அனைத்தையும் நாடி  இலங்கையில் இணைய வழி பகிடிவதை மற்றும் துஷ்பிரயோகங்கள் (Cyber Bullying)

இலங்கையில் இணைய வழி பகிடிவதை மற்றும் துஷ்பிரயோகங்கள் (Cyber Bullying)

2021 Jun 20

21ஆம் நூற்றாண்டு, இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மறு உருவம் என சித்தரிக்கப்படுகின்றது. அதே போன்று இணைய வழி பாவனையும் நாம் சுவாசிக்கும் ஒட்சிஸனுக்கு அடுத்த படியாக முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. சோற்றுக்கு அலைந்த காலம் போய் GB க்கு அலையும் தசாப்தம் ஒன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ் டிஜிடல் உலகில் போதியளவு வரையறைகள் இல்லாமையினால் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் வரையறை அற்றதாகவே காணப்படுகின்றது. வங்கிகளில் கோடிக் கணக்கான பண மோசடி முதல் தனி நபர் தற்கொலை வரை, இவ் இலத்திரனியல் மயமாக்கல் தாக்கம் செலுத்தியுள்ளது. அதிலும் அதிகமாக இலங்கை வாழ் இளைஞர்கள் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படும் இடமாக இவ் இணைய வழி பகிடிவதை / துஷ்பிரயோகங்கள் (Cyber Bullying) திகழ்கின்றது.

அமெரிக்காவின் தேசிய குற்றத்தடுப்பு சபை இவ் இணைய வழி பகிடிவதையை (Cyber Bullying) ‘ஒரு நபரை கேலி / காயப்படுத்தும் நோக்கில் இணைய வழி, தொலைபேசி அல்லது ஏனைய தகவல் தொடர்பாடல் கருவிகள் ஊடாக எழுத்து அல்லது புகைப்படம் மூலம் அனுப்பப்படும் / பகிரப்படும் செயன்முறை’ என வரைவிலக்கணப்படுத்தியுள்ளது. இத் துஷ்பிரயோகங்கள் இணையம் என்ற போர்வைக்குள் ஒழிந்து இருந்தாலும், இதுவொரு மிகப்பெரிய தவறான பகிடிவதை கலாசாரமாகவே சித்தரிக்கப்படுகின்றது.

இவ் இணைய வழி பகிடிவதையானது,
– பல ஊடங்கள் மூலம் நிகழ்கின்றது. (குறுந்தகவல் அல்லது சமூக வலைதளங்கள் வாயிலாக)
– தனியாக / பகிரங்கமாக பகிரப்படுகின்றது.
– தனி நபர் அல்லது ஒரு குழுவை நேரடியாக தாக்குகின்றன.
– செய்வது யாரென்று அறியாது நிகழ்கின்றது.
– இணைய வழி நோட்டமிடல் (Cyber Stalking) மற்றும் இணைய வழி வன்முறையாகவும் (Cyber Violence) அரங்கேறுகின்றது.

மேலும் இதற்கு உதாரணங்களாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்திகள், இணைய வழி மூலமான மிரட்டல்கள், மற்றொருவர் போன்று பொய்யான கணக்குகளை திறந்து ஆள்மாறாட்டம் செய்வதோடு, மற்றையவர் போல் செய்தி / கருத்து பரிமாற்றம் செய்தல் என, அடுக்கடுக்காக நீள்கிறது.

இலங்கையின் கண்ணோட்டத்தில்..

இலங்கையின் இணைய வழி பாதுகாப்பு தொடர்பான தேசிய மத்திய நிலையம் (Srilanka CERT) கூறுகையில், 14% இளைஞர்கள் இணைய வழியாக நிகழும் அடையாள திருட்டுக்கு (Identity Theft) முகம் கொடுத்ததுடன், 11% நபர்களின் கணக்குகள் ஊடுருவல் (Hack) செய்யப்பட்டுள்ளதோடு, 9% நபர்களின் புகைப்படங்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் 71% நபர்கள், தங்களுக்கு நிகழ்ந்த துஷ்பிரயோகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதாகும்.

இவ்வகையான காரணங்களினால் இலங்கையின் இளைஞர் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நாம் எல்லோரும் தள்ளப்படுகிறோம். நாளுக்கு நாள் பாடசாலை உடை அணிந்த பல சிறுமிகளின் புகைபடங்களை எம்மால் கண்டுகொள்ளக்கூடியதாய் உள்ளது. இவை அனைத்தும் அவர்களது விருப்பப்படி நடக்கின்றதா என வினவினால், அதற்கு எவரினாலும் ‘ஆம்’ என்று கூறமுடியாது. பள்ளிப்பருவ காலத்தில், தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில நிகழ்வுகளே இறுதியில் துஷ்பிரயோகங்களாகவும், பாலியல் இலஞ்சம் கேட்கும் சூழ்நிலைக்கு பலரை எடுத்துச் சென்றுள்ளதோடு, நாளையும் பலரை எடுத்துச் செல்லக்கூடும்.

இச் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை பெரிதும் பாதிப்படைவதோடு, மன அழுத்தத்திற்கும் உள்வாங்கப்படுகின்றனர். இது தொடர்பில் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உளவியல் திணைக்களத்தின் தலைவரான சமுத்ரா கத்திரியாராச்சி கருத்து வெளியிடுகையில், இவ்வகையான சந்தர்பங்களில் தான் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டேன், சுய மரியாத போய் விட்டது என கருதல், தனிமையை நாடுதல் போன்ற செயற்பாடுகள் பொதுவாக காணக்கூடியதாக உள்ளது. எனினும் இதன் உச்சக்கட்ட விளைவாக தற்கொலை முயற்சிகள் பல நிகழ்வதையும் எம்மால் அறிந்த கொள்ள முடியுமாய் உள்ளது.

இலங்கையின் சட்டக் கட்டமைப்பில் இதற்கு என்றதொரு தனி சட்டம் இல்லாவிடினும், தண்டனை பத்திரத்தின் சில விதிகளுக்கு அமைய குற்றவாளிக்கு எதிராக நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் இப் பொறிமுறை சிக்கல் கொண்டதாகவும், பல நாள் கொண்ட பயணமாகவும் இது அமையப் பெறுகின்றமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன சோர்வை இது ஏற்படுத்துகின்றது. எனினும் இதனை எதிர்த்து முறைப்பாடு செய்வதற்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல நிறுவப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிராக முறைப்பாடு செய்யும் வழிமுறை கண்டறியப்பட்டுள்ளது.

இணைய வழி பகிடிவதைக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள்

ஆதாரங்களை திரட்டுதல்  இச் சம்பவத்திற்கு தொடர்பான அனைத்து விபரங்களையும் பட்டியல் படுத்துவதோடு, Screen shot போன்ற சம்பந்தப்பட்ட ஆதாரங்களை திரட்டுதல்.

முறைப்பாடு செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்தல்.

இவ் நடத்தைக்கு எதிராக முறைப்பாடு செய்யக்கூடிய நிறுவனங்கள் இதோ,

இலங்கை பொலிஸ்
அனைத்து விதமான மக்களும், தங்களுக்கு எதிராக இவ்வகையானதொரு சம்பவம் அரங்கேறி இருப்பின், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும். மேலும் இணைய வழி மூலம் நிகழும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு சிறுவர் மற்றும் பெண் தொடர்பான விசாரணைகள் செய்யும் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யலாம்.

இலங்கை CERT
இலங்கையின் இலத்திரனியல் பாதுகாப்பின் மையமாக CERT என்ற நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. வெறுப்பை மையமாக வைத்து எழுதப்பட்ட மின்னஞ்சல்கள், அடையாளத்திருட்டு போன்ற விடயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதோடு ஏனனய சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடு செய்ய முடியும். ஏதேனும் முறைப்பாடு இருப்பின்,
– cert.gov.lk என்ற இணையதளத்தில் இருக்கும் படிவத்தை நிரப்புவதன் மூலம்
– தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்வதாயின் 11 269 1692 / 11 269 5729 / 11 267 9 888 என்ற இலக்கத்தை உபயோகிக்கவும்.
– தொலை நகல் மூலமான தொடர்புகளுக்கு +94 11 269 1064
– மின்னஞ்சல் மூலமான முறைப்பாடுகளுக்கு report@cert.gov.lk என்ற முகவரியை உபயோகித்துக்கொள்ள முடியும்.

CID யின் இணைய வழி குற்றப் பிரிவு
குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் இயங்கும் இப் பிரிவில், இணைய வழி வாயிலாக நிகழும் அனைத்து குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யலாம். தொடர்புகொள்வதாயின், telligp.police.lk என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்புகொள்ளவும்.

Women In Need (WIN)
இந் நிறுவனமானது The Grassrooted Trust மற்றும் Voice Foundation எனும் நிறுவனங்களின் உதவியினூடாக பாலினம் தொடர்பில் இணைய வழி வாயிலாக நிகழும் துஷ்பிரயோகங்களை இங்கு முறைப்பாடு செய்யலாம்.
– தொடர்புகளுக்கு : 011 267 1411 / 011 471 8585
– மின்னஞ்சல் : connect@winsl.net
– 24 மணி நேர தொலைபேசி எண் : 077 567 65 55

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
18 வயதுக்கு குறைவான ஒரு நபர் இணைய வழி பகிடிவதைக்கு முகம் கொடுப்பவராயின், நீங்கள் இங்கு முறைப்பாடு செய்ய முடியும்.
– முற்றிலும் இலவசமான 24/7 மணி நேர தொலைபேசி எண் மூலம் முறைப்பாடு செய்ய முடியும். இது தொடர்பான தகவல்கள் முற்றிலும் இரகசியமாக பேணப்படுவதுடன் மேலதிக தகவல்களுக்கு childprotection.gov.lk என்ற இணையதளத்தை பார்வை இடவும்.
– பெற்றோர் மற்றும் சிறுவர்களுக்கு இது தொடர்பில் மேலதிக விளக்கம் தேவைப்படின் http://www.childprotection.gov.lk/?page_id=2211 இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Bakamoono (பகமூனோ)

இணைய வழி பகிடிவதை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் bakamoono.lk என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இணைய வழி பகிடிவதைக்கு எதிராக எம்மை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள்

– ஒருவரை காயப்படுத்தும் முகமாகவோ கேளிக்கையின் நிமித்தமோ குறுந்ததகவல் அல்லது ஏதெனும் செய்தி பகிரப்படின், அதனை மீண்டும் பகிராமல் அனுப்பிய நபரிற்கு போதுமான விழிப்பூட்டலை வழங்குவதுடன், அனுப்பப்பட்ட ஊடகம் வாயிலாக முறைப்பாடு செய்தல் வேண்டும்.

– இணைய வழி பகிடிவதை சார்ந்த கருமங்களில் எத் தொடர்பினையும் வைத்துக்கொள்ளாமல், ஆதாரங்கள் ஏதெனும் தேவைப்படின் அதனை களஞ்சியப்படுத்துவதோடு, முடியுமானவரை அவர்களை விட்டு தள்ளி செல்லுதல் அவசியமாகும்.

– கல்வியில் முன்னர் போன்று ஈடுபாடு காண்பிக்காமல் இருத்தல். உணவு மற்றும் உடல் பாவனையில் மாற்றங்கள், போதியளவு தூக்கம் இல்லாமை போன்ற காரணிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படின் எதெனும் பகிடிவதைக்கு முகம் கொடுத்திருக்கக்கூடும் என்ற கேள்விக்குறிக்கு உள்வாங்கப்படுகிறார். ஆகவே எம்மை சார்ந்த நபர்களின் எதெனும் திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா என கவனம் செலுத்துதல் வேண்டும்.

– தனிப்பட்ட விபரங்களை முடியுமானவரை பகிர்வதைத் தடுத்தல்.

– உங்களை காயப்படுத்தும் முகமாகவோ கேளிக்கை செய்வது போன்ற கருத்துகள் பரிமாறப்படின், அவற்றிற்கு பதிலளிக்காது, ஒழுக்கமான கலந்துரையாடல் ஒன்றுக்கு நிர்ப்பந்தித்தல்.

– ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்பு அது தொடர்பில் ஒரு தடவைக்கு இரு தடவை சிந்தித்தல் அவசியமாகும்.

– Privacy Settings தொடர்பில் போதியளவு விழிப்புணர்வை கொண்டு வருதல்.

– பொது இடங்களிலோ அல்லது வேறொரு நபரிடத்தோ இணையம் பாவிப்பதாயின், வேலை முடிந்த பின் முறையாக Log Out செய்யப்பட்டதா என கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

– பெற்றோராக, ஆசிரியராக, வயது கூடியவராக தங்களது இளம் சமூகத்திற்கு இது தொடர்பான விழிப்பூட்டல்கள் வழங்குவதுடன், பொறுப்பு மிகுந்த ஒரு குடிமகனாக வாழக் கற்றுக்கொடுத்தல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here