அனைத்தையும் நாடி  ஆதி சிவனுக்கான இரவு – மகா சிவராத்திரி

ஆதி சிவனுக்கான இரவு – மகா சிவராத்திரி

2021 Mar 11

சிவன் எனப்படும் சிவபெருமான்; மகாதேவா, மகாயோகி, பசுபதி, நடராசா, பைரவா, விஷ்வநாத், பாவா, போலேநாத் போன்ற பெயர்களுக்கும் உரித்துடையவராவார். தவிர சிவபெருமான், தமிழர்களின் ஆதி குடி எனவும் நம்பப்படுகிறார். இந்து சமயத்தில் பிரம்மா, விஷ்ணு  போன்ற பிரபல்யமான கடவுகள் இருப்பினும் அதி பிரபல்யமான கடவுளாக சிவபெருமான் விளங்குவதோடு, அதிக சக்திகள் கொண்ட கடவுளாகவும் கருதப்படுகின்றார். இந்து ஆலயங்களில் சிவபெருமானின் சன்னதி ஏனையவற்றை விட வேறுபட்டதாக காணப்படுவதோடு தனிமைப்படுத்தப்பட்ட சன்னதியாகவும் இருக்கும்.

அதிசக்தி வாய்ந்த அழிக்கும் திறன் கொண்ட கடவுளாக போற்றப்படும் சிவபெருமான், அறியாமையின் கடவுளாகவும் (God of Ignorance) சித்தரிக்கப்படுகிறார். இவர் அதிகமாக பனிமூட்டமிக்க பிரதேசமாக வர்ணிக்கப்படும் கைலாய மலைகளில் வாழ்வதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு அடுத்த படியாக சுடுகாட்டில் வாழ்வதாகவும் நம்பப்படுகிறது. மேலும் யோகக்கலை மற்றும் நடராசர் நடனத்தின் பிரதிபலிப்பாக சிவபெருமான் விளங்குவது யாவரும் அறிந்ததே. 

மகா சிவராத்திரி

அடுத்தபடியாக சிவனுக்குப் பிரியமுள்ள ராத்திரியாக விளங்கும் சிவராத்திரியை பற்றி நோக்குவோம். மகா சிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இது ஆண்டு தோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி திதி இரவில் கொண்டாடப்படும். சிவராத்திரி என்பதில் சிவன் என்ற சொல்லிற்கு  மங்களம், இன்பம் என பொருள் கொள்ளலாம். மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து  வரும் 14 ஆவது திதியன்று  சிவராத்திரி வருகின்றது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ தினத்தை சிவராத்திரி தினமாக கடைப்பிடிக்கிறோம்.


மாசி மாதம் தேய்பிறை சதுர்தசி திதியில், அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே மகா சிவராத்திரி தினம் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரியன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லா விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளித்து அருள் புரிய அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். அதற்கு சிவபெருமானும் அருள் புரிந்தார். அந்த இரவே மகா சிவராத்திரி என வணங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

சிவனுக்கும் கஞ்சா புகைப்பதற்குமான தொடர்பினை நோக்குவோம்

தேவர்கள் மற்றும் அரக்கர்கள் பாற்கடலை கடைவதன் மூலம் அமிர்தம் எனப்படும் சாகா வரம் கொடுக்கும் ஓர் திரவியத்தினை (Nectar of  Immortality) கைவசப்படுத்திக்கொள்வதற்காக, வாசுகி என்ற பாம்பை வைத்து பாற்கடலை கடைந்து வந்தனர். அனைத்து அதீத சக்தியிலும் ஒரு கெடுதல் உள்ளதென்பது யாவரும் அறிந்ததே! அதனடிப்படையில் பாற்கடலைக் கடையும்போது அதிகளிவிலான நஞ்சு வெளிவரத் தொடங்கியது. இதைக் கண்டு பதட்டமுற்ற தேவர்களும் அரக்கர்களும் சிவபெருமானை நாடியுள்ளனர். சிவன் பாற்கடலிலிருந்து வெளிவந்த நஞ்சினை உட்கொண்டு நிலமையை சீர் செய்தார். இதனால் சிவனின் உடல் முழுவதும் நீல  நிறத்தில் மாறத்துவங்கியது.

‘ஆலகால விடம்’ எனப்படும் அதிசக்திவாய்ந்த நஞ்சினை அருந்திய சிவன், ‘நீல கண்டன்’, ‘விடமுண்ட கண்டன்’ என யாவராலும் போற்றப்படுகிறார். மேலும் இதைக் கண்டு வியந்த தேவர்களும் அரக்கர்களும், ஒரு துளியில் உலகை அழிக்கும் வல்லமை கொண்ட ஆலகால  நஞ்சினை சமனிலைப்படுத்த ‘பாங்க்’ எனப்படும் திரவியத்தை வழங்கினர். அத்திரவியத்தில் கஞ்சா உட்பட பல மூலிகைகள் கலக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. மேலும், கஞ்சா இலையினை புகைத்து நஞ்சின் சக்தியை சமப்படுத்திக் கொண்டதாகவும் பரவலாக  நம்பப்படுகிறது. இக் கதைகள் அனைத்தும் இந்து சமயத்தின் ஓர் நம்பிக்கையாகக் (Mythology) கருதப்படுவதோடு, வரலாறாக எங்கும் பதிவிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சிவபெருமான்  சித்த வைத்தியத்தின் தந்தையாக எல்லோராலும் வணங்கப்படுகிறார். 4000 வருட பழமை வாய்ந்த சித்த வைத்தியத்தில், கஞ்சாவின் பயன்பாடு பற்றி பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது  மட்டுமல்லாது, சுவர் சிற்பங்கள் மற்றும் ஓலைச் சுவடிகள் போன்றவற்றில்  அதிகளவாக கூறப்பட்டிருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here