ஆத்மா

2021 Sep 3

ஆரம்பத்தில் சுதாகரை பார்க்க எல்லோரையும் போல சாதாரணமாக தான் தெரிந்தான். ஆனால் அவன் பின்னால் அவ்வளவு பெரிய பயங்கரம் இருக்கும் என்று நித்யா கனவில் கூட நினைத்திருக்கவில்லை.

நித்யா அவனை முதன் முதலில் சந்தித்தது ஒரு தனியார் ஆசிரியர் கருத்தரங்கு முகாமில் தான்.  அந்த முகாம் மத்தியமலை நாடான கண்டியில் அமைந்திருந்தது. மனதை கவரும் ரம்மியமான இடம். சுற்றிலும் அடர்ந்த மரங்களும், நீண்ட புல்வெளிகளும் சிலு சிலு வென காற்றுமாக அந்த இடம் அத்தனை அழகாக காட்சியளித்தது.

இளம் ஆசிரியர்களுக்கான ஒரு மாத கருத்தரங்கு முகாம் அங்கு நடைப்பெற்றது. இலங்கையின்  எல்லா மூலைகளிலும் இருந்தும் இளம் ஆசிரியர்கள் அந்த முகாமிற்கு வந்திருந்தனர்.  நித்யா சுதாவை அங்கு தான் சந்தித்தாள்.

நித்யா பிறந்தது வளர்ந்தது எல்லாம் கொழும்பில் தான். வீட்டின் இரண்டாவது பெண். மூத்தவள் வெளியூரில் திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறாள். நித்யா வீட்டின் செல்லப்பிள்ளை. துடிப்பும் அழகும் கொண்ட அவள் முகத்தில் எப்போதும்  புன்னகை வீட்டிருக்கும்.

பாடசாலை வாழ்க்கை முடிந்ததும் நித்யா ஆசிரியர் படிப்பில் பட்டம் பெற்றாள். படிப்பு முடிந்ததும் அதிஷ்டவசமாக அவள் படித்த பாடசாலையிலேயே அவளுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது.  பிடித்த வேலை  படித்த பாடசாலையிலேயே கிடைத்ததால் அவளும் அந்த தொழிலை மனமார செய்து வந்தாள். முதலாம் வருட முடிவில் தவணை விடுமுறையில் இந்த கருத்தரங்கிற்கான வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருந்தது. கண்டியில் அந்த முகாம் அமைந்திருந்த சூழல் பற்றி அவள் நன்கறிந்திருந்ததாள்: மகிழ்ச்சியோடு அதில் கலந்துக்கொண்டாள்.

அங்கு அவளுக்கு கிடைத்த புது நண்பர்களில் சுதாகரும் ஒருவன். சுதாகர் அமைதியான முகம், அளவான பேச்சு, மெலிந்த உயர்ந்த தேகம், ஒடுங்கிய தாடை என காட்சியளித்தான். பெரும்பாலும் அமைதியாகவே இருந்த அவனிடம் நித்யாவாக சென்று நட்பேற்படுத்திக்கொண்டாள்.

அந்த நட்பு அந்த முப்பது நாட்களில் காதலாக மாறும் என இருவரும் எதிர்ப்பார்க்கவில்லை.  நித்யா போன்ற ஒரு பெண்ணை சுதா அதற்கு முதல் சந்தித்திருக்கவில்லை. அவனது மௌனத்தை கலைத்து மகிழ்ச்சி உண்டாக்கினாள்.

நித்யாக்கு சுதா மீது ஒரு எதிர்பாரா அன்பு ஏற்பட்டது. அந்த கருத்தரங்களில் கிடைத்த நேரங்களில் இருவரும் மனம் விட்டு நிறைய பேசினர். ஒருரை ஒருவர் நன்கு தெரிந்துக்கொண்டனர்.  வார இறுதிகளில் அவர்களுக்கு வித விதமான விளையாட்டு போட்டிகள் இருந்தது. அவற்றில் எல்லாம் நித்யா கலக்கினாள். அந்த விஷயங்களில் சுதாகர் பார்வையாளனாவே இருந்தான்.  நித்யாவை ஊக்குவித்து மகிழ்ந்தான்.  இரவு நேரங்களில் இருந்த இசை கச்சேரியில் தான் நித்யா சுதாகரை கண்டு மிரண்டு போனால், சுதாகர் வயலின் வாசிப்பதில் மிகவும் தேர்ச்சிப்பெற்றெவன்.  அவன் வாசித்து முடித்ததும் அங்கிருந்த அத்தனைப்பேரும் மெய் சிலிர்த்து போயினர்.  படு திறமைசாளியாக இருந்தான். நித்யா அவனுடைய இசையை வெகுவாக ரசித்தாள். இருவரும் நிறைய நேரம் ஒன்றாக களித்தனர். இனம் புரியாத ஒரு உறவு அவர்களுக்குள் உருவாகியது.

சுதாகர் பற்றி நித்யா தெரிந்துக்கொண்டவரை அவளுக்கு அவன் மேல் பரிதாமே உண்டானது. சுதாகருக்கு பெற்றோர்  இறுதி கட்ட யுத்தத்தில் இறந்து போயினர்.  தன்னுடைய பதின்மூன்று வயதில் இருந்தே சிறுவர்கள் காப்பகத்தில்  வளர்ந்து வந்தான் சுதாகர். இசையின் மீதிருந்த ஆர்வத்தால் முறையாக சங்கீதம் படிக்க ஆரம்பித்தான். வயலின் அவனுக்கு பிடித்தமான வாத்தியமாக இருந்தது. அவன் வயலின் வகுப்புகளுக்கு போக ஆரம்பித்தான்.

சுதாகர் நித்யாவோடு பேசும் நேரங்களில் எல்லாம் மறக்காமல் சொல்லும் ஒரு பெயர் காளி. காளிதாஸ் சுதாகரின் உயிர் நண்பன். அவனுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள இருப்பவன் அவன் தான். இசை மீதிருந்த ஆர்வத்தினால் சுதாகர் வயலினுக்கு சேர்ந்த போது தான் காளிதாசை சந்தித்தான்.  இருவரும் நேருக்கமான நண்பர்களாகிபோயினர்.  காளிதாசின் குடும்பம் சுதாகரை இன்னொரு மகனாக பார்த்து. சுதாகருக்கு காளிதாஸ் மூலமாக பெற்றோரும் ஒரு குட்டித்தங்கையும் கிடைத்தனர்.  அவர்களோடு தான் அவன் அதிக நேரம் களித்து வந்தான்.

காளிதாஸ் ஒரு விபத்தில் சிக்கியதில் கோமா நிலைக்கு சென்றுவிட்டிருந்தான். டாக்டர் அவனது நிலை இயல்புக்கு திரும்புவது சிரமம் என்று சொல்லிவிட்டார். அவனது குடும்பம் அவனை பார்த்துக்கொள்ள சிரமப்பட்டு கொண்டு இருக்க சுதாகர் அவனை தன்னோடு வைத்து பார்த்துக்கொண்டான். தன்னுடைய கடைசி காலம் வரை  அவனை தாய் நின்று பார்த்துக்கொள்வது அவனது கடமையென்றும் சொன்னான். அதனால் தனக்கு மனைவியாக வரும் பெண் முதலில் காளிதாசை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவனது ஒரே விருப்பமாக இருந்தது. சுதாகரை பற்றி நினைக்கையில் நித்யாவிற்கு பெருமையாக இருந்தது.

இருவருக்குமான கனவு ஒரு இசை பயிற்றுவிப்பு நிலையம் ஆரம்பிக்க வேண்டும் என்பதே. அதற்கான சேமிப்பு வேலைகளில் தான் இருப்பதாக  சுதாகர் சொன்னான். தான் ஆசிரியராகவும் அதே நேரம் ஒரு ஆன் லைன் வியாபாரத்திலும் ஈடுபட்டு தங்களது கனவுக்கு நிதி திறட்டிக்கொண்டு இருக்கிறேன் என்றான்.

காளிதாஸிடம் நித்யாவை  அறிமுகப்படுத்த ஆவலாக இருப்பதாக சுதாகர் சொல்லிக்கொண்டே இருப்பான். சுதாகர் சொல்லவதை கேட்க காளியை நேரில் பார்க்க அவளும் விரும்பினாள் .

கருத்தரங்கு நல்லபடியாக முடிவுக்கு வந்தது. இருவரும் ஒன்றாகவே கொழும்பு நோக்கி பேருந்தில் புறப்பட்டனர். பயணத்தின் போதும் சுதாகர் காளியை பற்றியே சொல்லிக்கொண்டு வந்தான். இருவரும் சென்று வந்த சுற்றுலாக்களின் படங்களை எடுத்துக்காட்டி அங்கு நடந்த சுவாரஷ்யமான கதைகளை சொல்லிக்கொண்டே வந்தான். இருவரும் இலங்கையின் பல மலைக்காடுகளுக்கு பயணப்பட்டு இருந்தனர். அந்த படங்களில் குறிப்பிட்ட ஒரு கடற்கரைக்கு முன்னால் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி அந்த கடலில் இருவரும் குளித்துக்கொண்டு இருந்த போது தான் சுதாகர் கட்டுபாடு இன்று நீரில் மூழ்க நேரிட்டதாகவும் காளி அவனை காப்பாற்ற முயன்று அலையில் அடித்து செல்லப்பட்டான். அவனை உயிருடன் மீட்டெடுத்த போதும் இப்போது இருக்கும் நிலையில் தான் அவனை பார்க்கமுடிந்தது  அதை சொல்லிமுடிக்கும் போது அவனது கண்கள் கலங்கியது, நித்யா அவனை அனைத்துக்கொண்டாள்.  அந்த பேருந்து பயணத்தில் முதல் முத்தமும் பரிமாறியது.

இருவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றிருந்தனர். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் தொலைப்பேசி அழைப்புகள் பறந்தன. வார இறுதி அன்று சுதாகர் அறைக்கு நித்யா வருவதாகவும் காளியை சந்திப்பதாகவும் சொல்லி இருந்தாள்.  திட்டம் படியே வார இறுதியும் வந்தது. நித்யா சுதாகர் வீட்டுக்கு சென்றிருந்தாள். சுதாகர் வீடு நகரத்துக்கு புறத்தே கொஞ்சம் தூரமாக இருந்தது. பெரிய வளாகம் கொண்ட தனி வீடு அது. ஆள் நடமாட்டம் பெரிதாக இல்லாத அமைதியான இடம்.

வீடு நன்றாக பராமறிக்க பட்டு இருப்பது தெரிந்து. வீட்டின் ஹாலில் பெரிய சையில் ஒரு வயலின் வைக்கப்பட்டு இருந்தது. திரும்பும் இடமெல்லாம் இசை சம்பத்தப்பட்ட ஏதாவது ஒரு பொருள் இருந்தது அல்லது சுதாகர், காளிதாஸின் புகைப்படங்கள் இருந்தன. நித்யாவிற்கு வீடு மிகவும் பிடித்திருந்தது தன்னுடைய நண்பனுக்காக சுதாகர் எவ்வளது சிரமமெடுத்துக்கொண்டு இருக்கிறான் என்பதை அவள் உணர்ந்தாள்.

கடைசியாக காளிதாஸின் அறைக்குள் நுழைந்தார்கள். அறை முழுக்க ஏகப்பட்ட புகைப்படங்களும் மருந்து மாத்திரைகளும் கொட்டிக்கிடந்தது. அறையின் ஓரத்தில் இரண்டு படுக்கைகள் இருந்தது ஒன்று சுதாகருடையதாக இருக்க வேண்டும் மற்றயதில் ஒரு உருவம் அமைதியாக சலனமின்றி படுத்திருப்பது தெரிந்தது. கழுத்து வரைக்கும் போர்வை போற்றப்பட்டு வெளிச்சம் கண்ணைக்கூசாது இருக்க கண்ணில் ஒரு துணி போடப்பட்டு இருந்தது. நித்யாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது. சுதாகரின் புகைப்படங்களில் எல்லாம் சிரித்தபடி உற்சாகத்தோடு இருக்கும் காளிதாஸ் இப்படி அசைவின்றி மரம் போல் சரிந்திருப்பதைப்பார்க்க மனம் நொந்தது.

சுதாகர் அருகில் சென்று காளியை அன்போடு அழைத்தான். நித்யா வந்திருப்பதாக சொன்னான். நித்யாவிற்கு தெரியும் அந்த அழைப்பு காளியை எதுவும் செய்யபோவது இல்லை ஆனால் தன் நண்பனை சுதாகர் அப்படி தான் பார்த்து வருகிறான் என்பதை அவள் அறிவாள். சுதாகர் காளியின் கண்ணில் மறைக்கப்பட்டு இருந்த அந்த சிவப்புத்துணியை எடுத்தான். நித்யாவின் கண்கள்  விரிந்தது மனம் படபடத்தது உடல் நடுக்கம் கொண்டது. காளியின் கண்கள் உண்மைக்கிடையாது. அது கைகளால் வரைந்த ஓவியம். அந்த உடலும் ஒரு உடல் கிடையாது. மரத்திலான ஒரு மனித பொம்மை அது. நித்யா பேயறைந்ததை போல பார்த்துக்கொண்டு இருந்தாள். சுதாகரிடம் எந்த மாற்றமும் இல்லை. அந்த பொம்மையை பார்த்து அவன் பேசிக்கொண்டு இருந்தான். நித்யாவை பார்த்து சொன்னான் ”காளிக்கு உன்ன பிடிச்சி இருக்குனு நினைக்குறேன் கண் சிமிட்டுறான்” என்று நித்யாவிற்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது மயங்கி கீழே சரிந்தாள்.

கண்விழித்த போது ஹாலில் உள்ள குஷனில் அவள் படுத்திருந்தாள். சுதாகர் அவளை குழந்தையை போல தட்டி எழுப்பினான். நித்யா அவள் பார்த்ததை நினைவு கூர்த்தாள். இதயம் அடித்துக்கொண்டது ஆனால் சுதாகரிடம் எந்த சலனும் இல்லை. அவன் சாதாரணமாக எப்பவும் போல இருந்தான். ”என்ன ஆச்சு நித்தி மார்னிங் சாப்பிடலயா?”  ”என்ன ஆச்சு மா?” என இயல்பாய் கேட்டான். அவள் கண்டது என்ன கனவு தானா என நினைத்தாள். அந்த அறைப்பக்கம் திரும்பி பார்த்தாள் அதன் கதவு லேசாக திறந்திருந்தது உள்ளே மெத்தையில் அவன் காளி என்று காட்டிய பொம்மை உறங்கிக்கொண்டு தான் இருந்தது. அப்படி திரும்பி சுதாகரை பார்த்தாள். அவன் அவளது பதிலுக்கு காத்திருந்தான். நித்யாவிற்கு ஒன்று மட்டும் விளங்கியது இது ஏதோ பெரிய விபரீதம் இதை பொருமையாக கையாள வேண்டும் என்று.

சுதாகரை சமாளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. வீட்டுக்கு வந்தாள், சுதாகரை தொலைப்பேசியில் அழைத்து கேட்டாள். உள்ளே அவள் பார்த்ததை பற்றி வினவினாள். சுதாகரின் பதிலில் அது ஒரு பொம்மை என்று எங்குமே புலப்படவில்லை, பதிலுக்கு அது தான் காளி, அவன் அப்படி தான் இருப்பான், இதெல்லாம் தெரிஞ்சி தானே நீ இங்க வந்த? உனக்கு என்ன ஆச்சு என நித்யாவை சந்தேகத்தோடு கேட்டான். நித்யா குழம்பினாள். அழுதாள். தான் காதலித்தவன் ஒரு மனநோயாளி என்பதை அவளுடைய மனதால் தாங்க முடியவில்லை.

நித்தியா நிதானித்தாள் கடுமையாக சிந்தனை வயப்பட்டாள். அவனுடைய இந்த நிலைக்கு என்ன காரணம் என யோசிக்கலானாள்.  சுதாகருடன் அவள் பழகியவரை அவளுக்கு  அவனிடம் அதுபோலான ஒரு அசாதரண உணர்வு ஒருக்கவில்லை. அவனை போல அன்பான ஒருவன் இருக்கவே முடியாது என்று எண்ணும் படி அவளை அவன் பார்த்து வந்தான். எல்லாம் சரியாக இருக்க இந்த விஷயம் மட்டும் ஏன் இப்படி என குழம்பினாள். எங்கோ எதிலோ ஒரு தவறு நடந்திருப்பது அவளுக்கு புரிந்தது.  சுதாகர் அவள் மீது வைத்திருந்த அன்பு பரிசுத்தமானது என்பது அவள் மனதுக்கு தெரியும். நித்யா மன உறுதியை ஏற்படுத்திக்கொண்டாள். சுதாகரின் இந்த பரிதாபமான நிலையில் இருந்து அவனை காப்பாற்றவேண்டும் என்று உறுதி கொண்டாள்.

நித்யா அடுத்த ஒரு மாத கால பகுதிக்குள்  சுதாகரின் வாழ்க்கை அவனது ரகசியங்கள் அறிய தனது முழு நேரத்தையும் செலவழித்தாள். அவர்கள் படித்த கல்லூரி, வேலை செய்த இடம், நண்பர்கள் என எல்லோரிடம் விசாரித்தாள், சுதாகர் அவனைப்பற்றியும் காளியை பற்றியும் சொன்ன எல்லாம் தகவலும் உண்மைத்தான். ஒன்றைத்தவிர, காளி இறந்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

காளிக்கு என்ன ஆனது? அந்த மரணத்தால் சுதாகருக்கு ஏன் இந்த நிலை வந்தது  என்பதை அறிய  காளி குடும்பத்தை தொடர்பு கொள்ள முனைத்தாள் அவள். பெரும் சிரமத்திற்கு பின் காளிதாஸின் குடும்பம் இருக்கும் இடத்தை கண்டறிந்தாள். காளியின் தங்கை அகல்யா நித்தியாவிற்கு நடந்ததை சொன்னாள்.

நீரில் மூழ்கி தத்தளித்த சுதாகரை காப்பாற்ற  காளி கடலில் குதித்தான். ஆனால் அவனாள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. காளி மூன்று நாட்கள் மருத்துவமனையில்   சுயநினைவு இல்லாமல் கோமா நிலையில் கிடந்து பின் சிகிச்சை பலனளிக்காது  இறந்து போனான்.  அந்த சம்பவத்தின் பின் சுதாகர் பித்து பிடித்தவனை போல மாறிவிட்டதாகவும் காளியின் இறுதி சடங்கிற்கு கூட அவன் வரவில்லை என்றும் குறிப்பிட்டாள்.  இந்த சம்பவம் நடந்து ஒரு சில மாதங்களுக்கு அவன் அவர்களின் வீட்டு பக்கமே வரவில்லை என்றும் ஒரு நாள் வந்து காளி இன்னும் சாகவில்லை. அவன் நம்மோடு தான் இருக்கிறான், என்னால் அவனது இறுப்பை உணரமுடிகிறது என்று ஏதேதோ பிதற்றினான். ஏற்கனமே அவனது இறப்பால் மனமுடைந்த கிடந்த எங்களுக்கு சுதாகரின் புலம்பல் இன்னும் விரக்தியை உண்டுசெய்தது. நாங்கள் சுதா அண்ணாவை வெறுக்கவில்லை. மாறாக அவரது மனநிலை திடம் ஆக வேண்டும் என்று தான் நாங்களும் விரும்பினோம். ஆனால் சுதா அண்ணன் எங்களின் பார்வையில் இருந்தே ஒரேடியாக விலகிவிட்டார். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சுதா அண்ணாவுக்கு எங்களை தாண்டியும் சொல்லிக்கொள்ள ஆளில்லை.

பிறகு ஒரு நாள் என் நண்பனின் உதவியோடு அண்ணா இருக்கும் இடத்தை கண்டு கொண்டோம். ஆனால் அவரின் நிலையை பார்க்கவே பரிதாபமாக இருந்தது தனியே ஒரு அறை எடுத்து அந்த அறை முழுவதும்  காளியின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, ஏதேதோ பூஜைகள், ஏதேதோ மாந்ரீக பொருட்களோடு ஒரு உருவ பொம்மையோடும் இருந்தான். தான் காளியை நெருங்கிவிட்டதாகவும் அவனது ஆத்மா தன்னோடு பேச ஆசைப்படுகிறது என்றும் சொல்லிக்கொண்டு இருந்தான்.  அவனை திட்டி அறிவுரை கூறி மறுபடி எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தோம். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அவன் மீண்டும் காணாமல் போய்விட்டான் அதற்கு பிறகு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன இப்போது நீங்கள் சொல்லும் வரை எங்களுக்கு சுதா அண்ணனை பற்றிய எந்த தகவலும் இருக்கவில்லை. அவர் எப்படி இருக்கிறார் என்று அன்பொழுக கேட்டாள். நித்யா அவளை சமாளித்துவிட்டு அங்கிருந்து வந்தாள்.

சுதாகரின் நிலைமையை முழுமையாக புரிந்துக்கொண்டாள் நித்யா. சுதாகர் காளி மீது கொண்டிருந்த அளவுக்கடந்த அன்பு அவனது இறப்பை ஏற்கவிடாது செய்துவிட்டதை புரிந்துக்கொண்டாள். கொழும்பில்  இருந்த தலைச்சிறந்த மனநிலை மருத்துவர் ஒருவரோடு சுதாகரை நெருங்கினாள். சுதாகர் எல்லாவற்றுக்கும் ஒத்துக்கொண்டான் ஆனால் காளி இறந்துவிட்டான் என்பதாக எதாவது சொன்னால் மட்டும் பைத்தியக்காரனை போல சத்தம் போட்டு கதறினான். அவனை பரிசோதித்த வைத்தியர் நித்யாவிடம் ஒன்றை மட்டும் தான் சொன்னார் சுதாகர் காளி இறந்து விட்டான் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும். அது உன்னால் தான் முடியும் என்றார்.

நித்யா முயன்றாள். தன்னுடைய முழுநேரத்தையும் இதற்காக செலவிட்டாள். அவனோடு இருந்து அவனுக்கு உண்மை எது மாயை எது என புரியவைத்தாள். அந்தமாதிரியான நேரங்களில் எல்லாம் சுதாகர் அவனது பொறுமையை இழந்தான். அழுதான், கத்தினான், அவளிடம் காளி உயிரோடு இல்லை என்பதை மட்டும் சொல்லாதே என கெஞ்சினான். சில நேரங்களில் நித்யாவை கை நீட்டி அடிக்கவும் செய்தான். நித்யா எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாள். சுதாகரை இயல்பு நிலைக்கு கொண்டு வர அவள் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் சொல்ல தயாராகினாள்.

ஒரு விடியற்காலை நித்யாவின் மொபைலுக்கு சுதாகரிடம் இருந்து அழைப்பு வந்தது. தொடர்ந்து வந்துக்கொண்டிருந்த அந்த அழைப்பால்  அவள் முழித்தாள்.  மொபைலை ஆன்சர் செய்து காதில் வைத்தால் மறுமுனையில் எந்த சத்தமும் இருக்கவில்லை. நித்யா பதறிப்போனாள் உடனடியாக புறப்பட்டு சுதாகர் வீடு சென்றாள். அவன் வீடு வந்தடையும் வரை அவனுக்கு அழைப்பை மேற்கொன்றாள் ஆனால் பதிலில்லை.  அவளிடம் இருந்து வீட்டின் இன்னொரு சாவியை பயன்படுத்தி கதவை திறந்தாள். உள்ளே அறைக்குள் சுதாகர் காளியின் பொம்மைக்கு அருகில் அவனது கையை கண்ணாடி துண்டினாள் கிழித்துக்கொண்டு ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தான். பதறிப்போன நித்யா அவனை காப்பாற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றாள்.  சிலமணி நேர போராட்டத்திற்கு பின் சுதாகர் சுயநினைவுக்கு திரும்பினான்.

சுதாகர் கண் முழித்ததுமே நித்யாவை அழைத்தான். அவளின் கைகளை பற்றிக்கொண்டு அவளிடம் ஒரு உண்மை சொல்லவேண்டும் என்று சொன்னான்.

மூன்று வருடத்தின் முன்னர் சுதாகர் அந்த கடலில் அவன் மூழ்கியபோது தன்னை காப்பாற்றியது காளி தான். ஆனால் அவன் சாக காரணமாக இருந்தது நான் தான் என்றான். நித்தியாவின் விழிகள் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தது.

சுதாகர் காளியை போல சிறந்த நீச்சல் தெரிந்தவன் இல்லை. ஆகவே அலை அவனை அடித்துக்கொண்டு சென்ற போது சுதாகர் முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழந்தான். அப்போது அவனை காப்பாற்ற காளி வந்தபோது தற்காப்பிற்காய் அவனை பிடித்துக்கொண்டு அவனை தள்ளி தான் வெளியே வர முயன்றேன். அது நான் வேண்டும் என்று செய்த செயல் அல்ல நீருக்குள் யார் மூழ்க நேர்ந்தாளும் நடக்கும் ஒரு தன்னிச்சையான நிகழ்வு. ஆனால் காளி அவன் தன்னை பிடித்துக்கொண்டாவது மேலே வரட்டும் என்று மூச்சைபிடித்து மூழ்கி தன் உயிரை மாய்த்துக்கொண்டான். நான் மட்டும் அன்று அவனை பிடித்து உள்ளே தள்ளாவிட்டால் இன்று அவன் உயிருடன் என்னோடு இருந்திருக்க கூடும். அவன் சிரித்த முகம் நின்று போனதற்கு நானே காரணம். நான் வாழும் வாழ்க்கை அவனுடையது என்று கதறி அழுதான்.  அதனால் தான் காளி இறந்ததை தான் மறக்க நினைத்து அவனுடன் வாழுவதாக நினைத்து அதையே உண்மையாக்கி கொண்டேன் என்றான்.

நித்யா அவனை அனைத்துக்கொண்டாள், கண்டிப்பாக அவன் தெரியாமல் செய்த செயல் தான் அது. நீ இயல்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே காளியுடைய ஆசையாகவும் இருக்கும் என்று கூறினாள். அவன் அவளை இறுக பற்றிக்கொண்டான். சுதாகர் சொன்ன விடயம் அவளுக்கு அதிர்ச்சி ஊட்டினாலும் அவன் பேச்சில் இருந்த தெளிவை பார்க்கும் போது அவனுக்கு உண்மை புரிந்துவிட்டது என்ற மகிழ்ச்சி உண்டாகியது. தன்னுடைய முயற்சி பயனளித்து விட்டதை நினைத்து அவள் கண்ணீர் மல்கினாள். சுதாகர் தன்னுடைய குற்ற உணர்ச்சியை வெளிப்பதியதால் அமைதியடைந்தான். நிஜ வாழ்கைக்கு வந்தான்.

அன்று மாலை சுதாகரை வீட்டுக்கு அழைத்துவரும் வழியில் அவன் சொன்ன ஒரு விடயம் இருவரையும் சிந்திக்க வைத்தது,  அதிகாலையில் தன்னுடைய வீட்டுக்கு வர எப்படி தோன்றியது என நித்தியாவை கேட்டான். அதற்கு அவள் அவனிடம் இருந்த வந்த அழைப்புக்கள் பற்றி குறிப்பிட்டாள்.  அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொன்ன சுதாகர் நேற்றைய நாள் இரவு தன்னுடைய மொபைல் மழையில் நனைந்துவிட்ட படியால் அதை கலட்டி காய வைத்துவிட்டு அதன் பின்னர் தன்னுடைய அறைக்கு சென்றதாக சொன்னான். அறையில் காளிக்கு அருகில் அமர்ந்திருந்த அவனுக்கு அந்த சம்பவத்தின் போது நடந்த நிகழ்வுகள் மனதில் வந்துக்கொண்டே இருந்ததாகவும் அது மிகப்பெரிய ரணத்தை ஏற்படுத்த, அதிகாலையில் தான் இந்த அசம்பாவிதம் நடந்தது என்றும் கூறினான். அப்படி என்றால்  அந்த அழைப்பு அது யார் செய்தது. இருவருக்குள்ளும் ஒரு குழப்பம் இருந்தது சுதாகரின் வீட்டை வந்தடைந்தனர். ஹாலில் அவன் சொன்னபடியே அவனது மொபைல் கலட்டி வைக்கப்பட்டு இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சுதாகர்  காளியின் அறையை திறந்து பார்த்தான் அங்கே காளியாக அவன் நினைத்து வாழ்ந்து வந்த பொம்மை இருக்கவில்லை.  வெறும் மெத்தை மட்டுமே இருந்தது.

எழுத்து – மஹின் சுப்பிரமணியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php