2021 Jul 2
நாம் அனைவரும் விரும்பியோ! விரும்பாமலோ! இலவச கல்வி முறைமை மூலம் பல பலன்களை பெற்றுள்ளோம் என்பதில் பெருமிதம் கொள்ளுதல் வேண்டும். இலங்கையை பொருத்தளவில் ‘வாசிப்பு’ என்ற பதத்தினூடாகத்தான் கல்வி மக்களிடையே கூர்ப்படைந்தது. ஆதி கால மக்கள் பகுத்தறிவற்ற மக்களாகவே விளங்கினர். நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தொடர்ந்து, மக்கள் அதிகமாக நகரம் சார் நாட்டம் கொண்டனர். எனினும் நகரங்கள்; பதாகைகள், குறியீடுகள், இலக்கங்களைக் கொண்ட பொறிமுறையை அடிப்படையாகக் கொண்டு விளங்கியதால், மக்கள் அதனை வாசித்து, கிரகித்து செயல்படும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை. கற்றால் மாத்திரமே நகரங்களில் தமது அன்றாட வாழ்க்கையை நிறைவேற்ற முடியும் என்ற சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனடிப்படையில் மக்கள் கல்வியின் பால் ஈர்க்கப்பட்டு பல கல்விமான்கள் உருவாகத்தொடங்கினர்.
மக்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் செயற்திட்டங்கள் இன்று நேற்று நெறிமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் அல்ல. இது போர்த்துக்கேயர் – ஒல்லாந்தர் காலம் முதல் ஆரம்பிக்கப்பட்ட முயற்சிகளாகும். இதில் பிரித்தானியர்களின் மிஷனரிப் பாடசாலை முறைமை இலங்கையின் கல்வி விருத்திக்கு பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளது. எமது முப்பாட்டர்கள் காலத்தில் பாடசாலைக்கு மாணவர்கள் சமூகமளிக்காதவிடத்து, அவர்களை தேடிப்பிடித்து பாடசாலைக்கு அழைத்து வரும் சம்பிரதாயம் இலங்கையில் இருந்தது என்பது எம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? மேலும் C. W. W. கன்னங்கர அவர்களினால் 1945ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இலவசக் கல்வி முறைமை, இலங்கை கல்வி வரலாற்றின் திருப்புமுனை எனலாம்.
இது போன்ற முயற்சிகளினால் 40 ஆண்டுகளில் இலங்கையின் பாடசாலைகளின் எண்ணிக்கை 50% அதிகரித்ததோடு, மாணவர்களின் எண்ணிக்கை 300% உயர்வடைந்தது. தற்போது கூட தெற்காசியவில் கல்வி அறிவு அதிகம் மிகுந்த நாடுகளில் இலங்கை 92% பெற்று முதலிடம் வகிக்கின்றது. மேலும் 1968 ஆம் ஆண்டு, 1000 சிறுவர்களில் 74 பேர் இறந்ததுடன், 2017ஆம் ஆண்டு அதே சிறுவர் இறப்பு எண்ணிக்கை 8 ஆக குறைவடைந்துள்ளது. இப்புள்ளி விபரம் இலங்கையின் கல்வி மட்டத்தின் வெளிப்பாடு என்றே தோன்றுகிறது.
பெண் சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ள இவ் உலகில், இலங்கையில் மேற்படிப்பு அதிகம் கற்பது தற்காலத்தில் பெண்களே ஆகும். மேலும் சாதாரண தர பரீட்சையில் 90%க்கு அதிகமானோர் சித்தியடைவதோடு, நேரடியாக உயர் தரத்திற்கு உயர்வும் பெறுகின்றனர். மேலும் இவர்கள் தேசிய பல்கலைக்கழகம் நுழையும் பட்சத்தில், இவர்களின் அன்றாட செலவிற்கு ‘மஹா பொல’ என்ற புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது. இதைத் தவிர முதலாம் தரம் முதல் பட்டப்படிப்பு முடியும் வரை அனைத்தும் இலவசமாக கிடைக்கும் நாட்டில், அதனை பயனுள்ள வகையில் மாற்றிகொள்வது எமது கட்டாய கடமையாகும். இலங்கையின் கல்வி முறைமை பரீட்சையை மையமாக கொண்டு விளங்குவதனால், மாணவரிடையே போட்டி மிகுந்த மனப்பாங்கை இது உருவாக்குகின்றது. மேலும் பரீட்சை மோகம் கொண்ட கல்வி முறைமை, சிறார்கள் பலரை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பெட்டிக் கடைகளுக்கு அடுத்த படியாக பட்டப்படிப்பு வழங்கும் தனியார் நிறுவனங்களே அதிகமாக காணப்படுகின்றது. பத்திரிகை முதல் முகப்புத்தகம் வரை எதை திறந்தாலும் பட்டப்படிப்பு தொடர்பான மண்டைசலவையே நடைபெறுகின்றது. இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்களின் வருகையை இரு திசைகளிலும் விவாதிக்கலாம். எனினும் கல்வியின் தரம் பாதிப்புக்குள்ளாகும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுமாயின், அதற்கு எவரும் கண்டிப்பாக உடன்படப் போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடொன்றின் பொருளாதாரத்தை விட, கல்வியையே இக் கொரோனா பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்பதே நிகழ்காலத்தில் பலரின் கருத்தாக திகழ்கிறது. 20 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சுமார் ஒன்றரை வருடத்துக்கும் மேலாக, Online மெய்நிகர் கற்பித்தலையே கற்று வருகின்றனர். ஆசிரியர்கள் காய்கறி வெட்டிக் கொண்டே கற்பிப்பதும், மாணவர்கள் Mute செய்துவிட்டு Game விளையாடுவதையும், ஒரு New Normal ஆக எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் Google Form இல் பரீட்சை நடத்துவதை நகைச்சுவையாகவே நாம் பார்க்கின்றோம். இவை எல்லாவற்றிற்கும் அப்பால் அனைத்து மாணவர்களுக்கும் இணைய வசதி இருக்குமா? ஒரு மொபைல் அல்லது கணனி இருக்கும் வீட்டில் இரண்டுக்கு மேற்பட்ட சிறார்கள் இருக்கும் பட்சத்தில், இருவரும் எவ்வாறு கல்வி கற்க முடியும்? போன்ற கேள்விகள், இன்னும் விடையில்லாக் கேள்விகளாகவே விளங்குகின்றன. பல இடங்களில் பல குறைபாடுகள் இருப்பினும், இலங்கையின் கல்வி முறைமை தனித்துவமானது, பல கல்விமான்களை உருவாக்கியது என்பதை நாம் அனைவரும் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இக் கல்வி முறைமையில் நாமும் ஒரு பங்காய் விளங்கி, பொறுப்பு வாய்ந்த ஓர் குடிமகனாக மாற முயற்சிப்போம் ! ! !