2021 Jul 18
இப் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு இடத்தில் எமது தேவை உலகத்திற்கும் உலகத்தின் தேவை எமக்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அமைகின்ற சந்தர்ப்பங்களும் உருவாக்கும் தளங்களும் எமது சுயங்களை எமக்கும் இந்தப் பரந்த உலகிற்கும் காட்டுவதாக பயன்படுத்திக் கொள்ளல் எம் கரங்களில் தான் இருக்கின்றன. அழகழகான மலர்களுடன் சிறியதும் பெரியதுமாய் முட்களும் கலந்திருப்பதை போல தான் இவ்வுலகில் மனிதர்கள் சார்ந்தும் சமூகங்கள் சார்ந்த வாழ்வியல் கட்டமைப்புக்கள் சார்ந்தும் பிரச்சினைகள் உருவாகுகின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன. இவ்வாறானதாக பிரச்சினை மற்றும் இன வெறி தாண்டவம் ஆடிய தென் ஆபிரிக்க நாட்டில் அடிமைப்பட்ட மக்களை மீட்டெடுக்க போராடியவர் தான் நெல்சன் மண்டேலா.
1918 ஆம் ஆண்டு ஆடி மாதம் 18ஆம் திகதி தென்னாபிரிக்காவின் “குலு” என்று அழைக்கப்படும் கிராமத்தில் பிறந்தார் நெல்சன் மண்டேலா. சிறுவயதிலிருந்தே குத்துச்சண்டை வீரராக அறியப்பட்ட நெல்சன் மண்டேலா தனது இளம் வயதில் இருந்தே கால்நடை மேய்ப்பையும் மேற்கொண்டு தனது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அவரது குடும்பத்தில் இருந்து முதன்முதலில் பள்ளி சென்ற குழந்தையும் இவரே. கல்வியுடன் இணைந்து போர் தந்திரோபாயங்கள், போர் நெறிமுறைகள் முதலிய போர்க் கல்வியையும் கற்க தவறவில்லை. போரில் நாட்டம் கொண்டிருப்பினும் கல்வியை சற்றும் தளரவிடாமல் கல்வியறிவைப் பெறுவதில் முழுமையான ஈடுபாடு கொண்டவராகவும் அறியப்பட்டார்.
இவரது வாழ்நாளில் சந்தர்ப்பங்களை உருவாக்குவதிலும் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சூழ்நிலைக்கு சாதகமாக பயன்படுத்துவதுமாகவே வாழ்ந்து காட்டியவர். இக்கட்டான சூழலில் கூட நிறவெறிப் புறக்கணிப்புகள், அடக்குமுறைகள் என் அடக்கி ஒடுக்கப்பட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டும் அநீதியின் பிடியில் உழலும் தன் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் எனலாம்.
தென்னாபிரிக்காவின் இனப்பாகுபாடு ஆட்சி அதிகாரத்தை மக்களாட்சியின் உதயமாக முறியடிப்பதற்காக அமைதி வழியினை பொருத்திக் கொண்ட போராளியாகவும் ஆயுதமேந்திய போராட்டங்களின் தலைவனாகவும் நாட்டுக்கு எதிராக செயற்படும் மனிதன் என்ற தேசத்துரோக பட்டம் சுமத்தப்பட்டு 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவராகவும் குடியரசுத் தலைவராகவும் தன் வாழ்நாளில் பல்வேறு பரிணாமங்களில் முழுவதுமே அரசியல் தீர்வுக்காக பாடுபட்ட மாமனிதர் என இன்றுவரை இவ்வுலகமே அவரை கொண்டாடுகின்றது என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. சிறுவயதிலிருந்தே போராட்டங்கள் சவால்கள் இன்னல்கள் என பல மாறுபட்ட சந்தர்ப்பங்களை ஏற்றதனாலோ என்னவோ மக்களது மறுமலர்ச்சிக்காக போராடுதல் என்பதும் அவருக்கு பிடித்தமான ஒன்றாக அமைந்தது.
சிறந்த தலைமைத்துவம் கொண்டவராகவும் சிறந்த பேச்சாளராக கொண்டாடப்படும் நெல்சன் மண்டேலா உலகம் அறியப்படும் முன்னராக ஏராளம் இன்னல்களை எதிர்கொள்ள நேரிட்டது. 27 ஆண்டுகள் உலக வரலாற்றிலேயே அதிகமான ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த காலப்பகுதியில் அவர் அனுபவித்த கொடுமைகள் புறக்கணிப்புகள் உரிமை மறுப்புக்கள் ஏராளம்.
அவரது குடும்பத்தவர்கள் கூட அவரை பார்வையிடுவதற்கான அனுமதிகள் தடை செய்யப்பட்டன. நிறவெறிக் கொடுமையின் ஆட்சியாகவே ராபன் தீவில் இவர் கழித்த சிறை வாழ்க்கை விளங்குகிறது. சிறைக் காவலாளிகளால் கூட மிகவும் மோசமானவராகவே நடத்தப்பட்டார். 1988ஆம் ஆண்டு மிகவும் கடுமையான காச நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் மரணப் படுக்கையில் விழுந்து விடுவாரெனவே மருத்துவர்கள் கணித்தனர். ஆயினும் அதிலிருந்து ஓரளவிற்கு குணமான நெல்சன் மண்டேலா வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார். இவரது சிறை வாழ்க்கையில் 27 ஆண்டுகள் அதிகரிப்பதை தொடர்ந்து மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் எனும் தொனிப்பொருளில் போராட்டங்கள் உலகளாவிய ரீதியில் ஆரம்பமாகின. ஆயினும் அன்றைய தென்னாபிரிக்கா ஆட்சித் தலைவராக இருந்த போந்தா நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்யும் கோரிக்கைகளிற்கு இணங்க மறுத்ததை தொடர்ந்து இன்னும் போராட்டங்கள் வலுப்பெற்றன.
காலமாற்றத்தில் தென்னாபிரிக்காவின் ஆட்சி மாற்றங்களிற்கமைய டெக்ளார்க் என்பவர் தென்னாபிரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற பின் அவர் நெல்சன் மண்டேலாவை விடுவிக்க முன்வந்தார். இதனமைவாக டெக்ளார்க் அரசு மற்றும் மண்டேலா உடனான பேச்சுவார்த்தைகள் கோரிக்கைகள் தென்னாபிரிக்காவின் மக்களாட்சி மலர்ச்சியில் குறிப்பிட்ட அளவு பங்கு வகித்தன. மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த படி இருந்தது. அன்றைய தென் ஆப்பிரிக்க நாட்டின் அரசுத் தலைவர் வில்லியம் கிளார்க் அவர்கள் மண்டேலாவின் விடுதலை மனுவை ஏற்றதோடு 11ம் திகதி 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி அன்று தேசிய காங்கிரஸ் தடையை நீக்குவதோடு மண்டேலா விடுதலை செய்யப்படுவார் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதற்கு ஏற்றவாறு தனது 70வது வயதில் நெல்சன் மண்டேலா அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்.
நெல்சன் மண்டேலா உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குவதோடு அவரது உயர்விற்கு அவருடைய கல்வி மற்றும் அரசியல் நோக்கு பிரதான காரணமாகும். லண்டன் பல்கலைக்கழகத்திலும் தென்னாபிரிக்க பல்கலைக்கழகத்திலும் தனது பட்டப்படிப்பை மேற்கொண்டார். சட்டக் கல்வி தொடர்பான கற்கை நெறியினை 1941ஆம் ஆண்டு பகுதி நேரமாக மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரியாகவும் தோட்ட முகவராகவும் பணியினை மேற்கொண்டாரென்பது குறிப்பிடத்தக்கது.
அச்சமயமதில் ” நோமதாம் சங்கர் ” என்பவரை திருமணம் செய்தார்.ஆயினும் அக்காலகட்டத்தில் ஆபிரிக்காவின் தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் மண்டேலாவின் செயற்பாடுகள் மிகவும் தீவிரமாக இருந்தது. இக்காலகட்டத்தில் செயற்பாடுகள் தொடர்பான தொடர்ச்சியாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஆயினும் நெல்சன் மண்டேலா அவர்கள் இன மற்றும் நிறவெறிக்கு எதிரான தேசிய காங்கிரஸ் கட்சி மூலமாக தனது செயற்பாடுகளை மேலும் தீவிரம் ஆக்கினார். இதனால் அதிருப்தி அடைந்த தென்னாபிரிக்க அரசு தேசிய காங்கிரஸ் கட்சி தொடர்பான தடையை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் மண்டேலா மீது வழக்கும் தொடரப்பட்டது. ஐந்தாண்டு காலமாக தொடரப்பட்ட வழக்கின் போதே 1958-ஆம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார்.
மண்டேலாவின் மக்கள் விடுதலை முயற்சிகளில் வின்னி தனது முழு ஆதரவை வழங்கியதோடு மண்டேலாவின் கொள்கைகளை முன்னிறுத்தி தானும் போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தார். நெல்சன் மண்டேலா அவர்களது போராட்டங்கள் ஆரம்ப காலகட்டத்தில் அறவழியிலேயே தொடரப்பட்டது. அவ்வகையில் தென்னாபிரிக்காவின் பிரதான பிரச்சினையாக கறுப்பின மக்கள் பெரும்பான்மையினராகவும் வெள்ளையின மக்கள் சிறுபான்மையினராக இருந்த போதிலும் ஆட்சி அதிகாரம் மற்றும் தலைமைப் பொறுப்புகள் வெள்ளையர் வசமே இருந்தபடியினால் கறுப்பின மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் புறக்கணிப்புகள் அதிகரித்து காணப்பட்டது.
நெல்சன் மண்டேலாவின் இருபத்தொரு வயதில் 1939 ஆம் ஆண்டளவில் அடக்குமுறைகளால் பாதிப்புற்ற கறுப்பின மக்களின் முக்கியமாக இளைஞர்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுத்தார். தொனிப் பொருளாக…..”கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர் அவர்களது வாக்களிக்கும் உரிமை அரசினால் மறுக்கப்படுகிறது அவர்கள் பிரயாணம் செய்வதற்கு சொந்த நாட்டிலேயே அனுமதி பெற நேரிடுகிறது கறுப்பின மக்களின் நில உரிமைகள் தடை செய்யப்படுகிறது சுதேச குடிகளுக்கு எதிரான நடைமுறைகள் நீதியற்றவை இவற்றிற்கான தீர்வுகளிற்காக நாம் போராட வேண்டும்” என கோரிக்கைகள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இவரது முயற்சிகள் மற்றும் கொள்கைகளை திறம்பட செயலாற்றும் நோக்குடன் 1943ஆம் ஆண்டு தேசிய காங்கிரசில் இணைந்தார். 1948 ஆம் ஆண்டளவில் அரசின் அடக்குமுறை செயற்பாடுகள் மேலும் தீவிரமானதை தொடர்ந்து நெல்சன் மண்டேலாவுடன் அவரது பல்கலைக்கழக தோழர் ஒலிவர் ரம்போவும் இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதி, சட்டம், உரிமைகள் தொடர்பான ஆலோசனைகளை மக்களிற்கு வழங்கினர். அரசாங்கத்தின் பூரண ஆதரவுடன் அதிகாரத்துடனும் இவ்வாறான அடக்குமுறைகள் அதிகரிப்பதனால் மண்டேலாவின் செயற்பாடுகள் பெரிதும் அரசிற்கு எதிரானதாகவே அமைந்தது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் முதன்மை பொறுப்பினை ஏற்று அதை தொடர்ந்து வெள்ளையருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தார்.
இதனடிப்படையில் 1956-இல் அரசாங்கத்திற்கு எதிரான நடைமுறைகளில் ஈடுபட்டவர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மண்டேலா நான்காண்டு சந்தேக விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டார். சிறையின் பின்னராக 1950ஆம் ஆண்டளவில் காங்கிரஸின் செயற்பாடுகள் மேலும் அதிகரித்தது. இதன் விளைவாக தென்னாபிரிக்க கறுப்பின மக்களுக்கு விசேடமான கடவுச்சீட்டு முறைகளுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் மேற்கொண்ட போலீசாரின் துப்பாக்கி பிரயோகத்தின் விளைவாக 69 பேர் மரணமடைந்தனர்.
இதன் பின்னராக அறவழிப் போராட்டங்களினால் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்பதனை தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தின் மூலமே சிறந்த தீர்வுகளை தர இயலும் என்று நம்பியதோடு 1951இல் ஆபிரிக்காவின் தேசிய காங்கிரஸின் ஆயுதப்படை தலைவராக பொறுப்பேற்றார். இவர்களின் செயற்பாடுகளிற்கு வெளிநாடுகளிலிருந்து பலதரப்பட்ட உதவிகள் கிடைக்க ஆரம்பித்ததை தொடர்ந்து அரசின் இராணுவ நிலையங்கள் மீது கொரில்லாத் தாக்குதலை மேற்கொண்டதோடு 1961ஆம் ஆண்டிலே மண்டேலாவினை கைது செய்ய அரசு முயன்றதைத்தொடர்ந்து தலைமறைவானார்.
வழமைக்கு மாறாக அக்காலப்பகுதியில் காங்கிரஸ் அமைப்பின் குறிப்பிட்ட ஒருசில செயற்பாடுகளினால் மக்களும் பாதிக்கப்பட்டனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தென்னாப்பிரிக்க அரசாங்கம் இவருக்கு எதிரான செயற்பாடுகளை மனித உரிமை மீறல் செயற்பாடுகள் என குற்றம் சாட்டியது. பின்னாளில் அமெரிக்காவும் இவரது செயற்பாடுகளை பயங்கரவாத செயற்பாடுகள் என அறிவித்தது மட்டுமல்லாமல் 2008ஆம் ஆண்டு வரை மண்டேலாவின் அமெரிக்காவில் நுழைய இயலாது என்றும் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
தொடர்ச்சியாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் முக்கியத் தலைவர்களை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்கள் எனும் குற்றச்சாட்டுடன் மண்டேலா உட்பட 16 பேரை மாறுவேடத்துடன் புகுந்து 1962ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனர் . இவர்கள் தொடர்பாக நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு ரிவோனியா செயற்பாடு( 1963 process rivoniya) என குறிப்பிடப்பட்டது. பின் தீர்ப்பாக ஆயுள் தண்டனையை ஏற்றுக்கொண்ட மண்டேலா தனது 46 வயதிலிருந்து 27 ஆண்டுகள் உலக தலைவர்களில் நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்தவர் என குறிப்பிடப்படும் அளவு சிறை தண்டனையை ஏற்றுக் கொண்டார்.
சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட மண்டேலா அவர்களின் உரையில் மக்களாட்சி முறைக்காக நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் உருவாக்கப்படும் அமைப்பு தான் நாட்டின் எதிர்காலத்திற்கு பயன் மிக்கது என்றும் அடக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மக்களாட்சி தொடர்பான தேர்தல் முயற்சிகளில் ஈடுபட்ட நெல்சன் மண்டேலா 1944 தென்னாபிரிக்காவின் அதிபராக வெற்றி பெற்றார். தென்னாபிரிக்காவின் கறுப்பின தந்தை சேர்ந்த முதலாவது அதிபர் என்ற பெருமை இவரையே சாரும். கல்வி முயற்சிகளில் பிறமொழி கல்விகளுக்கும் இடம் அளித்தமை குறிப்பிடத்தக்கது. இவரது வாழ்நாள் காலத்தில் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான செயற்பாடுகள் என்று அணுகும்போது இதற்கென தனிப்பட்ட அதிகாரம்மிக்க ஆணைக் குழுவை அமைத்தார். இவ்வாறு இவரால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ( Truth and reconciliation commission) மூலம் அடிமட்ட பிரஜைகள் மற்றும் அடிமைகளுக்கு எதிரான அநியாயங்களிற்கான இணக்கப்பாடுகளையும் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடு முறைமைகளை ஏற்படுத்தினார்.
இவ்வாறாக புரட்சியின் மறுவடிவமாக உலகில் பேசப்பட்ட நெல்சன் மண்டேலா தனது வாழ்நாள் காலத்தில் பல்வேறுபட்ட விருதுகள் பாராட்டுக்களைப் பெற்றார் என்பதில் ஆச்சரியம் இல்லை. இன மற்றும் நிற அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உலக சமாதானத்திற்காகவும் குரல் கொடுத்த நெல்சன் மண்டேலாவை பாராட்டி இந்திய அரசாங்கம் நேரு சமாதான பிரிவினை வழங்கியபோது அவர் சிறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் அவருடைய மனைவியே அவ் விருதினை பெற்றுக் கொண்டார். இவை மட்டுமன்றி இந்திய குடிமகன் இல்லாதபோதும் 1990இல் “பாரத ரத்னா விருது” 1936 இல் உலக அமைதிக்கான” நோபல் பரிசு” நல்லிணக்கத்துக்கான ” மகாத்மா காந்தி சர்வதேச விருது” போன்ற 250 விருதுகளைப் பெற்ற பெருமை இவரை சாரும்.
மேலும் உலக அமைதிக்காகவும் அடிமைப்பட்ட மக்களது விடுதலைக்காகவும் மக்களின் குரலாக ஒலித்த நெல்சன் மண்டேலா தனது வாழ்நாளையே மக்களிற்காக அர்ப்பணித்துக்கண்டார். இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் நெல்சன் மண்டேலாவிற்காக அவருடைய சிலை இடம் பெற்றது. அவரது கனவுப்படி கறுப்பு மனிதரின் உருவச்சிலை இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற வேண்டுமெனும் கனவு நிறைவேறியது. இவை மட்டும் தான் ஐநா சபை இவரது பிறந்த நாளையே சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஜூலை 17ஆம் திகதியை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவருடைய கருத்துக்கள், கோரிக்கைகளை உலகம் போற்றியதோடு மட்டும் அல்லாமல் பிரிவினைகள் அற்ற எழுச்சி மிக்க உலகத்தை எதிர்கால சந்ததியினரிற்கு சமர்ப்பிப்போம்.