2021 Jul 28
கொழும்பில் வாழும் அனைவருக்குமே 155 என்றவுடன் நினைவிற்கு வருவது 155 இலக்கமுடைய பேருந்தின் விம்பம் தான். இன்னும் சொல்லப் போனால் வெறும் விம்பம் மட்டுமே தோன்றுவது இல்லை. அத்தோடு அந்த பேருந்தில் பயணிக்கும் போது அவர்கள் ருசித்த அனுபவங்களும் சேர்ந்தே மலர்கிறது. “என்ன? பேருந்தில் ருசித்த அனுபவங்களா?” “அது எப்படி சாத்தியமாகும்! ஒருவர் தனது வாழ்நாளில் எத்தனையோ பேருந்துகளில் பயணித்து இருக்கும் போது அதில் இந்த 155 இலக்கமுடைய பேருந்தின் அனுபவம் மட்டும் எப்படி தெளிவாக நினைவில் இருக்கும்?” என உங்கள் மனதில் பல கேள்விகள் எழக்கூடும் ஆனால் இந்த 155 இலக்கமுடைய பேருந்தின் சிறப்பு தன்மையே அது தான். உங்கள் வாழ்நாளில் ஒரு தடவை நீங்கள் அந்த பேருந்துள் நுழைந்து பயணித்து வெளி வந்தாலே போதும். அந்த அனுபவத்தினை நீங்கள் வாழ்நாள் முழுதும் மறக்கவே மாட்டீர்கள். எவர் உங்களிடம் வந்து 155 என்ற இலக்கத்தினை கூறினாலும் உங்கள் புத்திக்குள் அந்த அனுபவங்கள் மின்னலொளி போல் வந்துச் செல்லும். இந்த பதிவினூடாக 155 இலக்கமுடைய பேருந்தில் நான் ருசித்த சில அனுபவங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன். சரி தோழர்களே பஸ் ரைட்டுக்கு தயாராகுங்கள்!
- 155 பஸ் ரூட்
மௌான்ட் லவேனியா, தெஹிவளை, பம்பலபிட்டிய, ரேஸ் கோர்ஸ், கொழும்பு கேம்பஸ், டவுன் ஹோல், மருதானை, ஹார்மர் ஸ்ட்ரீட், கொட்டஹேனா மற்றும் மோதர ஆகிய இடங்களில் காணப்படும் பேருந்து தரிப்பிடங்களில் ஒரு நிமிடம் நின்று பெருமூச்சு விட்டு ஓய்வெடுத்து மீண்டும் தன்னுள் மக்களை நிரப்பியும் சிலரை வெளி தள்ளியும் தன் பயணத்தை தொடர்கின்ற பேருந்து தான் இந்த 155.
- 155 இன் நேரமும் வேகமும்
உங்களை சரியான இடங்களில் கொண்டு சேர்ப்பதில் இந்த பேருந்து சிறப்பாக செயற்படுகிறது. ஆனால் சரியான நேரத்தில் போய் சேர்வோமா என்பது சற்று கேள்விகுறி தான். எனக்கு தெரிந்து நாம் இந்த பேருந்தினூடாக ஏதும் அவசர வேலையாக அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டிய மீட்டிங் ஏதும் இருக்குமாயின், கண்டிப்பாக நாம் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே வீட்டிலிருந்து வெளியேறி விட வேண்டும். “என்ன இரண்டு மணி நேரமா? அவ்வளவு மெதுவாகவா இந்த பேருந்து செல்லும்?” என்ற உங்களது கேள்விக்கு பதில் – இல்லை. இந்த பேருந்து மெதுவாக செல்லாது ரொம்ப மெதுவாக செல்லும்.
- பாலை வன நீர்
நாம் சும்மா தெருக்களில் நடந்து செல்லும் போதெல்லாம் அடிக்கடி நம் கண்களில் தென்படும் இந்த பேருந்து நமக்கு தேவையான நேரங்களில் கண்களில் தென்படுவதே இல்லை. நமக்கு அவசரமான நேரங்களில் இந்த பேருந்தினை காண்பது பாலை வனத்தில் ஒரு துளி நீரினை கண்டெடுப்பது போன்று ஆகிவிடுகிறது. நாம் காத்திருந்து சோர்வடைந்து “இனி இதற்காக காத்திருப்பது சரி வராது.” என நினைத்து துக் துக் வண்டி எதையும் நிறுத்த போகும் பட்சத்தில் ஏதோ அவ்வளவு நேரம் நம்மை காக்க வைத்து ஒழிந்திருந்து வேடிக்கை பார்த்த குழந்தை போல் தூரத்திலிருந்து தலை காட்டும். “சரி வந்து விட்டது!” என அருகில் வரும் வரை பார்த்துக் கொண்டிருக்கையில் “ஒரு வேளை பஸ் ப்ரேக் டவுன் ஆகியிருக்கமோ?” என நினைக்கும் அளவிற்கு தவழ்ந்து வந்துக் கொண்டிருக்கும்.
பல மணி நேரம் காத்திருந்து 155 பேருந்துக்குள் ஒரு வழியாக நுழையும் போது, பேருந்தை விட்டு வெளியே வரும் சனங்கள் ஒரு புறமும் உள்ளே செல்லும் அவசரத்தில் மற்றைய சனங்கள் இன்னொரு புறமும் என நெரித்து நம்மை கரும்பு மெஷின்க்குள் மாட்டிய கரும்பினை போல ஜூஸ் புழிந்து விடுவார்கள். ஒரு வேளை இந்த சன நெரிசலுக்குள் யாரேனும் கற்பிணி தாய்மார்கள் மாட்டிக் கொண்டால் அவர்களுக்கு அந்த இடத்திலேயே பிரசவம் ஆகி குழந்தையும் கையுமாக தான் பேருந்திற்குள் செல்வார்கள். இத்தனையும் தாண்டி சக்கையாகி பேருந்துக்குள் நுழைந்தால் இடமே இல்லாத இடத்தினை நோக்கி நகர சொல்லி கண்டக்டர் “இஸ்ஸர பயின்ட” என சத்தமிட்டுக் கொண்டிருப்பார். ஒரு வேளை நீங்கள் அதிர்ஷ்ட்டசாலியாக இருந்தால் நீங்கள் உள்ளே நுழைந்து எதாவது ஒரு சீட்டுக்கு அருகில் நிற்கும் போது அந்த நபர் இறங்கும் தரிப்பிடம் அருகிலிருக்கும் பட்சத்தில் அவர் தானாக எழுந்து இடம் தரக்கூடும். அவ்வாறு இல்லாவிட்டால் நசுங்கிய படியே பயணிக்க வேண்டியது தான்.
- இலவு காத்த கிளி
155 பேருந்திற்குள் இருந்த படி தரிப்பிடம் வரும் வரை காத்திருக்கும் உங்கள் கதையும் இலவு காத்த கிளியின் கதையும் ஒன்று தான். “பேருந்து நகர்கிறதா! இல்லை ஒரே இடத்தில் நிற்கிறதா!” என்ற சந்தேகம் உங்களுக்குள் துளிர் விட ஆரம்பிக்கும். “பேசாம நடந்தே போயிருக்கலாம்.” என தோன்றும். இன்னும் சொல்லப் போனால் நொடிக்கு இரு தடவை நீங்கள் பெருமூச்சு விடுவீர்கள். அட பாதியில் எதாவது ஒரு தரிப்பிடத்தில் இறங்கி TukTuk வண்டி ஏதாவது பிடிக்கலாமா என்று கூட நினைப்பீர்கள். உங்கள் உயிர் வியர்வையாக கரைவது உங்களுக்கு தெளிவாக தெரியும். ஒரு வேளை நீங்கள் பொறுமைசாலியாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு ஏதும் அவசர வேலைகள் இல்லையென்றாலோ நீங்கள் கூலாக பயணத்தை தொடர்வீர்கள் அவ்வாறு இல்லை என்றால் கடினம் தான்.
- பேருந்தும் மக்களும்
இவ்வாறாக நம்மை வாட்டி வதக்கி கொண்டிருக்கும் பேருந்துக்குள் கூலாக பயணிக்கும் சிலரும் உண்டு. வயதானவர்கள், காதலர்கள், மொபைலுக்கு அடிமையானவர்கள் மற்றும் வண்டி ஓட்டுநர் ஆகியோரே அந்த பட்டியலுக்கு சொந்தமானவர்கள். அவர்களுள் வண்டி ஓட்டுநர் அதாவது அந்த பேருந்தின் சாரதி இருக்காரே ரொம்ப கூலாக வருவார். காலை நேரத்தில் 155 இல் எப்படியோ பற்களை கடித்துக் கொண்டு பயணிக்கலாம். ஆனால் மாலை நேரங்களில் அதுவும் வேலை முடிந்து மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது பயணிப்பது என்பது கடினமான விடயம். மக்களது நெரிசல் ஒரு புறமும் சிலரது வியர்வையோடு கலந்த வாசனை திரவியங்களிலிருந்து வெளிவரும் ஒவ்வாத ஒரு வகை மணம் ஒரு புறமும் என உங்கள் குடலை நெஞ்சு வரை இழுத்து வந்து விடும். இந்த நெரிசலில் சில வியாபாரிகள் தனது வாய்களில் வெற்றிலை போட்டுக் கொண்டு எச்சிலை வாய்க்குள் வைத்த படி கூவி கூவி பொருட்களை சந்தைப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இவ்வாறாக பலரது செயல்களினால் 155 பேருந்து அனுபவம் உங்கள் நினைவுகளில் கல்லின் மேல் எழுத்தென எழுதப்பட்டு விடும்.
ஏற்கனவே 155 இல் பயணித்தவர்களுக்கு இந்த பதிவினை வாசிக்கும் போது அந்த அனுபவங்கள் நினைவிற்கு வந்துச் செல்லக் கூடும். ஆனால் இது வரை பயணிக்காதவர்களுக்கு ஏதோ விநோதமான ஒரு விடயத்தை பற்றி வாசிப்பது போலிருக்கும். எது எவ்வாறாக இருப்பினும் அனைவருமே அவர்களது வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்த பேருந்தில் பயணிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதுவும் ஒரு வகை சுவாரஷ்யமான அனுபவம் தான். நீங்கள் இதற்கு முன் 155 இல் பயணித்திருந்தால் உங்களது அனுபவத்தினை பற்றி கமன்ட் பொக்ஸினூடாக எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.