அனைத்தையும் நாடி  இலங்கையின் அபிவிருத்திக்கு குறுநிதியின் பங்களிப்பு

இலங்கையின் அபிவிருத்திக்கு குறுநிதியின் பங்களிப்பு

2021 Jul 10

Covid-19 வைரஸ் ஆனது நோய் என்ற போர்வைக்கு அப்பால் பசி, துன்பம், தனிமை, வறுமை போன்றன ‘தனக்கும் நேர்ந்து விடுமோ?’ எனப் பலரைச் சிந்திக்க வைத்துள்ளது. பயணக்கட்டுபாடு இருந்தால் என்ன இல்லாவிடினும் என்ன Online Grocery, வீட்டில் இருந்தவாறே வேலை, மாத இறுதியில் சம்பளம் என சொகுசான வாழ்க்கைமுறைக்கு பழகிவிட்டனர். இதன் தாக்கம் உண்மையாகவே புறக்கோட்டையில் நாள் கூலி செய்யும் தொழிலாளருக்கும், Galle Face இல் இறால் வடை விற்று தனது நாளாந்த வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் மக்களின் வயிற்றிலேயே அடித்துள்ளது. இவ்வாறு அவதியுறும் மக்களுக்கு உதவும் கரமாக அமைந்து இருக்கும் குறுநிதி மற்றும் மைக்ரோ நிதி (Micro Finance) தொடர்பான பார்வை இதோ,

இச் செயற்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெரும் நபர்களுக்கு வளங்களைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் மூலதனத்தை அமைத்துக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை நிறுவுதல் ஆகும். இது 1970 ஆம் ஆண்டுகளில் வறுமையை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதோடு, குறுங்கடன் (Micro Loan), குறுஞ்சேமிப்பு (Micro Savings) மற்றும் குறுங்காப்புறுதி (Micro Insurance) போன்ற வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மூலம் எதிர்காலத்தில் தன்நிறைவுப் பொருளாதாரம் ஒன்றை உருவாக்க முடியும் என்பதே இதன் மற்றொரு நோக்கமாக அமைந்தது.

ஏனைய ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில் இலங்கை சிறு நாடாக அமையப்பெற்றுள்ளதுடன், வளர்ந்து வரும் நாடாகவே திகழ்ந்து வருகின்றது. 21.8 மில்லியன் சனத்தொகையை கொண்டுள்ள எம் நாட்டில் 81.42% வீதமானோர் கிராமப்புறங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். 26 வருடகால யுத்தம், 2004 ஆம் ஆண்டு 38,000 பேரைக் காவுகொண்ட ஆழிப்பேரலை, தற்போது எம்மை துவம்சம் செய்யும் Covid-19 என்று அனைத்து கொடூரங்களும் இலங்கையின் பாமர மக்களையே வெகுவாக பாதித்துள்ளது.

இலங்கை மற்றும் ஏனைய வசதி குறைந்த நாடுகள் இக் குறுநிதி (Micro Finance) சேவையினை முறைசார்ந்த துறை(Formal Sector) எனவும் முறையில்லா துறை எனவும் (Informal Sector) வகைப்படுத்தியுள்ளனர். அதனடிப்படையில் முறைசார்ந்த துறையில் வர்த்தக வங்கிகள், பிராந்திய அபிவிருத்தி வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் (NGO) பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன. அதுபோலவே நண்பர்கள், உறவினர்கள், முதலாளி, முதலீட்டாளர்கள் மற்றும் தனவந்தர்கள் மூலம் கிடைக்கும் நிதிசார் உதவிகள் முறையில்லா துறை என்றும் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவர திணைக்களத்தினால் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் சனத்தொகை 6.7% எனவும், குடும்பங்கள் என்ற அடிப்படையில் 5.3% எனவும் மேற்கோள்காட்டியுள்ளது. ஏனைய நாடுகளை விடப் பெண்கள் அதிகம் கொண்ட எம் நாட்டில் பெண்களே இக் குறுநிதி சேவை மூலம் அதிக பயன் பெறுகின்றனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறு நிதி (Micro Finance) சேவையின் வரலாறு
இதன் பின்னணி மிகவும் நீண்ட வரலாற்றைக்கொண்டுள்ளதுடன் ஆங்கிலேயக்காலணி காலப்பகுதி தொடக்கம் நடைமுறையிலிருந்து வருகின்றது. குறு நிதி துறையை வளர்த்த பெருமை 20ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ‘சீட்டு’ முறைமையே சாறும். இதன் மூலமாகவே பாமர மக்கள் சேமிப்பு மற்றும் மூலதனத்தை உருவாக்கும் படிமுறைக்கு உள்வாங்கப்பட்டனர். 1980களில் குறைந்த வருமானம் படைத்தவர்கள் நிமிர்த்தம் ஆரம்பிக்கப்பட்ட ‘ஜனசவிய’ (பொருள் ‘மக்களின் சக்தியாகும்’) செயற்திட்டம், காலப்போக்கில் ‘சமுர்த்தி’ ஆக மறு உருவம் பெற்றது. இக் குறு நிதி சேவை இலங்கை மக்களைத் தற்கொலை மற்றும் வறுமையிலிருந்து பாதுகாத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2005 ஆண்டு தொடக்கம் 2009 காலப்பகுதியில் நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் குறுநிதி வழங்கும் நிறுவனங்களின் வளர்ச்சி வெகுவாக அதிகரித்துள்ளது என்பதைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும் கடன் தொகை குறைவாக இருப்பதுடன் இச் சலுகைகளை பெறுவதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டு 06ம் இலக்க குறுநிதி சட்டம்
குறுநிதி நிறுவனங்களைப் பதிவு செய்வதில் பல இன்னல்கள் இருந்தாலும் 2016ம் ஆண்டு 06ம் இலக்க குறுநிதி சட்டம் ஜூலை மாதம் 15ம் திகதி 2016 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டதால் இவ் அனைத்துக்கும் ஒரு விடிவு காலம் அமைந்தது. இதன் மூலம் நிறுவனங்களை உரிமம் செய்தல், ஒழுங்கு முறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை செய்யும் அதிகாரங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் இவை உரிமம் பெறப்பட்ட குறு நிதி கொம்பனிகளாக அழைக்கப்படுவதுடன் மத்திய வங்கியின் கண்காணிப்பில் இயங்கி வருகின்றன.

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் குறுநிதி சார்ந்த வழிமுறைகள்

கிராமிய வங்கிகள்
இவ் வங்கி முறையில் ‘அனைத்து சமுதாயமும் ஒரு அலகு’ என்ற தொணிப்பொருளில் இயங்கிவருகின்றது. இவை முறையாகவும் (Formal) அறை முறையாகவும் (Semi Formal) தங்களது வசதி/மூலதனத்திற்கு அமையஇயங்கி வருகின்றது. மக்களின் சேமிப்பு வங்கியாக இருப்பதோடு அவசரத்திற்குச் சிறு கடன் பெரும் நண்பனாக உதவிக் கரம் நீட்டி வருகின்றது.

கராம்மின் வங்கி (Grameen Bank) முறைமை
பேராசிரியர் மொஹம்மட் யூனுஸ் என்பவரினால் பங்களாதேஷ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இக் குறுநிதி நிறுவனம், துணை ஈடு அற்ற (Non Collateral) முறைமையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

குழு அடிப்படையிலான கடன் வசதி
ASA முறைக்கு அமையத் தனி நபர் அல்லாது, 25 – 30 நபர்களை மையமாக வைத்து கடன் வழங்கும்செயன்முறைமை

தனி நபர் கடன் வசதி
நேரடியாகக் கடன் கொடுப்பவரிடம் இருந்து பணம் பெரும் செயன் முறையை இது குறிக்கும்.

சுய உதவிக் குழு (Self Help Group) SHG’s
10 தொடக்கம் 20 பெண்மணிகளைக் கொண்டுள்ளதுடன் தங்களுக்குத் தேவையான சேமிப்பு மற்றும் கடன்தேவைகளைக் குழுவிற்குள்ளேயே பூர்த்தி செய்துகொள்வார்கள்.

கடன் சங்கங்கள் (Credit Unions) மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் (Cooperatives)
தனி நபர் உந்துதல், சுய உதவி நிதி நிறுவனம்.

சீட்டு
மிகவும் பிரபலியமான வழக்க முறைமை. ஒவ்வொரு மாதமும் அனைவரினதும் பங்களிப்புடனும் பெரியதொரு தொகை சேமிக்கப்படும். இவ்வாறு சேமிக்கப்பட்ட பணம் ஒவ்வொரு மாதம் ஒருவர் வீதம் சுழற்சி முறையில், பெரும் தொகையாக வழங்கப்படும்.

இலங்கையின் மத்திய வங்கியினால் பட்டியல் படுத்தப்பட்ட குறுநிதி கம்பனிகளின் விபரங்கள் இதோ https://www.cbsl.gov.lk/en/authorized-financial-institutions/licensed-microfinance-companies.
கொவிட் பரவலின் தாக்கத்தினால் மக்களின் துயர் நீக்கம் செய்யும் நோக்கத்தில் பல குறுநிதி நிறுவனங்கள்உருவாகத்தொடங்கியுள்ளன. இவற்றை முறையாக நெறிமுகப்படுத்தி ஒழுங்குமுறை படுத்தமுடியுமென்றால் இலங்கையை வறுமையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php