அனைத்தையும் நாடி  பாலின அடிப்படையிலான வன்முறை

பாலின அடிப்படையிலான வன்முறை

2021 Jul 9

இந்தக் கட்டுரையானது, ‘சட்ட ஒளி’ எனும் தொனிப்பொருளில் பொது மக்களுக்கு அறிவூட்டும் வகையில் சட்டத்தரணிகளின் பங்கேற்புடன் நடாத்தப்படும் மும்மொழிச் சட்டக் கலந்துரையாடலைத் தழுவியதாகும். இது இலங்கை சட்ட மாணவர்கள் சங்கத்தின் ப்ரோ போனோ குழுவினால் ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாலின அடிப்படையிலான வன்முறை பற்றிய இந்தக் கலந்துரையாடலுக்கான குழுவானது பின்வரும் சட்டத்தரணிகளை உள்ளடக்கியிருந்தது – திரு.ஆரித விக்ரமசிங்க – சட்டத்தரணி மற்றும் ஐ ப்ரோ போனோவின் முகாமையாளர். இவர் ஓரின மற்றும் இருபால் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் திருநர்கள் முதலானோர் நீதியை அணுகும் வகையில் இந்நிறுவனத்திற்கு தலைமை தாங்குகிறார் என்பதுடன், பன்முகத்தன்மை மற்றும் உள்வாங்கல் முதலான விடயங்களின் முன்னோடி ஆர்வலருமாவார். ஆரித பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் குறிப்பாக ஓரின மற்றும் இருபால் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் திருநர்கள் ஆகியோரின் உரிமைகளுட்பட,  சர்வதேச ரீதியாக மனித உரிமைகளை ஊக்குவிக்கும் பல முயற்சிகளுக்கும் ப்ரோ போனோ செயற்திட்டங்களுக்கும் தலைமை தாங்குகிறார்.  திருமதி.வாசனா கன்னங்கர – சட்டத்தரணி மற்றும் சிறுவர் பாதுகாப்புப் படையின் சட்ட அதிகாரி, சுவஸ்திகா அருலிங்கம் – சட்டத்தரணி மற்றும் சட்டப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் வடக்கு மற்றும் கிழக்கிற்கான செயற்திட்ட உதவிப் பிரிவின் முன்னாள் செயற்திட்ட முகாமையாளர் போன்றோராவர்.

பாலின அடிப்படையிலான வன்முறை என்றால் என்ன? அதன் வகைகள் எவை? அது எவ்வாறான இடங்களில் இடம்பெறுகின்றது?

ஆரித – பாலின அடிப்படையிலான வன்முறை எனும் பாதமானது சார்பற்றதோர் பதமாகும்; இது ஒருவருக்கெதிராக இழைக்கப்படும் உடல் ரீதியான மற்றும் உள ரீதியான வன்முறையினைக் குறிக்கும். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறை மிகவும் அதிகமாக உள்ளது. அண்மைய அரசாங்க ஆய்வொன்றின்படி 1/5 பெண்கள் உடல் ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோராவர். பொதுப் போக்குவரத்தினைப் பயன்படுத்தும் 95% வீதமான பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகின்றனர் என ஒரு UNFPA அறிக்கை கூறுகின்றது.

நீண்ட காலமாக, ஆண்கள் குற்றவாளி எனும் தமது நிலையினை நிராகரித்து வந்த போதும் தற்போது அந்நிலையிலிருக்கும் அவர்கள், இனங்காணப்பட்டு வெளியரங்கப்படுத்தப்படுகின்றனர். தரவுகளை நோக்குகையில் பொதுப் போக்குவரத்தின் போது 95% வீதமான பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகின்றனர் எனில் ஆண்களே இவ்வாறான வன்முறைகளுக்கு பொறுப்பாக உள்ளனர். நாம் ஓர் பாலினம் என்ற வகையில் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டுமென்பதுடன் இதற்கு நாம் பதில் கூறவும் வேண்டும். போதுமான பொறுப்புணர்வு இது தொடர்பில் காணப்படுவதில்லை. கற்பழிப்பை ஓர் உதாரணமாகக் கொண்டால், கடந்த ஆண்டு இலங்கையில் ஒரு நபர் மட்டுமே கற்பழிப்பிற்காக சட்ட ரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதுடன் இது கற்பழிப்பு தொடர்பான சுமார் 6,000 வழக்குகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவாகும்.

சுவஸ்திகா – பாலின அடிப்படையிலான வன்முறையானது வேலைத்தளங்களிலோ பொது இடங்களிலோ இடம்பெறலாம். வன்முறை உடல், பாலியல் மற்றும் உள ரீதியாக இடம் பெறலாம். பெண் பிள்ளைகளுக்கு பொதுவாக அளிக்கப்படும் அறிவுரை யாதெனில், ”இரவில் வெளியே செல்ல வேண்டாம், அது பாதுகாப்பானது அல்ல” என்பதாகும். எனினும், பெண்கள் தமது குடும்பஸ்தர்களாலும் நெருங்கிய துணைகளாலும் வன்முறைக்குட்படுத்தப்படுகின்றனர் என்பதனை நாம் இனங்காணத் தவறுகின்றோம். இது பற்றி வெளிப்படையாக பேசப்படுவதில்லை. மேலும் தொழிலை இழக்க நேரிடும் என்னும் பயத்தால் தமக்கு நேரிடும் வன்முறைகள் தொடர்பில் பெண்கள் முறையிடுவதில்லை. என்னுடைய கருத்து யாதெனில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகளவு மறைவான இடங்களிலேயே இடம்பெற வாய்ப்புள்ளது.

ஆரித – வன்முறையானது உடல், உள மற்றும் பொருளாதார ரீதியானதாக இருக்கலாம். இது ஒரு நபர் இன்னொருவர் மீது செலுத்தக்கூடிய கட்டுப்பாட்டில் தங்கியுள்ளது.

உடல் ரீதியான வன்முறை

ஒரு தொடுகையானது வாழ்நாள் முழுவதும் தொடரும் பயத்தினை ஏற்படுத்துமாயின் அது உடல் ரீதியான வன்முறைக்கு சமமானதாகும். வாசனா அவர்கள் கூறுவது யாதெனில், இது ஒருவர் மீதான அதிகாரத்தினை பிரயோகிப்பதனை குறிக்கும் செயலேயாகும் என்பதுடன் இது ஒரு திருமணமான தம்பதியிடையிலும், ஒரு ஆண் ஒரு பெண்ணை பாலியல் உறவுக்கு பலவந்தப்படுத்தும் போது திருமணத்துக்கு புறம்பேயும் இடம்பெறுகின்றது. பெண்களுக்கு பாதுகாப்பான முறையில் பாலியல் உறவில் ஈடுபட உரிமை உண்டு. இந்த உரிமையை ஒருவர் மறுக்கும் போது, அது பாலியல் வன்முறைக்கு சமமாக கருதப்படுகின்றது.

உள ரீதியான வன்முறை

இவை உள ரீதியான பாதிப்பினை அல்லது துன்பத்தினை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் தொகுப்பாகும். இது நடத்தை மற்றும் வார்த்தை ரீதியான துன்புறுத்தலாகும் என்பதுடன் இவை வழக்கமாக நீண்ட காலமாக இடம்பெறுபவையாகும்.

பாதிக்கப்பட்டவர் மிகக் கூடுதலான அளவில் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றார். பாதிக்கப்பட்டவர் உணர்வு ரீதியான களைப்படைந்தும் துஷ்பிரயோகத்துக்கும் வன்முறைக்கும் உட்படுத்தப்பட்டும் காணப்படுவார். உங்கள் துணையிடம் கத்திப்பேசுதல், மோசமான வார்த்தைப் பிரயோகத்தினை அவமதிக்கும் முறைகளிலொன்றாய் பயன்படுத்தல், உங்கள் துணையை மிரட்டுதல் என்பன உள ரீதியான துஷ்பியோகத்தின் வடிவங்களாகும்.

பொருளாதார ரீதியான துஷ்பிரயோகம்

வணிக கணக்குகளை தடுத்து நிறுத்துவதன் மூலமும், பணம் பெற்றுக்கொள்வதை நிறுத்துவதன் மூலமும் பொருளாதார மூலங்களை கட்டுப்படுத்துதல்.

யார் வன்முறையை மேற்கொள்ளலாம்?

ஆரித – ஆய்வில் பங்கெடுத்த சில பெண்கள் தாம் சிகிச்சைக்கு  உட்டபடுத்தப்பட வேண்டுமென நினைத்தனர் என்பதுடன் அது துஷ்பிரயோகத்தின் ஒரு வடிவமென கருதியிருக்கவில்லை. எதோ ஓர் தவறு இருக்கிறதென்பதை அவர்கள் யோசிக்கவில்லை. ஆணாதிக்க முறை மிகவும் வலுவானது என்பதனுடன், பெண்கள் இதன் அங்கமாக உள்ளனர். இந்தக் கருத்தை அகற்ற சிறிது காலம் எடுக்கும். ஆனால் இது, பெண்கள் ஆண்களுடன் இணைந்து வழிநடத்த வேண்டிய ஒரு போராட்டமாகும்.

சுவஸ்திகா – ஒரு நபர் ஒரு குழந்தையாக வன்முறையை அனுபவிக்கும் போது, ​​அவர்கள் பெரியவர்களைப் போலவே நடந்துகொள்ள முனைகின்றனர். இது “தலைமுறை ரீதியான வன்முறை” என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், இது வன்முறை காரணமாக மட்டும் இடம்பெறுவதில்லை. குழந்தைகள் சமூகக் கருத்துக்களால் பாதிக்கப்படுகையில், அவர்கள் பெண்கள் மற்றும் ஓரின, இருபால் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், திருநர்கள் உள்ளடங்கலான எல்.ஜி.பி. டி.க்யூ. சமூகத்தினரையும் குறிவைத்து வன்முறையை ஏற்படுத்தும் பெரியவர்களாக மாறுகிறார்கள்.

பகிடிவதை செய்தலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? பகிடிவதை செய்தல் பாலின அடிப்படையிலான வன்முறைக்குள் உள்ளடங்குமா?

ஆரித – பகிடிவத்தை செய்தல் மற்றும் துன்புறுத்தல் பாலின அடிப்படையிலான வன்முறையின் ஒரு பகுதியாகும். யாராவது பகிடிவதைப்படுத்தப்படுகையில், அவர்களின் உள மற்றும் உடல் நலன் தொடர்பாக அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். பகிடிவத்தையானது எதிர் பாலினருக்கே எதிராக மேற்கொள்ளப்படும் போது அது பாலின அடிப்படையிலான வன்முறையின் கீழ் வரும்.

ஆண்கள் எவ்வாறாக பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படுகின்றனர்?

ஆரித – பெண்களால் ஆண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் பெண்ணின் அதிகாரம் மேலோங்கி இருக்கும் சந்தர்பத்திலோ, ஓர் ஆண் குழந்தை பற்றிய பொறுப்பு பெண்ணொருவருக்கு இருக்கும் பட்சத்திலோ இடம்பெறுகின்றது. ஆண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநேக வன்முறைகள் பிறிதொரு ஆணால் அவர்களுக்கு இழைக்கப்படுபவையாகவே உள்ளது. இது தொடர்பில் சமூகரீதியாக முகம்கொடுக்கவேண்டிய  சங்கடத்தால் பெரும்பாலான ஆண்கள் இவ்வாறான விடயங்களை வெளியரங்கப்படுத்துவதில்லை. எமக்கெதிராக பாரதூரமான குற்றச்செயலொன்று இழைக்கப்ப்பட்டுள்ளதென ஏற்றுக்கொள்வது ஓர் பெண்மைத் தன்மையான விடயமென சிந்திக்க வழிப்படுத்தப்படுகின்றோம். இதில் நிறைய அவமானங்கள் உள்ளன என்றும் ஓர் ஆண் போன்று கடினத்தன்மையுடன் இருக்க வேண்டுமெனச்  சொல்லப்படுகிறோம். இவ்வாறான மிலேச்சத்தனமான ஆண்மை சார்ந்த கருத்துக்களால் நாம் பாதிக்கப்படும் போது அது பற்றி நாம் கதைக்காமல் இருக்க முற்படுவதுடன், துரதிஷ்டவசமாக நாங்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களாக மாறுகின்றோம்.

சுவஸ்திகா –  ஆண்கள் மற்றைய ஆண்களை அவர்களது ஆண்மையை அவமதிப்பதன் மூலம் பகிடிவத்தைக்குள்ளாக்குவதை நாம் காண்கிறோம். இது சிறுவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையின் ஒரு வடிவமாகும். நாம் பொதுவாக ஆண்கள் தாம் பெண்களால்  வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக முறையிடுவதனை நாம் கேள்விப்படுவதில்லை. இதற்கான காரணம் எம்மை சூழ இருக்கும் இவ்வாறான விடயங்கள் தொடர்பாக வேரூன்றி இருக்கும் கலாச்சார ரீதியான குறுகிய சித்தாந்தமாகும். கற்பழிப்பானது ஆண்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியுமென ஓர்  ஊகிப்பு உள்ளது என்பதுடன் இது இன்றைய எமது சட்டங்களினூடாகவும் பிரதிபலிக்கப்படுகின்றது. ஆதலால், ஆண்கள் இவ்வாறன விடயங்களை வெளிப்படுத்துவது தொடர்பில் முன்வருவதில்லை.

இந்த சிக்கலை எதிர்த்துப் போராடவும், ஆண்களைப் பேச ஊக்குவிக்கவும் செய்யவது தொடர்பில் நீங்கள் பரிந்துரைப்பதென்ன?

 ஆரித – பாடசாலைக் கல்வி. பாடசாலை மூலமாகவோ உறவுகளுக்கூடாகவோ அல்லது கல்வியினூடாகவவோ நாம் பாலியல் கல்வியைப் பெறவில்லை என்பதனை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம். ‘சம்மதம்’  என்றால் என்ன என்பதனை நாம் அறிந்திருக்கிறோம். அநேக ஆண்களும் பெண்களும் ‘இணக்கம்’ எனும் பதத்தின் அர்த்தத்தினை அறியாதிருக்கின்றனர். பல சிறுவர்கள் ஆபாச இணையத்தளங்களினூடாகவே உறவுகளைப் பற்றி அறிந்து கொள்வதுடன் அநேக ஆபாச தளங்கள் வன்முறையை உள்ளடக்கியவையாகவும் காணப்படுகின்றன. ஆனால் உண்மையில் அவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது ஓர் கற்பனையான விடயத்துடனேயே. சம்மதம் பற்றியோ அல்லது ஒழுக்கமான உறவுமுறைகளைப் பற்றியோ எதுவும் கற்பிக்கப்படாத ஓர் சிறு பிள்ளை இவற்றை சாதாரண பாலியல் மற்றும் பாலினம் சார்த்த விடயமாக நோக்குகின்றமையானது, அவர்கள் தமது துணையுடன் நடந்து கொள்ளும் விதத்தில் தாக்கம் செலுத்துகின்றது.

கல்வி அறிவின்மை பெண்களுக்கெதிரான வன்முறையை நிலைபெறச் செய்கின்றது.

பாலியல் வன்முறைக்கும் வீட்டு வன்முறைக்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா அல்லது இவை இரண்டும் ஒன்றா?

ஆரித – அவை ஒன்றல்ல. சூழல்கள் வேறு. பாலின அடிப்படையிலான வன்முறை எங்கும் நடக்கலாம். இது பஸ்ஸிலோ, கடற்கரையிலோ நடக்கலாம். வீட்டு வன்முறையானது ஒரு தனிப்பட்ட  உறவுக்குள் ஒரு தனிப்பட்ட இடத்தில் நடக்கின்றது. இது வீட்டில் இடம்பெற வேண்டுமென்றில்லை. ஆனால் அது நெருங்கிய  துணைகளுக்கிடையே நடக்கின்றது.

தமது துணைக்கு எதிராக வன்முறைக்கான முறைப்பாட்டினை மேற்கொள்வது தொடர்பாக ஒரு குறுகிய எண்ணப்போக்கு காணப்படுகின்றது? இந்த மக்களுக்கு நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன

ஓர் சட்டத்தரணி என்ற வகையில் நான் கூறுவது யாதெனில், நீங்கள் இது தொடர்பாக முறைப்பாடு செய்ய வேண்டும் என்பதாகும். எனினும், ஒவ்வொருவரதும் சூழ்நிலைகள் வித்தியாசமானவை என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பில் நமக்கு அனுதாபம் செலுத்தக்கூடிய பொலிஸாரும் தேவை. ஏனெனில், பெண்கள் இவ்வாறான முறைபாடுகளுடன் பொலிஸாரிடம் சென்று திருப்பி அனுப்பப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பொலிஸார் பிரச்சனையை தீர்க்க துஷ்பிரயோகத்திற்கு உட்படும் துணையை மத்தியஸ்தப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கிறார்கள். குடும்ப வன்முறையின் எவ்வடிவமும் குற்றமாகும். அவ்வாறானதோர் விடயம் நெருங்கிய நபர்களிடையே நடைபெறுகின்றமையானது அதன் குற்றத் தன்மையை குறைக்காது.

 இலங்கையின் ஓரின மற்றும் இருபால் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் திருநர்கள் முதலானோர் உள்ளடங்கலான எல்.ஜி.பி.டி.கியூ சமூகத்தினர் பற்றி சற்றுக் கூற முடியுமா? 

ஆரித  – சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் 25 மாவட்டங்களிலும் ஒரே காரணியின் அடிப்படையில் ஓர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் படி  எல்.ஜி.பி.டி. கியூ சமூகத்தில் 70% வீதமானோர் யாதேனுமொருவிதத்தில் வன்முறையை அனுபவித்ததாகவும் 50% வீதமானோருக்கு வேலை மறுக்கப்பட்டதாகவும் இது காட்டுகிறது. எல்.ஜி.பி.டி. கியூ மக்கள் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளால் கட்டாய குத மற்றும் யோனி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக ஐப்ரோபோனோவுடன் பணிபுரியும் வழக்கறிஞர்கள் அம்பலப்படுத்தினர்.

இந்த சிக்கலுக்கான சட்டக் கட்டமைப்பு என்ன?

வாசனா – முதலில் நீங்கள் அருகிலுள்ள பொலிஸ் அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் 119 என்ற ஹாட்லைனை அழைக்கலாம். அல்லது பொலிஸ் தலைமை அலுவலகத்தை 0112 421111 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். வீட்டு வன்முறைக்கு என்று பிரத்தியேக தொலைபேசி இலக்கம் ஒன்றுள்ளது, 1938 ஆகும்.

நாம் இன்று ஓர் இலத்திரனியல் உலகிலேயே வாழ்கின்றோம். இணையத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றி விரிவாகக் கூற முடியுமா?

ஆரித – நாம் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சுடன் இணைந்து சைபர் பகிடிவதைகளுக்கு எதிராக போராடுவதுடன் சைபர் பகிடிவதைகளை குற்றச் செயலாக்குவதற்கும் ஆபாசத்தள மற்றும் இணையத்தின் வாயிலாக தொந்தரவு செய்தல் ஆகியன தொடர்பிலும் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஸ்மார்ட் போன் பாவனையின் பெருக்கத்தின் விளைவாக இது ஓர் பிரச்சனையாய் மாறியுள்ளது. பாடசாலை மைதானங்களில் இடம்பெற்ற பகிடிவதைகள் தற்போது சமூக வலைதளங்களில் ஒருவரை அவதூறாகப் பேசுதல், அவமரியாதையான சொற்களால் அழைத்தல், வன்முறை மிக்க அல்லது வெட்கப்படுத்தும் குறுஞ்செய்திகளை அனுப்புதல் போன்ற விடயங்களை இன்று நாம் காண்கின்றோம். இன்று பல பாலியல் ரீதியான வன்முறைகள் சமூக வலைதளங்களில் இடம்பெறுவதனைக் காண்கின்றோம். இன்று பாடசாலை மாணவிகளின் நிர்வாணப் படங்களைப் பகிரும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களாலான கும்பல்கள் இயங்குவதனைக் காண்கின்றோம்.

இவர்கள் பாடசாலை செல்லும் சிறுமிகளை உறவு கொள்வதற்கு தூண்டி அவர்களது நிர்வாணப்படங்களை அனுப்புமாறு மிரட்டுகிறார்கள். பாலியல் ரீதியான வேண்டுகோள்களை இம்மாணவிகள் நிறைவேற்றாதவிடத்து, அவை பாலியல் வன்முறையின் ஒரு தொடர் நிகழ்வாக அமைந்துவிடுவதுடன் மிரட்டிச் செய்யப்படும் ஆபாச நடவடிக்கைகளாகவும் மாறுகின்றன. துரதிஷ்டவசமாக, நாம் எமது சிறுவர்களுக்கு ஸ்மார்ட் போன்களின் நன்மை தீமைகளை எடுத்துரைக்காது அவற்றை கொடுத்துவிடுகின்றோம்.

இணை-ஆசிரியர்கள்: ஸீநத் சாகிர், அஞ்சலி உடவத்த மற்றும் ஷாலோமி தாசன் (இலங்கை சட்ட மாணவர்கள் சங்கத்தின் ப்ரோ போனோ மன்றம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php