2021 Jul 1
நீங்கள் கொழும்பில் வசிக்கும் நபரெனின் கண்டிப்பாக உங்கள் வாழ்நாளில் அதிக தடவைகள் முச்சக்கர வண்டியில் (Tuk Tuk) பயணித்திருப்பீர்கள். இது வரை நீங்கள் பயணித்த ஒவ்வொரு முச்சக்கர வண்டி ஓட்டுநரும் ஒவ்வொரு மாதிரியானவர்களாக இருந்திருப்பார்கள். இவ்வாறாக கவனமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் வகைகளை ஐந்தாக பிரித்து பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் கொழும்பில் வசிப்பவர்களாக இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் கொழும்பிற்கு வருகை தரும் போது கீழுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஓட்டுநர்களில் எவரேனும் ஒருவரையாவது கண்டிப்பாக சந்திப்பீர்கள்.
- குழப்பத்தில் இருப்பவர்
குறிப்பிட்டுள்ள வசனத்திற்கு ஏற்றது போலவே இந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் குழப்பத்துடனேயே இருப்பார். இன்னும் சொல்லப் போனால் அவர் எங்கு உள்ளார் என்பது பற்றிய தெளிவு கூட அவருக்கு சிலவேளைகளில் இருக்காது. இந்த வகையினை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநரை Pick Me அல்லது Uber போன்ற செயலிகளின் மூலம் நீங்கள் அழைக்க நேரிடும் போது, அவர் அளவுக்கதிகமான தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, “நீங்கள் எங்கு உள்ளீரகள்?” என விசாரிப்பார். இன்னும் மோசமான நிலை என்னவெனில் நீங்கள் ஆப் இல் குறிப்பிட்டுள்ள லொகேஷன் சரியாக இருந்த போதும் கூட அவர் உங்கள் இடத்தினை கண்டறிய சிரமப்படுவார். நீங்களும் அவர் வருவார் வருவார் என தொலைபேசியில் உங்கள் லொகேஷனை தவிர மற்றைய இடமெல்லாம் சுற்றி வரும் அனிமேட் செய்யப்பட்ட அவரது நகர்வுகளை பார்த்த படி காத்திருப்பீர்கள். அப்படியே பல மணி நேரம் சென்ற பிறகு ஒரு வழியாக அவர் உங்கள் இடத்தினை வந்தடைவார். இப்போது எல்லாம் சரியாகி விட்டது என நினைக்கும் உங்களுக்காகவே அவர் இன்னொரு ஆச்சரியத்தை வைத்திருப்பார். அந்த ஆச்சரியம், செல்லும் பாதையின் ஒவ்வொரு திருப்பு முனையிலும் வெளிவரும் அந்த ஆச்சரியம் வேறொன்றுமில்லை! “வலது பக்கமா?” “இடது பக்கமா?” என்ற கேள்விகள் தான். அந்த மாதிரியான முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுடன் பயணிக்கும் அனுபவம் உங்களை சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்காவிடினும், பின்பு நினைத்து சிரிக்கும் அளவிலான ஓர் அனுபவத்தை கண்டிப்பாக பெற்று தரும்.
2. குறுக்கு வழிகள் தெரிந்தவர்
இந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தங்களது ஆழ்மனதிலிருந்து டிராபிக்கினை வெறுப்பவர்கள். உங்களுக்கு புரியும் படி தெளிவாக விளக்குகிறேன். இந்த வகையை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகளுடனான பயணம் எவ்வாறு ஆரம்பமாகுமெனில் முதலில் நீங்கள் கூறும் வழிகளினை நன்கு கேட்டு அவ்வழியிலேயே வண்டியினை செலுத்துவார். ஆனால் இடையில் டிராபிக்கில் மாட்டிக் கொள்ள நேர்ந்தவுடன் பொறுமை இழந்தவராக, தனக்கு தெரிந்த ஓர் குறுக்கு வழியினை கூறி அதன் வழி செல்ல உங்களை சம்மதிக்க வைக்க முயற்சிப்பார். நீங்கள் உங்கள் வழமையான சாலையில் செல்ல வேண்டும் என்ற உறுதி உள்ளவராக இருந்தால் வேண்டாம் என மறுப்பீர்கள். ஒரு வேளை உங்களுக்கு அந்தப் பாதை புதியது அல்லது உங்களுக்கு சாலை பற்றிய சரியான விளக்கமில்லையெனில் ‘சரி’ என ஒப்புக் கொள்வீர்கள். இதில் ஓர் சிக்கலும் உண்டு. சிலவேளைகளில் துரதிஷ்டவசமாக அந்த குறுக்குப் பாதை வழி பாதியில் முடிவடைந்து, நீங்கள் மாட்டிக் கொள்ளக் கூடும். அதனால் உங்கள் பயணக் கட்டணம் இரட்டிப்பாக நேரிடும். அதிர்ஷ்டவசமாக நீங்கள் குறுக்கு வழியில் நன்கு தேர்ச்சி பெற்ற ஓர் முச்சக்கர வண்டி ஓட்டுநருடன் பயணிக்க நேர்ந்தால் உங்கள் பயணம் சிறப்பானதாகவும் அமைய வாய்ப்புகளுண்டு!
3. அதிவேகமாக செல்பவர்
இந்த வகையை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு அவர் கொழும்பு சாலைகளில் இருக்கிறார், மில்லியன் கணக்கான மக்கள் உற்சாகப்படுத்தும், ஆரவாரப்படுத்தும் ஒரு பந்தயத்தில் அல்ல என்பது தெரியாது! இவர்களது முச்சக்கர வண்டிக்குள் ஏறிய நேரம் தொட்டு நீங்கள் உங்கள் இறுதிச் சடங்கு பற்றிய கற்பனைக்குள் ஆழந்து விடுவீர்கள். ஏனெனில் உங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு உலகிலுள்ள கடவுளை எல்லாம் பிரார்த்திக்கும் அளவிலான உயிர் பயத்தின் உச்சத்தில் இருப்பீர்கள். உங்களது வாழ்வில் மரண பயம் என்றால் என்ன என்பதை இந்த வகையை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் ரொம்பவும் சிம்பிளாகவே காட்டிவிடுவார்கள். சாலையில் வாகனங்கள் ஒன்றையொன்று ஒட்டி நெரிசலாக காணப்படினும், இவர்கள் வளைத்து வளைத்து வண்டியை ஓட்டுவார்கள். இந்த பயணத்தில் உச்சக்கட்ட பயத்தினை தருவது அவர்களது சட்டென்ற திருப்புதல்களும், வண்டியை சரித்து வேகமாக ஓட்டுவதும் தான். இன்னும் சொல்லப் போனால் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம், குறிப்பாக குடும்பத்தினரிடம் அவர்களை நீங்கள் எந்தளவு நேசிக்கிறீர்கள் என்பதனை கூறியுள்ளீர்களா? என கூட சிந்தித்து பார்ப்பீர்கள்.. ஏனென்றால் இனி அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்ற முடிவிற்கு வருமளவிற்கு அவர் உங்களை தள்ளி விடுவார். இந்த பயணத்தில் நீங்கள் உயிர் தப்பி கடந்து விட்டீர்களாயின் நீங்கள் எதிர்ப்பார்த்ததை விட முன்னரே நீங்கள் சேர வேண்டிய இடத்தினை சேர்வீர்கள். எங்கேயாவது அவசரமாக பயணிக்க வேண்டுமெனில் இந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் கண்டிப்பாக பக்கபலமாக இருப்பார்.
4. மீட்டரின்றி ஓட்டுபவர்
தூரத்திலிருந்து பார்க்கும் போது மற்றைய மீட்டர் டெக்ஸிகள் போலவே இதில் மீட்டர் டெக்ஸி என்ற எழுத்து அல்லது போர்ட் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் வண்டிக்குள் நுழையும் போது பழுதான மீட்டர் அல்லது பயணத்தின் பாதி வழியில் தானாக மீட்டர் செயலிழந்திருக்கும். நீங்கள் வண்டியை விட்டு இறங்கும் போது அவரிடம் மீட்டரின் நிலை பற்றி வினவும் போது அவர் அதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போவார். அதன் பின் அதிகமான பணத்தினை வாடகையாக கேட்பார். நீங்கள் அவசரமாக செல்ல வேண்டியிருக்கும் போது அவர் கேட்கும் பணத்தை வாதிடாமல் கொடுத்து விடுவீர்கள். அவ்வாறு இல்லையெனில் வாதிட்டு கட்டணத்தை மாற்ற வாய்ப்புண்டு. எது எவ்வாறாக இருப்பினும் நீங்கள் பயணிக்கும் முன்னும் பயணித்தின் போதும் மீட்டர் மீது ஓர் கண்ணை வைத்துக் கொள்வது நல்லது.
5. கண்ணியமான ஓட்டுநர் மற்றும் சரியான நேரத்திற்கு வருபவர்
நாம் எப்போதாவது ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநரை புகழ்ந்து பேசியிருப்போம். எப்போதும் மறக்க முடியாத படியான கண்ணியத்துடனும் நேரத்தியிடனும் செயற்பட்டு அவர் எம் மனதில் இடம் பிடித்திருப்பார். இந்த வகையை சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், பணிவுடன் உரையாடல்களை மேற்கொள்வார்கள். சரியான வேகத்தில் மென்மையாக வண்டியை செலுத்துவார்கள். வழியை மாற்றி செல்லும் முன் எம்மிடம் அனுமதி கேட்பார்கள். செயலி மூலமாகவோ அல்லது அவர்களை வேறுவகையில் தொடர்பு கொண்டோ நாம் பயணத்திற்கு அழைத்திருந்தால் சரியான நேரத்திற்கு வருவார்கள். நேர தாமதமானாலும் சண்டை பிடிக்காது எமக்காக காத்திருப்பார்கள். இவர்களுடன் நாமும், கண்ணியமாகவும் பணிவாகவும் செயற்படுவதை அடிக்கடி உறுதி செய்யும் அளவிற்கு நல்ல மற்றும் நம்பிக்கையான ஓர் பயணமாக அமைத்து தருகிறார்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகளெனின் உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இவ்வாறான முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் இருக்கக்கூடும்.
இந்த வகைகளில் குறைந்தது மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை நீங்கள் சந்தித்திருந்தால், வாழ்த்துக்கள்! நீங்கள் இப்போது ஒரு அனுபவமிக்க Tuk Tuk பயணிகள். இப்போது குறுக்கு வழி பாதை மற்றும் மீட்டர் அற்ற வாகனங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றி அறிந்திருப்பீர்கள். உங்களுக்கு எங்காவது அவசரமாக செல்ல வேண்டுமெனின் வேகமான ஓட்டுநரை நாடுங்கள். ஆனால் வண்டிக்குள் ஏறும் முன் திகிலூட்டும் பயணமொன்றிற்காக உங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டே நுழையுங்கள்.