2021 May 4
நாம் அனைவருமே நமக்கு பிடித்த பல விடயங்களை செய்வதற்கு தேவையான அதிகமான பணம் நம்மிடம் இருக்க வேண்டும் என ஆசைப் படுகிறோம் ஆனால் நம்மில் நிலையான மாத வருமானமாக பெறும் பலருக்கு ‘அதிக பணம்’ என்ற வார்த்தை வெறும் கனவாகவே இருந்து வருகிறது. உண்மையில் தோழர்களே அதிகமான பணத்தினை சேமிப்பது என்பது அவ்வளவு கடினமான காரியமல்ல. நாம் மனம் வைத்து செயற்பட்டால் நம்மால் அதிகளவான பணத்தினை சேமிக்க முடியும். அதற்கான ஒரு எளிய வழி ஒன்று உள்ளது. அதாவது, நாம் மாதாந்தம் எமது தேவைகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக செலவிடும் பணத்தை குறைப்பது தான்.
பொதுவாக நாம் சம்பாதிக்கும் பணத்தில் 30% இற்கும் அதிகமான பங்கு பணம், வீட்டிற்கு தேவையான சில்லறை பொருட்கள் அதாவது உணவினை தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக செலவிடப்படுகிறது. நாம் எமது வீட்டுக்கு தேவையான சில்லறை பொருட்களை கொள்வனவு செய்யும் போது நமக்கு தெரிந்தோ தெரியாமலோ, சிலவேளைகளில் நம்மையும் அறியாமலேயே அதிகளவான பணத்தினை வீணே செலவிடுகிறோம். அதனால் நாம் இனி கொள்வனவு செய்யும் போது சில எளிய மற்றும் கண்டிப்பான வழிகளை கையாண்டு கொள்வனவு செய்வோமேயானால் அதிகளவான பணத்தினை சேகரிக்க முயற்சி செய்ய முடியும்.
1. சில்லறை பொருட்களுக்கென பட்ஜெட் ஒன்றினை தி்ட்டமிடல்.
மாதாந்தம் வீட்டிற்கு தேவையான பொருட்களுக்கான பட்ஜெட் ஒன்றினை தயாரித்து சிறப்பாக பேணுவதன் மூலம் எவ்வாறு வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது என நமக்கு நன்றாக தெரியும். அதேப் போல் மாதாந்தம் வீட்டிற்கு தேவையான சில்லறை பொருட்களையும் பட்ஜெட் ஒன்றின் அடிப்படையில் கொள்வனவு செய்வதன் மூலம் மேலதிகமாக செலவிடப்படும் பணத்தினை சேமித்துக் கொள்ள முடியும். அவ்வாறு சேமிக்கப்படும் பணத்தினை ஷாப்பிங், ட்ராவலிங் மற்றும் ஏனைய பொழுதுபோக்கு விடயங்களுக்கென உபயோகிக்க முடியும்.
2. சில்லறை பொருட்களை வாங்குவதற்கு முன்பு தேவையான பொருட்களை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.
ஷாப்பிங் செல்வதற்கு முன்பு தேவையான பொருட்களை பட்டியலிடும் போது நமக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தேவையான பொருட்களின் அளவு மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவரது விருப்பு வெறுப்பு ஆகியவற்றையும் கணித்துக் கொள்ளவைத்து அவசியமாகிறது. பட்டியலிட்ட பின் கண்களில் படும் தேவையற்ற எதையும் கொள்வனவு செய்யாதிருப்பதில் கவனமாக இருங்கள்.
3. அடிக்கடி ஷாப்பிங் செய்வதை தவிர்த்தல்.
வீட்டிற்கு தேவையான சில்லறை பொருட்களை வாங்குவதற்கு மாதத்திற்கு நான்கு தடவைகள் ஷாப்பிங் சென்றால் போதுமானது. அதனால் ஒவ்வொரு வார இறுதியிலும் ஷாப்பிங் செய்வதை உறுதியான பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
4. சில்லறை கடைகளிலிருந்து சில்லறை பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்த்தல்.
இது நம்மில் பலர் ‘கோட்டை விடும்’ சந்தர்ப்பம் தான். வீட்டுக்கு மிக அருகிலிருக்கும் சில்லறைக் கடைகளில் மாதாந்த அல்லது வாராந்த பொருட்களை வாங்குவது. சாதாரணமாக நமது வீடுகளுக்கு அருகாமையிலிருக்கும் சில்லறை கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை அதிகமானதாக இருக்கும். இதனால் எமது பட்ஜெட்டில் சிக்கல்கள் ஏற்படக் கூடும். சில்லறை பொருட்களை சந்தை, wholesale shopகள் அல்லது சூப்பர் மார்க்கெட்களில் கொள்வனவு செய்வதன் மூலம் குறைவான பணத்தில் அதிகமான பொருட்களை வாங்க முடிகிறது.
5. ஓர் குறிப்பிட்ட அலகின் விலையை கருத்திற் கொள்ளல். (Unit Price)
நம் அனைவர் மனதிலும் “பெரியவை எப்போதும் சிறப்பானவை” என்ற கூற்று ஆழ விதைக்கப்பட்டுள்ளது. அக் கூற்று எல்லா காலம் மற்றும் சூழ்நிலைக்கு பொருந்துவதில்லை. நாம் எப்போதும் எமக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தேவையான பொருட்களை மட்டுமே வாங்கினால் போதுமானது. உதாரணமாக ஒரு வாரத்திற்கான சில்லறை பொருட்களை கொள்வனவு செய்யும் பட்டியலில் கரட் இருக்குமேயானால் நாம் வாரத்தில் எத்தனை தடவைகள் கரட் சமைக்கப் போகிறோமோ அதற்கு ஏற்றவாறு கொள்வனவு செய்தல் சிறப்பானது. ஏனெனில் நாம் தினமும் கரட் சாப்பிட போவதில்லை. அதனால் அதற்கும் மேலதிகமான அளவு கரட்டினை கொள்வனவு செய்யும் போது பணம் விரயமாகிறது. நீங்கள் லேபல் செய்து உறைகளில் விற்கப்படும் பொதிகளை கொள்வனவு செய்வீர்களாயின் அச்சமயத்தில் பெரிய பொதிகளை தேர்ந்தெடுங்கள் ஏனெனில் பெரும்பாலான கம்பனிகள் அதிக அளவினை உடைய பொருட்களை குறைந்த விலையில் விற்பனைக்காக வைக்கின்றனர்.
6. பல்வேறு வகையான தயாரிப்பு பொருட்களை சிறிய சிறிய அளவுகளில் கொள்வனவு செய்தல்.
இவ்வாறு சிறு சிறு பொருட்களாக கொள்வனவு செய்வதால் அதிக விலை உடைய பொருட்களிலிருந்து குறைந்த விலை உடைய பொருட்கள் வரை எமக்கு பிடித்த பல பொருட்களை கொள்வனவு செய்துக் கொள்ள உதவுகிறது.
7. ஸ்டோர் ப்ராண்டுகளை கொள்வனவு செய்தல்.
மற்றைய ப்ராண்ட் பொருட்களை விட ஸ்டோர் ப்ராண்ட் பொருட்கள் மலிவான விலையில் பெறக் கூடியவை. மலிவான விலையில் கிடைக்கின்றன என்பதனால் இவை குறைவான தரத்தினை கொண்டவை என பயப்பட வேண்டாம். இவை மலிவான விலையில் விற்கப்பட காரணம் எந்தவித விளம்பர செலவுகள் மற்றும் ரிடேயில் மார்ஜின் சேர்க்கப்படாமை தான்.
8. பெயரிடப்பட்ட (Labelled) தயாரிப்புகளுடன், பெயரிடப்படாத தயாரிப்புகளின்(Unlabeled) விலையினை ஒப்பிடுதல்.
பெயரிடப்படாத அதாவது லேபில்கள் அற்ற அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை போன்ற சில்லறை பொருட்களை மலிவான விலையில் கொள்வனவு செய்துக் கொள்ள முடியும். அவ்வாறிருந்த போதும், தரத்தினை கருத்திற் கொண்டு நாம் லேபில் செய்யப்பட்டவற்றை கொள்வனவு செய்ய முனைகிறோம். ஆனால் சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பெயரிடப்படாத சில்லறை பொருட்களின் தரமானது சிறப்பான முறையில் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
9. சலுகையில் (Offer) உள்ள பொருட்களை கொள்வனவு செய்தல்.
வங்கி சலுகை, க்ரெடிட் கார்ட் சலுகை, டெபிட் கார்ட் சலுகை அல்லது சாதாரண சலுகை என எந்தவித சலுகையாக இருப்பினும், சலுகைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். குறிப்பாக வார இறுதியில் விற்கப்படும் புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி வகைகள் போன்றவற்றுக்கு சிறப்பான க்ரெடிட் கார்ட் சலுகைகள் கிடைக்கும்.
10. தேவையற்ற பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்த்தல்.
சூப்பர் மார்க்கெட்களில் காணப்படும் உங்களுக்கு தேவையற்ற பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் பணத்தை வீண்விரயம் செய்வதற்காகவே வகுக்கப்பட்டிருக்கும் ஒரு பொறி. கெஷியர்க்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை வாங்கும் முன் ஒன்றிற்கு இரு தடவைகள் சிந்தித்து அதன் பின் கொள்வனவு செய்யுங்கள்.
இந்த எளிய வழிகளை முயற்சித்து அதன் மூலம் நீங்கள் பெறும் அனுபவத்தினை எங்களுடன் கமன்ட் பொக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.