அறிவியலை நாடி இலங்கையின் சமுத்திரப் பெண் – ஆஷா டி வோஸ்

இலங்கையின் சமுத்திரப் பெண் – ஆஷா டி வோஸ்

2021 Jun 7

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்வியல் எண்ணங்கள், விருப்பு, வெறுப்புகள், நாட்டங்கள், எதிர்பார்ப்புகள், குறிக்கோள்கள் என தனிப்பட்ட அம்சங்கள் வழக்கமாக காணப்படும். ஒவ்வொரு குழந்தைகளினதும் பள்ளிப் பருவத்தின் பயணத்தை கொண்டோ, பரீட்சை பெறுபேற்றை அடிப்படையாக கொண்டோ அவர்களுடைய எதிர்காலத்தை மதிப்பிடுதல் என்பது சாத்தியமற்றது. வெறுமனே நூற்கல்வியைக் கொண்டு இலக்குகளை முடிவு செய்தல் முறையன்றே.  இதிலும் பெண்களாக இருப்பின் அவர்களது பயணம் பெரிதும் குடும்பத்தவர்களால் தீர்மானிக்கப்படுவதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சுதந்திரமாக இலக்குகளை நோக்கி பயணிக்கும் போது பல்வேறுபட்ட சவால்கள், சிக்கல்கள், தடைகள், விமர்சனங்கள், குடும்ப மற்றும் சமூக நம்பிக்கைகள் பெரிதும் செல்வாக்கு செலுத்துவதாக காணப்படும்.

இத்தகைய சூழலில் 1979 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்து, இலங்கையின் சமுத்திரப்பெண் என உலகம் முழுவதும் அறியப்பட்டவரே ஆஷா டி வோஸ். உயிரியலாளர், ஆராய்ச்சியாளர், நீச்சலாளர், புகைப்படக்காரர், பாதுகாவலர் மற்றும் இயற்கை தொடர்பான செயற்பாட்டில் செல்வாக்கு செலுத்துபவர் என பல முகங்களை கொண்டவர் என சுருக்கமாக கூற இயலும். இவருடைய பயணம் என்பது அத்தனை எளிதானதல்ல. பல்வேறுபட்ட சவால்களையும் தாண்டி TED fellow, women of discovery award, BBC 100 women, 2020 sea hero of the year, போன்ற பல உயர் விருதுகளை பெற்றுள்ளார்.

இவை மட்டுமல்லாது, பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இவர் பெருமை சேர்த்துள்ளார். ஒக்ஸ்ஃபோர்ட் லிங்லாங் பல்கலைக்கழகத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு செய்யப்பட்டதன் முகமாக 20 சாதனைப் பெண்களில் ஒருவராக இவருடைய உருவப்படமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் 15 ஆம் நூற்றாண்டு மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சாதனை மாணவர்களில் முதல் இலங்கையர் இவரே ஆவார்.

ஆக இவருடைய பயணம் என்று நோக்கும்போது பெரும்பாலான பக்கங்கள் கடல், சமுத்திரம், திமிங்கிலங்கள், கடல் வாழ் உயிரினங்கள் போன்றவற்றை தங்கியே இருக்கும். சிறுவயதிலிருந்தே அடிக்கடி அருங்காட்சியகம் செல்வதும் அங்கிருக்கும் திமிங்கிலங்களின் எலும்புக்கூடுகள், கடல்சார் பதாதைகள் போன்றவற்றை ஆர்வத்துடன் அதிக நேரம் பார்ப்பது வழக்கம். பாடசாலைச் சூழலிலும். வீட்டுச் சூழலிலும் பட்டாம்பூச்சிகளையும் ஏனைய உயிரினங்கள் மற்றும் இயற்கை அம்சங்களையும் அவதானிப்பதில் ஏற்பட்ட தாக்கமே, இன்று சமுத்திரத்தின் உயர்ந்து நிற்கும் ஆஷா டி வோஸ்.

ஆறாவது வயதில் அவரது பெற்றோர் அவருக்கு அளிக்கும் உலக புவியியல் சஞ்சிகைகளை பார்த்து ஒருநாள் யாருமே செல்லாத இடங்களுக்கெல்லாம் நான் பயணம் செய்வேன். யாரும் பார்த்திராத உலக அம்சங்களை நான் பார்ப்பேன் என அடிக்கடி கூறிக் கொள்வதும், சஞ்சிகைகளில் வரும் நபர்களாக தன்னை கற்பனை செய்து கொள்வதும் உண்டு. இவரது ஆரம்பக் கல்வியை கொழும்பு மகளிர் கல்லூரியிலும் இடையில் மற்றும் உயர்நிலை கல்வியை கொழும்பு சர்வதேச கல்லூரியிலும் முடித்ததன் பின்னராக, உயர்கல்வி தொடர்பான முயற்சியில் கடல்சார் கற்கைகளிற்கு இலங்கையில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே, தனது இலட்சியமும் அது குறித்த தேவைகள் பற்றியும் பெற்றோருக்கு விளக்கினார். மகளுடைய நாட்டத்திற்கு தேவையான ஆதரவு கிடைக்கவே சுற்றுச்சூழல் உயிரியல் மற்றும் கடல் தொடர்பிலான இளங்கலை கற்கை நெறிகளினை ஸ்கொட்லாந்தின் சென்.அன்ரோவஸ் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்தார். பின்னராக தன்னார்வ தொண்டராக பணியாற்ற விருப்புக் கொண்டபோது அவரது கற்கைநெறிகளிற்கு பொருத்தமானதாக, இலங்கையில் தளங்கள் எதுவும் கிடைக்காததால் நியுசிலாந்து செல்ல தீர்மானித்தார். ஆயினும் அதற்கான பொருளாதார சிக்கல்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஸ்கொட்லாந்தில் உருளைக்கிழங்கு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி சில காலங்களிலேயே நியூசிலாந்தில் தனது தன்னார்வ தொண்டு பணிகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த உயிரியல் முதுகலை பட்டத்தினை தொடர்ந்தார். இதற்காக பெரும் பிரயத்தனங்களை அவர் முன்னெடுக்க நேர்ந்தது. பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்காக அச்சிடுதல் உட்பட பல தொழில்சார் வேலைகளில் ஈடுபட்டு வந்ததோடு ஹெட்லைட் உதவியுடன்  ஒரு கூடாரத்திலேயே வசித்து வந்த அவர், இறுதியாக தனது விண்ணப்பப்படிவத்தை ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடிந்தது. தொடர்ந்து இரண்டு மாதங்களின் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட போதிலும் ஆஷாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. மிகுந்த வருத்தத்திலும் அவருடைய ஆர்வம் மற்றும் முயற்சியின் மூலமாக குறித்த பல்கலைக்கழகத்தில் இடம்பிடித்தார்.

பல்கலைக்கழகத்தில் ஒரு வருடமே இவரால் செலவழிக்க முடிந்தது. இருப்பினும் அவரது மதிப்புமிக்க அர்ப்பணிப்பு மற்றும் குழு பணிகள், பெருமைமிக்க அங்கீகாரத்திற்கு வழிவகுத்தது. அத்துடன் இவர் மேற்கு ஆஸ்திரேலிய பல்லைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பூர்த்தி செய்தார். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில் கடல் வாழ் பாலூட்டிகள் தொடர்பில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இலங்கையர்  இவரே ஆவார்.  

அத்துடன் 2018-ஆம் ஆண்டில் மதிப்புமிக்க விங்ஸ்வேர்ல்ட் விருந்தினர்களுடன் (wings world guest),  இங்கிலாந்து அலுமினிய விருதுகளுக்காக தெரிவான 61 நபர்களில், இறுதித்தெரிவாக பரிந்துரைக்கப்பட்ட 20 நபர்களில் ஒருவராக அங்கீகாரம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்  உலகளாவிய விருதானது குறிப்பிட்ட துறையில் சாதனையாளர்களுக்கும் துறை சார்ந்த மாற்றங்களை உருவாக்குபவர்களுக்கும் மட்டுமே பரிந்துரைக்க படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 உலகின் பல நாடுகளில் பல்வேறுபட்ட கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பணிகளையும் மேற்கொண்டதன் காரணமாக உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தினார். 2008 ஆம் ஆண்டில் இயற்கை உரையாடலுக்கான சர்வதேச ஒன்றியத்தின் ( international unit for conservation of nation) கடல் மற்றும் கடலோர பகுதி சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட அலுவலராக நீலத் திமிங்கிலங்கள் தொடர்பான நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுத்தார். வட இந்தியப் பெருங்கடலில் திமிங்கலங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட  நீண்ட ஆய்வு மற்றும் செயற்திட்டம் இதுவே ஆகும். அது மட்டுமல்லாமல் முதன்மைத்திட்டம் (Flagship project of Oceanswell) எனும் நிகழ்ச்சித்திட்டத்தினையும் வட இந்திய பெருங்கடல் பகுதியில் மேற்கொண்டார். இந் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து மேலும் நோக்கினால் கடல்வாழ் உயிரினங்கள் குறிப்பாக நீலத் திமிங்கிலங்கள் போன்றவற்றின் நிலைபெயர்வு மற்றும் இடம்பெயர்தல் தொடர்பாகவே அமைகின்றன.

எதிர்பார்த்ததற்கு அதிகமாக வரவேற்பு மற்றும் உலக நாடுகளின் கவனத்தையும் நிகழ்ச்சித்திட்டங்கள் பெற்றதைத் தொடர்ந்து, channel 7 அவுஸ்ரேலியா (2010), BBC (2016), WIRED UK (2014), The New Scientist (2014), TED(2015), Grist (2015), GOOD (2016), National Geographic and Nature (2017) வாயிலாக உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்படும் நபராக அறிமுகமானார்.

இச் செயற்திட்டம் தொடர்பில் மேலும் விரிவாக நோக்கினால், வட இந்தியப் பெருங்கடலில் கடல்வாழ் பாலூட்டிகள் செறிந்து காணப்படுகின்றன. ஆனால் காலத்திற்கு காலம் அவற்றின் தொகை பெருமளவு வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றது. இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் இவருடைய செயற்றிட்டத்தின் பின் பரவலாக முன்வைக்கப்பட்டது.  எண்ணெய் தயாரிப்புக்களிற்காக பெருமளவு திமிங்கலங்கள் கொன்று குவிக்கப்பட்டன. அது தவிர சட்ட விரோதமாகவும் திமிங்கலங்கள் அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இவை தவிர எண்ணெய் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை கடலில் கொட்டுதல், சடுதியாக வட இந்தியப் பெருங்கடலில் அதிகரித்த கப்பல் போக்குவரத்து,  கடல் பாலூட்டிகளின் செறிவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக கடற்பரப்பில் மனிதர்களுடைய செயற்பாடுகளும் அதிகமாக இருத்தல், இதனால் பசுபிக் கடலோர பகுதிகள் கடல் வாழ் உயிரினங்களிற்கு  மிகவும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றமை, கடல் மாசடைதல், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுதல், காலநிலை மாற்றங்கள் கடலில் மனிதனால் ஏற்படுத்தப்படும் அதிக ஒலிகள், எலும்பு மற்றும் இரைக்காக திமிங்கிலங்கள் வேட்டையாடப்படுதல் போன்ற பல காரணிகளால் கடல்வாழ் பாலூட்டிகள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், அதிலும் குறிப்பாக நீலத் திமிங்கிலங்கள் இறப்பு விகிதம் அதிகரிக்கவும்  அவற்றின் இடம்பெயர்தலிற்கும் இவையே காரணமாக அமைகிறது என இவரால் முன்வைக்கப்பட்டது.

இவை தவிர நீலத் திமிங்கலங்களுக்கும், மனிதன் மற்றும் சூழலுக்கும் பாரிய தொடர்பு உண்டு என்பதை முன்வைத்தார். அதோடு திமிங்கிலங்களை கூட எங்களால் பாதுகாக்க இயலாவிட்டால் எதை நாம் பாதுகாக்கப் போகிறோம் என்ற கேள்விகளையும் நம் முன்வைக்கின்றார். இவ்வாறாக ஆஷா டி வோஸ் கடல் சார்ந்த கற்கை நெறிகள் மட்டும் அன்றி அவை தொடர்பான பணிகளையும் இன்றுவரையும் தொடர்ந்து வருவதோடு, கடல் வாழ் உயிரினங்கள் அழிப்பிற்கு எதிராக குரல் கொடுத்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் முதன் முதலாக இலங்கையில் கடல் வாழ் உயிரினங்களின் ஆய்வு மற்றும் கற்றல் தொடர்பான இலாப நோக்கற்ற நிறுவனம் ஆஷா டி வோஸினாலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் இவருடைய முயற்சிகளுக்கான தளங்கள் இலங்கையில் கிடைக்காத போதும் முயற்சிகளை தளரவிடாமல் பிறநாட்டு கற்கை நெறிகளை மேற்கொண்டு, கற்றலை பயன்படுத்தும் முகமாகவே பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது மட்டுமன்றி இலங்கையர்களது கடல்சார் கற்கை நெறிகளுக்கான வழிகாட்டியாகவும் திகழ்கின்றார்.

இதைத்தவிர நீச்சல் தொடர்பான நடவடிக்கைகளிலும் ஆஷா டி வோஸ் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நீச்சலாளர்களில் ஒருவராக இவர் பரிந்துரை செய்யப்படுகின்றார். அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக பலதரப்பட்ட வகையில் புகழ் பெற்றவர்கள் வரிசைப்படுத்தல் பட்டியலில் இவருடைய பெயரும் இடம்பெற்று வருவதானது அவருக்கு மட்டுமன்றி, இலங்கைக்கு பெருமை அளிக்கும் விடயமாகும்.

மேலும் ஸ்கூபா டைவிங் (scuba diving) என்ற சஞ்சிகைக்கு அவர் வழங்கிய உரையில், ஒவ்வொரு கடற்கரைக்கும் அக் கடற்கரைக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஒவ்வொரு சிறந்த மனிதர்களும் நிச்சயம் தேவை. உள்ளூர் சூழலை புரிந்து கொள்வதோடு உள்ளூர் சூழல் புலத்தின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் ஒவ்வொருவரையும் அவர் வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும் இனி வரும் மாணவர்களுக்கு சமுத்திரம், கடலோரம் பற்றிய அற்புதமான விடயங்களை கற்பிக்க ஆர்வமாக இருப்பதாகவும் இதனால் அவர்கள் கற்றலுக்கான தளங்களை தேடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக துறைசார் அபிவிருத்திகளை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு ஸ்கூபா டைவிங்(scuba diving) சஞ்சிகையால் அறிவிக்கப்பட்ட The Sea Hero விருதுக்காக 30 நபர்களில் ஒருவராக இவர் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விருது கடல்சார் சூழலியலை பாதுகாப்பதும் கடல்வாழ் உயிரின அழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் நபர்கள் என்ற அடிப்படையிலும் வழங்கப்பட்டது. அத்துடன் இதில் இவர் பெற்ற $5000 தொகையினை கடல்சார் பயிற்சி முகாம்களிற்காக செலவிடுவதாக அவர் தீர்மானித்துள்ளார்.

இவை மட்டுமன்றி இலங்கை தொலைக்காட்சி நிறுவனமான அத தெரன (Ada Derana) இவருக்கு வளர்ந்து வரும் உலகளாவிய விஞ்ஞானி எனும் விருதினை வழங்கி கௌரவித்தது மட்டுமல்லாமல், 2019ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றம் சிறந்த மாற்றங்களை உருவாக்கும் பெண்கள் 12 பேரில் ஒருவராக இவரை அறிவித்தது. ஆசியாவின் சிறந்த நிலைத்திருக்கும் பெண்களில் ஒருவராகவும், BBC 100 பெண்களின் பட்டியலில் 2018ஆம் ஆண்டு உலகின் ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிகுந்த பெண்களில் ஒருவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவை தவிர தற்காலத்தில் மிகவும் உற்சாகம் தரும் பெண்களில் ஒருவராக காணப்படும் ஆஷா டி வோஸ், கடல் சார்ந்த மனித செயற்பாட்டு கொள்கை மாற்றங்களிற்காக  பணி புரிவதோடு, தனித்துவமிக்க நீலத் திமிங்கிலங்களை பாதுகாப்பது மட்டுமன்றி எதிர்கால பெருங்கடல் வீர வீராங்கனைகளை ஊக்குவிக்கவும் பாடுபடுகின்றார். இவ்வாறாக கடல்சார் கற்கைக்காக முயலும் போது ஏன்? எதற்காக? இவை அவசியமற்றது, இலங்கைக்கு பொருத்தமற்றது, என ஏராளமான வினாக்களும் விமர்சனங்களும் எழுந்த போது இலங்கை ஒரு அழகான சிறிய தீவு. இலங்கைக்கு கடல்சார் கல்வி நிச்சயமாக அவசியம் என்ற உறுதியுடன் அதனை நிறைவேற்றிக் காட்டிய சாதனைப் பெண்ணாக, கடலில் தன் கனவுகளை விதைத்து சமுத்திரப் பெண்ணாக உயர்ந்து நிற்கும் ஆஷா டி வோஸ் சாதிக்க முயலும் எத்தனையோ பெண்களிற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார்.

அத்துடன் இவர் உரையாற்றிய பல மேடைகள் மற்றும் நேர்காணல்களில் தன்னுடைய பெற்றோர் தனது கல்வி தொடர்பில் அளித்த பெருமளவு ஆதரவு மற்றும் ஊக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதாவது அவரது எதிர்கால கற்றல் துறை குறித்து பிறிதொரு சிந்தனை இருந்த போதிலும் அவருடைய முயற்சிகள் மற்றும் ஆர்வத்திற்கு மதிப்பளித்ததோடு, அவர் சுதந்திரமாக கற்கவும் நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுக்கவும் பக்க பலமாக இருந்துள்ளனரென குறிப்பிட்டுள்ளார். இவருடைய வாழ்க்கைப் பயணம் பலருக்கு முன்மாதிரியாக இருப்பது மட்டுமன்றி பெற்றோர்களும், பிள்ளைகளது சுயத்திற்கான வெளியை வழங்குதல் நன்று எனும் கருத்தையும் விதைத்திருக்கின்றனர். இவை மட்டுமல்லாமல் இலங்கை அரசாங்கம் மற்றும் கல்வித் திணைக்களங்கள் கடல்சார் கற்கைகள், கடல் பாலூட்டிகள் தொடர்பான கற்றல் கற்பித்தல் கலைத்திட்டங்களை உயர்கல்வி நிறுவன நடவடிக்கைகளிற்குள் உள்ளடக்குதல், மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதோடு இத்துறை சார்ந்த நிபுணர்கள் பலரும் இலங்கையிலிருந்து உருவாக வாய்ப்பாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php