அனைத்தையும் நாடி  ஆண்கள், பெண்களிடம் எதிர்பார்க்கும் 10 விடயங்கள்

ஆண்கள், பெண்களிடம் எதிர்பார்க்கும் 10 விடயங்கள்

2021 Apr 27

ஒரு பெண்ணின் மனதை புரிந்துக் கொள்வது எவ்வளவு கடினமோ அது போலவே ஓர் ஆணின் மனதை புரிந்து கொள்வதும். அதிலும் ஆண்களுக்கு செயல்திறன் அதிகமானதாகவும் மொழித்திறன் பெண்களை விட குறைவானதாகவுமே காணப்படுகின்றது. ஒரு ஆண் தான் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் தன் மீது தவறான எண்ணம் தோன்றி விடக் கூடாதென தீர ஆலோசித்து அதன் பின்னே கூறுகிறான். ஒரு ஆணின் உள் மன எண்ணங்களை அவனுடன் இருக்கும் நண்பர்கள் மற்றும் மனைவி போன்ற நெருங்கிய உறவுகள் கூட அறிந்திருப்பதில்லை. இவ்வாறு ஆண் சொல்லாமலே பெண்களிடம் எதிர்பார்க்கும் 10 விடயங்கள் பற்றி இந்த பகுதியில் நாம் காணலாம்.

01.அவனுக்கான அங்கீகாரம்

ஒரு குடும்பத்திற்காக அதிகபட்சம் உழைப்பது ஆண் தான். உங்கள் வாழ்வில் நீங்கள் துரத்திக் கொண்டிருக்கும் கனவுகளுக்கு பக்கபலமாகவும், உதவிகரமாகவும் இருப்பதும் ஆண் தான். இவ்வாறாக தனது பங்கினை சிறப்பான முறையில் செலுத்தி வரும் ஆணுக்கு அதற்கான அங்கீகாரம் எளிதில் கிடைப்பதில்லை. அவன் இதனை உங்களிடம் கூறாது இருப்பினும் தனக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என உள் மனதில் எதிர்ப்பார்ப்பவனாகவே ஆண் இருக்கிறான் ஆகவே ஆணிற்கான அங்கீகாரத்தை உங்களால் முடிந்த வரை வழங்க முயற்சியுங்கள். இது அவனது செயல்கள் மேலும் சிறப்பாகவும், அவனுக்குள் சுயமதிப்பு வளரவும், உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கவும் உதவும்.

02.அவன் காயப்பட்டு இருக்கும் போது

உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதர்களுமே எதாவது ஒரு சமயத்தில் ஒரு தவறினை செய்து விடுகின்றனர். இதற்கு ஆண் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவ்வாறாக ஆண் தவறு செய்யும் போதும், மனதளவில் காயமுற்று இருக்கும் போதும் அவனது தவறை சுட்டிகாட்டி மேலும் காயப்படுத்தாது, அவனது காயங்களுக்கு மருந்திடுபவையாக உங்களின் வார்த்தைகள் அமைய வேண்டும். இதையே ஆணும் எதிர்ப்பார்க்கிறான். இவ்வாறு செய்யும் போது அவன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும், அதே தவறை மீண்டும் செய்யாதிருக்கவும் உதவுகிறது.

03.தனிமையை நாடும் போது

நம்மில் பலர் அதிக கோபத்திற்கு ஆளாகும் போதும் எதாவது ஓர் விடயத்தில் குழப்பத்தில் இருக்கும் போதும் தனிமையை நாடுகின்றோம். சில சமயங்களில் எவராலும் தர முடியாத நல்ல ஓர் முடிவினை தனிமை இனங்காணச் செய்கிறது. சிலர் கோபம் குறைந்து பழைய நிலைக்கு திரும்பவும் தனிமையே உதவுகிறது. இவ்வாறு ஆண் எப்போதாவது தனிமையை நாட விரும்பும் போது அவனை தனிமையில் இருக்க விடுங்கள். அது அவனுக்கு அவனை இனங்காண பெரிதும் உதவும்.

04.அழகும் அறிவும்

பொதுவாக ஆண்கள் அழகும் அறிவும் கலந்த பெண்களையே எதிர்ப்பார்க்கின்றனர். இதில் அழகு என்பது முக்கியத்துவம் வகிக்கிறது. என்ன தான் அழகு முக்கியமல்ல என ஆண் கூறினாலும் அவன் கண்களுக்கு முதலில் புலப்படுவதும், அவன் அதிகமாக எதிர்பார்ப்பதும் அழகு தான். உங்களை நீங்களே அழகு செய்வதில் அவதானமாக இருங்கள். உங்கள் உடை, நடை, பாவனை என ஒவ்வொரு விடயத்திலும் அழகு சேர்க்க மறவாதீர்கள்.

05.மன்னிப்பு கேட்டல்

நாம், தவறு நம்முடையதாகவே இருந்தாலும் மன்னிப்பு கேட்பது ஏதோ கௌரவ குறைச்சலை ஏற்படுத்துவதாக உணர்கிறோம். ஆண்களுக்கு தவறு தன்னுடையதாக இருக்கும் போது மன்னிப்பு கேட்கும் பெண்களை மிகவும் பிடிக்கும். அதனால் மன்னிப்பு கேட்க வேண்டிய தருணங்களில் மன்னிப்பு கேளுங்கள்.

06.புகழ்ச்சி

ஆணுக்கு தன்னை யாராவது புகழ மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பு இருந்துக் கொண்டே இருக்கும். அவன் ஏதாவது ஒரு பணியை அல்லது செயலொன்றை சிறப்பாக செய்யும் போதும், நல்ல சிந்தனைகளை உங்களுக்கு ஆலோசிக்கும் போதும் அவனை புகழ்ந்து தள்ளுங்கள். இது ஆணுக்கு உங்கள் மீதான அன்பினை அதிகரிக்கச் செய்யும்.

07.அவனது நண்பர்களுடன் நேரம் கழித்தல்

ஆண் தனது நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை விரும்புகிறான். ஏனெனில் உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாத பல விடயங்களை அவன் தனது நண்பர்களுடன் தான் பகிர்ந்துக் கொள்கிறான். அதனால் ஆண் தனது நண்பர்களுடன் நேரம் செலவிட விரும்பும் போது அதனை தடை செய்யாதீர்கள். அதற்கு அனுமதி வழங்குங்கள்.

08.அவனை கையாளும் போது..

ஆணின் தோற்றத்தை பாராட்டும் நபர்கள் அவனது வாழ்வில் மிகவும் குறைவு தான். அவனது தோற்றத்தை அடிக்கடி பாராட்டுங்கள். எந்த உடையில் அவன் அழகாக இருப்பான், என்னென்ன மாற்றங்கள் அவனுக்கு தேவைப்படுகின்றன என்பதனை பற்றி அவனுக்கு ஆலோசியுங்கள். இதனால் அவனது தோற்றம் பற்றி அவனுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கி விடுகிறது. அவன் பணி இடங்கள் விட்டு வீடு திரும்பும் போதும், அவனது வாழ்வில் சோர்ந்து உங்கள் மடி சாயும் போதும், குழந்தையாக பராமரியுங்கள். அவன் தலை வருடி அன்பான வார்த்தைகளை பேசுங்கள். உங்கள் அன்பால் அவன் முழுமை பெறுவதால், உங்களை விட்டு பிரிவதற்கான வாய்ப்பும் குறைவாகி உறவு நீடித்து நிலைக்கிறது.

09.தனித்துவம்

ஆண்களுக்கு எப்போதும் தனித்துவமான குணாதிசயங்களோடு இருக்கும் பெண்களை மிகவும் பிடிக்கும். தனக்கான சவால்களை தானே எதிர்கொண்டு, எவரையும் சார்ந்திராது நடந்து கொள்ளும் பெண்கள் மீது ஆண்களுக்கு ஓர் இனம் புரியாத ஈர்ப்பு உருவாகுகிறது.

10.வார்த்தைகள்

ஆண் உங்களுக்காக செய்யும் செயல்களுக்கு நன்றி கூறுங்கள். எப்போதும் அவன் தான் முக்கியம் எனவும், அவன் தான் உங்கள் வாழ்நாளின் தேவை எனவும் அவனிடம் மனந்திறந்து கூறுங்கள். இவ்வாறான வார்த்தைகளே ஆண் உங்களிடம் எதிர்ப்பார்ப்பவை ஆகும்.

மேற்கூறப்பட்ட 10 விடயங்களுமே ஓர் ஆண், பெண்ணிடம் எதிர்பார்த்தும் வெளிச் சொல்லாமல் இருப்பவை. இது போன்ற விடயங்களை மனந்திறந்து பேசுவதும், மேற்கூறியபடி நடந்துகொள்ள முயற்சித்தலும் ஒரு ஆணோடு நெருங்கிப் பழகுவதற்கும், அவனை புரிந்து கொள்வதற்கும் பெரிது உதவியாக இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php