2021 Feb 21
இது எப்போதும் கடல் போன்ற இருண்ட மேகங்களால் சூழப்பட்ட ஓர் வனப்பகுதியாகும். இது இலங்கையின் கடைசி தாழ்நில மழைக்காடாக அடையாளப்படுத்தப்படுகிறது. இது இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்த மற்றும் பிரதான இடமாக திகழ்கிறது. இது 139 அரிய வகை தாவரங்கள் மற்றும் நாட்டின் பாதி பாலூட்டி வகைகளின் வாழ்விடமாக விளங்குகிறது. 1988இல் United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO), சிங்கராஜ வனத்தை உலக பாரம்பரியம் மிக்க தளமாக (World Heritage Site) அறிவித்தது.
UNESCO அமைப்பின் World Heritage வலைத்தளத்தில், 213 இயற்கை வளங்கள் உள்ளடங்கும், கிட்டத்தட்ட 96 நாடுகளைச் சேர்ந்த உலகின் பாரம்பரியம் மிக்க தளங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் மேலும் இரண்டு தளங்கள் இலங்கையில் இருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும். அவை முறையே ஹோர்ட்டன் சமவெளி தேசிய வனம் (Horton Plains), நக்கிள்ஸ் மலைத்தொகுதி (Knuckles Mountain Range) மற்றும் சிங்கராஜ மழைக்காடுளாகும்.
World Heritage List பட்டியலில் உள்ளடக்கப்பட குறிப்பிட்ட தளங்கள், உலகளாவிய மதிப்பினை கொண்டிருப்பதற்கான பத்து கட்டளை விதிகளில் குறைந்தபட்சம் ஒன்றையாவது கொண்டிருக்க வேண்டும்.
சிங்கராஜ வனமானது பின்வரும் கட்டளை விதிகளை சந்தித்ததன் காரணமாக உலகளாவிய மதிப்பினையுடைய தளமாக ஏற்கப்பட்டது.
- தெரிவு செய்யப்படுவதற்கான கட்டளை விதி IX : இலங்கையின் வெப்பமண்டல மற்றும் ஈரப்பதமான பசுமை மாறாத வனங்களில் மிகுதியாக இருக்கும் வனமாக சிங்கராஜ வனம் காணப்படுகின்றது. கோண்டுவானா நிலப்பரப்பின் நினைவுச்சின்னமான தாவரங்கள் சில இருக்குமிடமாகவும், கண்டப்பெயர்ச்சி குறித்த அறிவியல் மற்றும் உயிரியல் சம்பந்தமான ஆய்வுகளினை மேற்கொள்வதற்கு சிறந்ததொரு தளமாகவும் விளங்குகிறது.
- தெரிவு செய்யப்படுவதற்கான கட்டளை விதி X : இது மலர்களின் பூர்வீக நிலமாக காணப்படுகின்றது. இங்கு நம் நாட்டிற்குரிய 139 வகை தாவர இனங்கள் காணப்படுவதோடு அவற்றுள் சில அரிதானவையாகவும் திகழ்கின்றன.
இங்கு விலங்கினங்களும் அதிகம். நாட்டின் 50% மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் இங்கு காணப்படுகின்றன. இலங்கையை சேர்ந்த 20 உள்ளூர் பறவை இனங்களில், 19 பறவை இனங்கள் இந்த காட்டில் தான் வாழ்கின்றன. அதுமட்டுமல்லாது பயங்கரமான வன விலங்கினங்களான சிறுத்தை மற்றும் இலங்கையின் ஈரநில யானைகளின் வாழ்விடமாகவும் சிங்கராஜ வனம் காணப்படுகின்றது.
மழைக்காட்டை பிரவேசித்தல்
வருடம் முழுவதும் மழைவீழ்ச்சி காணப்படும் காடாக இருந்தாலும், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மற்றும் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை மழைவீழ்ச்சி குறைவானதாகவே காணப்படும். நீங்கள் வனவிலங்குகளை பார்க்க விரும்புகிறீர்களாயின் காட்டின் வட பகுதியிலுள்ள பூங்கா வழியாக செல்லுங்கள். அந்தப் பகுதியில் தான் கிராம மக்களின் தலையீடு குறைவானதாக காணப்படும். காட்டுக்குள்ளிருக்கும் நீர்வீழ்ச்சியினை பார்வையிட, பிடதெனிய வழியே செல்வது பொருத்தமானதாக இருக்கும். சிங்கராஜ காட்டுக்குள் பயணிக்கும் போது அது பற்றிய தெளிவான அறிவினை உடைய ஓர் வழிகாட்டி ஒருவரை உங்களுடன் வைத்துக் கொள்வது நல்லது. பூங்காவின் வாயிலில் 600 ரூபாய்க்கு அவ்வாறான வழிகாட்டியை அழைத்துச் செல்ல முடியும். முதல் தடவை பயணமாயின், நம்மால் கண்டறிய முடியாத விலங்குகளை நன்கு பயிற்சி பெற்ற வழிகாட்டியின் உதவியுடன் கண்டறிய இலகுவாக இருக்கும்.
பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கான வழி நடை பாதையாகவே காணப்படுகின்றது. ஆகவே காட்டிற்குள் செல்பவர்கள் அட்டை மற்றும் நுளம்புகளை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். பூச்சி கடியிலிருந்து காக்கும் மருந்து (insect repellent) அல்லது உப்பினை உபயோகிப்பது, இவற்றின் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள துணைபுரியும். நீங்கள் இங்கு காணப்படும் வெப்பநிலைக்கு ஏற்றவாறான உடை மற்றும் காலுறை அணிதல் சிறப்பானதாக அமையும்.
ஆராய வேண்டிய விடயங்கள்
இந்தக் காடு அதிகளவிலான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் பெரும்பான்மையானவை இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவை. இங்கு இலங்கையின் நீல மாக்பி, சிவப்பு முகம் கொண்ட மல்கோஹா மற்றும் பசுமை பில்ட் கூகல் போன்ற சில அரிய பறவைகளை பார்வையிடலாம். இந்தப் பறவைகளை தனித்துவமாக்குவது என்னவென்றால், ஆறு அல்லது அதற்கும் மேற்பட்ட பறவை இனங்கள் தீவனத்தின்போது ஒன்றாக இருக்கின்றன. இந்த நிகழ்வு மிகவும் அசாதாரணமானது மட்டுமன்றி பறவைகளை பார்வையிட வருபவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
சிங்கராஜ வனத்தில் அனைவரது மனதையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஓர் பகுதியென்றால் அது கிருவானா நீர்வீழ்ச்சி தான். இது இலங்கையின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. இங்கு நீங்கள் பிரவேசிக்க உள்ளீர்களாயின் இந்தப் பகுதி மிகவும் வழுவழுப்பான பகுதி என்பதை கவனத்திற் கொண்டு அதற்கேற்றவாறு செயற்படுங்கள்.
சற்று அருகில் கோட்டபோலா கிராமத்திற்கு நீர்மின்சாரம் உற்பத்திக்கு பயன்படும் கோட்டபோலா நீர்வீழ்ச்சியுள்ளது. இது அழகான ஓர் இடமாக இருந்த போதிலும் இதனை காட்டுக்குள் செல்லும் மக்கள் கண்டறிந்து பிரவேசிப்பது குறைவு.
இலங்கையின் பௌத்த மத கலாசாரத்தை வெளிப்படுத்தக் கூடிய நினைவுச் சின்னங்களும் சிங்கராஜா வனத்தில் காணப்படுகின்றன. டெனியாயவின் தென்மேற்கில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோலவெனிகம விகாரை அதற்கான ஓர் எடுத்துக்காட்டாகும். இந்த விகாரையின் கட்டமைப்பினை உற்று கவனிக்கும்போது, இது கண்டியில் உள்ள புனித தலதா நினைவுச் சின்னத்தினை ஒத்திருப்பதைக் காணலாம். சில ஆண்டுகளாக பல சிதைவுக்குள்ளான போதும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து பார்வையிடும் தளமாகவே திகழ்கின்றது. மேலும் கோட்டாபோலாவின் தென்மேற்கே கெடபருவ ரஜ மகா விகாரை உள்ளது. 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த ஒரு இயற்கை குகைக்குள் கட்டப்பட்ட, பழங்கால பாறையினாலான விகாரையினை காண விரும்புகிறீர்களாயின் கெடபரு மலையின் உச்சிக்கு செல்லுங்கள். இப்பகுதி கண்களுக்கு விருந்தளிக்க கூடியதாக அமையும். இந்த விகாரையின் அழகிய சூழலில் புத்தரின் தங்க சிலை மற்றும் பல்வேறு அரிய மருத்துவ தாவரங்களோடு, சில பூர்வீக விலங்கினங்களும் உள்ளன.
இறுதி இரண்டு ஈரநில யானைகள்
சிங்கராஜ வனத்தைப் பற்றி சொல்லும் போது இங்கு கடைசியாக எஞ்சியிருக்கும் இரண்டு ஈரநில யானைகள் பற்றி குறிப்பிடுதல் அவசியமாகும். இந்த இரு யானைகளை, சில சர்ச்சைகளின் காரணமாக காட்டிலிருந்து அகற்ற முடிவு செய்துள்ளனர். யானைகள் “keystone species” என அழைக்கப்படுவதோடு அவை சுற்றுச்சூழல் மற்றும் அவற்றை சூழவுள்ள விலங்குகளின் ஆரோக்கியத்திற்கும் துணை நிற்கின்றன. யானைகளை காட்டில் இருந்து அகற்றினால், யுனெஸ்கோவானது (UNESCO), சிங்கராஜ காட்டினை World Heritage Site பட்டியலிலிருந்து நீக்கி விடுவதாக தெரிவித்துள்ளது. இந்த முக்கியமான பட்டியலில் இருப்பதனால் சிங்கராஜ காடு பெற்று வந்த சில நன்மைகளை, இழக்க நேரிடும் என அறியப்படுகிறது:
- அடையாளம் : UNESCO World Heritage Site பட்டியலில் இருப்பதனால் சிங்கராஜ வனமானது, உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. பட்டியலிடப்பட்ட இடத்தின் சிறப்பாக திகழும் அம்சங்களை அது எடுத்துக்காட்டுகிறது.
- நிதி : அந்தப் பட்டியலிலுள்ள இடங்களது பாதுகாப்பு மற்றும் நிலைப்பாட்டிற்கான நிதியுதவி உலகளாவிய ரீதியில் பெறப்படுகிறது.
- சுற்றுலாத் துறை : பட்டியலில் உள்ள இடங்கள் சர்வதேச கவனத்தைப் பெறுகின்றன. இதனால் சுற்றுலாத் துறை வருமானம் போன்ற பொருளாதார நன்மைகளையும் பெற முடிகிறது.
- போர்க்காலத்தில் பாதுகாப்பு : யுத்தத்தின் போது அழிவு அல்லது தவறான பயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கு எதிராக ஜெனீவா உடன்படிக்கையின் கீழ் இந்த வனமானது தற்போது பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
- உலகளாவிய வளங்கள் மேலாண்மை திட்டங்கள் அணுகல் : ஆசியாவிலேயே இலங்கையில் தான் அதிகளவான யானைகள் காணப்படுகின்றன. பெருகி வரும் மக்கள் சனத்தொகை காரணமாக, வனவிலங்குகளின் வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகின்றன. இலங்கையில் ஆண்டொன்றுக்கு சுமார் 200 யானைகள் மற்றும் 50 மக்கள் இறப்பதை காணலாம். அத்தோடு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பயிர் மற்றும் சொத்து சேதங்கள் ஏற்படுகின்றது. இந்த தீவு கொண்டுள்ள வளங்களான பல்லுயிர் மற்றும் இயற்கை மூலதனங்களைப் பாதுகாப்பதனூடாக ஏற்படும் வளர்ச்சியை சமநிலைப்படுத்துவதற்கான தேவையை புறக்கணிக்கக் கூடாது.
இலங்கையின் வருங்கால சந்ததியினருக்கான நமது விலைமதிப்பற்ற பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்களும் சிங்கராஜ போன்ற இடங்களுக்குச் சென்று, எம் நாட்டின் பொக்கிஷங்களை பார்வையிட்டு வியப்பில் ஆழ்ந்திடுவார்கள்.