அனைத்தையும் நாடி  இலங்கையில் இரத்தினக்கல் தொழிற்துறை

இலங்கையில் இரத்தினக்கல் தொழிற்துறை

2021 Sep 3

இரத்தினக்கல் தொழிற்துறையில் உலகளாவிய ரீதியில் இலங்கைக்கென்று தனித்துவமான செல்வாக்கு இருக்கின்றது. அதிலும் இலங்கைக்கே சிறப்பான நீலக்கல் இரத்தினங்களுக்கு வரலாற்று ரீதியாக உலகளவில் கேள்வி இருந்து வருகிறது. இவ்வாறாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கனிய வளங்களே முக்கிய இடத்தைப்பெறுகின்றன. இவ்வாறான கனியவளங்களின் வரிசையில் காரியம், சுண்ணாம்புக் கற்கள், களிமண் வகைகள், கனிய மணல் வகைகள், இரும்புத்தாது, உப்பு மற்றும் இரத்தினக்கல் முதலியன இலங்கையின் முக்கிய கனிய வளங்களாக இருந்து வருகின்றன. இதில் இரத்தினக்கற்களே பிரதான வருவாய் ஈட்டும் கனிம வளமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கனிய வளங்களில் அதிக அந்தியச் செலாவணியை ஈட்டித் தரும் கனிய வளமாக இருக்கின்ற அதேவேளை இலங்கை நாட்டின் ஏற்றுமதிகளில் கனிய வளங்கள் மூன்று சதவீத பங்காக இருக்கின்றமை ஆச்சரியமே. சர்வதேச விற்பனை சந்தை வீதத்தில் இலங்கை  25%  பங்களிப்பை செய்வதுடன்,  அதன் மொத்த பெறுமதி  ஆண்டொன்றுக்கு  $350 மில்லியன் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. உலகில் இரத்தினக்கற்களை உற்பத்தி செய்யும் பிரதான நாடுகளான பிரேசில், பர்மா, தாய்லாந்து, தென்னாபிரிக்கா என்னும் நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவதாகவுள்ளது. இலங்கையின் இரத்தினக்கல் தொழில்துறையின் வரலாற்று பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் குறிப்புகளாக உண்மையில் ” Ceylon Sapphire ” இனூடா உலகின் பிரீமியம் வண்ணக் கல் என்ற அடையாள அங்கீகாரத்தை இலங்கைக்கு கொடுத்துள்ளன.

இவ்வாறு இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரத்தினக்கற்களானது அதிகம் காணப்படும் பிரதேசமாக இரத்தினபுரி நகரம் காணப்படுகின்றது. இதனாலேயே தான் இலங்கையின் “இரத்தினத் தலைநகரம்” என இரத்தினபுரி அழைக்கப்படுகின்றது. இவை தவிர பண்டைய  காலத்தில் இருந்தே இலங்கையானது இரத்தினக்கற்களுக்குப் புகழ் பெற்ற நாடாக இருந்து வருகிறது.

கிரேக்க, அரேபிய, ரோம, சீன வர்த்தகர்கள் இலங்கையுடன் இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனாலேயே இலங்கை ‘இரத்தினத் தீபம்’ என்ற பெயர் பெற்று விளங்கியது. அது மட்டும் அல்லாமல் “முடிவில்லாத சுவர்க்கம்” ,“புதையல் தீவு”, “இரத்தினத் தீபம்”, “ரத்தினக் கல் தீவு” , “ரத்னா த்வீபயா”,  என பல்வேறான பெயர்களை வெளிநாட்டவர்கள் பெயரிட்டார்கள். அத்தோடு வரலாற்று குறிப்பொன்றில் ” மேகமற்ற இரவின் மின்னும் நட்சத்திரங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட மினுமினுக்கும் வண்ணமயமான ரத்தினக் கற்களின் தீவு” என் இலங்கை சிறப்பிக்க பட்டுள்ளது. ஒரு வணிக வழிகாட்டி “எரித்ரியன் கடலின் பெரிப்ளஸ்” முதல் நூற்றாண்டில் இலங்கையின் வளங்களில் இரத்தினக்கல் பற்றிய குறிப்புகளை வழங்கியுள்ளதாக கருதப்படுகிறது.

அத்துடன் பண்டைய காலத்தில், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற சந்தைகளுடன் ஜப்பான் சந்தைகளிலும் இலங்கை இரத்தினக்கற்களுக்கு பெரும் கிராக்கி இருந்ததாக உள்ளூர் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இலங்கை, பர்மா மற்றும் காஷ்மீர் இரத்தினக்கற்களுக்கே உலகளாவிய ரீதியில் பெரும் கிராக்கி இருப்பதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுவதே. இலங்கையானது இரத்தினக் கற்களை மிகப் புராதன காலத்திலிருந்து வர்த்தகம் செய்து வருகின்றது. இந்நிலையில்  இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருப்பதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தல் கைத்தொழில் அபிவிருத்தி கனிய வளங்களை மேம்படுத்தி அதன் மூலம் உச்சகட்ட வருவாயை பெறுவதாக அமையும்.

2021 இந்த ஆண்டின் முதல் அரைப் பகுதியில் மட்டும் 48 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலும் இரத்தினக் கல் ஏற்றுமதி மூலம் இலங்கை ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, 35 வீத அதிகரிப்பாக இந்த வருமானம் அமைந்துள்ளது. 1991 இல் இரத்தினக் கற்களின் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 5165 மில்லியன் ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.பிரேசிலுக்கு அடுத்தபடியாக  இலங்கை,   50 க்கும் மேற்பட்ட வகையான இரத்தினக் கற்களை உற்பத்தி செய்யும் நாடாக திகழ்கின்றது.

இத்தகைய பெறுமதி மிக்க  இரத்தினக்கற்கள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் மலையடிவாரங்களிலுமே உருவாக்குகின்றன. இரத்தினபுரி இத்தகைய ஒரு மலையடி வாரத்தில் அமைந்துள்ள நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலத்தில் ஒக்பிட்டி, அலகா ஆகிய பிரதேசங்கள் இரத்தினக்கல் அகழ்தலில் முக்கியம் பெற்றன. அத்துடன் பத்தலை, அவிசாவளை, பெல்மதுளை, பலாங்கொடை, இறக்குவானை போன்ற இடங்களும் இரத்தினக்கற்கள் காணப்படும் இடங்களாக அறியப்பட்டு உள்ளன.

இரத்தினக் கற்கள் மண்பரப்பை தோண்டப்படுதலின் மூலமே பெறப்படுகின்றன. இவ்வாறு தோண்டப்படும் சுரங்கங்களை ‘இரத்தினக்கற் சுரங்கம்’ என்பர். இதற்கு நரம்புப் படை அல்லது நாளப்படை எனும் சரளைக் கற்படை பரப்பில் தான் தோண்டப்படும். நாளப்படை என்பது அழுத்தமான வட்டக் கற்களைக் கொண்டிருக்கும். நாளப்படை வரை தோண்டப்படும் போது நாளப்படை வந்ததும் துலாவின் உதவி கொண்டு சில தொழிலாளர்கள் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றுவர், வேறு சிலர் இரத்தினக்கற்கள் உள்ள நாளப்படை மண்ணை வெளியேற்றுவர். இவ்வாறு வெளியேற்றப்படும் படல மண் ‘இரத்தினக்கற் படலம்’ என அழைக்கப்படும். மேலே கொண்டுவரப்பட்ட இம்மண் அரிதட்டில் இடப்பட்டு கழுவப்படும். கழுவப்பட்ட பின் அடையாளம் காணப்பட்ட இரத்தினக் கற்களை, அழுத்தமான வட்டக் கற்களில் இருந்து பிரித்து எடுப்பர். இத்தகைய இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடும் தொழிலாளர்களில் பலர் கூலிக்கு வேலைசெய்வது கிடையாது. மாறாக இரத்தினக்கற்களால் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி இவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இவ்வாறு நிலத்தில் இருந்து வெட்டி/ தோண்டி எடுக்கப்பட்ட இரத்தினக்கற்கள் செதுக்கி அழுத்தம் செய்யப்பட்டு முறையான வடிவம் கொடுக்கப்பட்ட பின்பே உபயோகிக்க அல்லது ஏற்றுமதி செய்ய ஏற்றனவாகின்றன. செதுக்கி அழுத்தம் செய்தலைப் ‘பட்டை தீட்டுதல்’ என்பர்.  பட்டை தீட்டுதலில் இன்றளவிலும் பழைமையான முறைகளே கையாளப்பட்டு வருகின்றன. இரத்தினக் கற்களை அகழ்தல், பட்டை தீட்டுதல், மினுக்குதல், வர்த்தகம் செய்தல் ஆகியவற்றிற்கு இலங்கையின் அரச இரத்தினக்கற் கூட்டுத்தாபனம் பொறுப்பாக இருந்து வருகின்ற அதே வேளை இரத்தினக்கல் அகழ்வினை ஊக்குவிக்கும் பொருட்டு பட்டை தீட்டும் பயிற்சி நெறிகள் இரத்தினபுரியிலும் அகலிய கொடையிலும் இக்கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொள்வனவு செய்யப்பட்ட இரத்தினக்கற்கள் ஆகாய மார்க்கத்திலோ அல்லது உரிமையாளரினால் சுமந்துகொண்டே அவற்றினை ஏற்றுமதிசெய்ய முடியும்.

இன்றுவரை சுமார் 200 தாதுக்கள் இரத்தினக்கல் வகைகளை சேர்ந்தனவாக  வகைப்படுத்தப்பட்டுள்ளன, இவ் வகைப்பாடானது கற்களின் அழகு, ஆயுள், அரிதான தன்மை முதனமையாக கொண்டு மேற்கொள்ளப்படும்.  இந்த ரத்தினங்களில், சுமார் 75 வகைகள் இலங்கையின் இரத்தினக்கல் சுரங்கங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரத்தினக்கற்களுக்கும் ஏனைய விலையுயர்ந்த கற்களுக்கும் இடையே பல தரப்பட்ட வேறுபாடுகள் உள்ளன. இரத்தினக்கல் நன்கு உறுதியான கல்லாகும் ( வைரமானது). இது துலக்கமானதும் பிரகாசம் பொருந்தியதுமானதாக புலப்படும். இரத்தினக் கற்களைச் செதுக்கி அழுத்தம் செய்யப்படுவதற்கு முன்னர் வெறுமனே அவை சாதாரண கற்களைப் போலவே தோற்றம் அளிக்கும். இரத்தினக்கற்கள் மழையினாலும் வெய்யிலினாலும் அல்லது ஏனைய இயற்கை காரணிகளாலும் பாதிப்புறுவன அல்ல. அதன் காரணமாகவே இவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆற்றுப்படுக்கைகளில் சேதமுறாது கிடைக்கின்றன.

இலங்கையில் இன்று காணப்படும் இரத்தினக்கற்களில் சபைர் என்ற நீலக்கல், ரூபி என்ற சிவப்புக்கல் என்பனவற்றைக் முக்கியமானதாகவும் அதிகம் அகழப்படும் கற்களாகவும் குறிப்பிடலாம். வைடூரியம் என்ற இரத்தினக்கல் றக்குவாணைப் பகுதியில் அகழப்படுகின்றது. புஷ்பராகம், தொறாம்த என்ற வெண்ணீலக் கற்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. அத்துடன் பதுமராகம், துதிமல், செவ்வந்திக் கல் எனும் இரத்தினக்கற்களும் உள்ளன.

இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வுத்தொழில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்வளவிற்கு இரத்தினக்கல் மெருகேற்றும் லேபிடரி தொழிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1970 களின் முற்பகுதி வரை, ஹனபோருவா என்ற பாரம்பரிய இயந்திரத்தைப் பயன்படுத்தியே இரத்தினங்களை வெட்டுவதும் மெருகூட்டுவதும் செய்யப்பட்டது. வெட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட கற்கள் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இரத்தினக்கல் வெட்டும் இயந்திரங்கள் தற்காலத்தில்  நவீன இயந்திரங்களாக பெரிதும் மேம்பட்டுள்ளன. கற்களை அளவிடுதல், அறுத்தல் மற்றும் மெருகேற்றும் தொழில்முறைக்காக பல துணை இயந்திரங்கள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன.

2016ஆம் ஆண்டளவில் உலகிலேயே மிகப் பெரிய புளு ஸ்டார் சஃபையர் எனக் குறிப்பிடப்படும் நட்சத்திர நீலக்கல் ஒன்று இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திர நீலக் கற்களில் இதுவே மிகப் பெரியது என இலங்கையில் உள்ள இரத்தினயியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதியுயர் பெறுமதியிலான இவ் நட்சத்திர நீலக்கல் 1404.49 காரட்டுகள் எடை கொண்டது என கொழும்பிலுள்ள இரத்தினக்கற்கள் பற்றி ஆய்வு மற்றும் தரநிர்ணயம் செய்யும் மையம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

அத்துடன் அண்மைக்காலத்தில் இரத்தினபுரியில் இரத்தினகல் வியாபாரி ஒருவரின் வீட்டு தோட்டத்தில் கிணறு வெட்டும்போது, உலகின் மிக பெரிய நீலக்கல்லாக கருதப்படும் ஒரு இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 510 கிலோ எனவும்  ரத்தினங்களை அளவிடும் முறையில் கருதினால் சுமார் 25 லட்சம் காரட் வரை பெறுமதியுடையது என கருதப்படுகின்றது. வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்தக் கல்லின் மதிப்பு சர்வதேச சந்தையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றளவில் இலங்கையின் இரத்தினக்கலுக்கான முக்கியத்துவத்தை எடுத்து நோக்கினால், மறைந்த முன்னாள் பிரித்தானிய இளவரசி டயானாவுக்கு இளவரசர் சார்ல்ஸினால் அணிவிக்கப்பட்ட நிச்சயதார்த்த மோதிரம் இலங்கையின் பிரபலம் வாய்ந்த Ceylon Blue Sapphire  என அழைக்கப்படும் நீலக்கல் பொறிக்கப்பட்ட மோதிரமேயாகும். இலங்கையின் இரத்தினக் கற்களை வாங்குவதில் ஜப்பான், ஹொங்கொங், சுவிற்சலாந்து, சீனா போன்ற  நாடுகள் முன்னிலை ஆர்வம் காட்டுகின்ற அதேவேளே குவைத், டுபாய், சவுதிஅரேபியா, ஐக்கிய அமெரிக்கா, சிங்கப்பூர் என்பனவும் இலங்கையின் இரத்தினக் கற்களை விலைகொடுத்து வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றமை அறியக்கூடியதாக உள்ளது. அத்துடன் கிரேட் பிரிட்டனின் ராயல் மியூசியத்தில் விலைமதிப்பற்ற கண்காட்சிகளில் இலங்கையின் இரத்தினக் கற்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலங்களில் இரத்தினக்கல் எதுவுமே கிடைக்காத நாடான ஹொங்கொங் நகரம் உலகத்தின் பிரதான இரத்தினக்கல் வியாபார மத்திய நிலையமாக உருவாகி உள்ளது. இதற்குக் காரணம் ஆபிரிக்காவில் கிடைக்கும் இரத்தினக்கற்களே ஆகும். இவ்வாறு இருக்க எமது நாட்டிலேயே இரத்தினக்கல் அகழ்விற்கான. வளங்கள் இயற்கையாகவே கிடைக்கின்ற போது நாட்டின் மொத்த தேசிய வருமானத்தினை முறையான அணுகுமுறைகள் மூலம் மேம்படுத்த இயலும் என்பது தெளிவாகுகின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தனக்கல் பரவலாக உள்ள பிரதேசங்களில் அனுமதி இன்றி இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் பாரியளவில் இடம்பெற்று வருகின்றமை கண்டிக்கத்தக்கது. இயந்திரங்களை பயன்படுத்தி சுற்றாடலைப் பாதிக்கும் வகையில் இடம்பெற்று வருகின்ற இரத்தினக்கல் அகழ்வுகள் ஆபத்துக்குரியதென்பதை அகழ்வில் ஈடுபடுபவர்கள் உணரவேண்டியமை இன்றியமையாதது. பாராட்டத்தக்க விடயம் யாதெனில் பல நூற்றாண்டுகளாக, இலங்கையில் மிகக் குறைவான  இரத்தினக்கல் சுரங்க விபத்துக்களுக்கு பாரம்பரிய சுரங்க முறைகளே காரணமாகும். இலங்கையில் பொதுவாக பயன்படுத்தப்படும் இரத்தின சுரங்க முறை குழி தலை சுரங்க முறை,ப்ரஷ் பிளே பிளேஸர் சுரங்க முறை மற்றும் நதி தோண்டல் முறை ஆகியன இலங்கையில் பொதுவாக பயன்படுத்தப்படும் முறைகளாக அறியப்பட்டுள்ளது.

ஆயினும் கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இரத்தினக்கல் அகழ்வு தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றமை கவலைக்குரியது. ஆயினும் அண்மைக் கால தகவலின் படி பயணத்தடை காலத்தில் பெண்களும் இரத்தினக்கல் அகழ்வு பணிகளில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரத்தினக்கற்கள் அகழ்வுத்தொழிற்றுறையில் மிக சிறந்த வரலாற்று அம்சங்களையும் இயற்கை வளங்களையும் ஒருங்கே கொண்ட இலங்கையானது இரத்தினக்கல் அகழ்வுத் தொழிலில் ஈடுபடும் அடிமட்ட தொழிலாளர்களுக்கு சரியான ஊதியங்களும் தொழில் பாதுகாப்பினையும் உறுதிசெய்தல் அவசியமானது. பெரும்பாலான ஊழியர்கள் மிகச்சிறிய ஒரு தொகையே நாள் கூலியாக பெறுகின்றனர் என்பது அனைவரும் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும்.

இரத்தினக்கல் அகழ்வு மற்றும் வர்த்தக முறைகளுக்காக  சுமார் 20,000 இரத்தினக்கல் தொழிலாளர்கள் பணிபுரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் சுமார் 5000 பேர் வைரம் வெட்டும் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். இவ்வாறு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான உரிய சலுகைகள் கிடைப்பதை அரசு உறுதி செய்தல் அவசியம். அதே வேளை அபிவிருத்தி அடைந்து வரும் நாடான இலங்கையின் வளர்ச்சிக்கு இரத்தினக்கல் வர்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதின் நிச்சயத்தன்மை மற்றும் மேம்பாடு தொடர்பில் அக்கறை செலுத்துவது ம் இன்றியமையாதது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php