அனைத்தையும் நாடி  யாழ்ப்பாணத்தின் பனை வளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

யாழ்ப்பாணத்தின் பனை வளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

2021 Jul 8

யாழ்ப்பாண மண்ணின் அளப்பெரும் சொத்துக்களாகவும், தனிச் சிறப்பு அம்சமாகவும் திகழ்பவையே பனைமரங்கள் ஆகும். கூடுதலாக வடபகுதியின் தீவகப் பகுதியில் அதிகளவு பனைவளங்கள் காணப்படுகின்றது. ஆகவே தான் “ நாற்புறமும் பனை சுழும் யாழ்ப்பாணம் ..” என்று  சின்ன தம்பிப் புலவரால் சித்தரிக்கப்படுகின்றது.  அள்ள அள்ளக் குறையாத வளங்களையும்,  ஒப்பில்லாத நன்மைகளையும் மனிதர்களுக்கு அளிப்பதாலேதான் பனைமரங்கள் “பூலோக கற்பக விருட்சம்” என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு பனை மரம் தரும் வளங்கள் எல்லையில்லாதவை. அடி தொடக்கம் முடிவரை பனையின் வளங்கள் சிறப்பு மிக்கவை. பனையின் ஓலை தொடக்கம் வேர் வரை பயன்மிக்கது.

தற்காலத்தில் குறைந்தளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவுள்ள போதிலும் ஆரம்ப காலத்தில் அதாவது பண்டைய காலங்களில் வீட்டின் கூரை வேய்வதற்கு பனையின் ஓலைகளே பயன்பட்டன. வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் மழை காலங்களில் சூட்டையும் வழங்கி மனிதர்களைக் காப்பாற்றின. எனினும் கல் வீடுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்ட இக்காலத்தில் கூட பனையின் பங்கு இன்றியமையாதது. ஓட்டினாலான வீட்டுக் கூரை அமைப்பதற்கு பனை மரத்தின் தண்டாகிய கிராய் மரங்களே அதிகம் இன்றுவரை பயன்படுத்தப்படுகின்றது. தற்காலத்தில் பனை ஓலையைக் கொண்டு பாய் பின்னுதல் மற்றும் அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து, வடிவமைத்து, விற்பனை செய்யப்படுகின்றது.  அத்தோடு விற்பனைக் கூடங்களை அமைத்து நாட்டின்  உற்பத்திகள் ஏற்றுமதி பொருட்களாகவும் வெளிநாடுகளுக்கு விநியோகிக்கப்படுவது மூலம் நம் நாட்டின் அபிவிருத்தியிலும் பனைசார் உற்பத்திகள் பங்கு வகிக்கின்றன.

அதுமட்டுமின்றி பனை மரத்திலிருந்து கள்ளு, பதநீர், கருப்பட்டி, கருவெல்லம், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு போன்ற உணவுப் பொருட்களும்  கிடைக்கப்பெறுகின்றன. இதுபோன்ற அளவிடமுடியாத பயன்களையும் வளங்களையும் கொண்டிருப்பதால்தான் பனைமரங்கள் “பூலோகக் கற்பக விருட்சம்” என்று சிறப்பித்துக் கூறப்பட்டன. பனைமரம் தனது வானளாவு ஓங்கிய உயரத்தைப் போலவே தனது பயனிலும் உயர்ந்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. நம் முன்னோர்களின் வாழ்வில் இப் பனைமரங்கள் அதிகளவில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. ஆகையால் தான் நம் முன்னோர்கள் அதிக ஆயுளுடன் ஆரோக்கியமான  வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

பனைமரத்தின் ஓலை வேலி அமைப்பதற்கும் மிகவும் ஏற்றது.  பனை மரத்தின் வேராகிய  கிழங்கும் மிகவும் சிறந்தது. பனைமரங்கள் காக்கப்பட வேண்டிய அளவு அளப்பரும் சொத்துக்களாகும். பனைமரத்திலிருந்து கிடைக்கப்பெறுகின்றன “நுங்கு” கோடை காலங்களில் ஏற்படும் உடல் உஷ்ணமாதல், உடல் வறட்சி, நா வறட்சி போன்றவற்றை நீக்கி உடலைப் புத்துணர்வுள்ளதாகவும், உடலை உற்சாகமுள்ளதாகவும் மாற்றவல்லது.

பனைமரத்திலிருந்து கிடைக்கப்பெறும் பனைவெல்லம், கருப்பட்டி என்பன சீனியை விடவும் சிறப்பு வாய்ந்தவை. இவை இனிப்புள்ள பதார்த்தமாகவுள்ள உள்ளபோதிலும் மருத்துவ குணம் வாய்ந்தவை ஆகும். மகப்பேற்றுத் தாய்மார்கள், சர்க்கரைநோய், கொலஸ்ட்ரேல் போன்றா இத்யாதி நோய்களால் அவதியுறுவோருக்கு இப்பனை வெல்லமானது அருமருந்தாகப் பயன்படும். பனையிலிருந்து கிடைக்கப்பெறும் பனங்கள்ளு உடலுக்கு புத்துணர்வும் அளித்து உடலைக் குளிர்விக்க வல்லது.

பனம் பழத்தைப் பிழிந்து பாகு எடுத்துச் செய்யப்படுகின்ற “பனங்காய் பணியாரம்” தின்னத் தின்னத் தெவிட்டாத தேன் சுவை மிக்கதாகும். இதனை விருப்பியுண்ணாத மக்களே இல்லை எனலாம். நம் நாட்டில் மட்டுமின்றி தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் இப் பனங்காய் பணியாரம் விரும்பி உண்ணப்படுகின்றன. பனங்களின் பாகிலிருந்து தயாரிக்கப்படுகின்ற பனங்காய்ப் பனாட்டும் சிறப்பு வாய்ந்ததும், சுவை மிக்கதும், நீண்ட நாள் பாவனைக்கு உகந்ததுமாகும்.

பனம்பழத்தின் சுவைக்கும், அதன் தன்மைக்கும் ஏற்பவே பனம் பழமானது “தேம் படு பனை”  என்று பண்டைய இலக்கியங்களிலே சிறப்பிக்கபடுகின்றன. இத்தகைய சிறப்புகளையும் ஒப்பற்ற நன்மைகளையும் தரக்கூடிய இப் பனைமரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவையே ஆகும். பனைமரத்தின் பயன்பாடுகள் அளப்பரியவை. பனை மரங்கள் நம் மண்ணுக்குரிய  சிறப்பு மிக்கவை. அவற்றை நாம் அழியாமல் பாதுகாத்துப் பயனடைவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php