2021 Aug 23
நம் பெற்றோர்களின் மீது நமக்கு எத்தனை ஆழமான அன்பு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களின் நிலைக்கு நாம் வருகின்றபோது, அதாவது ஒரு தந்தையாகவோ, தாயாகவோ நாம் மாறும் போது அவர்களின் அர்ப்பணிப்பை, அன்பை நம்மால் அதிகமாக புரிந்துகொள்ள முடியுகிறது.
பரந்து விரிந்த ஒரு கடற்கரை அதில் நின்றபடி எல்லையில்லாமல் விரிந்துகிடக்கின்ற கடலைப் பார்த்துக்கொண்டு, தனது மகனோடு நிற்கும் அந்த இளம் தந்தையின் நினைவுகள் அந்த அலைகளை போலவே ஆர்ப்பரிக்கின்றன. ஒரு தந்தையாக அவரது வாழ்க்கையின் அழுத்தத்தையும் ஒரு மகனாக தன்னுடைய தந்தையையும் நினைத்துப்பார்க்கிறார். அந்த நினைவுகளும் அவருடைய நிலையும் தான் இந்த கதை.
மூன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய “அலை” என்ற இந்த குறும்படம் ஒரு தந்தையை பற்றி நினைத்துப் பார்க்கும் இன்னொரு தந்தையுடைய நிலையை கூறுகிறது. படத்தின் சிறப்பம்சம் அதன் நேரமும், ஒரே இடத்தில் படமாக்கப்பட்டு இருப்பதுமே ஆகும். இசை காட்சிக்கு வலு சேர்த்திருக்கிறது. ஒரு தந்தையாக வாழ்க்கை எத்தனை சுமைகளையும் அவமானங்களையும் தந்தாலும் தன்னுடைய மகனுக்கு வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுக்கும் தந்தையின் நிலையை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
கதை மாந்தர்கள் செவ்வனே தமது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.. இருப்பினும், படத்தின் கருவிலும், அதை சொல்லிய விதத்திலும் இன்னும் தெளிவு தேவைப்படுகிறது எனத் தோன்றுகிறது. தொழில்நுட்ப அம்சங்களிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். RS Ramani யின் காட்சியமைப்பு இக்குறும்படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறதென்றால் மிகையாகாது. மிக அற்புதமான ஒளிப்பதிவு. இனிவரும் அடுத்தடுத்த படைப்புகளில் மேலும் சிறப்பாக செயற்பட இயக்குனர் குரு T.K மற்றும் அவரது குழுவுக்கும் நாடியின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
நாடி Verdict – 63/100
Video Link – https://youtu.be/dq1zXry3ZTU