அறிவியலை நாடி உயிரினங்கள் உருவாகியது எப்படி? – டார்வினின் கூர்ப்புக் கொள்கை

உயிரினங்கள் உருவாகியது எப்படி? – டார்வினின் கூர்ப்புக் கொள்கை

2021 May 22

உலகம் எவ்வாறு தோன்றியது என்பதற்கு பல அறிஞர்களினால் பல கருதுகோள்கள் எடுத்துரைக்கப்பட்டாலும், நிச்சயமாக இவ்வாறு தான் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதற்கு, சான்றுகள் எதுவும் எவரிடமும் கிடையாது என்பதே உண்மை. இந்தப் பிரபஞ்சத்தை பொருத்த மட்டில், படைப்புக் கொள்கை மற்றும் பரிணாமக் கொள்கை என இரு பிரதானமான கோட்பாடுகள் உள்ளன. இரு கொள்கைகளை மையமாகக் கொண்டே இவ்வுலகம் பயணிக்கின்றது என்பது யாவரும் அறிந்ததே.

இந்து சமயத்தை பொருத்தளவில் இப் பிரபஞ்சம் உட்பட அனைத்து உயிரினங்களும் பிரம்மாவினாலேயே உருவாக்கப்பட்டது என்பதாகவும், பிரம்மா என்ற கடவுள், மஹா விஷ்ணு அல்லது சிவபெருமானால் படைக்கப்பட்டவர் என்பதாகவும், பல வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. அதே போன்று இஸ்லாம் மதத்தில் மனிதர்களுக்காகவே உலகம் படைக்கப்பட்டதாகவும், மனிதர்கள் யாவரும் களிமண்ணினால் படைக்கப்பட்டார்கள் எனவும், ஆதம் அடியவர்களின் விலா எழும்பில் இருந்து அவ்வா என்ற பெண்மணி படைக்கப்பட்டார் என்றும் முஸ்லிம்களின் வேதம் என கருதப்படும் திருக்குர்-ஆன் சுட்டிக்காட்டுகின்றது. மேலும் கிறிஸ்தவ மதத்தின் புனித பைபிளை பொருத்தமட்டில், உலகம் 6000 ஆண்டுகளுக்கும் முன்னர் படைக்கப்பட்டது எனவும், மூன்று தினங்களுக்குப் பின்னர் தாவரங்கள் படைக்கப்பட்டதாகவும் ஐந்தாவது ஆறாவது நாட்களில் பறவைகள், மீன்கள், விலங்குகள் போன்றன முறையே தோன்றியதாகவும் ஏழாவது நாள் முடிவில் கழி உருண்டையை உபயோகித்து ஆதம் என்ற மனிதன் படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதுவே உலகில் பெரும்பான்மை மக்களால் நம்பப்படும் படைப்புக் கொள்கை.

இதற்கு முற்றிலும் எதிர்மாறாக பரிணாமக் கொள்கை விளங்குகின்றது. சுருங்கச் சொன்னால், ஓர் உயிரினம் எதேச்சையாக தோன்றியதாகவும், அதன் இயற்கை தேர்வுக்கு அமைய, அதன் சூழல் மற்றும் வாழ்வாதார தேவைகளைக் கருத்திற்கொண்டு இசைவாக்கம் அடைந்து, வெவ்வேறு உயிரினங்களாக மாற்றம் பெற்றன என்பதே பரிணாமக் கொள்கை. உயிரினங்களை வகைப்படுத்திய விஞ்ஞானிகளாக போற்றப்படும் கரோலஸ் லினேயஸ் முதல், ஜோன் பப்டிஸ்ட் வரை இக் கூர்ப்புக் கொள்கையை ஆதரித்து பல சான்றுகள் முன்வைக்கப்பட்டாலும், ஒரு உயிரினத்திடம் இருந்து மற்றொரு உயிரினம் உருவாகுவதற்கு இடை நடுவில் சில உயிரினங்கள் காணாமல் போய் உள்ளதாகக் கூறப்படும் விளக்கம், இக் கோட்பாட்டிற்கு பாரியதோர் பின்னடைவைக் கொடுத்தது.

இக் கோட்பாடு நிலவிய 19 ஆம் நுற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கடவுள் என்பவரே அதிகம் சக்தி வாய்ந்தவர் என அனைத்து மதங்களினாலும் நம்பப்பட்டது. அனேகமான ஐரோப்பிய நாடுகள் கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தின் கீழ் விளங்கியதால், கூர்ப்புக் கொள்கைக்கு எவ்வித ஆதரவும் வழங்கப்படவில்லை. இக் காலப்பகுதியில் தான் இங்கிலாந்து நாட்டில், கூர்ப்புக் கொள்கையின் தந்தையென பிற்காலத்தில் கருதப்பட்ட, சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். பெற்றோர் சார்ல்ஸ் டார்வினை ஓர் பாதிரியாராக ஆக்குவதில் ஆர்வம் காண்பித்தனர். இக் காலப்பகுதியில் புனித பைபிளில் குறிப்பிட்ட படைப்புக் கொள்கைக்கு ஆதாரம் தேடும் பயணத்தில் ஈடுபடுகிறார் டார்வின். இப் பயணத்தின் மூலமாகத் தான் பாதிரியாரகிப்போகவிருந்த இவர், இயற்பியல், தாவரவியல் விஞ்ஞானியாக மாறுகின்றார். இப் பயணமானது பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்களை கடல் மார்க்கத்தினாலும், 3200 கிலோ மீட்டர்கள் தரை வழியினாலும், சுமார் 5 ஆண்டுகளுக்கு அமைந்திருந்தது. 2500 பக்கங்களுக்கு மேல் குறிப்புகள் எடுத்ததுடன், சுமார் 5000 க்கும் அதிகமான எலும்புகளையும் டார்வின் சேகரித்தார். இவை எல்லாவற்றையும் தீவிரமாக ஆராய்ந்த டார்வின் இப் பிரபஞ்சம் அனைத்தும் ஓர் உயிரினிடத்தில் இருந்து உருவாகியது என்பதை இவ்வுலகுக்கு எடுத்துரைத்தார்.

இந்த உலகில் வாழத்தகுதியானவைகள் மாத்திரமே வாழ்கின்றன, மீதம் இருப்பவைகள் அனைத்தும் இறக்கின்றன என்பதாகவும், இறந்த போன உயிரினங்களுக்கும் தற்போது வாழும் உயிரினங்களுக்குமிடையில், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை தத்தெடுக்கும் இயல்பானது ஒர் பொதுவான பண்பாக திகழ்கிறது. அவ்வாறு தம்மைத் தாமே மாற்றிக்கொள்வதற்காக உயிரினங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளை எடுத்துக் கொள்வதாகவும், அப்படி மாற்றிக்கொண்ட உயிரினங்கள் தங்களது அடுத்த சந்ததிக்கு மரபணு வழியாக இச் செய்தியினை பரிமாற்றிக்கொள்கின்றன என்பதாகவும் சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கை கூறுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php