சட்ட ஒளி

2021 Jul 18

சட்ட ஒளி என்பது எமது நாட்டின் பொதுமக்களுக்கு சட்டம் பற்றிய அறிவூட்டும் நோக்குடன் இலங்கை சட்ட மாணவர்கள் சங்கத்தின் ப்ரோ போனோ குழுவால் ஒழுங்கமைக்கப்படும் ஓர் மும்மொழிக் கலந்துரையாடல்களின் தொடராகும். இந்தக் கட்டுரையானது ”குற்றம் மற்றும் சட்டம்” எனும் தலைப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இன்ததிஸ்ஸ (குற்றவியல் வழக்கறிஞ்சர் மற்றும் கொழும்பு வர்த்தகக் கல்லூரியின் ஆலோசகர்), ஜனாதிபதி சட்டத்தரணி திரு. பிரசந்த லால் டி சில்வா (இலங்கையின் சீஷெல்ஸிற்கான தூதுவர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தில் வருகை தரும் விரிவுரையாளர்) மற்றும் திரு. கனகசபை ஷண்முகரட்ணம் (பகிரங்கப் பொதுச் சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் முதலான துறைகளில் வழக்கறிஞராக கடமையாற்றுபவர் மற்றும் கொழும்பு சட்ட சங்கத்தின் முன்னாள் தலைவர் – 2005) முதலான சட்டத்தரணிகளுடனான  கலந்துரையாடலினை அடிப்படையாகக் கொண்டதாகும்.

குற்றம் என்றால் என்ன?

ஒரு குற்றம் முழு சமூகத்திற்கும் எதிரான குற்றமாகும். ஒரு நபர் சமூக ஒழுங்கை சீர்குலைக்கும் போது அது ஒரு குற்றமாகின்றது. தவறு செய்ததற்காக ஒருவரை தண்டிக்கும் பொறுப்பை அல்லது அநீதி இழைக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்குவதற்கான பொறுப்பை அரசு ஏற்கின்றது.

குற்றத்தின் வகைகளை எம்மால் விரிவாகக் குறிப்பிட்டுக் கூற முடியுமா?

குற்றத்தில் தனிப்பட்ட குற்றங்கள், சொத்துக் குற்றங்கள், ஆரம்ப நிலைக் குற்றங்கள் (Inchoate crimes), சட்டக் குற்றங்கள் மற்றும் நிதி சார்ந்த குற்றங்கள் எனப் பிரிக்கலாம் என்பது அடிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிந்தனை வாதம்.

தனிப்பட்ட குற்றங்கள் எனப்படுபவை ஒரு நபரைத் தாக்குதல், கடத்தல் மற்றும் வீட்டிலுள்ளவர்களைப் பாதிக்கும் வீட்டு குற்றங்கள் முதலானவை ஆகும்.

சொத்துக் குற்றங்கள் பாரதூரமான தன்மையினைக்  கொண்டவையாகும். உதாரணமாக, பிறிதொருவருக்கு சொந்தமான சொத்திற்கான போலியானதோர் உறுதிப்பத்திரத்தினை எவரேனும் தயாரிக்கும் பட்சத்தில் – அவ் ஆவணமானது உண்மையான உரிமையாளரல்லாத பிறிதொரு நபரினையே உரிமையாளராக பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. திருட்டில் ஒரு சாரார் மட்டுமே பாதிக்கப்படுகின்ற போதிலும், சமூகம் இத்தகைய செயல்களைக் கீழ்த்தரமாக நோக்குகின்றது. ஏனெனில் திருட்டு நடக்க அனுமதிப்பதில் மனநோய் சார்ந்ததோர் நிலையே உள்ளது. கொள்ளையடித்தல் மற்றும் மிரட்டி பணத்தினைச் சூறையாடுதல் ஆகியன மிகவும் பாரதூரமான சொத்துக் குற்றங்களாகும்.

சட்டரீதியான குற்றங்கள் மரபுவழிக் குற்றங்கள் அல்லவெனினும் அவை வேதியியல் மற்றும் சமூக வளர்ச்சியுடன் நோக்குகையில் இனங்கண்டு கொள்ளக்கூடிய குற்றங்கள் ஆகும். நஞ்சுகள், அபின் அத்துடன் அபாயகரமான ஒளடதங்கள் சட்டத்தின் கீழ் குறித்த சில இரசாயனப் பொருட்களை வைத்திருத்தலானது அபிவிருத்திக்கு முன்னரான காலப்பகுதியில் சமுதாயத்தால் அறியப்படாததோர் விடயமாகக் காணப்பட்டது. இவ்வாறான போதைப்  பொருட்களை உடைமையில் வைத்திருப்பதே குற்றமாக கருதப்படுகின்றது. இக்குற்றங்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் பாதிக்கின்றன. மேலும் மதுபானத்தைக் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டல் மற்றும் சட்டரீதியற்ற மதுபான வகைகளை தயாரித்தல் மற்றும் உடமைப்படுத்தி வைத்திருத்தல் முதலான மதுபானத்துடன் தொடர்புடைய குற்றங்களையும் இவற்றோடு குறிப்பிடலாம்.

நிதி சார்த்த குற்றங்கள் அசையும் சொத்துக்களை உள்ளடக்கியவையாகும். சொத்தொன்றை உடைமையில் வைத்திருக்கும் நபரொருவர், அதனை சட்ட பூர்வமான உறுதிப்பத்திரத்தினை உடையவராய் இருக்கிறார் அல்லது அச்சொத்தை  நம்பிக்கையை மீறும் வகையில் பயன்படுத்தும் பட்சத்தில்  குற்றமுறையான நம்பிக்கை மோசடியை இழைக்கும் நபராய் இருக்கிறார். குற்றமுறையான கையாடல், மோசடி, பிரதிநிதித்துவப்படுத்தலானது நிகழும் சந்தர்ப்பத்தில் அல்லது ஒருவரைக் கொண்டு சொத்தொன்றினை கையளிக்கும் சந்தர்ப்பத்தில் இடம்பெறுகின்றது. அவை கடந்த காலங்களில் இடம்பெற்ற நிதி சார்ந்த குற்றங்களாகும். சமுதாயத்தின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகம் என்பவற்றின் காரணமாக குற்றமானது நாடு கடந்ததாக மாற்றமடைந்துள்ளது. இதன் காரணமாக இன்று தீவிரவாத நடவடிக்கைகளுக்காக நிதியளித்தல், பணமோசடி, லஞ்சம் கொடுத்தல், ஊழல் அல்லது நாணயப் பரிமாற்றக் கட்டுப்பாட்டை மீறல் மற்றும் மோசடியான வழிமுறைகளூடாக பெறப்பட்ட பணத்தை வேறொரு நாட்டின் நிதிக்கட்டமைப்பில் முதலீடு செய்தல் போன்ற குற்றங்கள் இடம்பெறுகின்றன. மேலும், ஒரு வங்கி அல்லது நிறுவனத்தின் தரவுத் தளத்தினை உள்ளிட்டு, பணத்தை வேறு வங்கிக்கணக்கிற்கு மாற்றல் அல்லது சர்வதேச குற்றங்களில் ஈடுபடும் இரு தரப்பினரை இடைமறித்தல் போன்ற கணணிக் குற்றங்கள் இன்று இடம்பெறுகின்றன.

ஆரம்ப நிலைக் குற்றங்கள் (Inchoate crimes) – எந்தவொரு முக்கிய குற்றங்களுக்கும் உதவுதல் மற்றும் உடந்தையாய் இருத்தல் அல்லது எந்தவொரு முக்கிய குற்றங்களையும் இழைக்க சதி செய்தல். இது, குற்றமிழைக்க முயற்சி செய்தலையும் உள்ளடக்கியதாகும்.

நாம் வாழும் சமுதாயத்தில் அரசுக்கெதிரான எந்தவொரு செயலும் குற்றமாகவே கருதிப்படுகின்றது.

எவ்வாறு கைது செய்தல் இடம்பெறுகின்றது?

ஒரு குற்றம் இழைக்கப்பட்டதனை நாம் அறியும் போது நாம் பொலிஸாரிடத்துக்குச் செல்கின்றோம். அவர்களே பொதுவாக நாம் அறிந்த சமாதான அதிகாரிகள். சமாதான அதிகாரி எனும் சொற்பதமானது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும்  அதிகாரியைக் குறிக்கின்றது. முதலாவதாக, நீங்கள் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் முறைப்பாடொன்றைச் செய்யும் போது,  அவர் அது தொடர்பில் காணப்படக்கூடிய விடயக்கூறுகளை ஆராய்வார் என்பதுடன் அவற்றின் அடிப்படையில் குற்றமொன்று இடம்பெற்றமைக்கான நியாயமானதோர்  சந்தேகமொன்று நிலவுகின்றதா என மதிப்பிட்டுப் பார்ப்பார். அவ்வாறான  நியாயமானதோர் சந்தேகம் நிலவுகின்றமை கண்டறியப்பட்டதன் பின் அக்குற்றம் பிடியாணையின்றி ஒருவரைக் கைது செய்யக்கூடியவகையிலானதோர் குற்றமா என அவர் ஆராய்வார். மிகவும் பாரதூரமான குற்றங்கள் இழைக்கப்படும் போது ஒரு நபரை பிடியாணை இன்றி கைது செய்யலாம். சமுதாயத்திற்கு இழைக்கப்படக்கூடிய தீங்கு பாரதூரமானதாக இருக்கும் போது அக்குற்றம் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் இருந்து பிடியாணையை பெற்றுக்கொள்வதற்கான  பொலிசாருக்குள்ள கால அவகாசம் போதாதுள்ளது. சட்டமானது, இப்பாரதூரமான குற்றங்களைக் குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் அட்டவணை 1 இல் குறிப்பிடுவதனூடாக அவற்றை இனங்காண்கின்றது. இது ஒரு ‘பிடியாணையின்றிப் படியியல் குற்றம்’ இல்லையெனில், அவர் தொடர்புடைய சாட்சியங்களை நீதவான் நீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டும்.

கைதினை மேற்கொள்ளவதற்கான 2 வழிமுறைகள் உள்ளன: அது ஒரு பிடியாணியின்றிப் படியியல் குற்றமாயின், பிடியானையின்றி கைது செய்ய முடியும் என்பதுடன் குறித்த நபரை நீதிமனத்தில் ஆஜர்ப்படுத்த முடியும். அது ஒரு பிடியாணியின்றிப் படியியல் குற்றமல்லவெனின் நீதவான் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சாட்சியங்களை தெரிவித்தே  பிடியானையினை பெற்று கைது செய்ய வேண்டும்.

பொலிஸ் அதிகாரியைத் தவிர யார் கைது செய்ய முடியும்?

கிராம சேவை அதிகாரிகளுக்கு கைது செய்யும் அதிகாரம் கடந்த காலங்களில் அளிக்கப்பட்டிருந்தது. வனவிலங்குச் சட்டத்தின் கீழ்  வனவிலங்கு அதிகாரிகளால் பொலிசாருக்குரிய கடமைகளை ஆற்ற முடியும். சுங்கத் சட்டத்தின் கீழ் சுங்க அதிகாரிகளும் காட்டுக் கட்டளை சட்டத்தின் கீழ் காட்டின் அதிகாரிகளும் உணவுச் சட்டத்தின் கீழ் பொதுச் சுகாதார ஆய்வாளர்களும் இக்கடமைகளை ஆற்ற முடியும். இவர்களும் சமாதான உத்தியோகஸ்தர்களென அழைக்கப்படுகின்றனர்.

கைதை மேற்கொள்பவர்  அதற்கான காரணங்களைக் குறிப்பிட வேண்டுமா?

கைதானது யாப்பு மற்றும் குற்றவியல் நடபடிமுறைக் கோவை சட்டம் என்பவற்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். கைது செய்யப்படும் நபர் தாம் கைது செய்யப்படுவதற்குரிய காரணத்தை அறிதல் அவருடைய அடிப்படை உரிமையாகும். நபரொருவர் கைதினை தடுக்க முயலும் போது அதனை தடுத்து கைதினை மேற்கொள்ள மிகக் குறைந்தளவிலான எதிர்ப்பிரயோகத்தினையே மேற்கொள்ள முடியும்.

குறைந்தளவிலான எதிர்ப்பிரயோகம் என்றால் என்ன?

ஒரு நபரைக் கைது செய்ய போதியளவு பிரயோகம் பயன்படுத்தப்படலாம் எனினும் நியாயப்படி தேவைக்கதிகமான பிரயோகத்தினை மேற்கொள்ள முடியாது.

ஒரு நபர் விசாரணைக்குட்படுத்தப்படும் போது அவருடன் சட்டத்தரணி ஒருவரும் சமூகமளிக்க வேண்டுமா?

நீதித்துறைச்  சட்டத்தின் பிரிவு 41 இந்த படி ஒரு நபருக்கு அவரது கட்சிக்காரரை எந்தவொரு நீதிமன்றத்திலும் அல்லது நீதி நிர்வாகத்திற்காக நிறுவப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான உரிமை உண்டு.

தடுப்புக் காவலில் உள்ள நபர் தொடர்பில் பொலிஸ் அதிகாரிக்குள்ள கடமை என்ன?

யாப்பின் பிரிவு 11 இற்கு இணங்க அவர்கள் சித்திரவதைக்கோ மற்றும் மனிதாபிமானமற்ற இழிவான நடத்தைக்கோ உட்டபடுத்தப்பட முடியாது. உடல்ரீதியான அல்லது உளரீதியான தீங்கு செய்யாமலிருப்பதற்கான கடமை அவர்களுக்குள்ளது.

பிரிவு 13 ஆனது குற்றமற்றவர் என்ற ஊகத்தினைப் பற்றி கூறுகின்றது எனினும் போது மக்கள், ஒரு நபரைக் குற்றமொன்றுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகும் போது அவரை குற்றவாளியாகவே நோக்குகின்றனர். இதனை சட்டம் எவ்வாறு நோக்குகின்றதெனக் கூற முடியுமா?
பிரிவு 13(5), ஆளொவ்வொருவரும் அவர் குற்றவாளியென எண்பிக்கப்படும் வரை சுத்தவாளியென ஊகிக்கப்படுத்தல் வேண்டும் எனக் கூடுகின்றது. சுமத்தப்பட்ட குற்றச்சாட்டானது, குற்றவாளி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை இழைத்துள்ளார் என்பதனை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கும் வகையில் இருக்க வேண்டும். இன்று நடைபெறுவது யாதெனில், வழக்குவிசாரணையொன்று இடம்பெற முன்பே ஊடகங்களால் இத்தகைய விடயங்கள் பற்றி கூறப்படுவதால் எந்தவொரு குறுக்கு விசாரணையும் செய்யாது ஒரு மேலோட்டமான கோட்பாடு அது தொடர்பில் முன்வைக்கப்படுகின்றது. அவர்கள் சாட்சியின் நம்பகத்தன்மை தொடர்பில் சிந்திப்பதில்லை. நீதியை பெற ஆதாரங்களை முறையாக விசாரிக்க வேண்டும்.

நீதிமன்ற அவமதிப்பு ஒரு குற்றமா?

நீதி நிர்வாகத்தில் தலையிட முயற்சிக்கும் எவரும் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றத்தை இழைக்கின்றனர். இது ஒரு குற்றம் என்பதுடன் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

பொலிஸார் முறைப்பாட்டை ஏற்கவில்லை என்றால் அது தொடர்பில் எடுக்கக்கூடிய நடவடிக்கை என்ன?

பொலிஸாரால் குற்றவியல் முறைப்பாடுகளை மட்டுமே விசாரணை செய்ய முடியும். சிவில் முறைப்பாடுகளை அவர்களால் விசாரணை செய்ய முடியாது. எனவே அவர்கள் ஒரு குற்றவியல் முறைப்பாட்டை ஏற்க மறுத்தால், நீங்கள் பொலிஸ் மா அதிபருக்கோ மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கோ முறைப்பாடு செய்யலாம் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தினை அணுகலாம்.

ஸீனத் சாகிர்

ப்ரோ போனோ குழுவின் செயலாளர்  2020-2021

மொழிபெயர்ப்பு : சலோமி தாசன்  (ப்ரோ போனோ குழுவின் அங்ககவர்)

கலந்துரையாடல் முழுவதையும் ‘இலங்கை சட்ட மாணவர் சங்கம்’ எனும் எங்கள் யூ டியூப் சேனலில் மூன்று மொழிகளிலும் பார்வையிட முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php