அனைத்தையும் நாடி  வளம் மிக்க சமுதாயமேடை. அதன் தூண்களாக இளைஞர் படை.

வளம் மிக்க சமுதாயமேடை. அதன் தூண்களாக இளைஞர் படை.

2021 Jul 15

நாளாந்த வாழ்வியலில் தினமும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் ஏதோ ஒரு வகையில் பிணைக்கப்பட்டதுமாகவே  நம்முடைய நாட்கள் நகர்கின்றன. இவ்வாறான தருணங்களில் இளைஞர்களுடனான அணுகுதல் நிச்சயமாக உம்மை ஆச்சரியப்பட வைத்திருக்கும். ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பான இளைஞர்களின் பார்வைகள்  கருத்துக்கள், முயற்சிகள்,  என அனைத்துமே முற்றிலும் வேறுபட்டதாக அமைவதில் ஐயமில்லை.  இதிலும் குறிப்பாக இன்றைய காலகட்டங்கள் என்று அணுகும்போது இளைஞர்கள் தொடர்பிலான பரவலாக எதிர்மறையான கருத்துக்களையே காணமுடிகிறது.  காரணம் அதிகரித்துவரும் சமூகப் பிறழ்வுகள் எல்லாம் ஆரோக்கியமான வளமான எதிர்காலத்தை செதுக்க வேண்டிய துடிதுடிப்பான கரங்களை நவீனம் ஆட்கொண்டு போதையில் சிக்குண்டு சமூகவலைத்தளங்களின் போர்வைக்குள் உறங்கும் படியாக ஆகிப் போவதென்பது மென்மேலும் அதிகரிப்பதே.

முற்றிலும் எதிர்மறையாக தான் இளைஞர்கள்  இயங்குகிறார்களா?  நிச்சயமாக இல்லை. சமூக சேவைகள், இரத்த தானங்கள், வறியோர்க்கு வலுவளித்தல்,  புதிய கண்டுபிடிப்புகள், விவசாயம் என பல்வேறுபட்ட ரீதியில் ஆக்கபூர்வமான சிந்தனைகளை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். எனினும் ஒட்டுமொத்த இளைஞர்கள் என்ற பார்வையில் இளைஞர்கள் மத்தியில் களைந்தெறியப்படவேண்டிய களைகளும் மேம்படுத்தப்பட வேண்டிய ஆளுமைத்திறன்களும் ஏராளம் இருக்கவே செய்கின்றன.

முதலில் இளைஞர்கள் என்றால் யார் என்று நோக்க வேண்டியது அவசியம். அதன்படி 15 வயது தொடக்கம் 25 வயதிற்குட்பட்ட அனைவருமே இளைஞர்கள் என ஐநா சபை வரையறுத்துள்ளது. னஅவை தவிர உலகளாவிய மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கினர் இளைஞர்களாகவே இருக்கின்றனர். அதேவேளை அதிலும் பெரும்பாலான இளைஞர்கள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலேயே வாழ்கின்றனர். ஆக இத்தகைய நாட்டின் வளர்ச்சயையும்  வீழ்ச்சியையும் தீர்மானிக்கும் மாபெரும் சக்திகளாக இளைஞர்களே உள்ளனர்.

இவ்வாறாக இன்றைய இளைஞர் சமுதாயம் எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளது என ஆராய்கையில் மிகவும் திறமை மற்றும் துணிச்சல் மிக்கவர்களாக இருக்கும் அதேநேரம் கருத்துக்களை தயக்கமின்றி வெளிப்படுத்த கூடியவர்களாகவும் இயலுமைளிற்கு மாறுபட்ட சூழலை ஏற்றுக்கொள்ள முன்வருபவர்களாகவும் மாற்றங்களை விரும்புபவர்களாகவும் இருப்பதோடு  கடின உழைப்பு மற்றும்  திறமைகளை வெளிக்காட்டுவதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தமது முழு பங்களிப்பை செலுத்துபவர்களாகவே  இருக்கின்றனர். அதேநேரம் விரும்பத்தகாத எதிர்மறை வழக்கப்பாடுகளையும் இலகுவில் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் உள்ளமை கவலைக்குரியது.

போதைவஸ்துக்கு அடிமையாதல், அதிகரித்து வரும் நவீன முன்னேற்றங்களில் செல்போன் மற்றும் நவீன சமூக ஊடகங்களின் மீதான மோகம், கலாச்சார பிறழ்வு, சுயநலச் சிந்தனைகள், ஆக்கபூர்வ செயற்பாடுகளில் ஆர்வம் குறைவு போன்ற இளைஞர்களது சுய ஆளுமை விருத்திக்கு பெரும் சவாலாகவே உள்ளது. இவ்வாறாக இளைஞர்கள் சமூகப் பிறழ்வுகள் எனும் வலைகளை தாண்டி ஏராளமான ஆக்கபூர்வ விளைவுகளை படைப்பதற்கு இளைஞர்கள் தத்தமது தனிநபர் ஆளுமை மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் பயன்மிக்கது.

சமூக சீர்கேடுகள் குறைந்து சமூகம் மற்றும் ஏனைய தனிப்பட்ட மேம்பாட்டுக்காக இளைஞர்கள் தமது அகம் மற்றும் புறம் சார்ந்த அளவில் முன்னேற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் அவசியம். அதன்படி தத்தமது வாழ்வியலுக்கான இலக்குகள் சார்ந்த செயற்பாடுகளில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். வளர்ச்சியை முன்னெடுக்கும் சமூக விருத்திகள் தொடர்பான செயற்பாடுகளில் பங்கு எடுப்பதன் மூலம் சமூகம் சார்ந்த அறிவு விருத்தி என்பதுடன்ஒரு சமூக முன்னேற்றம் தொடர்பில் இளைஞர்களின் பங்களிப்பும் அதிகரிக்கும். சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும் நன்மை பயக்கும் கல்வியை இளைஞர்கள் பெறுவதற்கு முன் வருதல் நன்று. முறையான கற்றல் கற்பித்தல் செயல்முறைகளின் மூலம் சமூக அளவில் பாரபட்சமின்றி செயற்படவும் இலக்குகளை தீர்மானித்தல் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் போன்றவற்றில் சரியான தீர்மானங்களை பின்பற்றவும் இயலும்.

இன்றைய இளைஞர்கள் சுய கட்டுப்பாடு விழுமியங்கள், கூட்டு செயன்முறைகள், புரிதல் போன்ற சுய திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை புத்தாக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளுதல் நன்று.  கிடைக்கும் வாய்ப்புகளை பூரண படுத்தினால் மட்டும் போதுமானது என்று செயற்படும்போது இளைஞர்கள் தமது ஆற்றல்களை வெளிக்கொணர்வதற்கும் இனம் காண்பதற்கும் தவறுகின்றனர். தவிர முழு ஈடுபாட்டுடன் திறமைகளை வெளிக்காட்டும் போது குறித்த விடயம் தொடர்பில் ஈடுபாடு வளரும்.  இதன் விளைவாக விரும்பத்தகாத பழக்கவழக்கங்கள் தொடர்பான இளைஞர்கள் சிக்கலானது பெருமளவில் குறைய வாய்ப்புகள் அதிகம்.

இளைஞர்கள் இயலுமைகளை வெளிகாட்டுதலில் குடும்பம் மற்றும் சமூகத்தினரின் பங்கு இன்றியமையாதது. குறித்த இளைஞரது இளமைபருவத்தில் குழந்தைப் பருவத்தின் போது தன் பெற்றோர் மற்றும் சமூகத்தவர்களால் முன்வைக்கப்பட்ட  நேர்மறை எதிர்மறை கருத்துக்கள் பெரிதும் தாக்கம் செலுத்தும். நேர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து எதிர்மறையான கருத்துக்களைத் திணிக்கும் போது அவை தாழ்வு மனப்பான்மை மற்றும் பின்னிற்றல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.”  உன்னால் முடியும்,  நிச்சயமாக வளமான எதிர்காலத்தினை உன்னால் அமைக்க இயலும், உன்னால் மற்றவர்களுக்கு உதவி செய்யவும் வழிகாட்டவும் இயலும்”  போன்ற நேர்மறை கருத்துக்களால் அவர்களின் எதிர்காலமே நிச்சயமாய் வளமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இளைஞர்கள் ஒவ்வொருவரும் சமூகத்தின் தற்போதைய தேவை என உணர்தல் நன்று. செல்போன் சுவர்களையும் தாண்டிய சமூகத்தின் கட்டமைப்பை இளைஞர்கள் அவதானிக்க வேண்டும். கல்வியில் பின்தங்கும் மாணவர் தொகை உயர்வு, தொடர்ச்சியான வேலையற்றோர் தொகை பெருக்கம், வறுமை, குழந்தை தொழிலாளர்கள் போன்ற ஏராளமான சமூக பிரச்சினைகள் பரந்து காணப்படுகையில் இளையோரே இவை தொடர்பான விழிப்புணர்வுடன் செயற்படுமாறு தம்மை தாமே மேம்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.  இவ்வாறான சமூக பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய திறமையும் துடிதுடிப்பும் ஆர்வமும் மிக்க இளைஞர்களே சமூகத்தின் தேவையாக உள்ளனர். இளைஞர்கள் தவறான பாதையை நோக்கி செல்கின்றனர் என்றும் இளைஞர்கள் ஆக்கபூர்வ விளைவுகளை வெளிப்படுத்த  தயங்குகின்றனர் என்று மட்டுமே தொடர்ச்சியாக இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகளை திணிப்பதையும்  தாண்டி  சமூகத்தின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை இளைஞர்களுக்கு தெளிவுபடுத்துதல் சமூகத்தின் கடமையாகும்..

இன்றைய பெருமளவிலான இளைஞர்கள் பலவீனமாக இருப்பதற்கு காரணம் சமூக அரங்கு மற்றும் கட்டமைப்புகள் தொடர்பான குழப்பமான நிலையே ஆகும். பொறுப்புகள் தொடர்பான புரிதல்கள் இல்லாமல் தேவையற்ற விடயங்களில் தம்முடைய துணிச்சலையும் ஆர்வத்தையும் வெளிகாட்டும் இளையோர்கள்  கல்வி, தொழில், சுய முயற்சி தொடர்பாக தம்மீது தாமே கொண்டுள்ள தாழ் மதிப்பீட்டால்  புத்தாக்க  முயற்சிகள் தொடர்பாக பெரிதும் தயக்கம் காட்டுகின்றனர். இது சார்பாக  பல்வேறான நூல்கள் வெற்றியாளர்களின் வாழ்க்கை பக்கங்கள் தொடர்பான அறிவுகளை  வளர்த்துக்கொள்ளுதல் இளைஞர்களுக்கு அவசியம்.

இளைஞர்களுடைய  மனோநிலை என்று அணுகுகின்ற போது வெளிவாரியான செயற்பாடுகளில் எவ்வளவு துணிச்சலை காட்டிய போதும் தனிப்பட்ட மனநிலையில் உறுதிப்பாடு குறைந்தவர்களாகவே உள்ளனர். நேர்மறையான எண்ணங்களை பொருத்திக் கொள்ள இயலாமல் சிற்சிறு சவால்களில் கூட தற்கொலைகள், போதைக்கு அடிமையாதல், பிறழ்வான விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடல் போன்ற செயல்களை நாடிச் செல்கின்றனர். இவற்றை இளைஞர்கள் உணர்தல் அவசியம்.  நான் யார், என்னால் எது இயலும்,  ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்தை என்னுள் நானும் என் சமூகத்திலும் என்னாலும் ஏற்படுத்த இயலுமா போன்ற வினாக்களை எழுப்புவதுடன் சுய விமர்சன அணுகுமுறைகளைக் கைக்கொள்ளுதலும் பயன்மிக்கது. கல்வியில் தேர்ச்சி அடைந்தவர்கள் கூட  இவ்வாறான எதிர்மறை கருத்துக்களை கொண்டிருத்தலிற்கும் வாழ்தல் தொடர்பான விரக்திக்கு தள்ளப்படுதலிற்கும் சுயம் தொடர்பான போதிய தெளிவு இன்மையே காரணம் ஆகும்.

இளைஞர்கள் தம்மைத்தாமே பிறருடன் ஒப்பிடுதலும் பெற்றோர்கள் இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பேசுதலும் பாரிய எதிர்மறையான விளைவுகளை திணிக்கும் அம்சமாக மாறிவிடும். ஒவ்வொரு இளைஞர்களும் தனித்துவம் மிக்கவர்கள். ஒவ்வொருவருக்குள்ளேயும் அற்புதமான ஆளுமைகள் இருக்கின்றன. அவற்றை ஆக்கபூர்வமான முறையில் வளர்ப்பதற்கான சாவிகள் சமூகத்தின் திண்ணையிலேயே இருக்கின்றன அதனை அனைவரும் புரிதல் நன்று.

ஒவ்வொரு இளைஞர்களும் சுதந்திர விரும்பிகளே. அவர்களை நெருடலுக்குள்ளாக்காமலும் பிறப்பான் பாதையில் செல்லாத படிக்கும் வழிநடத்துதல் அவசியம். ஆக ஒவ்வொரு இளைஞர்களுக்கும் பெற்றோர்களின் அருகாமை மிகவும் அவசியமான ஒன்று.  இணையதளத்திலும் சமூக வலைத்தளங்களிலும் தத்தமது ஆளுமைகளை வெளிப்படுத்தும் இளைஞர்களின் திறமைகளை அவர்களே அறியுமாறு அடையாளப்படுத்துதல் பயன்மிக்கது. இளமை பருவத்தின் இன்னல்களை தாண்டிய அருமையை அவர்கள் உணர வேண்டும்.  தொலைபேசியுடன் அவர்கள் செலவழிக்கும் நேரத்தை குறைத்து தொழில் முயற்சிகளில் ஈடுபடுதலிற்கான ஊக்குவிப்புக்கள் நன்று. உலகின் அனைத்து நாடுகளிலும் உயர்கல்வி, தொழிற்கல்வி, பகுதிநேர பயிற்சிகள் போன்றன வழங்க அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் பரவலாக வாய்ப்புகளை வழங்குகின்றன. அவற்றை பயன்படுத்தி பயனுள்ளதாக்குவதற்கான தெளிவு இளைஞர்களிடம் அவசியம்.

உலகமே நவீனமயமாக்கப்பட்ட புதியதொரு யுகத்திற்கு உள்நுழைந்து கொண்டிருக்கும்போது இளைஞர்களை மட்டும் தடுத்தல் நன்றல்ல. ஆனால் அவை ஆக்கபூர்வமான நேர்மறையான நவீனத்துவ ஏற்றுக்கொள்ளுதல் என்றாகுமேயானால்  அது பயன்மிக்க மாற்றங்களை ஏற்படுத்தும். இவை  அறிவு, திறன், சமுதாயம், பொருளாதாரம், விஞ்ஞானம் என அனைத்து வழிகளிலும் எதிர்காலம் என்பது மாறும் கனவு தவிர்ந்த நனவாக மாறும்.

தத்தமது வாழ்க்கையை தானே பொறுப்பேற்று கொண்டு செல்வதற்கான வெளிகளை பெற்றோர்கள் இளைஞர்களுக்கு வழங்குவதோடு அவர்களது பயணம் நேர்மறையாக அமையுமாறு ஊக்குவிப்புகளை வழங்குதல் நன்று. இதன்மூலம் அவர்களின் நம்பிக்கைகளுடன், இலக்குகள் குறித்த முயற்சிகளுக்கான அதிகாரமளித்தல் எனும் தொனியானது  இளைஞர்களின் வாழ்க்கை தரத்திற்கான மேம்பாடு என்பதேயாகும். எவ்வாறாயினும் இளைஞர்களிற்கு அதிகாரமளித்தல் தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்கள் உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் செயற்பாடுகளில் சிறந்த தலைமைத்துவ பயிற்சிகள்,  வாழ்க்கை திறன் விருத்தி செயற்பாடுகள்,  சுயமரியாதை பயிற்சிகளை, முறையான கருத்து தொடர்பாடல் பயிற்சிகள், தனிநபர் சமூக நடத்தை கோலங்கள்,  தொடர்பான செயற்பாடுகளை மேம்படுத்தும் போது வளமான பொறுப்புகளை ஏற்கவும் செயல்படுத்தவும் இயலுமான இளைஞர் படையை உருவாக்க முடியும்.

இளைஞர்கள் செயற்பாடுகள் மூலம் பெண்களின் நல்வாழ்வு மற்றும் சிறுவர்கள் தொடர்பான சமூகப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவும் முடியும். அதன்படி குறிக்கோள்கள் மற்றும் செயற்பாட்டு முறைகள் பற்றிய குறுகிய வட்டத்திற்குள் இளைஞர்களது வெளிப்பாடுகள் மட்டுப்படுத்தப்படாது பரந்துபட்ட வகையில் அமைதல் நன்று. அத்துடன் இளைஞர்கள் பிற இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், கல்வி, பொருளாதாரம்,  வாழ்க்கைத் திறன் போன்றவற்றில் பரஸ்பர உதவிகள் போன்றவற்றை பகிர்தல் நன்று.  ஏழை இளைஞர்களை மேம்படுத்தவும் வாய்ப்புகளை அளிக்கவும் வாழ்வாதார திட்டங்களை அமல்படுத்தவும் இளைஞர்கள் முன்வருதல் மூலம் பின்தங்கிய மக்களின் சமூக சக்தியை மேம்படுத்த இயலும்.  திட்டங்களை ஒழுங்கமைக்க இளைஞர்களது குழுமம் அதிகாரம் மிக்கதாகவும் ஆளுமைச்செறிவு கொண்டதாகவும் அமைதல் நன்று.

இவை தவிர இளைஞர் செயற்பாடுகள் தொடர்பான ஆவணப்படுத்தல்கள் மிகவும் பயன் மிக்கது.  எதிர்கால இளைஞர் படையை ஆக்கபூர்வமான வளப்படுத்த இன்றைய ஆவணப்படுத்தல்கள் அவசியம். இலங்கையை எடுத்து கொண்டால் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாக செயற்படும் அமைப்புக்கள் , சமூக மற்றும் பின்தங்கிய இளைஞர்களை மேம்படுத்தும் திட்டங்கள்,  கல்வி மற்றும் தொழில் முறைகளை மேம்படுத்தும் நடைமுறைகள், அடிப்படைக் கல்வியை வழங்குவதோடு வாழ்க்கைக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கான நிகழ்ச்சி முறைகள் என்பன பரவலாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் இலாப, இலாப நோக்கற்ற முறையில் நடைமுறையில் இருத்தல் வரவேற்கத்தக்கது.

சமூக செயற்பாடுகள் ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் போன்றவற்றில் இளைஞர்கள் பங்குபெறும் போது பலவிதமான நேர்மறை விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சமூகத்தின் பிரச்சினைகள் சிக்கல்களில் இளைஞர்கள் தீர்வுகளை தரக்கூடியவர்களாக ஆளுமை பெறுகின்றனர். இவற்றின் அடிப்படையில் இளைஞர்கள் தாமாக முன்வந்து சமூக கல்வி பொருளாதார அரசியல் மற்றும் பௌதிக அம்சங்களில் தமது செல்வாக்கினை வெளிப்படுத்தலும் பங்குபற்றுதலை கணிசமான அளவில் அதிகரித்தலும் அவசியம்.

இளைஞர்கள் சமூகப் பொறுப்புகளை ஏற்றலும் கடமைகளை பகிர்ந்துகொள்ளுதலும் முடிவெடுப்பதில் பங்குபற்றும் ஆற்றலை அதிகப்படுத்துதலும் ஆரோக்கியமான தலைமுறைக்கு வழிகோலும். இளைஞர்கள் தொடர்பான சமூகப் பிறழ்வுகளை மட்டும் பேசிக் கொண்டிருப்பதற்கு மாற்றீடாக வளமான சமூக உருவாக்கத்திற்கு இளைஞர்களிற்கு  ஊக்குவித்தலும் உந்துதல் அளித்தலும் தற்காலத்திற்கு தேவையான அம்சமாகும். இளைஞர்கள் சரியான வழியில் முறையாக வழிநடத்தப்படும் போது சமூகப் பிறழ்வுகள் கணிசமான அளவு குறைவடைவதற்கு பெரிதும் வாய்ப்புகள் அதிகமே.

அறிவாற்றல், ஆக்கபூர்வ அதிகாரம் அளிக்கும் தன்மை, தொழில்நுட்ப அறிவு,  நாட்டம் போன்றவற்றை சரியான முறையில் செலுத்தும்போது இளைஞர்களுடைய வளர்ச்சி மட்டுமல்லாமல் சமூகத்தின் வளர்ச்சி மட்டுமில்லாமல் மொத்த தேசிய அபிவிருத்தியும் வளர்ச்சியை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை.  இளைஞர்கள் சமூக அளவிலும் தனிநபர் அளவிலும் சமூக தனிப்பட்ட முன்னேற்றங்களை முன்னெடுத்தல் நன்று.  மாபெரும் ஆற்றல் மிக்க இளைஞர் படையை உருவாக்குவதற்காக ஒன்றிணைவோம். மாற்றங்களை நோக்கி பயணிப்போம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php