2021 May 15
வீட்டுத்தோட்டம் உங்கள் உடலுக்கு மட்டுமன்றி மனதுக்கும் ஆரோக்கியமான பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. வீட்டுக்கு வெளியில் உள்ள முற்றம் அல்லது பின் பகுதியில் அல்லது வீட்டினுள் உள்ள சிறிய பகுதிகளில் என இடவசதிக்கு ஏற்றவாறு வீட்டுத்தோட்டம் அமைக்கலாம். பச்சை பசேலென பசுமை போர்த்திய இலைகள் நிறைந்த தாவரங்களும் அழகிய பல வண்ண நிற பூக்களும், நீங்கள் அமைதியற்று இருக்கும் சந்தர்ப்பங்களில் மன அமைதியினை தரக்கூடியது. அதுமட்டுமன்றி உங்களது ஓய்வான நேரங்களை இயற்கையோடு கழிக்கும் சந்தர்ப்பத்தினையும் வீட்டுத்தோட்டம் ஏற்படுத்தி தருகிறது. வீட்டுத்தோட்டத்தினை பேணி பாதுகாத்து பராமரிக்கும் போது உங்களுள் தானாகவே பொறுப்பும் பொறுமையும் துளிர்விட தொடங்கி விடும். வீட்டுத்தோட்டத்தினை அமைப்பது பற்றிய சில உதவிக் குறிப்புகள் மற்றும் ட்ரிக்ஸ்களை நீங்கள் இப் பதிவில் காணலாம்.
சிறிய, குறைவான அளவு பராமரிப்பு தேவையுடைய தாவரங்களை தெரிவு செய்யுங்கள்
பயிரிடும் தாவரங்களை கொல்லக்கூடாது என்பதே முக்கிய நோக்கம். கற்றாழை, அலோ வேரா, சான்சேவியா (பாம்பு தாவரம்), இசட் இசட் தாவரம், பீஸ் லில்லி மற்றும் போத்தோஸ் (பண தாவரம்) ஆகியவை மிகவும் இலகுவாக வளர்க்கக் கூடியவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு குறைந்த அளவிலான ஒளி மற்றும் நீர் போதுமானது. ஆகையால் நாம் அதிகளவிலான கவனத்தினை செலுத்தி பராமரிக்க தேவையில்லை. இவை வீட்டுத்தோட்டம் ஒன்றை தொடங்குவதற்கு சிறந்த தொடக்க தாவரங்களாக இருக்கும். சமையலறை மூலிகைகள் மற்றும் கீரை, தக்காளி, மிளகாய் போன்ற காய்கறிகளையும் முயற்சி செய்யலாம். ஆனால் ஒரு சில தாவரங்களுடன் தொடங்குவது முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு தொடங்குவதனால் நீர்ப்பாசன அட்டவணைகள் மற்றும் பராமரிப்பைக் கண்காணிப்பதற்கென பெரிதாக கவனம் செலுத்த வேண்டி இருக்காது.
ஔி தான் எல்லாமே!
வீட்டுத்தோட்டம் என்று வரும்போது சுற்றுச்சூழல் மிக முக்கியமானது. வீட்டுத்தோட்டத்திற்கான சரியான இடத்தினை ஔி மற்றும் ஈரப்பதத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து தெரிவு செய்யுங்கள். சூரிய ஒளி தான் உங்கள் வீட்டில் நீங்கள் வளர்க்கவிருக்கும் தாவரக்குழந்தைகள் தமக்கான உணவினை பெற்றுக் கொள்ளும் ஒரே ஓர் வழி. அவ்வாறு சரியானளவு சூரிய ஔி கிடைப்பதால் அவர்கள் ஆரோக்கியமான, நறுமணமுள்ள அழகான குழந்தைகளாக வளர்ந்து செழிப்பார்கள். வீட்டு தாவரங்கள் நிழல் அல்லது மறைமுகமாக கிடைக்க கூடிய சூரிய ஒளியை விரும்புகின்றன. மேலும் பல வகையான கற்றாழை, சதைப்பற்றுள்ள காய்கறிகள் மற்றும் பூச்செடிகள் போன்றன, பால்கனியில் அல்லது முற்றத்தில் கிடைக்கக் கூடிய பிரகாசமான நேரடி சூரிய ஒளியை விரும்புகின்றன. நீங்கள் தத்தெடுக்க விரும்பும் தாவரக்குழந்தைகளை பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருத்தல் வேண்டும். உங்கள் தாவரத்தின் ஔித் தேவைகளை அறிய சிறிது ஆராய்ச்சி செய்யுங்கள்.
சரியான தாங்கிகளை தெரிவு செய்தல்
ஒரு தாவர நெர்சரியில் இருந்து தாவரங்கள் அல்லது நாற்றுகளை வாங்குவது வீட்டுத்தோட்டத்தினை தொடங்குவதற்கான எளிதான வழியாக இருக்கலாம். அவை வீட்டிற்கு வந்ததும், அவற்றிற்கான சாடி அல்லது நிலத்திற்கு மாற்றப்பட வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளின் உலர்ந்த விதைகளையும் நீங்கள் பயிரிடலாம். இது நிலையானது, மலிவானது மற்றும் நம்பமுடியாத அளவிற்கு திருப்தி அளிக்க கூடியது. விதைகளை ஈரமான பருத்தி அல்லது துணியில் வைத்து, அவை முளைக்கும் வரை சூரிய ஒளியில் இருந்து விலக்கி பராமரிக்கவும். அதன் பின்னர் அது ஒரு நாற்றாக வளர ஒரு சாடியில் பயிரிடுங்கள். வேர் வளர்ச்சிக்கு இடமளிக்கும் வகையில் தாவரம் வளர்ந்து வரும் தற்போதைய பானையை விட, 2-4 அங்குல பெரிய கொள்கலனைத் தேர்வு செய்யவும். வேர் அழுகலைத் தடுக்க எப்போதும் கீழே வடிகால் துளைகளைக் கொண்ட கொள்கலன்களைத் தேர்ந்தெடுங்கள்.
உங்கள் மண்ணை தயார்படுத்துங்கள்
வீட்டுத்தோட்டத்திற்கான மண்ணை பொறுத்தவரை, நீங்கள் ஒரு தாவர நாற்றங்கால் அல்லது கோகோ கரி மற்றும் ஆர்கானிக் உரம் கலந்த தோட்ட மண்ணிலிருந்து ஒரு சாடி மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் மண்ணை அவ்வப்போது தளர்த்தவும், காற்றோட்டம் புகக்கூடிய வகையில் பராமரிக்க, நேரத்திற்கு நேரம் அவதானித்து சாடியில் தாவரத்தின் வேர்கள் சேதப்படாத வகையில் துளைகள் இடுங்கள். நீங்கள் அவற்றை நேரடியாக தரையில் நடுவதற்கு முடிவு செய்திருந்தால், மண்ணைத் தளர்த்தி, ஆர்கானிக் உரங்களை மண்ணோடு சேர்த்து உங்கள் தாவரத்திற்கான மண்ணை தயார் செய்யவும்.
தேவைப்படும்போது மட்டும் நீர் பாய்ச்சவும்
விரலினைக் கொண்டு மண்ணின் ஈரப்பதத்தினை பரிசோதனை செய்யுங்கள். உங்கள் விரலின் முதல் ரேகை வரை மண்ணுள் இடுங்கள். முதல் அங்குலத்திலிருந்து அல்லது அங்குல அரை வரை மண் வறண்டிருந்தால் தண்ணீர் பாய்ச்சவும். ஈரமான இலைகள் பூஞ்சையை ஏற்படுத்துவதால் இலைகளைத் தவிர்த்து, தாவரத்தின் அடிப்பகுதியை நோக்கி நீர்ப்பாய்ச்சவும். இலைகளில் பழுப்பு நிற பகுதிகள் இருக்கின்றனவா என அவதானியுங்கள் ஏனெனில் இது மோசமான நீர்ப்பாசனத்தின் அறிகுறியாகும். மேலும், வழக்கமான நீர்ப்பாசன சுழற்சிகளில் அவதானமாக இருக்கவும். காலையில் ஒரு ஸ்பிரிட்ஸருடன் இலைகளை லேசாக ஈரலிப்பாக வைத்திருக்கவும்.
உங்கள் தாவரத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
நீங்கள் வளர்க்கும் ஒவ்வொரு தாவரத்திற்கும் உயிர் உண்டு. அவற்றினை உறவுகளாக பராமரியுங்கள். உங்கள் தாவரங்களைக் கேளுங்கள். அவர்களைக் கவனித்துப் பேசுங்கள். உங்கள் தாவரத்தின் தன்மை, நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் அட்டவணைகளின் பதிவைப் பராமரிக்க தவறாதீர்கள். இது உங்கள் தாவரத்தின் தேவைகளை நன்கு புரிந்துகொள்ளவும், மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் உதவும். உங்கள் தாவரத்தை அன்புடனும் அக்கறையுடனும் அரவணைத்து பராமரியுங்கள். பொறுமையாக இருத்தல் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான உறவுகளை எவ்வாறு வலு செய்கின்றதோ, அதே போல் உங்கள் தாவரங்கள் வளர்வதற்கான நேரம் மற்றும் இடத்தினை அளியுங்கள்.