2021 May 20
இலங்கையில் வாழ்ந்து கொண்டு தேநீரை வெறுப்பவர்கள் கண்டிப்பாக இருக்க முடியாது. பிளேன் டீ முதல், ஐஸ் டீ வரை வெவ்வேறு ரகமான தேநீரை இன்று நாம் சுவைக்கின்றோம். எமது நாட்டின் பல தேயிலை தயாரிப்புகளை இன்று நாம் எமது விருப்பத்தேர்வுக்கேற்ப கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கிறது. அப்படி உற்சாகமூட்டும் பானமாக விளங்குவது தொடக்கம், நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாக தேயிலை விளங்குகின்றது என்றால் அது கண்டிப்பாக மிகையாகாது.
தேயிலைப் பயிர்ச்செய்கை, இலங்கையில் கிட்டத்தட்ட 200 ஆண்டு வரலாற்றைக் கொண்டது. 1824 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ காலப்பகுதியில், முதன் முதலாக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாக பல வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. ஆரம்ப காலத்தில் இவை பேராதனை தாவரவியல் பூங்காவில் கண்காட்சிக்காக வரவழைக்கப்பட்டதாகவும், 1839 ஆம் ஆண்டில் இந்தியாவின் அஸ்ஸாம் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வந்த தேயிலை வகை, எமது நாட்டில் விளையக்கூடியவையா என்ற பரிசோதனையின் நிமித்தம் பயிரிடப்பட்டதாகவும் பல சுவாரஸ்யமான பின்னணி கதைகள் உண்டு.
ஜேம்ஸ் டெய்லர் என்ற ஸ்கொட்லாந்து நாட்டவர், தேயிலைப் பயிர்ச்செய்கையை மற்றொரு பரிமாணத்திற்கு ஈட்டிச்சென்றார். அதுவரை சிறியளவில் மேற்கொள்ளப்பட்ட தேயிலைப் பயிர்ச்செய்கை, இவரது காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாக உருவெடுத்து வணிகமயமானது. மேலும் இதனை விருத்தி செய்யும் நோக்கத்தில் 1866 ஆம் ஆண்டளவில் தேயிலை பயிர்ச்செய்கையின் நுட்பங்களை அறிந்துகொள்வதற்காக இந்தியா சென்று வந்த இவர், கண்டிக்கு அருகேயுள்ள ‘லூல்கந்துரை’ என்ற இடத்தில், 19 ஏக்கர் விசாலமான தேயிலைத்தோட்டம் ஒன்றை முதன்முதலில் நிறுவினார். காலப்போக்கில் அவ் இடத்திலே, 1872 ஆம் ஆண்டு முதலாவது தேயிலைத் தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1875 ஆம் ஆண்டளவில் லண்டனில் நடைபெற்ற தேயிலை கொள்வனவு ஏலத்திற்கு இலங்கையில் இருந்து முதன் முதலாக தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.
1867களில் கண்டியில் 19 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட இப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, நுவரெலியா, டிம்புள, உடபுஸ்ஸெல்லாவ மற்றும் ஊவா முதல் தென்மாகாணம் வரை வளர்ச்சி கண்டது. இதன் விளைவாக இலங்கை உலகின் 19% தேயிலைக் கிராக்கியை நிவர்த்தி செய்ததுடன், உலகில் அதிகம் தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்தது. 2019 ஆம் ஆண்டில், அண்ணளவாக 300,000 மெற்றிக் டொன் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் பெருமதி 1.5 $ பில்லியனுக்கும் அதிகமாக விளங்குவதோடு, GDP என்று கூறப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% பங்கை வகிக்கின்றது. மேலும் இப் பயிர்ச்செய்கை மூலம் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக இது விளங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குளிரான காலநிலை, மழை வீழ்ச்சி போன்ற காரணிகள் தேயிலையின் தரம், சுவை மற்றும் வாசனைக்கு அதிகம் தாக்கம் செலுத்தும் அம்சங்களாக விளங்குகின்றன. பொதுவாக ஊவா மாகாணங்களில் விளையும் தேயிலை, வித்தியாசமான பருவகால காரணிகள் கொண்டடங்குவதுடன், இவை ஜேர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அதிகம் பகிரப்படுகின்றன. கடின நிறம் மிகுந்த தேயிலை வகைககள் ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும், தாழ் மலைப்பிரதேசங்களில் பெறப்படும் தேயிலை வகைகள் அதிகமாக மேற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையும் ஏற்றமதி செய்யப்படுவதுடன், இத் தேயிலை வகைகளுக்கே உலகளாவிய ரீதியில் அதிக கிராக்கி உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தேயிலையின் கனவளவிற்கு அமைய Dust, BOP, BOPF மற்றும் OP என, தர நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் குறைவான தரமாக கருதப்படும் Dust என்று அழைக்கப்படும் தேயிலையே இலங்கையில் அதிகமானோர் நுகர்வதாகும். அப்படிப் பார்த்தால், எமது நாட்டிலே விளையும் தரமான தேயிலையின் உண்மையான சுவை, இலங்கையர்களுக்கு தெரியாது என்பதே கசப்பான உண்மை. தேயிலை இவ்வாறாக தர நிர்ணயம் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதனால்தான், நம் நாட்டு தேயிலைக்கு உலகளவில் இன்றும் கிராக்கி உண்டு. மேலும் இலங்கையில் விளையும் அனைத்து தேயிலைகளிலும் மெதெய்ல் ப்ரோமைட் என்ற சேதன பதார்த்தம் நீக்கப்படுவதனால், ‘Ozon free tea’ என்று உலகளவில் போற்றப்படுகின்றது.