அனைத்தையும் நாடி  சமகால இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் குயர்/திருநர் தொடர்பான வெறுப்புணர்வுகளை எதிர்கொள்ளும் வழிவகைகள்

சமகால இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் குயர்/திருநர் தொடர்பான வெறுப்புணர்வுகளை எதிர்கொள்ளும் வழிவகைகள்

2021 Jul 3

“LOVE IS LOVE”

மானிடராய் பிறந்த யாவருமே அவருடைய வாழ்க்கை பயணங்களை முழுமையாக, சீராக, சுதந்திரமாக, வண்ணமயமாக வாழ பிறந்தவர்களே. இனம், மதம், மொழி, பால்நிலைகள், கலாசாரம் என அனைத்தையும் தாண்டி, மனிதமென்ற ஒன்று மட்டுமே மகத்துவமானது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருடைய வாழ்க்கையிலும் தனித்துவமான விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், தீர்மானமெடுத்தல் தொடர்பான சிந்தனைகள் போன்றவை பெறுமதியானவை. ஆக மனிதராய் பிறந்த யாவருமே தத்தமது வாழ்வை கொண்டாட பிறந்தவர்களே. ஆனால் நாமோ மனிதருக்குள் பல்வேறு பிரிவினைகளை திணித்தபடி மனிதமதை மறந்தே போகின்றோம். ஆணென்றும், பெண்ணென்றும், அடையாளம் ஏதேன்றும் ஏராளம் விதிமுறைகளென இச் சமூக அரங்கில் வகுத்துள்ளமை வருத்தத்திற்குரியது.

தொடர்ந்து இத்தகைய பால் ரீதியான அடையாளங்கள் பலரது வாழ்வில் பாரியளவில் செல்வாக்கு செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. இதிலும் குறிப்பாக LGBTQIA+ (குயர்/திருநர்) தொடர்பான மாற்றுக் கருத்துகளும், வெறுப்புணர்வுகளும், புறக்கணிப்புக்களும் உலகளாவிய ரீதியில் இன்றளவிலும் போதிய விழிப்புணர்வு பெறாத விடயமாகவே காணப்படுகின்றமை கவலைக்குரியது. குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொண்டால், எமது தமிழ்ச் சமூகத்தில் குயர் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய தேவைகள் இருக்கும் அதேவேளை, அவர்களுக்கான அங்கீகாரங்களையும் சமூக அரங்கில் பெறவேண்டிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவை என உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இதற்காக முதலில் திருநர் பற்றிய பூரண தெளிவை நோக்க வேண்டியது நன்று. அதன்படி பரவலாக ஆண் மற்றும் பெண் பாலினங்களே பெருமளவு அறியப்பட்ட பாலினங்களாகவும், எதிர்பாலினர் மீதான பாலுணர்வுகளை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் காணப்படுகின்ற போதிலும், முற்காலம் தொட்டே குயர் எனப்படும் பாலினத்தவர்கள் சரிவர அறியப்படாதவர்களாகவே உள்ளனர். ஆனால் இன்று ஆண் மற்றும் பெண் எனப்படும் சிறிய வட்டத்தையும் தாண்டி LGBTQIA+ என பாலினங்கள் பலவகைப்பட்டதாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதில் ஒரு பெண் இன்னொரு பெண் மீது ஈர்ப்பு கொள்ளுதல் (Lesbian), ஒரு ஆண் இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு கொள்ளுதல் (Gay), இருபாலினத்தவர் மீதும் ஒருவர் நாட்டம் செலுத்துதல் (Bisexual), மூன்றாம் பாலினம் என குறிப்பிடப்படும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள், அதாவது பிறப்பின் போது அறியப்பட்ட பால்நிலையிலிருந்து வளரும் காலத்தில் இன்னொரு பாலினத்தவராக உணர்தலை குறிப்பிடுவர். அத்துடன் பிறப்பின் அடிப்படையில் பால்நிலை கூறப்பட இயலாதவிடத்து மருத்துவ கருத்தின்படி பால்நிலை தீர்மானிக்கப்படுதலும் குழந்தை தான் வளரும் காலத்தில் தன்னை வேறு ஒரு பாலினமாகவும் அடையாளம் காணலாமெனும் இடத்தில் இடையிலிங்கம் (inter sex) என்றும் குறிப்பிடுவர். இவை தவிர LGBTQI நிலைகளை சேர்ந்த அனைவரையும் குயர் என்பர். இவர்களது தேவைகள், பிரச்சினைகள், குறைகள் சார்ந்து செயற்படுகின்ற செயற்பாடுகளை குயர் கண்ணோட்டம் என  குறிப்பிடுவர். எவ்வாறாயினும் பாலின அடையாளம் ஒவ்வொருவருடைய அக உணர்வுகளுடன் தொடர்புடையவை.

இவ்வாறான பாலின வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு இன்றளவிலும் உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் திட்டமிடப்பட்டோ அல்லது திட்டமிடப்படாமலோ, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரச்சினைகள் மற்றும் புறக்கணிப்புகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. உதாரணமாக ஏதேனும் ஒரு கொள்கை அனைவருக்கும் பொதுவானதாக தோன்றினாலும் அவை எல்லோரையும் உள்ளடக்க கூடியதாக இல்லாமல் பாலின அடையாளங்கள் கொண்டு உரிமைகளை மறுப்பதாகவும் இருக்கவே செய்கின்றன.
இதில் காணப்படும் முதலாவது சிக்கலாக குயர் சமூகத்தவர், தத்தமது சுயம் பற்றிய தெளிவையும் அடையாளங்களையும் குடும்ப அளவில் முன்வைப்பதே. இலங்கையை எடுத்து கொண்டால் குடும்ப சூழல் அவர்களுக்கு மிகவும் முரணான கொள்கைகளையும் சிக்கல் மிகுந்த எண்ணப்பாங்குகளையும் கொண்டதாகவே காணப்படுகிறது. ஒரு தனி நபர் தனது பாலின அடையாளம் இதுதானென்றும் இவ்வாறுதான் நான் என்னை உணர்கின்றேன் என்றும் முன்வைப்பதற்கான வெளியினை பெறுவதே சவாலாக உள்ளது.

குடும்பத்தவர்கள் மத்தியில் தன்னுடைய பாலின மாற்றங்கள் மற்றும் ஈடுபாடுகள் குறித்து தெரியப்படுத்தும் போது பெரும்பாலான குடும்பங்களில் இருந்து அவர்கள் தனித்து விடப்படுகின்றனர். இன்னும் சில குடும்பங்கள் பாலின அடையாளங்களை மறைத்து வற்புறுத்தி முடங்கிய நிலையில் வைத்திருக்க முயல்கின்றன. குடும்ப கௌரவம், அந்தஸ்து என்ற யதார்த்த நிலைகள் தாண்டிய நியாயமற்ற காரணங்கள் முன்னிலை படுத்தப்படுகின்றன. பாலின மாற்றங்களிற்குள் இத்தகைய புறக் காரணங்கள் எங்கிருந்து வந்தது என்பதே சமூக அரங்கில் கேட்க வேண்டிய முதல் கேள்வியாக உள்ளது.

இவ்வாறாக குடும்ப பிற்போக்கு சிந்தனைகளையும் தாண்டி அவைகளை உடைத்து வெளிவரும் குறித்த நபர்கள், தங்களின் அடையாளங்களை சமூக அரங்கில் முன்வைக்கும் போது அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல் கல்வி, தொழில்வாய்ப்பு தளங்கள் என அனைத்து இடங்களிலும் மனிதத்துவம் என்பதை மறந்து பாலினப் பாகுபாடு மேலோங்கி நிற்கிறது. இவை தவிர குடும்பத்தையும் தாண்டி வெளியே வரும் போது, தனித்து விடப்படுகையில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பாலியல் ரீதியான சுரண்டல்கள், பொருளாதார நெருக்கடிகள், கல்வி மறுப்பு, வேலை வாய்ப்புகள் தர மறுப்பு, உணர்வுரீதியான சுரண்டல்கள், கேலிகள், விலக்கி வைக்கப்படுதல் முதலிய பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை விரும்பியோ விரும்பாமலோ ஏற்படுத்தப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை, பாலின மாற்றங்கள் தொடர்பாக சேவையாற்றும் நிறுவனங்கள் அமைப்புகள் இருக்கின்ற போதிலும் குடும்பத்தை தாண்டி வெளிவருபவர்களுக்கு இவை தொடர்பான போதிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. அத்துடன் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூலமாக இலங்கையில் மேற்கொண்ட ஆய்வின்படி பெரும்பாலோனோர் பாலியல் ரீதியாகவும் உடலுள ரீதியாகவும் துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அரைவாசிக்கு மேற்பட்டோர் எந்தவொரு காரணங்கள் இன்றியும் பொலீஸ் விசாரணைக்கு உட்பட்டு இருக்கின்றனர் அதுமட்டுமல்லாது பொலிஸ் விசாரணைகளின் போது உடல் உள ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டும் இருக்கின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் தற்போது கவனம் செலுத்த தொடங்கி இருப்பினும், சமூக அளவில் பால்நிலை அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பாரபட்சம் காட்டும் பழக்கங்கள் இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தல் அவசியம். இவை மட்டுமல்லாது மருத்துவ சிகிச்சைகளை நாடும்போதும், தேவையேற்படும் பட்சத்தில் பொலிஸ் முறைப்பாடுகளை மேற்கொள்ளும் போதும், தொழில் வாய்ப்புக்களிற்கான நேர்காணல்களை எதிர்கொள்ளும் போதும் கூட இவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. அதாவது அநாவசியமாக தனிப்பட்ட தேவையற்ற கேள்விகளை கேட்டல், மன நோயாளிகளாக சித்தரிக்கப்படுதல், சில மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முன்வராமலிருத்தல், அநாவசிய வினாக்களிற்கு பதிலளிக்க தவறும் பட்சத்தில் மேலும் உளரீதியாக துன்புறுத்தப்படல், தேவைகள் புறக்கணிக்கப்படுதல், காத்திருக்க வைத்தல் போன்ற பல துன்பங்களை எதிர்கொள்கின்றனர். தற்கால காவற்துறை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் மனிதராக பிறந்த அனைவருக்கும் சம உரிமைகளென்றே கூறப்படுகிறது. அதன்படி இலங்கையில் குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை ஒருவரை குற்றவாளியாக பாவிக்க இயலாதென்றும், நியாயமான பொது விசாரணைக்கு மட்டுமே உட்படுத்தப்பட வேண்டுமென்றும் மனித உரிமைகள் சாசனம் குறிப்பிடுகையில், விசாரணைகளின் போது பால்நிலை அடையாள பாகுபாடுகள் நன்றல்ல.

ஒரு நாட்டில் சுதந்திரமாக நடமாடும் உரிமை, உயிர் உரிமை, சுதந்திரம், தனிநபர் பாதுகாப்பு, அடிமைத்தன விடுதலை, சொத்துக்களை சொந்தமாக்கிக்கொள்ளும் உரிமை, சுயதீர்மானம், சமூக பாதுகாப்பு உரிமை, கல்வி கற்கும் உரிமை, தொழிலுரிமை முதலிய பல அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை எனும் போது, அவற்றை பால்நிலை வேறுபாடுகளை முன்னிறுத்தி புறக்கணிக்கணித்தல் ஆரோக்கியமன்று.

மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு, 2016 ஆம் ஆண்டளவில் ஒருவரின் சட்டபூர்வமாக பால்நிலையை மாற்றிக் கொள்வதற்கான ஒரு தெளிவான வழி இலங்கையில் கடினம் என்றும், விரும்பும் பெயர் மற்றும் பால்நிலை என்பவற்றை பிரதிபலிக்கக்கூடிய உத்தியோகபூர்வ அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெறுவதற்கு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. ஆயினும் பிற்பாடு தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சின் கருத்துப்படி குயர் அமைப்பினர் தொடர்பான மருத்துவரின் பரிசோதனை பிற்பாடு பால்நிலை மாற்றங்களை ஆவணங்களில் கொண்டுவரும் நடைமுறைகள் கைகொள்ளப்படும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆயினும் கல்வி பெறுதல், தொழில் வாய்ப்புக்களில் இணைதல், திறமைகளிற்கான அங்கீகாரத்தை பெறுதல் போன்ற நன்மைகளை மிகவும் சொற்பமானோரே பெறுகின்றனர்.

திருநங்கைகள், திருநம்பிகள் என்று சமூகத்திலிருந்து பிரித்து நோக்குவதிலும் பார்க்க சமூக அளவிலும் தனிநபர் கருத்துக்களவிலும் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்யவேண்டும். பால் நிலை மாற்றங்கள், அடையாளங்கள் என்பதையும் தாண்டி மனிதர்களை மனிதர்களாக பாவிக்க வேண்டும். அனைவரும் உயிர் வாழ்கிறோம். அனைவரும் சுவாசிக்கின்றோம். அனைவருக்கும் கனவுகள் கற்பனைகள் உண்டு. அனைவரும் நம் திறமைகளை வெளிக்காட்டும் அங்கீகாரமே விரும்புகின்றோம். அனைவருக்கும் பொதுவாகவே இந்த இயற்கையும் இந்த பிரபஞ்சமும் தரப்பட்டிருக்கிறது. இதில் ஆயிரமாயிரம் வேற்றுமைகள் ஏனோ? நம் நட்பு வட்டங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருத்தல் நன்று. எந்தெந்த சந்தர்ப்பங்களில் அடையாளங்களை காரணங்களாக சித்தரித்து மனிதர்களை புறக்கணிக்கின்றோமோ, அந்தந்த இடங்களில் மனிதத்தன்மையிலிருந்து நம்மை நாமே தாழ்த்திக் கொள்கின்றோம். குயர்/திருநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கான தீர்வுகள் என்று நோக்கின், சமூகத்தவரளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள், குறித்த குயர்/திருநர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் என்று அணுக இயலும்.

முதலாவதாக குடும்ப அளவில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும். பெற்றோர் சகோதரர்கள் என குடும்பம், குறிப்பிட்ட குழந்தையின் உடலுள மாற்றங்களை ஏற்றுக் கொள்வதோடு அதற்கான ஆதரவு, பாதுகாப்பு, அரவணைப்பு, தன்னம்பிக்கை முதலியவற்றை தரவேண்டும். சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பமே குழந்தைகளிற்கு பாதுகாப்பான அரணாகும். இவ்வகையில் குறிப்பிட்ட குழந்தைகளை தனிமையில் விடாது, புறக்கணிக்காது ஒரு தனிமனிதனுக்கு அவசியமான கல்வி மற்றும் அனைத்து உரிமைகளையும் கிடைக்கச்செய்யுமிடத்து புறத்தாக்கம் நிச்சயமாக குறிப்பிட்டளவில் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அத்தோடு நாம் ஒரு தொழில் வழங்குனராக இருப்பின், பால் அடையாளங்களை கருத்திற்கொண்டு புறக்கணிக்காமல் திறமைகளிற்கு வாய்ப்பளிக்க முயற்சிகள் செய்ய வேண்டும். அத்தோடு நாம் பாரபட்சங்களின்றி தொழில் மற்றும் கல்வி வழிகாட்டல்களை வழங்குதல் நன்று. ஒரு ஆரோக்கியமான சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டுமெனில் இத்தகைய பால்நிலை ரீதியான மாற்றங்களையும் பிற்போக்கான மன ஓட்டங்களையும் மாற்றமடையச் செய்வதோடு, ஏனைய குயர்/திருநர்களது எதிர்கால பயணத்திற்கு நட்புமிக்க உந்துதல்களை அளிக்கவும் முன்வருதல் நன்று.

குறிப்பாக இலங்கையில் குயர்/திருநர்கள் கல்வியை பெறுவதில் பின்னிப்பதற்கும் தயக்கம் காட்டுவதற்கும் இச்சமூகத்தின் விமர்சனங்களும் கல்வி நிறுவனங்களிற்குள்ளே முகங்கொடுக்க வேண்டி இருக்கின்ற கேலி கிண்டல்கள், புறக்கணிப்புகள், பாரபட்சம் முதலியவை முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஆக, கல்வி கற்றலிற்கான தளங்களினை வழங்குவதோடு மட்டும் இத்தகைய பிரச்சனைகள் முற்றுப்பெறுவதென்பது கடினம். மாறாக ஒவ்வொரு தனிநபரும் அவரவர் எண்ணங்களிலும் செயல்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு குழந்தையின் உடலுள மாற்றங்களை சமூகம் ஏற்றுக்கொள்ள எத்தனிக்கும் போது, அது நிச்சயமாக குறிப்பிட்ட குழந்தையின் வளர்ச்சிக்கு உரமாக அமையும். குடும்ப அளவிலும் குறிப்பிட்ட குழந்தை தொடர்பான புரிதல் என்பது மிக மிக அவசியமானதொன்று. அத்துடன் குடும்பமும் இணைந்து சமூக அரங்கில் மாற்றங்களை உருவாக்க முயல்தல் வேண்டும். இலங்கையை பொறுத்தவரையிலும் யாவருக்கும் சம உரிமை என்பது பேச்சளவிலும், சார்பு எழுத்தளவிலும் மட்டும் நின்றுவிடாது நடைமுறையில் கொண்டுவர, பாலின வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்தல் வேண்டும். சிறிய அளவில் மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயமாக பெரிய அளவிலான மாற்றங்களிற்கு வித்திடும்.

இவ்வாறான சமூகத்தில் திண்ணையில் பல்லாண்டுகளாக பரவச் செய்து கிடக்கும் இவ்வாறான உணர்வுகளையும் புறக்கணிப்புகளையும் இல்லாதொழிப்பதில் குயர்/திருநர்களிற்கு முக்கிய பங்குண்டு. தம்மை பற்றிய புரிதல்கள் மற்றும் தெளிவினை பெற்றுக் கொள்வதோடு, தம்மைச் சுற்றி இருப்பவர்களிற்கு அவை தொடர்பான புரிதலை புகட்ட முயற்சி செய்தல் நன்று. வாய்வழி கருத்துப் பரிமாற்றங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறத்தவறும் பட்சத்தில் ஆரோக்கியமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் பல ஊடகங்களை பயன்படுத்திக்கொள்ள இயலும். அவை கட்டுரைகளாகவோ கவிதைகளாகவோ பாடல்களாகவோ புகைப்படங்களாகவோ சமூக வலைதளங்களாகவோ அமையலாம். இதன் மூலம் தமக்கான சுயமரியாதை தளத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
அடையாளங்களை மறைத்துக் கொள்ள முயல்வது அவர்களது சுயங்களை அவர்களே திருடுவதற்கு சமமாகும். அது இயல்பான நடத்தைகளையும் திறமைகளையும் கூட இல்லாமல் செய்யும். ஆக தனிநபர் உடல் அடையாளங்களை மறைத்து கொள்வதை விடுத்து, அங்கீகாரம் முன்வருதல் வேண்டும். இதன் மூலம் “நாம் வித்தியாசமானவர்கள்” என்ற எண்ணக்கருவில் இருந்து விடுபட இயலும். சமூகப் புறக்கணிப்புகளை எதிர்கொள்வதற்கு கல்வியும் ஆளுமைகளும் சிறந்த ஆயுதங்கள். சமூகத்தினை மாற்ற முயற்சி செய்யும்போது விமர்சனங்களை கருத்திற் கொண்டு பின்னிற்றல் நன்றல்ல. சமூக விமர்சனங்களையும் புறக்கணிப்புகளையும் பெரும் சவாலாக ஏற்றுக்கொண்டு, கல்வி மற்றும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளுதலோடு, மற்றங்களிற்காக முயல்தல் நன்று. இதன்மூலம் சமூகத்தின் கருத்துகளிலும் நம்பிக்கைகளிலும் அணுகுமுறைகளிலும் நிச்சயமாக மாற்றங்களை கொண்டு வர இயலும்.

ஒரு தனிமனிதன் தன்பாலின மாற்றங்களை உணரும் தருணத்தில் சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஏனைய அமைப்புக்களின் மூலமாகவும் விரிவான புரிதல்களை பெற்றுக்கொள்ள இயலும். அமைப்புகள் என்று நோக்கினால் இலங்கையில் EQUAL ground (மனித உரிமைகள் மற்றும் LGBTQ சமூகம் சார்ந்த அமைப்பு), Gay rights (NGO), Jaffna transgender Network முதலிய பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சுகாதாரத் திணைக்களம், மனித உரிமைகள் ஆணையகம் முதலிய அரச நிறுவனங்களையும் நாட இயலும்.

ஆக ஆரோக்கியமான இலங்கையின் எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்புதல் என்பது இன்றைய மாற்றங்களிலேயே தங்கி இருக்கின்றது. பால்நிலை அடையாளங்களை முன்னிலைப்படுத்துவதை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து மாற்றங்களிற்கான பாதையை நோக்கி நகர்தல் தனிநபர் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் பெரும் பங்களிக்குமென்பதில் ஐயமில்லை.

எழுத்து – டினோஜா நவரட்ணராஜா (காரைநகர்)

இக்கட்டுரை ‘ஒன்றிணைந்த சுயமரியாதை வானவில் பெருமிதம் 2021’ -ஐ முன்னிட்டு, யாழ் திருநர் வலையமைப்பினால் (Jaffna Transgender Network) நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் முதலிடம் பெற்றதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php