும் அமையும். இவை மலிவானதாகவும் அனைத்து சுப்பர் மார்க்கெட்களிலும் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. இவற்றை பாவனைக்கு உட்படுத்தும் போது சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புடன் செயற்படுங்கள். அவற்றை சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்துங்கள்.
இந்தப் பாத்திரங்களில் விருந்தினர்களின் பெயர்களை குறிப்பிட்டு எழுதவும்.
ஒரே பாத்திரத்தை விருந்தினர்கள் உபயோகத்திற்கு உட்படுத்தாத படி தனித்தனியே பெயரிட்டு வரிசைப்படுத்துங்கள். இது உங்கள் விருந்தினர்களுக்கு ஒரு வேடிக்கையான கிறிஸ்துமஸ் அனுபவமாக அமையும். குழந்தைகள் அவற்றை தனக்கென கொண்டு சென்று வண்ண வண்ண பேனாக்கள், ஸ்டிக்கர்கள் கொண்டு அழகாக அலங்கரிப்பார்கள்.
சமூக இடைவெளியை பேணல்.
இந்த காலத்தில் சமூக இடைவெளியை பேணுதல் என்பது நமது முக்கிய கடமையாகும். ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பெரிய விருந்துகளை ஒழுங்கு செய்வதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் சிறிய விருந்துகளை ஒழுங்கு செய்யலாம். கிறிஸ்துமஸ் காலத்தில் பரிசுகள் கொடுத்தல், அன்பு மற்றும் பராமரித்தல் போன்றவற்றை ஒருவருக்கொருவர் பகிரும் போது நாம் அவதானிப்பாக இருக்க வேண்டும். நாம் கூட்டம் கூட்டமாக கூடி கொண்டாடுவதை தவிர்த்து குடும்ப அங்கத்தவரகளுடன் கொண்டாடலாம். இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியினால் நாம் நமது மற்றைய உறவுகளுக்கு ஒன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு கொண்டாட முடியுமானதாக இருப்பது அதிர்ஷ்டம் தான். இந்தக் கிறிஸ்துமஸினை உங்களுக்கு பிடித்த பாடல்கள், உங்களுக்கு விருப்பமான உணவு, உறவுகளுடன் சமூக இடைவெளியையும் பேணிய படி கொண்டாடலாம். ஒரு வேளை நீங்கள் அதிகமான நபர்களுடன் கொண்டாட நேரிட்டால் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்து கொள்ளுங்கள். முகக்கவசம் அணிவது கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்குமே தவிர உங்களுடைய கொண்டாட்டங்களில் எந்தவொரு தடையும்ஏற்படுத்தப்போவதில்லை.
உணவினை டெலிவரி செய்யும் முறை மற்றும் ஒன்லைனில் மளிகை பொருட்கள் வாங்கும் முறையினை பின்பற்றவும்.
இந்த முறையினை பின்பற்றுவதனால் உங்களால் உள்ளூர் வணிகத்திற்கு உதவுவதோடு அதற்காக நீங்கள் செலவிடும் நேரத்தினையும் மீதப்படுத்திக் கொள்ள முடியும். இப்போது சுகாதர நடவடிக்கைகளை கையாண்டு வீட்டிற்கு டெலிவரி செய்யக் கூடிய வகையிலான நிறைய ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இதனால் வீட்டிலிருந்தபடி சமூக இடைவெளியையும் பேண முடியும்.
விருந்தினர்களை சமையலறைக்குள் அனுமதிப்பதை தவிருங்கள்.
உணவினை சுகாதாரமானதாக பாதுகாத்து கொள்வதற்கும், கிருமித் தொற்றினை தடுப்பதற்கும், விருந்தினர்கள் சமையலறையினை உபயோகிக்காதிருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விருந்தினர்கள் உணவினை பரிமாறும் முன் சுவை பார்ப்பதற்கோ, தொடுவதற்க்கோ அனுமதிக்காதிருங்கள். உணவு தயாரானவுடன் அவர்களுக்கு பரிமாறுங்கள்.
கேக் கலவை எவ்வாறு தயாரிக்கப்படும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அவ்வாறு தயாரிக்கப்படும் போது ஒருவர் மட்டும் அதனை செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பாலும் சுயபரிமாறல் முறைக்கு பதிலாக இருவர் சேர்ந்து அனைவருக்கும் பரிமாறும் படியாக ஒழுங்கு செய்தல் சிறப்பானது.
பொதுவாக அனைவரும் கூடக்கூடிய இடங்களில் கை சுத்திகரிப்பானை காட்சிப்படுத்துங்கள்.
உங்கள் விருந்தினர்களின் கைகளை சுத்தம் செய்து சுகாதாரத்தினை பேணுவதை உறுதி செய்யுங்கள். அதனால் உங்கள் வீட்டின் நுழைவாயில், கூடம், கழிவறை, சமையலறை ஆகிய இடங்களில் கை சுத்திகரிப்பான்களை விருந்தினர்களின் பாவனைக்காக காட்சிப்படுத்துங்கள். இதனால் கிருமித் தொற்றினை கட்டுப்படுத்த முடியும்.
மேலதிக டிப்ஸ்!
நீங்கள் உங்கள் உறவுகளை பல காலம் கழித்து பார்க்கும் தருணமாக இந்த தருணம் இருக்கலாம். ஆனாலும் இருவரின் சுகாதார நலன் கருதி ஒருவரை ஒருவர் கட்டியணைப்பதை தவிர்த்து, முழங்கைகள் மூலமாக அல்லது நாம் மறந்த நம் பாரம்பரிய வணக்கம் சொல்லும் முறையினை கையாளுங்கள். இதனால் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இந்த கிருமித் தொற்று அபாயம் நிறைந்த கிறிஸ்துமஸ் காலப்பகுதியினை ஒருவருக்கு ஒருவர் சுகாதார நடவடிக்கைகளில் விழிப்புணர்வுடனும் குடும்பங்கள் பற்றி சிந்தித்து பொறுப்புணர்வுடனும் நம்மை நாமே மேற்குறிய டிப்ஸ்களினை கையாண்டு தனிமைப்படுத்தி நம்மையும் நம்மை சார்ந்தோரையும் பாதுகாத்து அன்பு, பராமரிப்பு கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு மனமகிழ்ச்சியோடு இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையினை கொண்டாடுவோம்.
அனைவருக்கும் இனிய விடுமுறை கால வாழ்த்துகள்!