2021 Jul 14
” உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே “
“நீயின்றி நானுமில்லை என்காதல் பொய்யுமில்லை. “
இப்பாடல் வரிகள் காதலர்களுக்கு பொருந்துவதை விட 24/7 கையில் வைத்திருக்கும் தொலைபேசிக்கு பொருந்தும்.
இளைஞர்களுக்கு தானே இந்த பிரச்சனை எல்லாம், வயோதிபர்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள் தானே என்று கேட்டால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு போட்டியாக செல்லில் இருப்பவர்கள் அறுபதுகளை தொட்டவர்கள் தான் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்லுகிறது. என் கருத்துக் கணிப்புப்படியும் அதுதான் உண்மையாக தெரிகிறது.
அப்போதெல்லாம் ஒருவரது வீட்டுக்கு சென்றால் அவர்களின் வீட்டின் அழைப்பு மணி என்ற வஸ்துவை பயன்படுத்தி தான் நாம் வந்திருப்பதை தெரிவிப்போம் இன்று நிலை அப்படியில்லை. வீட்டி வாசலில் வந்து நின்று ரிங் கட் செய்வதன் மூலம் வருகையை தெரிவித்து வருகிறோம். ”ரிஸ்ட் வாட்ச்” கட்டிய கையோடு செல்லை அழுத்தி நேரம் பார்ப்பது எத்தனை ”ரிஸ்ட் வாட்ச்”களுக்கு அவமானமாக இருக்கிறது என்று யாருக்கு தெரியும்.
வழக்கம் போல செல்போனின் என்றதும் தீமை என்று பேசுவதாக எண்ண வேண்டாம். ஆயிரம் நன்மைகள் கொட்டிக்கிடக்கும் இந்த செல்போனுக்கும் நாம் வழங்கும் நேரத்தில் தான் நன்மையும் தீமையும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அளவுக்கு மிஞ்சுமிடத்து அமுதும் நஞ்சல்லவா?
ஆனால் நாம் பேச நினைப்பது அதல்ல. செல்போன் இல்லாமல் ஒரு நாள் என்பது எத்தகையதாக இருக்கும். பார்க்கலாம்…
இதோ, இப்போதே இந்த நிமிடமே உங்கள் செல்போனை தூக்கி போடுங்கள். இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு உங்களுக்கும் உங்கள் செல்போனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். கப்பல் மேல் வியாபாரம் செய்பவராகவும் இருக்கலாம். அல்லது ஒரு எளிமையான விவசாயியாகவும் இருக்கலாம். யாராக இருந்தாலும் ஒரு நாள் உங்கள் கைப்பேசி மடிந்துவிட்டாள் அந்த நாளில் நீங்கள் என்னவெல்லாம் இழந்திருப்பீர்கள்? என்ன புதிதாய் பெற்றிருப்பீர்கள்?
வெள்ளிக்கிழமை மாற்றிய முகப்புத்தக படத்திற்கு சனிக்கிழமை எத்தனை கமண்டுகள் பெற்றிருப்பீர்கள் என்பதை பற்றி சொல்லவில்லை என்பதை அறிக.
சேவலின் கூவலுக்கு எழுந்த காலம் சென்று இன்று செல்போனில் அலாரம் வைத்து எழும்பும் காலம் வந்துவிட்டது. அப்படி இருக்கும் போது செல்போன் அலாரம் இல்லாமல் நாள் தொடங்கினால் ஆங்கிலத்தில் கூறுவது போல் rest is history தான்.
அரக்கப்பறக்க தயாராகி, செல்லை பார்த்தபடி குடிப்பது டீயா காப்பியா என்று தெரியாமல் குடிக்கும் வழக்கம் மாறி போய், உண்மையில் என்ன குடித்தோம் என்று ஒவ்வொரு மிடராக ரசித்து குடித்து, இயன்ற அளவு வேகமாக ஓடி பஸ்சை பிடித்து அதில் இடமும் கிடைத்து அமர்ந்து செல்லைத்தேடும்போது தான் ஞாபகம் வரும். அடடா இது அந்த செல்லற்ற ஒரு நாள் ஆயிற்றே என்று.
நம்மூர் பஸ்ஸில் ஒலிக்கும் கேட்கமுடியாத பாடல்களில் இருந்து தப்பித்து ஏ.ஆர் ரகுமானிடமோ இளையராஜாவிடமோ ஐக்கியமாகலாம் என்றெண்ணி பாக்கெட்டுக்குள் சிக்கி முக்கி நாகினி பாம்பை போல வளைந்துக்கொண்டு இருக்கும் இயர் போனை வெளியே எடுத்தால் தான் தெரியும் அடடா இது அந்த செல்லற்ற ஒரு நாள் ஆயிற்றே என்று. பிறகு என்ன செய்ய முடியும்? இயற்கை ஒலிகளுடன் இன்புற்று இருக்கவேண்டியது தான். சரி பக்கத்தில் இருப்பவரிடம் பேசலாம் என்றால் அவரிடம் செல்போனும் இயர்போனும் இருக்கும் என்பதால் அது முடியாது.
ஆபிசிற்கு நேரத்திற்கு சென்றவுடன் தன் காதலிக்கோ காதலனுக்கோ அனுப்பும் மெசேஜுகளும், அம்மா இடைக்கிடையே மாலை வரும்போது வாங்கி வர சொல்லும் சாமான்களும், 10 பேருடன் பகிர்ந்தால் நாளை காலை நல்ல செய்தி கிடைக்கும் என அப்பா அனுப்பும் வாட்ஸாப் மெசேஜை பார்க்காமல் விட்டால் கூட பரவாயில்லை. ஆனால் உயிர் நண்பனின் பிறந்தநாளை நினைவுபடுத்த செல்போன் இல்லாமல் மாலை கிடைக்க காத்திருக்கும் தர்ம அடிகளை நினைக்கும் போது தான் நினைவில் வரும் பள்ளி பருவத்தில் டயரியில் குறித்து வைக்கும் பழக்கமும் எப்பொழுதும் அதோடு இருக்கும் பேனாவும்.
வேலை முடித்து வீட்டுக்கு போகும் வழியில் எதோ ஒரு விபரீதம் நடந்துவிட்டது என வைத்துக்கொண்டால் அதை வீட்டாருக்கு எப்படி அறிவிப்பது. என் செல்லின் எண் தவிர வேறு யாருடைய செல்லின் எண் தெரியும்? எல்லாம் அந்த செல்லில் தான் உள்ளது!. அப்பாவின் எண் தெரியாது, அம்மாவின் எண்? தெரியாது. வீட்டு லேண்ட் நம்பர்? அப்படி ஒரு அம்சம் இருந்ததாக நினைவில்லை. காதலியின் எண்? ஆரம்ப காலத்தில் நினைவில் இருந்தது இப்போது தெரியாது. சொல்லப்போனால் நான் யார் என்பதையே என் செல்லிடம் தான் கேட்கவேண்டும். நம் முன்னோர்கள் எல்லாம் இந்த செல்போன் இல்லாமல் எப்படித்தான் வாழ்ந்தார்களோ!
இரவு படுக்க போகுமுன் ஸ்வைப் செய்து பார்க்க போகும் Facebook போஸ்ட் நினைவுபடுத்தும், போன் இல்லாமலும் நினைவுகளை நிச்சயமாக ஞாபகம் வைக்கலாமென்று. நினைவு வைத்துக்கொள்வதில் கூட நமக்கு எத்தனை சோம்போறி தனம். எல்லாவற்றையும் அதை பார்த்து தான் தெரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. அது இருக்கும் போது மூளைக்கு ஏன் தேவையில்லாத வேலை என்ற எண்ணம் தான்.
இரவு இரண்டு மணிக்கு நேரத்துக்கு தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்ற தலைப்பில் வீடியோக்களை பார்த்து பழக்கபட்டு இப்போதும் செல்லும் இல்லை தூக்கமும் இல்லை என்ற நிலை வந்ததும் என்றோ எப்போதோ வாங்கி வைத்த ஒரு நாவல் நினைவுக்கு வரும். அதை தேடி எடுத்து பக்கம் புரட்டி படித்து மகிழ்ந்த வேலையில் எப்போது தூக்கம் வந்தது என்று தெரியாமல் தூக்கிப்போயிருப்போம். காலை எழுந்ததும் கையில் முதலில் அகப்படும் செல் நேற்றைய நாளின் அக்கபோரை நினைத்து பார்க்க செய்யும். பிறகென்ன அதே செல் அதே செயல் தான்.
இது ஒரு சராசரி மனிதன் தன் தொலைபேசி தொலையும் போது கண்டெடுக்கும் அம்சங்கள். ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும். அக்கப்போர்கள் வேறுபடும். தொழிநுட்பமும் வளர்ச்சியும் தவிர்க்கமுடியாதவை ஆனால் அவை நம்மீது கொள்ளும் தாக்கத்தை நாம் தான் முடிவு தீர்மாணிக்கிறோம். செல்லுக்குள் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும் நமக்கு செல் அற்றும் வாழ தெரியவேண்டும் என்பது தான் உண்மை. அடிக்கடி அம்மா சொல்வது போல் “அந்த போன் இல்லாமல் ஒருநாள் இவன் வாழனும் ” என்ற வசனம் உண்மையாகும் போது தான் நமக்கு தெரியும் அந்த நாள் எப்படி இருக்குமென்று.