மனிதர்களை நாடி பேராசிரியர். அழகய்யா துரைராஜா

பேராசிரியர். அழகய்யா துரைராஜா

2021 May 17

இலங்கையின் கல்வி மட்டம் ஏனைய தெற்காசிய நாடுகளை விட உயர்ந்து விளங்குகின்றது என்பது யாவரும் அறிந்ததே. அத்தகைய கல்வி முறைமை எமது நாட்டில் பல கல்விமான்களை உருவாக்கியுள்ளது என்றால் மிகையாகாது. அந்த வகையில் இலங்கை பொறியியல் துறையில் பாரியதோர் மாற்றத்தினை ஏற்படுத்திய மாமனிதர், பேராசிரியர் துரைராஜா பற்றிய ஒரு குறும் பார்வை..

அழகய்யா துரைராஜா அவர்கள் யாழ்ப்பாணத்தின் கம்பர் மலை என்ற இடத்தில், 1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும், உயர் கல்வியை பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியிலும் பயின்றார். இவ்விரு பாடசாலைகளுக்கும் பெருமை தேடி தந்த ஆளுமையாக இன்றும் கருதப்படுகின்றார். உயர் தரத்தில் கணிதப் பிரிவை தேர்ந்தெடுத்த இவர், 1953 ஆம் ஆண்டு கொழும்பில் இயங்கி வந்த சிலோன் பல்கலைகழகத்தின் குடிமுறைப் பொறியியல் பட்டப்படிப்பில் இணைந்து கொண்டார். 1957 ஆம் ஆண்டு தனது படிப்பை முடித்து பட்டம் பெற்றதுடன், 1958 ஆண்டு மேற்படி பல்கலைகழகத்திலேயே பயிற்றுவிப்பாளராகவும் பொதுப்பணித்துறை திணைக்களத்தில் இளம் உதவி பொறியியலாளராகவும் பணி புரிந்தார்.

இவர் தான் பெற்றுக்கொண்ட இளமானி பட்டத்துடன் நின்றுவிடாது, கென்னத். எச். ரொஸ்கோ (Kenneth. H. Roscoe) என்ற அறிவியலாளரின் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக, கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு புலமைப் பரிசில் மூலம் சென்றார். 1958 முதல் 1961 வரை மண்ணின் வெட்டு பண்புகள் தொடர்பில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர், 1962 இவ் ஆராய்ச்சிக்காக PhD பட்டம் பெற்றார். மணல் சார் பொறியியலில் கற்பிக்கப்படும் Clam Clay விதி, துரைராஜா அவர்களின் தேற்றத்தில் இருந்தே பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது காலம் இங்கிலாந்திலேயே பணி புரிந்த இவர், பின்னர் சிலோன் பல்கலைகழகத்தின் பேராசிரியராகவும் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் வாடர்லூ பல்கலைகழகங்களின் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். மேலும் இவர் பேராதனை மற்றும் திறந்த பல்கலைகழகத்தின் பொறியியல் துறை பீடாதிபதியாகவும் கடமையாற்றினார். நம் நாட்டில் போர் உச்சம் கொண்ட 1988 ஆண்டளவில் யாழ் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக தெரிவு செய்யப்பட்டு, வட மாகாண மாணவர்களின் கல்விக்கு அக்காலத்தில் பெரிதளவு தோள் கொடுத்தார். இவரின் வேண்டுகோளுக்கிணங்கவே கிளிநொச்சி நகரில் யாழ் பல்கலைகழகத்தின் பொறியியல் பீடம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் யாழ் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ‘பேராசிரியர் அழகய்யா துரைராஜா’ என்ற பெயரில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றது.

இவரின் பொற்காலமாக திகழ்ந்தது, பேராதனை பல்கலைகழகத்தின் பொறியியல் பீடாதிபதியாக திகழ்ந்த காலமேயாகும். இவரது காலப்பகுதியிலேயே பொறியியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இவரது மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்ட ‘அக்பர் பாலம்’ இவரின் கட்டுமான சிறப்பியல்பின் ஓர் அங்கம் என அனைவராலும் இன்றுவரை போற்றப்படுகின்றது. தற்கால தொழில்நுட்ப வசதியமைப்புகளில் கூட, இப் பாலம் கட்டப்பட்டிருக்கும் நுட்பம் வேறு எவராலும் சரியாக கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப் பாலம் பேராதனைப் பல்கலைகழகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்று வெளியேறிய முதலாவது மாணவர் குழுவினால் கட்டப்பட்டதாகும். இப் பாலம் ஒற்றைத் தூணினால் கட்டப்பட்டிருப்பதோடு, மகாவலி கங்கைக்கு மேலாக செல்லும் பகுதிக்கு குறுக்காக, எவ் வித தூணும் அமைக்கப்படவில்லை என்பது பார்ப்பவரை இன்றும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்குகிறது. மேலும் இப் பாலத்தின் நடுப்பகுதியில் பயணிக்கும் போது, பாலத்தில் சிறியதோர் நடுக்கம் காணப்படுவது என்பது இதன் சிறப்பியல்பாகும். மணல் தொடர்பிலான பொறியியலில் தேர்ச்சி பெற்ற பேராசிரியர் அழகய்யா துரைராஜா, பிரித்தானியாவின் தேசிய விஞ்ஞான கலைக்கூடம் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் சக உறுப்பினராக இருந்ததுடன், இலங்கையின் தேசிய விஞ்ஞான கலைக்கூடம் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் தலைவராகவும் பணிபுரிந்தவராவார். பொறியியல் துறையின் பிதாமகனாக கருதப்பட்ட பேராசான், 1994 ஆண்டு இயற்கையை நாடினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here