2021 Mar 22
இலங்கையின் தரவுகளின் அடிப்படையில் குடி நீர் வசதி உள்ளோரின் எண்ணிக்கை 94% விகிதமாகவும், மிகுதி 6% வீதமானோர் தனது குடி நீர் தேவையினை சுகாதரமற்ற பிளாஸ்டிக் பாத்திரங்களிலும், 2Km க்கு அதிகமான தூரத்தை நடந்து நீர் நிலைகளை தேடி பெற்றுக் கொள்வது மட்டுமல்லாது ஆறுகளிலும், நீரோடைகளிலும், பாதுகாப்பற்ற கிணறுகளிலும் பெற்றுக் கொள்வதாக WHO இனால் வெளியிடப்பட்ட ஒர் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார சுட்டெண்ணுக்கு அமைய 92% ஆனோர் சிறந்த சுகாதார பழக்கவழக்கத்தினை கடைப்பிடிப்பதாக அச் சுற்றறிக்கை கூறுகின்றது. இது ஏனைய தெற்காசிய நாடுகளை ஒப்பிடுகையில் முதன்மை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேவைக்கு ஏற்ற நீர் வெகுவான அளவு மக்களுக்கு கிடைக்கப்பெறுவதனால் சுய சுகாதாரம் சிறந்த நிலையில் காணப்படுகின்றது. இதை ஊக்குவித்து நடைமுறைப்படுத்துவதற்காக பொது சுகாதார ஆய்வாளர்கள், பொது சுகாதார தாதிகள், மருத்துவ அதிகாரிகள் போன்றோர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாடசாலை மட்டத்தில் பல பாடத்திட்டங்கள் மூலம், சுகாதாரம் மற்றும் நீரினை சிக்கனமாக பாவித்தல் தொடர்பான விழிப்புணர்வு சிறுவர்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றதென்பது வரவேற்கத்தக்க ஓர் விடயமாகும்.
Disaster Management Center (பேரழிவுச் செயலாட்சி நிலையம்) இன் தரவுளுக்கு அமைய இலங்கையின் 25 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டதோடு 337,000 க்கு அதிகமானோர் பல இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட புள்ளிவிவரவியலின் அடிப்படையில் கூறப்படுகின்றது. இதில் அதிகமாக களுத்துறை, கேகாலை மற்றும் ரத்னபுர ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
எம் நாடு, பிரதானமாக இரு பருவப்பெயர்ச்சி மழை காலங்களில் தங்கி உள்ளது. முதலாவதாக தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை. இது பொதுவாக மேல் மற்றும் தென் மாகாணத்தில் மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை தாக்கம் செலுத்துகின்றதோடு ஏனைய மாதங்கள் கோடை மாதங்களாக கருதப்படுகின்றது. இரண்டாவதாக வட கிழக்குப் பருவப்பெயர்ச்சி மழை. கிழக்கு மற்றும் வட மாகாணத்தில் ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இந்தப் பருவப்பெயர்ச்சி மழை காணப்படுவதோடு, ஏனைய மாதங்கள் கோடை மாதங்களானவை பயிர்ச் செய்கைக்கு உகந்த மாதங்களாக சித்தரிக்கப்டுகின்றது.
மூன்று காலநிலை மண்டலங்கள் உள்ளன. அதில் ஈர மண்டலத்தில் ஆண்டிற்கு 2000mm க்கும் அதிகமான மழைவீழ்ச்சியும் இடைநிலை மற்றும் உலர் மண்டலத்தில் முறையே 2000mm மற்றும் 1500mm மழைவீழ்ச்சியும் பதிவாகின்றது. இந்த காலநிலை வித்தியாசம் இலங்கை கொண்டுள்ள ஓர் தனித்துவமான விசேட அம்சமாகும். இலங்கையில் 103 ஆறுகள் உள்ளன. அதன் மொத்த நீளம் 4500Km கள் ஆகும். அதற்கு அப்பால் 169,941 ஹெக்டேர் கொள்ளளவுடைய நீர் தேக்கங்கள் உள்ளன. கிராமப்புரங்களில் 73% க்கு அதிகமான மக்கள் நிலத்தடி நீரையே தமது ஜீவனோபாயத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதன் கொள்ளளவு 7,800 மில்லியன் mm3 கள் ஆகும். இலங்கையில் அதிகமான மக்கள் வாழும் இரு பிரதேசங்களாக கருதப்படும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கான குடி நீர், களனி கங்கையில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு எடுக்கப்படுகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.
போதுமான அளவு தரவுகள் இல்லாமையினால் நீரின் தரத்தினை கணித்தறிய முடியாதுள்ளது. எனினும் செம்மைபடுத்தப்படாத கழிவு நீர் முகாமைத்துவம் மற்றும் தொழிற்சாலைகளில் இரசாயனக் கழிவுகளின் வெளிவீச்சினால் நீர் நிலைகள் வெகுவாக மாசடைகின்றது. மேலும் மண் அகழ்வு, முறையற்ற கட்டிட நிர்மாணங்கள் போன்ற மனித செயற்பாடுகளினால், உவர் நீரின் பெருமானம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை ஓர் விழிப்புணர்வுக் கண்ணோட்டத்திற்கு கொண்டு வருவதற்காக ஆண்டு தோறும் மார்ச் மாதம் 22ஆம் திகதி உலக நீர் தினம் கொண்டாடப்படுகின்றது.
2024 இல் ‘அனைவருக்கும் குடி நீர்’ என தொனிப்பொருளில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் செயற்திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு வரவு செலவு திட்டத்தில் அதிகளவான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.