நாடி Review GOD IN LOVE – குறுந்திரைப்படம் – நாடி Review

GOD IN LOVE – குறுந்திரைப்படம் – நாடி Review

2021 May 4

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு தடவையேனும் காதல் என்ற ஊருக்குள் பயணித்திருப்பான். பொதுவாகவே காதல் என சொன்னதும் நம் நினைவிற்கு வரும் விம்பம் ஆண், பெண் இருவருக்கும் இடையில் மலரும் ஓர் உணர்வு என்ற காட்சி தான். சில சமயங்களில் நமது பார்வை தவறானதாக கூட இருக்கலாம். பார்க்கும் கோணம் மாறினால் அனைத்துமே மாறும் என்ற வரிகளுக்கேற்ப காதலைப் பற்றிய வித்தியாசமான கண்ணோட்டத்தில் உருவாக்கப்பட்ட குறுந் திரைப்படம் தான் GOD IN LOVE. இந்த குறுந் திரைப்படத்தின் தலைப்பினை கேட்டதும் “ஒரு வேளை கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான காதல் கதையாக இருக்குமோ? இல்லை காதலில் இருக்கும் புனிதத்துவம் பற்றியதோ?” என்ற பல கேள்விகளை என் மனதுள் எழுப்பியது. இத்தனை கேள்விகளுடனும் இந்த குறும்படத்தினை பார்க்க ஆரம்பித்தேன்.

கடந்த காதலர் தினமான பெப்ரவரி மாதம் 14ஆம் திகதியன்று YouTube தளத்தில், Abishek Palraj அவர்களின் இயக்கத்தில் உருவான GOD IN LOVE குறுந்திரைப்படம் வெளியானது. இதில் Sathiya Priya Ratnasamy மற்றும் Chocos நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான ஔிப்பதிவினை Dineshanth Thaventhiran மற்றும் Abishek Palraj இருவரும் செய்திருக்கிறார்கள். இந்த குறுந்திரைப்படத்திற்கான எடிட்டிங் வேலைகள் அனைத்தும் Abishek Palraj இனால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த குறுந்திரைப்படத்தினை Muraletharan Veerappan, Sivalingam saravanabavan மற்றும் Poorikco ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

குறுந்திரைப்படத்தின் ஆரம்பத்தில் married life (from “up”/ score) இலிருந்து ஒரு இசை ஒலிக்கும். அந்த இசை இப்படத்தை பார்ப்பவர்கள் மனதில் ஓர் மேற்கத்தேய திரைப்படத்தை பார்க்கும் உணர்வினை ஏற்படுத்துகிறது. கதாநாயகன் “எழுந்திரு ஜோன்” என கூறுவது, பார்வையாளர்களை மயக்க முற்படும் மேற்கத்தேய உணர்விலிருந்து எழுப்புதற்கான குரலாகவே ஒலிக்கின்றது.

என்ன தான் படம் முழுவதும் கதாநாயகனின் குரல் ஒலித்தாலும், பார்வையாளர்களது கண்ணை கவரும் முதல் விம்பம் கதாநாயகியினுடையது தான். கதாநாயகி காலை எழுந்தது முதல் வெளியில் புறப்பட்டு செல்லும் நேரம் வரையிலான அவளது ஒவ்வொரு நடவடிக்கையும் விபரித்து வர்ணிப்பதில் தான் படம் நகர்ந்து செல்கிறது. கதாநாயகி குளித்து விட்டு கூந்தல் துவட்டும் போது இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே…’ -க்கு ஏற்றவாறு கூந்தல் அசையும் காட்சிகள், மிகவும் அழகாக ஔிப்பதிவு செய்யப்பட்டு எடிட் செய்யப்பட்டுள்ளன. கதாநாயகியாக, ஏற்கனவே மக்களுக்கு பரீட்சியமான சத்யப்ரியாவின் தேர்வு கச்சிதம். ஒவ்வொரு அசைவும், இயல்பும் நேர்த்தியும்..

கதாநாயகனின் குரலை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும் நமக்கு, அவ்வப்போது கதாநாயகனின் வயது மற்றும் தோற்றம் பற்றிக் கணிக்க தூண்டும் வகையில் வசனங்கள் அமைந்திருக்கிறது. உதாரணமாக, கதாநாயகி தன்னை தினமும் கொஞ்சுவதாகவும் சாப்பாடு ஊட்டி விடுவதாகவும் கதாநாயகனின் வசனங்கள் அமையும் போது “ஒரு வேளை சின்ன பையன் யாரும் தான் இப்படி பேசுறானோ?” என்ற எண்ணத்தினை உருவாக்கி விடுகிறது. இறுதியில் எவரும் எதிர்ப்பாராத திருப்பமாக கதாநாயகனின் காட்சி அமைந்திருக்கிறது. அதிர்ச்சி ஒரு பக்கம் புன்னகை ஒரு பக்கம் என கதாநாயகனை ரசித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் இந்த கதாநாயகனை எந்தப் பெண்ணுக்கும் பார்த்தவுடன் பிடித்து விடும். இதில் முக்கியமான குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், அன்றும் இன்றும் என்றும் பெண்களுக்கு பிடித்த மாதிரி, கறுப்பான, களையான நாயகன்.

இந்த குறுந்திரைப்படத்தில், பின்னணி Voice Over இல் கேட்கும் கதாநாயகனின் குரல் மிக இயல்பானது. எனினும் சில இடங்களில் பின்னணி குரலில் ஒரு தெளிவின்மையை உணரக்கூடியதாக இருக்கிறது. இதனால் படத்தின் வசனங்களை மிக அவதானமாக, செவிசாய்த்து கவனிக்க வேண்டிய கட்டாய சிரமத்திற்கு உள்ளாவது போன்ற ஓர் உணர்வு அவ்வப்போது ஏற்படுகிறது. வண்ணமயமான தரமான காட்சியமைப்போடு, அட்டகாசமான ஒளிப்பதிவில், மிக சிறப்பாக அமைந்திருக்கும் இக் குறும்படத்தின் ஒலியமைப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் வழமையாக வெளிவரும் இலங்கை படைப்புகளுக்கிடையே, இந்த ‘GOD IN LOVE’ ஒரு வித்தியாசமான காதல்.

Abishek Palraj இன் இந்த GOD IN LOVE குறுந்திரைப்படம், 7th Goa Film festival, Stand Alone Film Festival and Awards – Los Angeles 2021, The Cut Film Series – USA 2021, URUVATTI International Film Festival – India, ஆகியவற்றில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க முக்கியமான விடயமாகும்.
நாடி Verdict – 72/100
‘GOD IN LOVE’ – அழகு
குறும்பட Link – https://youtu.be/r0w5Fe4Opcs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php