அனைத்தையும் நாடி  நாம் முதியவர்களை சரிவர கவனிக்கத் தவறிய சமூகமா?

நாம் முதியவர்களை சரிவர கவனிக்கத் தவறிய சமூகமா?

2021 Jun 15

பொதுவாக இலங்கை வாழ் மக்கள் எப்போதும் சிரிப்பிற்கும் விருந்தோம்பலிற்கும் பெயர் போனவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. அநேகமான ஆசிய நாடுகளை சேர்ந்த மக்கள் மகிழ்வான கூட்டுக் குடும்ப வழிமுறையை அதிகம் பின்பற்றும் நபர்களாக திகழ்கின்றனர். ஆனால் அனைத்திற்கும் கட்டாயம் ஒரு மறு பக்கம் உள்ளது போல், துஷ்பிரயோகங்களும் அதே வடிவில் வலுப் பெற்று வருகின்றது என்பதையும் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய விடயமாகும். நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்கும் இவ்வேளையிலேயே அதிகமான வன்முறைகள் (Domestic Violence) பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு என்ற வகையில் நாம் எதனை நோக்கி பயணிக்கின்றோம் என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டாகும். இதில் முதியவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் இடம்பெற்று வருகின்றன என்பதை நாம் வேதனையுடன் ஒத்துக்கொள்ளவே வேண்டும்.

2001 ஆம் ஆண்டு இலங்கையின் முதியவர் சனத்தொகை 1.7 மில்லியன்கள் ஆகும். அதுவே 2021 ஆம் ஆண்டு 3.6 மில்லியன் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது நாட்டின் முழு சனத்தொகையின் 16.7% வீதமாகும். அதே வேளை 2041 ஆகும் போது, இலங்கையில் நால்வரில் ஒருவர் முதியவராக இருப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், 45% வீதமான முதியவர்கள் ஏதோ ஒரு வகையில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதில் 26% வீதமானோர் தனிமையில் வாழ்கின்றனர் எனவும் 22% வீதமானோர் நிதி ரீதியாக பெருஞ்சிரமப்படுகின்றனர் எனவும் பதிவாகியுள்ளது. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், மனிதாபிமானம் அதிகம் கொண்ட நாடு என போற்றப்படும் இந் நாட்டில் 5.6% முதியவர்கள் உடல் ரீதியான துன்புறுத்தலிற்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது வேதனை.

‘நாய் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட தாய்’ , ‘பெற்றோரை கழிவறைக்குள் உறங்கச் சொன்ன மருமகள்’, ‘7 நாள் உணவளிக்காத பிள்ளைகள்’, போன்ற தலைப்புகளை நாம் நாள்தோறும் பார்த்த வண்ணமே உள்ளோம். ‘மனிதர்கள் இவ்வாறெல்லாம் நடந்துகொள்வார்களா?’ ‘ஏன் இவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர்?’ போன்ற கேள்விகளுக்கு அறிஞர்கள் பலர் விடை தேடினாலும், கறுப்பு வெள்ளை போல நிச்சயமாக இதுவாகத்தான் இருக்கக்கூடும் என எவரினாலும் கூறமுடியாதுள்ளது. அது பலதரப்பட்ட சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் அமைவாக நடந்தேறும் சோகம். கூட்டு சமூகமாக வாழ்வதனால் எதிர்பார்ப்புகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் மக்களிடையே அதிகமாகவே காணப்படுகின்றது. விரும்பியோ விரும்பாமலோ தங்களது வீட்டிலிருக்கும் முதியவர்களை பராமரிக்கும் சூழ்நிலைக்கு எல்லோரும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஓய்வில்லாத 9 மணித்தியால வேலை, குடும்ப தகராறுகள், பொருளாதார நெருக்கடிகள், போதியளவு தனியுரிமை (Privacy) இல்லாமை, பழமைவாத மோதல்கள் போன்ற காரணிகள் நாள்தோறு வலுப்பெற்று, வயதுமுதிர்ந்தவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களாக அவை உருவெடுக்கின்றது என்பதே உண்மை. எனினும் எக் காரணங்களுக்கும் துஷ்பிரயோகங்களும் துன்புறுத்தல்களும், அவர்களுக்கெதிரான வன்முறையும் ஒரு தீர்வாக எற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை நாம் அனைவரும் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு துஷ்பிரயோகங்களுக்கு முகங்கொடுப்பவர்கள், 2005 ஆம் ஆண்டு 04ஆம் இலக்க உள்நாட்டு வன்முறைகள் சட்டத்திற்கமைய, பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்யமுடியும் என்பதுடன், பாதுகாப்பு உத்தரவினையும் நீதவானிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் அரசாங்கத்தால், 1938 என்ற சிறப்பு தொலைபேசி அழைப்பு எண் வாயிலாக அறிவிக்கும் செயன்முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல வழிகள் மூலமாக மக்களை நேர்வழிப்படுத்தும் செயன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இன்னும் நாட்டில் ஏதோ ஓர் மூலையில், எவரேனும் முதியவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகின்றார் என்பதே உண்மை.

June மாதம் 15ஆம் திகதி என்பது முதியோர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான நாளாகும். என்னை பொருத்தளவில் இப்படியானதோர் நாள் உருவெடுத்ததே மனித நேயம் அழிந்து விட்டதை எடுத்துரைப்பதோடு, ஓர் ஒன்றிணைந்த சமூகம் என்ற வகையில் நாம் அனைவரும் வயதானவர்களுக்கான வெளியை வழங்கி அவர்களை பாதுகாத்து, அன்பினால் அரவணைப்பதில் தோல்வியடைந்துவிட்டோம் என்பதையே இது விழிக்கின்றது. நான் உட்பட எம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ எமது பெற்றோர்களை ஏதோ ஒரு வழியில் காயப்படுத்தியுள்ளோமா? என சுய விசாரணை செய்துகொள்வது அவசியமாகும். குறிப்பாக அவர்களது மனநிலையை கருத்தில் கொண்டு, அவர்கள் மனம் நோகும்படி சத்தம் போட்டு உரத்து பேசாதிருத்தல், பேசும் போது மனம் துன்புறாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்ளல், கோபத்தை அவர்களது மீது திணிக்காதிருத்தல் போன்ற விடயங்களை நாம் எமது வாழ்க்கையில் எடுத்து நடப்பதன் மூலம், முதியோர்களுக்கு எதிரான மன சித்திரவதையில் இருந்த அவர்களை பாதுகாத்து கொள்ள முடியும். மனிதர்களை விட விலங்குகளுக்கு அதிகம் முன்னுரிமை கொடுக்கும் இவ் உலகில் ஏதோ ஒர் தருணத்தில் எம்மை பெற்றெடுத்த தாயையோ, அரவணைத்துக் காத்த தந்தையையோ, எமக்கு உதவிக்கரம் நீட்டிய மூதாதையர்களையோ எம் வாழ்வில் ஓர் அங்கமாக இணைக்காவிடினும், அவர்களை துன்புறுத்தாது வாழும் சமூகமாக நாம் வாழக் கற்றுக்கொள்வோமாக ! ! !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php