2021 Jun 9
ஒரு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் பொழுது, ஒரு சிறுபான்மை சமுகத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும் பொழுது, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தினை அடக்கி தம் அதிகாரத்தினை அவர்கள் மீது பிரயோகிக்க எத்தனிக்கும் பொழுது தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் தமது சமூக இருப்பினை உறுதி செய்து தமக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறுபட்ட போராட்டங்களை ஆயுதப் போராட்டமாகவோ அல்லது அகிம்சை முறையிலான போராட்டமாகவோ அச்சமூகம் முன்னெடுக்கின்றது. இவ்வாறான போராட்டங்கள் ஆதி காலம் தொடக்கம், கால காலமாக உலக நாடுகள் பலவற்றில் இடம்பெற்று வந்ததை நாம் அறிவோம். அவ்வாறான சமூக மக்களின் போராட்டங்கள் பல கடினமான இடர்களை கடந்து தமக்கான சமூக இருப்பினை உறுதி செய்து, இன்று எமக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்குமான வரலாறாக, உந்து சக்தியாக விளங்குகின்றன.
கிரேக்க காலத்தில் அடிமைகள் மீதான அடக்குமுறைகள், மேற்கத்தேய நாடுகளின் கீழைத்தேய நாடுகள் மீதான அடக்குமுறைகள், அமெரிக்காவில் நிலவிய அடிமைமுறைச்சமூகம் மீதான அடக்குமுறைகள், தென்ஆபிரிக்காவில் நிலவிய நிறம் மீதான அடக்குமுறைகள்போன்றவற்றிற்கு எதிராக, காலம் காலமாக இடம்பெற்ற போராட்டங்களின் விளைவாகவே பல சமூகங்கள், பல கீழைத்தேய நாடுகள்சுதந்திரக்காற்றினை இன்றளவும் சுவாசிக்க கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான போராட்டங்களே இன்று உலகில் எப்பாகத்திலும்இடம்பெற்றுக்கொண்டிருக்கும் உரிமைக்கான போராட்டங்களுக்கு ஜீவநாதமாகவும் உந்துசக்தியாகவும் உள்ளன.
அந்தவகையில் பல ஆண்டு காலமாக உலகின் பல்வேறு பாகங்களிலும் பரந்து வாழும் பால்புதுமையினர், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், தமது சமூக இருப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் போராடி வருகின்றனர். பல தசாப்தங்களாக தொடர்ந்து போராடி வரும் பால்புதுமையினர், சமூகத்தில் தமக்கான சமூக அங்கீகாரத்தினையே வேண்டி நிற்கின்றனர். பல்வேறு தொடர்போராட்டங்களின் பெறுபேறாக இன்று மேற்கத்தேய நாடுகள் பலவற்றில் பால்புதுமையினர்களுக்கான உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான திருமணங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. அவர்களின் இருப்பினை தக்க வைப்பதற்கான சட்டங்கள் பாராளுமன்றங்களில் இயற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கெதிராக அநீதி இழைக்கப்படும்பொழுது நீதிமன்றங்களை நாடி, தமக்கான நீதியினை பெற்றுக்கொள்ளும் சட்ட ஏற்பாடுகளும் காணப்படுகின்றன.
இவ்வாறு பால்புதுமையினருக்கு ஆதரவான எண்ணவோட்டங்கள் மேற்கத்தேய நாடுகளில் அவர்களுக்கு சார்பாக மாறி வரும்சந்தர்ப்பத்தில், அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக கீழைத்தேய நாடுகளில் பால் புதுமையினரின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களின் இருப்பு இப்பொழுதும் கேள்விக்குள்ளாக்கப்படுவது வருத்தமளிப்பதாகவே உள்ளது. இலங்கை போன்ற நாட்டில் அதிலும்குறிப்பாக தமிழர்கள் வாழும் வட கிழக்கில் பால் புதுமையினர் தமக்கான உரிமைக்காகவும், தமக்கான அடையாள அங்கீகரிப்பிற்காகவும்தொடர் போராட்டங்களை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதனை கடந்தகாலங்களிலும் பார்க்கையில் அண்மைக்காலமாக கூடியளவு அவதானிக்க கூடியதாக உள்ளது. பால்புதுமையினருக்கு ஆதரவாக எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இலங்கையில் காணப்படாத நிலையில் அதற்கு ஆதரவாக செயற்படுவது என்பது மிகவும் சவாலான விடயமாகவே நோக்கப்படுகின்றது.
பால்புதுமையினர் என்று குறிப்பிடப்படுபவர்கள் யார் என்ற வினாவினை சாதாரணமாக ஒரு கல்விச்சமூகம் சார் குழுவிலோ, மாணவ சமூகம் சார் குழுவிலோ அல்லது சாதாரண பாமர மக்கள் குழுவிலோ எழுப்புவோமாயின் பெரும்பாலானவர்களுக்கு அது தொடர்பில் ஓர் புரிதலோ, விளக்கமோ காணப்படாத நிலையினை நாம் காணலாம். இது இவ்வாறிருக்க வட கிழக்கில் பால்புதுமையினருக்கான அடையாளத்தினை மற்றும் உரிமைகளை வென்றெடுத்தல் என்பது எட்டாக்கனியாகவே காணப்படுகின்றது.
அந்தவகையில் பால்புதுமையினர் என்போர் யார் என்று நோக்குவோமாயின், அது பால் (sex), பாலினம் (gender) மற்றும் பாலீர்ப்பு (sexuality) அடிப்படையில் ஒடுக்குமுறைக்குட்படுத்தப்படுகின்ற ஓர் சிறுபான்மை சமூகம். எமது தமிழ்பேசும் சமூகத்தில் ஆண் (male), பெண் (female) எனும் பால்களும், மாறாப்பாலினத்தவர்கள் (cisgender) உம் எதிர்பாலீர்ப்புள்ளோர் (heterosexual people) உம்சாதாரணமயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இடையிலிங்கம் உடையோர் (intersex people) போன்ற வேறுபட்ட பாலுடையோரும், திருநர் (transgender), பால் திரவநிலையுடையோர் (gender fluid people) போன்ற வேறுபட்ட பாலினம் கொண்டோரும், தன்பாலீர்ப்புள்ளோர் (homosexual people), பாலீர்ப்பு அற்றோர் (asexual people) போன்ற வேறுபட்ட பாலீர்ப்புக் கொண்டோரும் பால்புதுமை சமூகத்தில் உள்ளடக்கப்படுகின்றார்கள். இதனைச் சுருக்கமாக LGBTQIA+ சமூகம் எனக் குறிப்பிட முடியும்.
இவ்வாறாறு தம்மை பால்புதுமையினராக அடையாளப்படுத்த முன்வரும் போது பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம்கொடுகின்றனர். தமிழர்களை பூர்விகமாக கொண்ட வட கிழக்கில் பல்வேறு இறுக்கமான சமூக கட்டுப்பாடுகள், வழக்காறுகள், சாதிய ஒடுக்குமுறைகள் இன்றளவும் காணப்படுகின்றது. இவ் வட கிழக்கை பூர்வீகமாக கொண்ட பால்புதுமையினர் தம்மை பால்புதுமையினராக அடையாளப்படுத்தும் சந்தர்ப்பங்களில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பால்புதுமையினர் பாடசாலையில் கல்வி கற்கும் வயதினிலேயே தான் தம்மை பால்புதுமையினராக உணர்ந்து தம்மை அடையாளப்படுத்த முனைகின்றனர். பால்புதுமையினர் தொடர்பான எதுவித புரிதல் இல்லாத பாடசாலை வகுப்பாசிரியரால், சக மாணவர்களால், பகுதித் தலைவர்களால் கேலிக்குட்படுத்தப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவ்வாறான பல சந்தர்ப்பங்களை நாம் அனைவரும் எமது பாடசாலைக் காலத்தில் சக மாணவர்களுக்கு ஏற்பட்டிருந்ததை கடந்தே வந்திருப்போம். இவ்வாறு பாதிப்பினை எதிர்கொள்ளும் பால்புதுமையினர் அதனை எதிர்கொள்ள முடியாமல் தமது கற்றல் செயற்பாடுகளை இடை நிறுத்துகின்றனர். இவ்வாறு வீட்டிலும் இது தொடர்பான அடையாளப்படுத்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் போது பெற்றோரினாலும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதன் அதியுச்சபட்சமாக அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர்.
இவற்றிற்கான மூல காரணமாக தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தமக்குள்ள சமூக அந்தஸ்தினை பாதித்துவிடுமோ என்ற அச்சமே பெற்றோர்கள் மத்தியில் காணப்படுகின்றது. அவ்வாறு வீட்டைவிட்டு வெளியேறும் பால்புதுமையினர் உதவிகளற்று சரியான வழிகாட்டுதலற்று தமது அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பல துன்பங்களை எதிர்நோக்குகின்றனர். ஆயினும் சில பால்புதுமையினர் இவற்றினை தாண்டி சமூகத்தில் தமக்கான ஒர் அடையாளத்தினை உருவாக்கி வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருப்பதையும் காணலாம். அவ்வாறானவர்களின் வெற்றிக்குரிய காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்கு அவர்களின்குடும்ப உறுப்பினர்களின் அல்லது நண்பர்களின் புரிந்துணர்வுடன் கூடிய ஆதரவு இருப்பதனை நாம் கவனிக்கலாம். ஆனால் இது அனைத்து பால்புதுமையினருக்கும் கிடைப்பதில்லை.
இவ்வாறு பாடசாலைக்கல்வியை இடை நடுவில் கை விட்டு, வீட்டை விட்டு வெளியேறும் பால்புதுமையினர் தமக்கான இருப்பை தக்க வைப்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். தமக்கான அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள்போன்றவற்றை பெற்றக்கொள்வதில் பாரிய இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அதி உச்சபட்சமாக பாலியல் தொந்தரவுகளுக்கும்முகம் கொடுக்கின்றனர். இவ்வாறு புதிதாக ஆதரவற்று வெளியேறும் நபர்களுக்கு ஏற்கனவே இவ்வாறு வெளியேறி தமக்கான இருப்பினை ஓரளவேனும் தக்க வைத்திருக்கும் பால்புதுமையினர் ஆதரவுக்கரம் நீட்டி உதவி செய்கின்றனர். இவ்வாறான உதவிகள்கிடைப்பினும் நிரந்தர தொழில் வாய்ப்புகள், கல்வி செயற்பாடுகளை தொடர்தல், போன்றவை எட்டாக்கனியாவே காணப்படுகின்றது.
இவ்வாறான இன்னல்களை பால்புதுமையினர் எதிர்நோக்குவதற்கு சமூகத்தில் அவர்கள் தொடர்பான விழிப்புணர்வு இன்மையே பிரதான காரணமாக காணப்படுகின்றது. தமது பால்நிலை மற்றும் பாலீர்ப்பு தெரிவினை தத்தமது சமூகத்தில் வெளிப்படுத்தி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சாதாரண ஒரு வாழ்க்கையினை வாழுதல் என்பதே அனைத்து பால்புதுமையினரதும் அடிப்படை விருப்பமாகவும்தேவையாகவும் உள்ளது.
தம்மை அடையாளப்படுத்துதல் என்பது அனைவரும் எண்ணும் வகையில் மிகவும் சாதாரணமான விடையமல்ல. அவ்வாறு தமது பால்நிலை மற்றும் பாலீர்ப்பு தெரிவினை தமது குடும்பத்திலோ, பாடசாலையிலோ, நண்பர்களிடமோ வெளிப்படுத்துதல் என்பது மனதளவில் மிகவும் கடினமானதொன்றாகவே காணப்படுகின்றது. தமது பால்நிலையினை வெளிப்படுத்தும் பொழுது அதற்கு எவ்வகையான துலங்கல்கள் சமூகத்தில் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதன் காரணமாகவே தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு பால்புதுமையினர் பலரும் தயங்குகின்றனர். இதற்கான மாற்றம் அடிப்படை குடும்ப கட்டமைப்பிலிருந்தே உருவாக வேண்டும். தன்னுடைய மகன் அல்லது தன்னுடைய சகோதரர், சகோதரி, நண்பன், நண்பி, ஒரு பால்புதுமையினர் என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். அவ்வாறான மாற்றம் குடும்ப கட்டமைப்பில் ஏற்படும்பட்சத்தில் தான் நாம் சமூக மாற்றத்தினை எதிர்பார்க்க முடியும்.
இன்றளவும் தமது பால்நிலை மற்றும் பாலீர்ப்பினை அடையாளப்படுத்தும்போது, அது ஒருவகையான மனப்பிறழ்வு நோய் எனவும் அதற்குரிய வைத்தியம் மேற்கொண்டால் அனைத்தும் சரியாகிவிடும் என வைத்தியரிடம் அழைத்துச் செல்வதும், திருமணம் முடித்து வைத்தால் சரியாகிவிடும் என திருமண முயற்சிகள் மேற்கொள்வதும் சர்வசாதரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு வைத்திய ஆலோசனையினை வழங்கும் வைத்திய உத்தியோகத்தர்கள் கூட இதனை விளங்கிக்கொள்ளது, தவறான வழிப்படுத்தல்களை அவர்களின் பெற்றோரிடம் வழங்குவதென்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
மேலும் ஒரு திருநங்கை (trans woman) அல்லது திருநம்பி (trans man) தமக்குரிய மருத்துவ ஆலோசனைகளை வெளிப்படையாக பெறுதல் என்பது மிகவும் சாவாலானதாகவே காணப்படுகின்றது. இதற்குரிய மாற்றம் சமூக விழிப்புணர்வின்றி ஒருபொழுதும் ஏற்படாது. நாம் இவ்வாறான பல சந்தர்ப்பங்களை கடந்து வந்திருப்போம். ஆயினும் எமது பிள்ளைகள் அல்லது எமது சகோதரர்கள் தம்மை பால்புதுமையினராக அடையாளப்படுத்தும் பொழுதுதான் எம்மால் அது தொடர்பான அனுபவங்களை நேரடியாக காணக்கூடியதாக இருக்கும். இன்னும் எத்தனை ஆயிரம் பால்புதுமையினர் தமது அடையாளங்களை மறைத்து சாதாரணமாக எமது சமுதாயத்தில் அடிப்படை அங்கீகாரமின்றி வாழ்ந்து வருகின்றனர் என்பதனை நீங்கள் அறிவீர்களா? அடிப்படை பால்நிலை மற்றும் பாலீர்ப்பு வெளிப்படுத்தல் இன்றி வாழ்தல் என்பது எவ்வளவு துன்பகரமான நிகழ்வு என்பதனை நீங்கள் அறிவீர்களா? எனவே எம் சகமனிதர்களுக்கான எம்மைப் போன்ற சம உரிமைகள் உண்டு அவர்களுக்கான அங்கீகாரத்தை நாம் வழங்கவேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படவேண்டும்.
மேலும் பாடசாலை ஆசிரியர்கள் இது தொடர்பான கூடியளவு விழிப்புணர்வினை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறிருந்தால்விழிப்புணர்வு மிக்க சமுதாய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். ஆரம்பத்தில் பாடசாலைக்காலங்களிலே பால்புதுமையினரென இனங்காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டலாம். அவர்களுக்கான தன்னம்பிக்கையினை ஊட்டலாம். அவர்கள்பாடசாலைக் கல்வி நிறைவுறும் வரை ஆதரவு தரும் பட்சத்தில் அவர்கள் தமக்கான மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை தாமே தேடிக்கொள்ள கூடியவர்களாக உருப்பெற்று சமுதாயத்தில் தம்கென்ற அடையாளத்துடன் வாழக்கூடியவர்களாகின்றனர்.
அதே போன்று தொழில்தருனர்கள் பால்நிலை மற்றும் பாலீர்ப்பு அடையாளங்களினூடு தொழில் நிராகரிப்புகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும். பால்புதுமையிருக்கு போதியளவு திறமைகள், தகுதிகள் இருக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கமுன்வர வேண்டும். அவர்களை தொழில் நிறுவனங்களில் சமமாக நடாத்த முன்வர வேண்டும்.
மேலும் உங்கள் நண்பர்களில் எத்தனை பேர் தமது பால்நிலை மற்றும் பாலீர்ப்பு அடையாளங்களை மறைத்து சொல்லமுடியாத வேதனைகளுடன் உங்களுடன் பழகிக்கொண்டு இருப்பார்கள் என்று தெரியுமா? தற்பொழுது உலகெங்கும் தலைவிரித்தாடும் கொறோனா நோயின் தாக்கத்தால் எம்மில் பலர் தனிமைப்படுத்தலை அனுபவித்திருப்போம், உணர்ந்திருப்போம். தனிமைப்படுத்தல் என்பது எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு மன அழுத்தத்தை தரக்கூடியது என்பதை நாம் அண்மைக்காலமாக கண்கூடே கண்டிருப்போம். தனிமைப்படுத்தல் ஏற்படுத்திய மன அழுத்தத்தின் விளைவாக எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதை பத்திரிகை வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும், சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் அறிந்திருக்கின்றோம். சாதாரணமாக பதின்நான்கு நாட்கள் தனிமைப்படுத்தலை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் இருக்கும் நாம், இச்சமூகத்தில் பிறந்ததிலிருந்து தனிமைப்படுத்தலில் இருக்கும் பால்புதுமையினர் எவ்வளவு மன அழுத்ததிற்கு உள்ளாகியிருப்பார்கள் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டுள்ளார் என்பதனை சற்று சிந்தித்து பாருங்கள். அவர்கள் யாவரினது எதிர்பார்ப்பும் தமது அடிப்படை பால்நிலை வெளிப்படுத்தல்களை தம்சார் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.
எனவே வட கிழக்கில் வாழும் தமிழ் மக்களாகிய நாம் பால்புதுமையினருக்கான சமூக அங்கீகாரத்தை வழங்கி அவர்களும் எம்முடன் இணைந்து தமது வாழ்வியலை வாழ வழிசமைக்க வேண்டும். உலகின் எப்பாகத்திலும் பரந்து விரிந்து வாழும் அனைத்து பால்புதுமையினருக்கும். தமது உரிமையினை வென்றெடுக்க, தமது அபிலாஷைகளை உலகிற்கு தெரிவிக்க, தமது இருப்பை உறுதிப்படுத்த, தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள இந்த சுயமரியாதை மாதமானது கொண்டாடப்படுகிறது. ஆனி மாதம் பால்புதுமையினரால் சுயமரியாதை மாதம் என கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் பரந்து விரிந்து வாழும் பால்புதுமையினர் தாம்வென்றெடுத்த உரிமைகளின் வெற்றியினை கொண்டாடவும் இனிவரும் காலங்களில் தமக்கு தேவையான உரிமைகளை வென்றெடுக்கும் ஒரு களமாகவும் சுயமரியாதை மாதத்தினை நோக்குகின்றனர். பல்வேறுபட்ட நாடுகளில் இவ் சுயமரியாதை மாதத்தில் பல்வேறுபட்ட பேரணிகளை நாடாத்துகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளே அவர்களின் சமூக இருப்பை தக்கவைக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
மேற்கத்தைய மற்றும் கீழைத்தேய நாடுகளில் நடைபெறும் சுயமரியாதை மாத செயற்பாடுகள் இலங்கையில் அதுவும் வட கிழக்கில்மிகவும் குறைவானதாக காணப்படுவது இன்னமும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதையே பறைசாற்றி நிற்கின்றது. இவ்வாறான நிலையிலும் பால்புதுமையினரின் அடிப்படை உரிமைகளுக்காக இயங்கும் எமது அமைப்பு தம்மால் இயன்ற நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் செய்துவருகின்றது. வடகிழக்கில் பல்லாயிரக்கணக்கில் பால்புதுமையினர் வாழ்கின்றனர். என்பது இக்கட்டுரையை வாசிக்கும் உங்கள் பலருக்கு ஆச்சரியமளிக்கலாம். அவர்களில் பலர் தற்பொழுது இலங்கையில் கொவிட் நோயினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர், ஊதியமற்று இருக்கின்றனர். இதனால் பலர் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உழன்று கொண்டிருகின்றனர். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமக்கான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதிலும் பல்வேறு நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார். இவர்களை சற்றேனும் அவ் நெருக்கடியில் இருந்து விடுவிப்பதற்கு நாம் பிற தோழமை அமைப்புகளுடன் இணைந்து உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலுமிருந்து நிதி உதவிகளை பெற்று உதவிய வண்ணமுள்ளோம்.
எனவேதான் பால்புதுமையினருக்கான சுயமரியாதை மாதத்தில் நாடெங்கிலும் பரந்து வாழும் அனைத்து தமிழ் மக்களிடமும் பகிரங்க அழைப்பினை விடுகின்றோம். பால்புதுமையினர் என்றால் யார் என்பதனை புரிந்து கொள்ளுங்கள். புரியாவிடின் புரிந்தவரிடம் கேட்டுதெரிந்து கொள்ளுங்கள். தெரியாதவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குரிய அடிப்படை மரியாதையினை வழங்குங்கள், அவர்களின் சமூக இருப்பினை உறுதிசெய்யுங்கள்.
தோழமையுடன்,
செயற்பாட்டாளர் (யாழ்ப்பாண சங்கம்: தமிழ்பேசும் LGBTQIA+ சமூகம்)
………………………………………………………………………
இம் முறை சுயமரியாதை மாதத்தின் போது ‘Pride with a Purpose’ எனும் கருப்பொருளில், நாம் ஒன்றிணைந்து இலங்கையில் வாழும்LGBTQIA+ மக்களுக்கு உடனடி இடர்கால உதவிகளாக உலர் உணவுப் பொருட்கள், வாடகைக் கட்டணங்கள், உளநல சமூக உதவிகள், சட்ட உதவிகள், ஓமோன்கள் மற்றும் HIV/ AIDS சம்பந்தமான மருத்துவ உதவிகள் போன்றவற்றை வழங்க முன்வந்துள்ளோம். நீங்களும் எம்முடன் இணைந்து பங்களிக்க முடியும்.
நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவராயின் கீழுள்ள இணைய இணைப்பின் மூலம் நிதிப் பங்களப்பினை வழங்க முடியும்,
https://www.gofundme.com/f/covid19-relief-for-lgbtiq-folks-in-sri-lanka
நீங்கள் இலங்கையில் வசிப்பவராயின் கீழுள்ள வங்கிக் கணக்கின் மூலம் நிதிப் பங்களிப்பினை வழங்க முடியும்,
சமூக நலன்புரி மற்றும அபிவிருத்தி நிதி,
இலங்கை வங்கி, ரீஜென்ட் தெருக் கிளை,
கணக்கு இல: 85843143
(COVID-19 இடர்கால உதவி’ எனும் குறிப்புடன்).