2021 Jun 13
எதிராளியின் தாக்குதல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள ஆதி மனிதனது காலம் தொட்டு பல வழிகள் காணப்படுகின்றன. முக்கியமாக 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் எனும் ஆழ் கடலில் மிதக்கும் ஒரு படகாகவே உலகம் சித்தரிக்கப்படுகிறது. கற்பனைத் திரையில் எண்ணிப்பார்க்க முடியாத விடயங்களே அதிகமாக நிகழ்காலத்தில் நடந்தேறி கொண்டிருக்கிறது. அதில் ஒன்றாக, தன்னை அழிக்க வரும் ஏவுகணைகளையும் எதிரிகளையும் எந்தவித பதற்றமும் இன்றி இருந்த இடத்தில் இருந்து முறியடிக்கும் வல்லமையே இஸ்ரேலியர்களின் இந்த “அயர்ன்-டோம்” கொண்டுள்ளது.
2006ஆம் ஆண்டு தெற்கு லெபனானில் செயற்படும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலிற்கும் இடையேயான மோதல் வலு பெற்றது. இந்த மோதலின் போது ஹெஸ்புல்லா அமைப்பானது ஆயிரக்கணக்கான ரொக்கெட் ஏவுகணைகள் மூலமாக சராமரியாக தாக்கியது. இந்த தாக்குதலின் போது 165 இஸ்ரேலியர்கள் இறந்தது மட்டுமல்லாமல், பாரிய பொருட் சேதமும் ஏற்பட்டது. அந்த தருணத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாத்துக் கொள்ள நிச்சயமாக அதி நவீன பாதுகாப்பு அரண் ஒன்று அமைக்க வேண்டும் என அந் நாட்டு உயர் அதிகாரிகளினால் முடிவெடுக்கப்பட்டது.
அந்த வகையில் அமெரிக்காவிடமிருந்து 200 மில்லியன் டொலர்களை நிதியுதவியாகப் பெற்று, இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை நிறுவனங்களால் இணைந்து உருவாக்கப்பட்டதே இந்த பாதகாப்பு அரண் ஆகும். அதேவேளையில் இது 2011ல் இருந்து பல்வேறு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.
ஆம், சில வாரங்களுக்கு முன்னர் பலஸ்தீன நாட்டினை போர் மேகம் இதுவரை இல்லாத அளவிற்கு சூழ்ந்திருந்து. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன நாடுகளுக்கிடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்தே சென்றது. இந்த மோதலிற்கு நடுவே இஸ்ரேலியர்களின் போர் தொழில்நுட்பம் உலக மக்களது கவனத்தை ஈர்த்தது. ஆம், அதுவே இஸ்ரேலின் “அயர்ன்-டோம்” ஆகும்.
இந்த மோதலின் போது பலஸ்தீனத்தால் பல ஆயிர கணக்கான ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. எனினும் அந்த ஏவுகணைகளது தாக்கம் மிகக்குறைவாக காணப்பட்டது. காஸாவிலிருந்து ஏவப்படும் இந்த ஏவுகணைகளை துல்லியமாக கணித்து வானிலேயே அவை முறியடிக்கப்பட்டது. இத்தகைய போர் யுக்தி மற்றும் தொழில்நுட்பமானது உலக நாடுகளுக்கு மிகவும் வியப்பாக அமைந்தது.
இஸ்ரேலை குறி வைத்து தாக்க வரும் ஏவுகணைகளை கண்டுபிடிப்பதற்காக அதி நவீன ELM-2084 multi-mission radar பொருத்தப்பட்டுள்ளது. தாக்க வரும் ரொக்கேட்டுகளை ரேடார் மூலம் கண்டறிந்ததும், அதனை இடை மறிக்க இரண்டு ஏவுகணைகள் 2716 kmph (mach 2.2) வேகத்தில் ஏவப்படுகிறது. அதேவேளையில் தாக்கவரும் ஏவுகணைகளில், எது மக்கள் வாழும் பகுதியை நோக்கி ஏவப்படுகிறது என்பதை ரேடார் மூலம் கண்டறியலாம். ஆகவே அத்தகைய முறை மூலம் இடைமறிக்க அனுப்பும் ஏவுகணைகளின் அளவை கட்டுப்படுத்தலாம். மேலும், எந்த கால நிலையிலும் இந்த அயர்ன் டோம் சிறப்பாக செயல்படும் வல்லமையோடு அமைக்கப்பட்டிருக்கிறது.
எனினும் பலஸ்தீனின் 90% தாக்குதலை முறியடித்ததன் காரணமாக பலம் பொருந்திய வல்லரசு நாடுகளின் தாக்குதல்களை இந்த அயர்ன் டோம் எதிர் கொள்ளுமா? என்ற சந்தேகம் ஆயுத ஆராய்ச்சியாளர்களின் கேள்வியாக நிலவி வருகிறது. அதேவேளையில் மே மாதம் நடைபெற்ற தாக்குதலில் 256 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 66 சிறுவர்களும் அடங்குகின்றனர்.