அனைத்தையும் நாடி  பாலியல் குற்றங்கள் – சட்ட ஒளி

பாலியல் குற்றங்கள் – சட்ட ஒளி

2021 Aug 22

சட்ட ஒளி என்பது சட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைக்கும் மும்மொழி சட்டக் கலந்துரையாடலாகும். லத்தீன் மொழியில் ignorantia legis neminem excusatஎன்ற தொடர் விளக்கி நிற்பது, சட்டத்தினை புறக்கணிப்பது சட்டத்திலிருந்து   மன்னிப்பு பெறுவதற்கான வழி அல்ல   என்பதனையே ஆகும். அந்த வகையில் இலங்கை சட்ட மாணவர் சங்கத்தின் ப்ரோ போனோ குழுவானது நம் நாட்டு சட்டங்களினை எளிமையாக்குவதன் மூலம் பொது மக்களுக்கு அறிவூட்ட முற்படுகின்றது. அதன் நான்காவது கலந்துரையாடல் “பாலியல்   குற்றங்கள்” குறித்து கவனம்   செலுத்தியுள்ளது.

இந்தக் கலந்துரையாடலுக்கான குழுவானது பின்வரும் சட்டத்தரணிகளை      உள்ளடக்கியிருக்கின்றது: திரு. சீவலி அமிதிரிகள pc குற்றவியல் மற்றும் சிவில் சட்ட பயிற்சியில் மிகவும் ஆர்வமுடையவர், கொழும்பு சட்டக் கல்லூரி மற்றும் றோயல் நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளரும் ஆவார். திரு. அஸ்திக உபுல் தேவேந்திர, சட்டக் கல்லூரி அனுமதி பரீட்சைக்கான மூத்த விரிவுரையாளராகவும். சி எப் பி எஸ் சட்டப் பள்ளியின் மூத்த விரிவுரையாளராகவும் கடமையாற்றிய மூத்த சட்டத்தரணி ஆவார்.   பேராசிரியர் டாக்டர் சாந்தி சேகராஜசிங்கம் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மூத்த விரிவுரையாளராவர்.

கற்பழிப்பு / வன்புணர்ச்சி குற்றத்தில் சம்மதம் என்று பொருள் கொள்ளப்படுவது யாது? நீதிமன்றத்தில் எவ்வகையான சம்மதம்  ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது

 ப- தண்டனைச் சட்டக் கோவையில் உள்ள பாலியல் குற்றங்களாவன, கற்பழிப்பு (s.363), முறையில்லாப்புணர்ச்சி (s.364A), இயற்கைக்கு மாறான புணர்ச்சி (s.365), ஆட்களுக்கு இடையில் மிக இழிவான செயல்கள் (s.365A), பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் (365B) மற்றும் பாலியல் பலாத்காரம் அல்லது தொந்தரவு (s.344) என்பன ஆகும்.  அந்த வகையில்   கற்பழிப்புக் குற்றத்தை வரையறுக்கும்  பிரிவிற்கு அமைய, கற்பழிப்பு என்பது  , ஒரு ஆண் அந்த பெண்ணின்  சம்மதமின்றி  அந்த பெண்ணுடன் உடலுறவு   கொள்ளுவதை எடுத்துரைக்கின்றது. கற்பழிப்பு / வன்புணர்ச்சி குற்றத்தில் சம்மதம் வழங்கப்படாமை ஒரு முக்கிய  அம்சமாகும்.  எனினும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சம்மதம் பெறப்பட்ட போதிலும் அது சம்மதமாக தகுதி பெறாது, உதாரணமாக சட்ட முறையாக அல்லது சட்ட முறையற்ற விதத்தில் ஒருவரை தடுத்து வைத்திருக்கும் போது கட்டாயப்படுத்தி பெறப்படும் சம்மதம் சட்டத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட   சம்மதமாகக் கருதப்பட மாட்டாது.  நீங்கள் ஒருவரை மிரட்டுவதன் மூலம், அல்லது அவரை  அச்சுறுத்தி  அல்லது  ஒருவருக்கு மரண பயத்தினை காட்டுவதோடு அல்லது ஊறு விளைவிக்கப்படும் என்ற பயத்தின் மூலம் பெறப்படும் சம்மதமானது பயத்தினால் அல்லது மிரட்டி  பெறப்பட்ட சம்மதமாகக் கருதப்படும். அவ்வாறான சம்மதங்கள் உடலுறவினை மேற்கொள்ளுவதுற்கு ஏற்ற சம்மதமாகக் கருதப்பட மாட்டாது.  அதே போல வேறோருவரால்  குடிபோதைக்கு அல்லது   போதை வஸ்த்தால்  தூண்டப்பட்டு அல்லது பெண் சித்த சுவாதீனமற்று காணப்படும் போது பெறப்படும் சம்மதம் சட்டதின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையான சம்மதமாகக் கருதப்பட மாட்டாது. சம்மதம் தெரிவிக்க முடியாத வயது குறைந்தவர்கள் உடலுறவுகளில் ஈடுபட்டதற்கான பல சம்பவங்கள் உள்ளன. இலங்கை சட்டத்தின் கீழ் பாலியல் செயற்பாடுகளுக்கு/ உடலுறவுக்கு  சம்மதம் தெரிவிக்கும்  வயதெல்லை 16ஆகக் காணப்படுகின்றது. நீங்கள் 16 வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் சம்மதித்திருந்தாலும், அது     செல்லுபடியான சம்மதமாகக் கருதப்பட மாட்டாது.

வேறு விதமாகக் கூற வேண்டுமானால் சம்மதமானது தனி நபர் சுதந்திரத்தை சார்ந்திருக்க வேண்டுமா?

ப – முற்றிலும் சரி.  அந்த சம்மதமானது சுதந்திரமான, நேர்மையான, புரிந்துணர்வுடன் கொடுக்கப்பட்டதாகவும், அவள் எவ்விதமான செயலில் ஈடுபடுகின்றாள் என்பதை சம்மதம் வழங்கும் முதல் சிந்தித்து பார்த்துக் கொடுக்கப்பட்டதாகவும், இருக்க வேண்டும்.

சம்மதம் மற்றும் அனுமதித்தல் என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டினை விளக்க முடியுமா?

  ப – இன்னோகா  கலகே  v கமல்  அத்தர்றாற்சி   என்ற வழக்கில் கௌரவ  நீதிபதி  அசோகா டி சில்வா, ஹரினேரியன் v ஸ்டேட்  வழக்கிலிருந்து மேற்கோள் காட்டி “தவிர்க்க முடியாத நிர்பந்தத்தினால்  தெரிவிக்கப்படும் சம்மதம் மற்றும்   எதிர்ப்பில்லாமல் அல்லது ஒருவரால் அச்சுறுத்தபட்டு  அல்லது மிரட்டி   சம்மதம் வாங்கும் பட்சத்தில் அது சம்மதமாக கருதப்பட மாட்டாது. ஒரு பெண் தன்னுடைய பாதுகாப்பு கருதி பாலியல் பலாத்காரத்திற்கு தானாக முன்வந்து சம்மதம் அளிப்பது மட்டும் போதுமானது அல்ல, அங்கு ஒரு பெண் அதனை எதிர்ப்பு தெரிவிக்காமைக்கும் சம்மதம் அளித்தமைக்கும் இடையில் வேறுபாடு காணப்படுகின்றது அதேவேளை ஒரு பெண் பயத்தின் காரணமாகவோ அல்லது மிரட்டப்படும் சந்தர்ப்பத்திலோ தன்னுடைய   உடலை சமர்ப்பிப்பது ஒப்புதல் இல்லை”. சம்மதம் என்பது உட்கிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்குவதையே குறிக்கும். இருப்பினும் ஒப்புதலுக்கும் சம்மதத்திற்கும் இடையில்  மிகத்  தெளிவான வேறுபாடு உள்ளது

கற்பழிப்புக்கான தண்டனை என்ன?

  ப – குறைந்தபட்ச தண்டனை 7 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும். ஒரு அரசாங்க அதிகாரி   தனது அதிகாரத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஒரு கர்ப்பிணிப் பெண், 18 வயதிற்குட்பட்ட ஒரு பெண், மனநிலை சரியில்லாத அல்லது கும்பல் கற்பழிப்பு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கான தண்டனை 10 வருடத்திற்கு அதிகமாகவும் 20 வருடத்திற்குக் குறைவாகவும் காணப்படும்.  முறையில்லாப்புணர்ச்சியில் நடைபெறும் கற்பழிப்பிற்கு தண்டனை 15 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 20 வருடங்களுக்குக் குறைவாக இருக்கும்.

இலங்கை சட்டத்தின்படி, ஒரு ஆண் மீது பாலியல் பலாத்காரம் செய்ததற்கு ஒரு பெண்   பொறுப்பாக வாய்ப்பு உள்ளதா?

  ப – தண்டனை சட்டக் கோவையில் 363 பிரிவிற்கு அமைய தெளிவாக புலப்படுவது யாதெனில் இந்தக் குற்றமானது ஒரு ஆணால் ஒரு பெண் மீது செய்யப்படுவதே ஆகும்.  இந்த வரையறைகளுக்கமைய ஒரு பெண்ணால் ஒரு ஆண் கற்பழிக்கப்படுவதை எதிர்பார்க்க முடியாது என்று நான் கருதுகின்றேன்.

இலங்கையில்  திருமணத்திற்குள் கற்பழிப்பு என்பது   குற்றமாக உள்ளதா?

  ப – சமகால குற்றவியல் சட்டத்தின்படி, பிரிவு 363A ற்கு அமைய நீதிமன்றக்  கட்டளையின் கீழ் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழுகின்ற போது நடைபெறும் உடலுறவு மாத்திரமே  திருமணத்திற்குள் கற்பழிப்பு எனக் கொள்ளப்படும்

ஆனால் திருமணத்திற்குள் கற்பழிப்பு என்ற கருத்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது அல்லவா?

  ப – இது பல அதிகார வரம்புகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கருத்தாக உள்ளது காலப்போக்கில் சில கருத்துக்களும் மாற்றமடைய   வேண்டும். மேலும் இந்தக் குற்றத்தின் சில கூறுகள் எங்கள் சட்டத் தயாரிப்பாளர்களுக்கு விளக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனை குறித்து பொதுமக்களுக்கு நாம் அறிவூட்ட முடியுமா?

  ப – தண்டனை சட்டத்தின் பிரிவு 364 க்கு  ஏற்ப, ‘கற்பழிப்பு செய்தவர்    உட் பிரிவு  2 மற்றும்  3 இல் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர, 7 வருடங்களுக்கும் குறையாத மற்றும் 20 வருடத்திற்கு மிகாமல்  கடூழிய  சிறைத்தண்டனை மற்றும்   குற்றப்பணத்துடன்  மற்றும் எந்த ஆள் தொடர்பில் தவறு புரியப்பட்டதோ அந்த ஆளுக்கு விளைவிக்கப்பட்ட ஊறுகளுக்கு   நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்படும்.

நிறுவனக் கற்பழிப்புஎன்றால் என்ன என்பதை விளக்க முடியுமா?

  ப- ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் அதிகார நிலையில் இருக்கிறார் மற்றும் பாதிக்கப்பட்டவர் அந்த நிறுவனத்தில் உள்ளவர் எனும் போது, அத்தகைய ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தால், அது ஒரு நிறுவனக் கற்பழிப்பு என்று கருதப்படும்.

 நீர் – இங்கு அதிகாரத்தில் உள்ளவர் ஒப்புதல் பெறும்போது கூட, அது வலிதான சம்மதமாக இருக்காது.

பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன என்பதைப் பற்றி பொதுமக்களுக்கு நீங்கள் கற்பிக்க முடியுமா?

  ப-  தண்டனை சட்டத்தின் பிரிவு   365B வரையறைப்பதற்கு அமைய ஒருவர் பாலியல் அவா நிறைவுக்காக அவரது பிறப்புறுப்பை அல்லது மனித உடம்பில் ஏதேனும் வேறு பாகத்தை அல்லது ஏதேனும் சாதனத்தை வேறு எவரேனும் ஆளின் ஏதேனும் துவாரத்தில் அல்லது உடம்பின் ஏதேனும் பாகத்தில், மற்றவரின் சம்மதம் இல்லாமல் அல்லது பதினாறு வயதுக்குக் குறைவாக இருக்கும் போது அந்த நபரின் சம்மதத்துடனோ சம்மதமில்லாமலோ, அல்லது சட்டமுறையாக அல்லது சட்ட முறையற்ற விதத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது அந்த நபரின் சம்மதத்துடனோ அல்லது அவ் சம்மதமானது பலாத்காரத்தை அல்லது மிரட்டலை அல்லது தடுத்து வைக்கப்பட்டிருத்தல் என்று பயமுறுத்துவதன் மூலம் அல்லது மரணம் அல்லது ஊறுவிளைவிக்கப்படும் என்னும் பயத்தை ஏற்படுத்துவதன் மூலம் பெறப்படுமாயின், அதே போல வேறோருவரால்  குடிபோதைக்கு அல்லது   போதை வஸ்த்தால்  தூண்டப்பட்டு அல்லது பெண் சித்த சுவாதீனமற்று காணப்படும் போது சம்மதம்  பெறப்பட்டு  உள்ளவிடத்து  அது கற்பழிப்பாக அமையாத போதும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்தை     புரிந்ததாக அமையும்.

ஒரு கும்பல் கற்பழிப்பு நடந்தால், அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சட்டம் எவ்வாறு தண்டனை அளிக்கிறது?

ப – கும்பல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் அனைத்து பங்கேற்பாளர்களும், கும்பல் கற்பழிப்பு செயலில் பங்கேற்ற ஆதாரங்களின்படி, ஆதாரங்கள் நிறுவப்பட்டிருந்தால் அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அல்லது சிலர் வெறுமனே ஆஜராகி, தீவிரமாக பங்கேற்க்காத பட்சத்தில் அத்தகைய நபர் கும்பல் பாலியல் பலாத்காரத்தில் குற்றவாளியாகக்  கருதப்பட  மாட்டார்.

ஆட்களுக்கிடையில் மிக இழிவான செயல்கள் செய்தல் என்றால் என்ன?

ப – தண்டனை சட்டத்தின் பிரிவு 365A க்கு ஏற்ப   பகிரங்கமாகவோ தனிமையிலோ இன்னுமோர் ஆளுடன் மிக்க இழிவான செயலைப் புரிகின்ற அல்லது அதனை புரிவதில் ஒரு திறத்தவராக இருக்கின்ற அல்லது எவரேனும் ஆளினால் புரியப்படுவதை  கூட்டிவைக்கின்ற கூட்டி வைக்க எத்தனிக்கின்ற ஆளெவரும்  குற்றவாளியாக  கருதப்படுவார்.

 ஆட்களுக்கிடையில் மிக இழிவான செயல்கள் பொது மற்றும் தனிப்பட்ட முறையில் செய்யப்படலாம். ஒரு நபர் மிகவும் அநாகரீகமாக நடந்துக் கொள்வது உதாரணமாக  ஒழுக்க நெறிகளுக்கு எதிராக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

முறையில்லாப் புணர்ச்சி என்றால் என்ன? அதனுடன் இணைக்கப்பட்டுள்ள தண்டனை என்ன?

ப – தண்டனை சட்டத்தின் பிரிவு 364A க்கு ஏற்ப   முறையில்லாப் புணர்ச்சி எனப்படுவது சந்ததியினர் அல்லது வளர்ப்பு பெற்றோர், பேரப் பிள்ளைகள், பாதி இரத்த உறவு சகோதர அல்லது சகோதரியின் இருவருள் ஒருவரின் சந்ததிகளுக்கு இடையில் உடலுறவு  கொள்ளலே ஆகும். இவ்வாறான உறவுகளுக்கிடையே உடலுறவு கொள்பவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவதோடு அவர்கள் சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் 20 வருடங்களுக்கு அதிகமாகாத கடூழிய சிறை தண்டனையாலும் அத்துடன் குற்றப்பணத்தாலும்   தண்டிக்கப்படுவர்.

பாதிக்கப்பட்டவர் சட்டத்தால் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்?

ப – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவுகளைக் கொண்ட காவல் நிலையங்கள் எங்களிடம் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண் ஒரு பெண் அதிகாரியுடன் பேச முடிந்ததற்கு நிம்மதியை உணருவார்.  விசாரணையின் போது கேமராவில் வீடியோ சாட்சியம்  சம்பந்தப்பட்டவர்களை மட்டுமே உள்ளடக்கி இருக்கும்.

ஆண்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்    பெண்கள் குறித்தும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த செயல் ஆணும் பெண்ணும் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதால்   கடினமான சூழ்நிலையாகக் கருதப்படும்.

பாதிக்கப்பட்டவர் உளவியல் அதிர்ச்சியை எதிர்க்கொண்டால், பாதிக்கப்பட்டவருக்கு  பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இழப்பீடு மற்றும் உதவியை வழங்குகிறது.

ஒரு பெண் வழக்குத் தாக்கல்   செய்யக்கூடாது  அல்லது சாட்சியளிக்கக்கூடாது   என்று அச்சுறுத்தப்படலாம், அத்தகைய சந்தர்ப்பத்தில் தண்டனை மிகவும் கடுமையானது மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் சிறப்புக் காரணங்களால் மட்டுமே ஜாமீன் பெற முடியும்.

-சீனத் சாகீர்
(ப்ரோ போனோ செயலாளர் 2020-2021)

மொழிபெயர்த்தது – எம். திவாகரணி  

இலங்கையின் சட்ட மாணவர் சங்கம்என்ற யூடியூப் சேனலில்  முழுமையான கலந்துரையாடல்மூன்று மொழிகளிலும் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php