அனைத்தையும் நாடி  இலங்கையில் வாகன விபத்துகள் – ஐக்கிய நாடுகள் சாலை பாதுகாப்பு வாரம்

இலங்கையில் வாகன விபத்துகள் – ஐக்கிய நாடுகள் சாலை பாதுகாப்பு வாரம்

2021 May 16

ஐக்கிய நாடுகளின் 6 வது பாதைகள் பாதுகாப்பு வாரத்தின், Streets for Life – ‘வாழ்கைக்காக வீதிகள்’ என்ற வாசகத்திற்கு இணங்க, இவ் வருடம் மே மாதம் 17 முதல் 23 என்ற காலப் பகுதியில், நகர வீதிகளில் 30km/h வேகத்தில் வாகனங்கள் பயணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது.

பருவ கால மாற்றம் மற்றும் நாட்டின் கல்வி துறை சார் விடயங்கள் தொடர்பான அபிவிருத்திக்கு ஆதரவு வழங்கும் வகையிலும், தெரு விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கிலும், 30km/h பயணிப்பதே உலக பாதைகளை பாதுகாப்பு வாரத்தின் முக்கிய நோக்கமாகும். 2007 இல் உலக சுகாதார அமைப்பினால் நடாத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் அமர்வில், இவ் உலக பாதைகள் பாதுகாப்பு வாரம் முன்னெடுப்பதாக ஐக்கிய நாடுகளின் நிறைவேற்று அதிகாரிகளினால் முடிவெடுக்கப்பட்டது.

ஏன் இத்தகைய வாரமானது நம் அனைவரினாலும் அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்ற கேள்வி எழலாம். இவ் வாரமானது இந்த தசாப்தத்தின் (2021-2030) மிகச்சிறந்த நடவடிக்கை என்று வர்ணிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளினால், உலகில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்களை தவிர்பதற்காக மிக முக்கியமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் மூலமாக ஒரு நாட்டின் சாலை விதிகளில் கட்டாய கவனம் செலுத்த வலியுறுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாது இதன்மூலமாக போக்குவரத்து துறையினால், நமது சூழல் எத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகின்றது என்பது பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு புகட்டி, சைக்கிள் மூலமாகவும், அதைவேளையில் நடை பயணத்தின் மூலமாக நகரத்திற்கு உள்ளேயான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் அளிக்கப்படுகின்றது.

இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் தனது தேவையின் நிமித்தம் வெளியில் செல்ல நேரிடுகிறது. மனிதனி்ன் வேலைகளை இலகுவாக்குவதற்கே போக்குவரத்து துறையானது அறிமுகம் செய்யப்பட்டது. இப் போக்குவரத்து துறையில் மாட்டு வண்டி தொடக்கம் Rolce Royce கார் வரை அனைத்தும் வீதிகளிளேயே பயணிக்கின்றன. நாளொன்றுக்கு கொழும்பு வீதிகளில் மட்டும் 300,000 வாகனங்கள் பயணிக்கின்றன. இதற்கிணங்க சற்று சிந்தித்து பார்த்தால், 1 பில்லியன் வாகனங்கள் ஒரே நேரத்தில் உலகில் பயணிக்கின்றன. 6000 இற்கும் அதிகமான வீதி விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதில் கிட்டத்தட்ட நாளொனறுக்கு 3700 பேர் உயிரிழக்கின்றனர். இலங்கையில் சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒரு முறை வீதி விபத்து ஒன்று இடம்பெறுகின்றது. நாளொன்றுக்கே எட்டு பேர் வீதி விபத்துக்களால் இறக்கின்றனர் என்பது கவலைக்குரிய விடயமே.

வீதி விபத்து என்பது ஒரு செக்கனில் நடக்கக் கூடிய விடயமே எனினும், அவ் விபத்தினால் எதிர் கொள்ளக் கூடிய பாதிப்புக்கள் எண்ணிலடங்காதவையாகி விடுகின்றன. அளவுக்கதிகமான வேகம் , மது அருந்தி வாகனம் செலுத்துதல், பாதசாரிகளின் கவனக்குறைவு போன்ற பல காரணிகள் வீதி விபத்திற்கு வழி வகுக்கின்றன. வீதி விபத்துக்களால் ஏற்படும் இறப்புக்கள், ஊன முற்றோர்; மற்றும் காயமுற்றோர், இதன் காரணமாக ஏற்படும் உடல் உறுப்பு மற்றும் பொருளாதார இழப்பானது, ஒரு தனிக் குடும்பத்தை மட்டுமின்றி ஒரு சந்ததியை கூட சிலவேளைகளில் பாதிக்கின்றது. வியத்தின் பின், எஞ்சிய வாழ்நாளில் அவர்களை பராமரிப்பதற்காக அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கடுமையான சிரமத்தினை எதிர்நோக்குகின்றனர். இந் நிலையின் சங்கிலி விளைவாக, குடும்ப வருமானம் மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரம் மற்றும் உற்பத்தித்திறனும் வீழ்ச்சியடையுமளவுக்கு இதன் பாதிப்புகள் தொடர்கின்றன.

பெரும்பாலான வீதி விபத்துகள் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படுகின்றன. இதனால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய பாதசாரிகள், துவிச்சக்கர வண்டி மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள், பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர் குறிப்பிடத்தக்கது. வீதி விபத்துக்கள் ஏன் ஏற்படுகி்ன்றது அதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளையும் சரியாக உணர்ந்து விழிப்புடன் செயற்படுவதன் மூலம் வீதி விபத்துக்களைக் குறைக்கலாம்.

குறிப்பாக அதி கூடிய வேகம் விபத்துக்களுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பதோடு, விபத்து ஏற்படுமிடத்து பாதிப்பையும் அதிகரிக்கும். உதாரணமாக 100kmph வேகத்தில் வாகனத்தினை செலுத்தி மரத்தில் மோதுவதற்கும், 40kmph ல் வேகத்தில் மரத்தில் மோதுவதற்குமான வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். குறிப்பாக பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற பாதசரிகள் அதிகரித்த இடங்களில் வேகக்கட்டுப்பாடு மிகவும் அவசியமாகின்றது. குடி போதையில் வாகனம் செலுத்துதல் சாரதிகளை மட்டுமின்றி ஏனையவர்களையும் பாதிக்கின்றது. தொலைபேசியை பேசிக்கொண்டு அல்லது கையாண்ட வண்ணம் வாகனம் செலுத்துதல், உடல்நிலை குன்றிய நிலையிலோ தூக்க நிலையிலோ வாகனம் செலுத்துதல் ஆகியவை சாரதியின் கவனத்தைக் குறைத்து விபத்துக்கு வழிகோலும்.

இவற்றைவிட வீதிச் சட்ட ஓழுங்குகளை மீறுதல், வீதிகளின் தரக்குறைவு மற்றும் வாகனங்களின் குறைபாடு காரணமாகவும் பல விபத்துகள் ஏற்படுகின்றன. தலைக்கவசம், ஆசனப்பட்டி போன்றவை கட்டாயமாக அணியப்பட வேண்டியவை. வாகனம் வைத்திருப்பவர்கள், வாகனத்தின் டயரின் தரத்தினை கண்டிப்பாக கவனத்திற் கொள்ளவேண்டும். இவை விபத்துகளின் போது பலத்த காயம் மற்றும் உயிரிழப்புக்கான சந்தர்ப்பத்தை வெகுவாக குறைக்கின்றன.

ஒரு நகர வீதியில் நாம் மட்டும் பயணிப்பது இல்லை. ஒரு சமூகம், நாட்டின் எதிர்கால சந்ததி என பல்வேறு தரப்பட்ட தனித்தனி உடல்கள் பல பயணிக்கின்றன. ஒரு சாரதியின் அல்லது பாதசாரியின் கவனக் குறைவால் ஒரு மனிதனின் வாழ்க்கை, ஒரு நொடியில் மாற்றமடைகிறது. எனவே நாட்டின் சாலை விதிகளை சரிவரக் கடைப்பிடித்து, வேகத்தை கட்டுப்படுத்தி, நல் வாழ்வுக்கான பாதையில் 30km/h இல் நிதானமாக பயணிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here