2021 Jun 16
இலங்கை தற்போது நீர்வாழ் அதிசயங்கள் நிறைந்த ஒரு தீவாக புகழ் பெறும் அளவிற்கு, நீருக்கடியில் மூன்று அருங்காட்சியகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மூன்று அருங்காட்சியகங்களும் இலங்கை கடற்படையின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். அவை பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நோக்கங்களின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பொருளாதாரத்தின் அடிப்படை அம்சமாக இருப்பதனால், இந்த நீருக்கடியில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை ஈர்த்து, அதனூடாக வருமானம் ஈட்டித்தரக் கூடியதொன்றாக அமைகிறது. இந்த அருங்காட்சியகங்கள் இலங்கையின் மூன்று முக்கிய கடற்பிரதேசங்களான திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. இங்கு செயற்கை திட்டுக்களை உருவாக்குவதனூடாக பவள வளர்ச்சி மற்றும் இயற்கையான மீன் இனப்பெருக்கம் முன்னெடுக்கப்படுகிறது.
காலியில் நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகமானது, கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி காலி துறைமுகத்திற்கு அருகில் திறக்கப்பட்டது. நன்கு நிறுவப்பட்ட சுற்றுலா இடமாக இருப்பதினால் பார்வையாளர்களையும் துணிகர சாகசங்களை விரும்புபவர்களையும் ஈர்ப்பது கடினமான ஓர் விடயமாக இருக்கவில்லை. இலங்கையில் நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகங்கள் கடல் சார்ந்த சுற்றுலா வளர்ச்சிக்கு சிறப்பான பங்கினை அளிக்கின்றன, இது நம்மில் பலருக்குப் பழக்கமான வழக்கமான நகர அருங்காட்சியக அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மறக்கமுடியாத அனுபவத்தினை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
காலியில் நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகம் பல நீர்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறியுள்ளதுடன், இலங்கை கடற்படையினரின் கடின உழைப்பிற்கான சிறந்த அடையாளமாகவும் திகழ்கின்றது. இதன் விளைவாகவே மற்ற இரு அருங்காட்சியங்கள் நீருக்கடியில் அமைக்கப்பட்டன. இரண்டாவது நீருக்கடியில் கட்டப்பட்ட அருங்காட்சியகமானது திருகோணமலையில் உள்ள சாண்டி பே கடற்கரையில் அமைந்துள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி கடற்படை துணை அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் திறக்கப்பட்டது. சுமார் 18 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கேலரி, தென்கிழக்கு பருவமழை காலத்தில் கடல் ஆய்வாளர்களை பார்வையிட அனுமதிக்கின்றது. மேலும் அவர்கள் வடகிழக்கு பருவமழை காலத்தில் காலி அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கு ஆண்டு முழுவதும் இந்த நீர்வாழ் தளங்களில் ஒன்றையாவது பார்வையிடுவதற்கான வாய்ப்பு உருவாகின்றது.
இந்த திட்டத்தின் விரிவாக்கமாக, இந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி மாத்தறையில் இலங்கை கடற்படையால் மற்றொரு கேலரி திறக்கப்பட்டது. நில்வெல்லா கடற்கரையில் அமைந்துள்ள ப்ளூ பீச் தீவு நீருக்கடியில் 100 மீற்றர் நீளம் மற்றும் 40 மீற்றர் அகலம் கொண்டதாக இந்த கேலரி அமைக்கப்பட்டது. இந்த தளத்தை ஸ்நோர்கெல்லிங் மூலம் அல்லது அடிப்பகுதியில் கண்ணாடியாலான டிங்கிஸ் என்ற சிறு படகில் பயணித்துக்கொண்டே பார்ப்பது, காண்போரை பிரம்மில் ஆழ்த்தும் நிகழ்வாக மாறி விடுகிறது.
இந்த கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை மிக நெருக்கமாக இருந்து ஆராய முற்படுபவர்களுக்கு, டைவிங் மிகவும் சிறந்த முறையாகும். இருப்பினும், நீங்கள் செல்லுபடியாகக் கூடிய PADI (டைவிங் பயிற்றுநர்களின் நிபுணத்துவ சங்கம்) வழங்கப்படும் நீர் லைசன்ஸை வைத்திருக்க வேண்டும் மற்றும் நீருக்கடியில் டைவிங் செல்ல முயற்சிக்கும் முன் அங்கீகரிக்கப்பட்ட டைவிங் பள்ளியால் பயிற்சி பெற வேண்டும். மூன்று அருங்காட்சியகங்களுக்குமான நுழைவு இலவசம் என்றாலும், சான்றளிக்கப்பட்ட மற்றும் தொழில்முறை டைவிங் மையங்கள் வழியாக டைவ் செய்ய, கற்றல் சார்ந்த செலவுகளை நீங்கள் ஏற்க வேண்டியிருக்கும்.
சுற்றுலா, பவளங்களின் மீளுருவாக்கம் மற்றும் மீன் இனப்பெருக்கம் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளன என்று கடற்படை வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கூறுகிறார். தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, அருங்காட்சியகங்கள் மீன் வளர்ப்பின் அடிப்படையிலான வளர்ச்சியினை கண்டுள்ளன. இனி வரும் காலங்களில் மேலதிகமான வளர்ச்சியினை இந்த அருங்காட்சியங்களில் காணக் கூடிய வகையிலான சூழல் உருவாகும்.
இந்த அருங்காட்சியகங்கள் சிறப்பான சுற்றுலா தளங்களாக இருப்பது மட்டுமல்லாது, அத்தோடு சுற்றியுள்ள ஹோட்டல்களுக்கும் ரிசார்ட்டுகளுக்கும் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளையும் அதிகரிப்பதோடு, மீன்பிடிக்கான பயனுள்ள சூழல்களாக இருப்பதால், கடலோர கிராமங்களின் பொருளாதார தரத்தை அதிகரிக்கவும் துணை புரிகிறது. மீனவர்கள் வாழும் பகுதிகளில் ஏராளமான மீன் இருப்புக்களை அதிகரிப்பதனூடாக மீன்பிடி வர்த்தகத்தை அதிகரிக்கவும் முடியும்.
இந்த முயற்சிக்கு இரண்டு பக்கங்களும் உள்ளன என்று முத்துக்கள் பாதுகாப்பாளர்களின் ஒருங்கிணைப்பாளர், The Pearl Protectors நிறுவனத்தின் முதிதா கட்டுவாவல தெரிவித்தார். இந்த நீருக்கடியில் உள்ள காட்சியகங்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு தங்குமிடம் வழங்குவவதற்கு உகந்தவையாகவும், மக்கள் சுதந்திரமாக சுற்றக்கூடிய தனித்துவமான சுற்றுலா தளங்களாகவும் விளங்குகின்றன. இந்த முயற்சிக்கு இன்னொரு பக்கமும் உண்டு. நீருக்கடியில் கடல் நீரோட்டம் மற்றும் பொருட்களை கவனமாக பயன்படுத்துதல் போன்ற காரணிகளை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த திட்டமானது அந்த பகுதிகளில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் கடல் வாழ்வியல் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது என முதிதா கட்டுவாவல மேலும் விளக்குகிறார். எந்தவொரு திட்டத்தினதும் தெளிவான ஒருமித்த நோக்கத்தினை அடைவதற்கு பொதுவாக 10 முதல் 12 ஆண்டுகள் வரை ஆகும். எது எவ்வாறிருப்பினும் இந்த திட்டத்தின் முழு நோக்கத்தையும் தோற்கடிக்காதபடி முன் செல்வதற்கு ஓர் முறையான பராமரிப்பு அவசியமாகிறது.
மூன்று நீருக்கடியில் உள்ள கேலரிகளில் சிற்பங்கள், கட்டமைப்புகள் மற்றும் பிற கலைப்பொருட்கள், முற்றிலும் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சுற்றுச்சூழலுக்கு நட்பான பொருட்களாலும், ஆட்டோமொபைல் பாகங்கள், கான்கிரீட் மற்றும் பவள வளர்ச்சியைத் தூண்டும் சில செயற்கை அடி மூலக்கூறுகள் ஆகியவற்றைக் கொண்டும் ஆக்கப்பட்டுள்ளன. இந்த நீருக்கடியில் தொடங்கப்பட்ட அருங்காட்சியகங்கள் இலங்கையின் சுற்றுலாத் துறை மற்றும் கடல் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய புள்ளியாக திகழ்கின்றது. இது சுற்றுலாவை ஒரு நிலையான மற்றும் சூழல் நட்பு முறையில் மேம்படுத்துவதற்கான ஒரு முதற்படியாகும்.