அனைத்தையும் நாடி  இலங்கை பெண்கள் முடிவெட்டும்போது நிகழும் அலப்பறைகள்

இலங்கை பெண்கள் முடிவெட்டும்போது நிகழும் அலப்பறைகள்

2021 Jun 29

எந்தப் பெண்ணிடம் சென்று தலைமுடி வெட்டுதல் பற்றி வினவினாலும், அவள் சொல்லும் ஒரே பதில் “அது ஒன்றும் அவ்வளவு எளிதான விடயமல்ல. அது ஒரு நீண்ட மற்றும் உணர்ச்சி பூர்வமான அனுபவம்.” என்று கூறுவதை உங்களால் அவதானிக்க முடியும். தலைமுடி என்பது எப்போதும் எங்களுடன் இருக்கின்ற பல தரப்பட்ட ரீதியில் எங்களால் பராமரிக்கப்பட்டு வரும் ஒன்றாகும். அதனை வெட்டும் போது ஒவ்வொரு பெண்ணும் பல்வேறு பட்ட கட்டங்களை கடந்து செல்கின்றனர். அவ்வாறாக தலை முடி வெட்டுதலின் போது பெண்கள் பொதுவாக கடந்து செல்கின்ற கட்டங்கள் என்னென்ன என்று பார்ப்போமா?

திடீர் யோசனை

ஒரு பெண் தன்னுடைய தலை முடியை வெட்ட வேண்டும் என, வழமையான நாட்களில் திடீரென எப்போதாவது தீர்மானிக்கின்றாள். அதற்கு பின் அவளது சுய நினைவிற்கு எட்டியோ எட்டாமலோ பல தரப்பட்ட காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. அவற்றுள் எதாவது ஓர் பிரபலத்தின் புதிய சிகையலங்காரத்தினால் ஈர்க்கப்படல், கசப்பான அனுபவங்களை ருசித்து வரும் வாழ்க்கை பாதையில் ஏதேனும் புதிய மாற்றத்தினை ஏற்படுத்த விரும்புதல், “நீளமான தலைமுடியே பெண்களுக்கு அழகு சேர்ப்பது” என கூறி வரும் பெற்றோர்களின் பாரம்பரிய கருத்துக்கு எதிராக செயற்பட எண்ணுதல் போன்றவை அடங்கும். எது எவ்வாறாக இருப்பினும் பெண்களுக்கு அப்போது தேவைப்படுவது எல்லாம் ஒரு ஹேர்கட் தான்.

தீவிர ஆராய்ச்சி

பெண்கள் தங்களது புதிய சிகையலங்காரத்தினை தெரிவு செய்யும் போது ஓர் துப்பறிவாளரைப் போல் செயற்பட தொடங்குகின்றனர். அதிகமான நேரத்தினை இணையத்தில் செலவிட்டு ஆராயத் தொடங்குகின்றனர். சிகையலங்காரத்தின் வகைகளை தேடி திரட்டி அதில் தனக்கென ஓரிரண்டு வகைகளை குறித்து வைத்துக் கொள்கின்றனர். என்ன தான் இருந்தாலும் இறுதியில் தனக்கு தேவையானதை தான் தெரிவு செய்யப் போகிறோம் என்பதனை அறிந்தும், நண்பர்களிடமும் ஆலோசனை கேட்க ஆரம்பிக்கின்றனர். இறுதியில் நண்பர்களின் கருத்துக்களினால் குழம்பத்துக்குள்ளாகி விடுகின்றனர். இதை கேட்கும் போது வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் இது தான் உண்மை.

முடிவெடுத்தல்


இவ்வாறாக பல தரப்பட்ட ஆராய்ச்சி மற்றும் நண்பர்களின் கருத்துக்களினால் குழப்பத்தின் உச்சகட்டத்திற்கு சென்று விடுகிறார்கள். பெண்கள் ஹேர்கட் செய்வதற்கு முன்னர் சலூனில் முன்பதிவு செய்வது வழக்கம். இவ்வாறாக குழப்பத்திலிருக்கும் போது, அந்த முன்பதிவு காலமும் நெருங்கிக் கொண்டு வர வேறு வழியின்றி தான் நடத்திய ஆராய்ச்சி மற்றும் பிறரின் கருத்துக்கள் என அனைத்தையும் கொண்டு ஓர் மதிப்பாய்வு செய்து, ஒரு வழியாக ஓர் சிகையலங்காரத்தை தெரிவு செய்கிறாள். தன்னை தானே அந்த சிகையலங்காரத்திற்கு தயார் செய்து கொண்டு மிகவும் தன்நம்பிக்கையோடு இறுதி முடிவினை எடுக்கிறாள். முடிந்ததாக நினைக்கும் போது தான் ஓர் விடயம் ஆரம்பிக்கிறது. தனது முடிவை பற்றி தன் தாயிடம் விளக்கும் போது அவரிடமிருந்து எழும் கேள்விகள் அவளை மீண்டும் ஓர் குழப்ப நிலைக்கு தள்ளி விடுகிறது.

சுயத்தின் மீதான சந்தேகம்

இறுதியாக ஓர் வழியாக முன்பதிவு செய்து கொண்ட நாளில் காலடி எடுத்து வைக்கின்றனர். அந்நாளில் சலூனுக்கு செல்லும் போது சிகையலங்கார நிபுணர் பெண்களிடம் என்ன மாதிரியான ஹேர்கட் வேண்டும் என கேட்டு பல தரப்பட்ட சிகையலங்காரம் பற்றி விளக்க ஆரம்பிக்கின்றனர். எங்கள் பெண்களும் சிகையலங்கார நிபுணர் கூறுவதை எல்லாம் காது கொடுத்து கவனித்து கேட்பதுப் போல் பாவனை செய்து விட்டு இறுதியில் இணையத்தில் தாம் அலசி எடுத்த ஸ்க்ரீன் ஷொட்களை சிகையலங்கார நிபுணரிடம் காட்டுகின்றனர். ஒரு வழியாக ஓர் தீர்மானத்திற்கு வந்த பின்னும் கூட “இந்த ஹேர்கட் எனக்கு அழகாக இருக்குமா?”, “ஒரு வேளை ஓழுங்காக கட் செய்யாமல் தவறாக கட் செய்து விடுவாரோ?”, “மீண்டும் இதே நீளத்திற்கு முடி வளராவிட்டால்?” என பல சந்தேகங்களை தங்கள் சுயத்துள் வளர்த்து பதற்றமடைய தொடங்குகின்றனர்.

ஆரம்ப அதிர்ச்சி

‘ஸ்னிப்’ சிகையலங்கார நிபுணர் முதல் வெட்டினை வெட்டும் போது அதில் துண்டாகி தரையில் விழும் முடியினை திகிலான ஓர் பார்வையுடன் பார்க்கின்றனர். அதனை வைத்து தான் தவறான முடிவு எடுத்து விட்டதாக எண்ணி வருத்தமடைவதுமுண்டு. இப்போது எல்லாம் கை மீறி போய் விட்டது, இந்த முடிவிலிருந்து திரும்ப வாய்ப்பே இல்லை என்பதை அறிந்து தன் இரு கண்களையும் மூடிய படி தனது சிகையலங்காரம் அழகாக வர வேண்டும் என எல்லா கடவுளையும் பிராத்திக்க ஆரம்பிக்கின்றனர்.

அதை நேசிப்பது போல் நடிப்பது


ஹேர்கட் முடிந்ததும், பெண்கள் புதிதாக மாற்றப்பட்ட சிகையலங்காரத்தினை அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். சிகையலங்கார நிபுணர் புன்னகைத்த படி தலையின் பின்புறத்தை ஓர் கண்ணாடியில் காட்டிக் கொண்டே பெண்களின் விருப்பத்தை கேட்பார். பெண்களும் தனக்கு பிடிக்கவில்லை என்றாலும், அதை மறைத்து தனக்கு மிகவும் பிடித்தது போல் பாவனை செய்து, போலியாக புன்னகைப்பர். அதன் பின் வீட்டிற்கு சென்று தனது பழைய சிகையலங்காரத்தினை நினைத்துப்பார்த்து கண்ணாடி முன் நின்று அழுந்து புலம்புவர்.

ஆவேசம்


அதற்குப் பின் அவர்கள் வீட்டின் கண்ணாடி முன் அநியாயமாக நேரத்தினை செலவிட தொடங்குகின்றனர். தங்களது புதிய சிகையலங்காரத்தினை பல கோணங்களில் மாற்றி செல்பி எடுத்து தனது நண்பர்களுக்கும் அனுப்ப தொடங்குகின்றனர். மீண்டும் மீண்டும் வேறு வேறு ஸ்டைல்களில் முடியினை அலங்கரித்து பார்ப்பதினால் புதிய ஹேர்கட் பற்றிய நல்ல மனநிலைக்கு வருவதற்கு மாறாக, மோசமான மனநிலைக்கு தள்ளப்பட்டு அடுத்த சில மாதங்களை தொப்பிக்குள் கழிக்க தீர்மானிக்கின்றனர்.

கருத்துக்கள்


பெண்கள் எதிர்ப்பார்ப்பதை விட அதிகமான கருத்துக்கள் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வந்து சேர்கிறது. நண்பர்கள் அவர்களுக்கு தன்நம்பிக்கை ஊட்டும் வகையிலான கருத்துக்களை கூறுவர். அதாவது அவர்களது புதிய சிகையலங்காரம் அழகாக இருக்கிறது என்றும் அது தனக்கும் பிடித்திருக்கிறது என்றும் கூறுவர். ஆனால் ஆரம்பத்தில் பெண்கள் தனது புதிய சிகையலங்காரத்தின் போது கடந்து வந்த அதிர்ச்சி, ஆவேசம் மற்றும் குழப்பம் ஆகியவற்றை அளவுக்கதிகமாக சந்திப்பவர்களாக குடும்பத்தில் உள்ள சில அத்தைகள் பாவனை செய்கின்றனர். அவர்கள் தனக்கு “உன்னுடைய பழைய நீளமான கூந்தல் தான் பிடிக்கும்” என கூறி, அதன் பின் ஏதோ சமாதானம் செய்வதுப் போல் “பரவாயில்லை.. இதுவும் ஏதோ நன்றாக தான் உள்ளது” என கூறி முடித்து விடாது, போனஸ் வசனமாக “இந்த காலத்து பெண்களை பாருங்களேன்” என கூறி முடிக்கின்றனர்.

அதை நேசிக்க ஆரம்பித்தல்


சரியாக ஒரு வாரம் கழித்து வெட்டப்பட்ட முடி லேசாக வளரத் தொடங்கும்போது அந்த சிகையலங்காரம் அழகாக தெரிவது போல் உணர ஆரம்பிக்கிறார்கள் பெண்கள். இத்தனை நாட்கள் வீணே கவலையுற்றதன் காரணத்தினை எண்ணி புன்னகைக்க தொடங்குகின்றனர். கண்ணாடி முன் நின்று தன்னை தானே ரசிக்கின்றனர். தனது புதிய சிகையலங்காரத்துடன் தோன்றும் சுயத்தினை மேலும் நேசிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php