அனைத்தையும் நாடி  இலங்கையின் அரசியலில் பெண்களின் வகிபாகம்

இலங்கையின் அரசியலில் பெண்களின் வகிபாகம்

2021 Sep 22

இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் என்ற கருத்து பகிர்வை பரவலாக அனைத்து துறைகளிலும் அவதானிக்கூடியவாறு உள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையை எடுத்து நோக்கினால் பெண்களுடைய பங்கு பற்றுதல்கள் முன்னரை விட கல்வி தொழில் உட்பட அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகின்றமையை காணமுடிகிறது. அத்துடன் உலகளாவிய ரீதியில் பெண்களின் அரசியல் பங்கேற்பு தற்போது அனைத்து நாடுகளிலும் மாற்றங்களை கொண்டு வருவதாக அமைகிறது. தங்கள் சார்பாகப் பேசவும் தங்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தவும் பெண்கள் தங்கள் வாக்குரிமையைச் சரியான விதத்தில் பயன்படுத்தவும் தொடங்கியிருக்கின்றனர். உலகளவிலான பாராளுமன்றங்களில் பெண்களுடைய வகிபாகம் தொடர்பாக  ‘இண்டர் பார்லிமெண்டரி யூனியன்’ ஆய்வறிக்கையில் 1995ம் ஆண்டளவில்  11.3% ஆக இருந்த பெண்களின் பங்குபற்றல் 2020ஆம் ஆண்டில் 24.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக பொலிவியா, ஆஸ்திரியா, ஸ்வீடன், பின்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், நியூசிலாந்து ,பிரான்ஸ் போன்ற நாடுகளில் இம்மாற்றத்தை கணிசமானளவு அவதானிக்க கூடியவாறு உள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசியலில் பெண்களுடைய ஆர்வம் மற்றும் பங்குபற்றுதல்கள் தொடர்பில் நோக்க வேண்டியது இன்றியமையாதது. உலக தர வரிசையில் பெண்களது அரசியல் பங்குபெறல் கணிப்பீட்டின் படி நூற்றி எழுபத்தி ஏழாவது இடத்தில் இலங்கை உள்ளது. இலங்கையில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டுமாக இருந்தால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்கள் எந்தளவுக்கு அவசியமானவையோ, அதே போல் தான், பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது.

இதுவரை பெண் அதிபர் ஒருவரைக்கூடக் காணாத அமெரிக்க வரலாற்றில் துணை அதிபருக்கான தேர்தல் களத்தில் பிரஜைகளின் ஏகபோக வரவேற்பைப் பெற்ற கமலா ஹாரிஸ், பிரான்ஸில் அண்மையில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில், 577 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு, 223 பெண்கள் தெரிவாகியிருக்கின்றமை, ஐக்கிய இராச்சியத்திலும் அண்மையில் நடந்த தேர்தலில், 208 பெண்கள் தெரிவாகியிருந்தனர். 650 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய இராச்சிய கீழவையில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் தெரிவாகின்றமை, இதுவே முதற்தடவையாக இருக்கின்றமை, உலகளாவிய ரீதியில் அரசியல் துறையில் பெண்களுக்கான மாற்றங்களை நோக்கிய சான்றாக இருக்கின்ற போது இலங்கை அரசியலில் பெண்களுக்கான வகிபாகம் சாத்தியமற்றது என்ற எண்ணப்பாங்கு அர்த்தமற்றது.

இலங்கையின் மொத்த சனத்தொகையானது ஏறத்தாழ 21 மில்லியன் ஆகும். நாட்டின் சனத்தொகையில் பாதிக்கு மேல்(52%) பெண்களாகவே காணப்படுகின்றனர். அதாவது, சுமார் 10.5 மில்லியன் பேர். அதேபோல் வாக்களிப்பு வீதத்திலும் 50% அதிகமான சதவீதம் பெண்கள் மத்தியிலே இருக்கிறது. வாக்களிப்பில் கூடிய செல்வாக்கு கொண்டவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். ஆயினும் அரசியல் களத்தில் பெண்களோ சிறுபான்மையினராக இருக்கும் நிலையே நிலவுகின்றது. ஆனால் எம்மால் வெறுமனே 13 நாடாளுமன்ற உறுப்பினர்களையே பெண்களாக தெரிவுசெய்ய முடிகின்றது என்பது கவலைக்குரியது. பல ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன், இலங்கையில் 1931 ஆம் ஆண்டிலேயே ஆணும் பெண்ணும் சமமான வாக்குரிமை இலங்கையில் பெற்றனர். ஆனாலும் சம வாக்குரிமை பெற்று இற்றைக்கு எட்டு தசாப்தங்களை கடந்த நிலையிலும் இன்னும் இலங்கையின் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மற்றைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது.  உலகின் முதலாவது பெண் பிரதமரும், ஜனாதிபதியும் இலங்கை சேர்ந்த பெண்களே என்ற பெருமை கொண்ட ஒரு நாடான இலங்கையில் இன்று அரசியலில் பெண்களினது வகுபாக பின்னடைவு தொடர்பில் பேசிக்கொண்டிருப்பது வருத்தத்திற்குரியதே.

இலங்கையின் தேர்தல் அறிக்கையை ஆராயும் போது பெண்களுக்கான பிரதிநிதித்துவ விகிதாசாரத்தில் பாரிய குறைபாடு நிலவுகின்றதென்பது புலப்படுகின்றது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்ற வீதம் குறைவாகவே இருக்கின்றது. ஆண்களால் பெண்களைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாதா? அல்லது ஆண்களால் பெண்களுக்கான தேவைகளையும் பிரச்சினைகளையும் அரச அளவில் எடுத்துச் செல்லவும் தீர்வு பெற்றுத்தரவும் இயலாதா என்ற வினா எழுப்பப்படும் போது, இதுவரை கால அரசியல் வாழ்க்கையில், பெண்களின் பிரச்சினைகள் சரிவரக் கொண்டு செல்லப்படவில்லை என்பதே உண்மையானது. அத்துடன் இன்று வரை ஒரு மத்திய தர குடும்பப் பெண்ணுக்கோ அல்லது வருமானம் குறைந்த வறுமைப்பின்னணியை கொண்ட பெண்ணுக்கோ அரசியல் என்பது தொலைதூர வெளிச்சமாகவே இருக்கின்றது.

அரச தலையீடூகளில் பெண்களை அதிகளவில் உட்சேர்த்துக் கொள்ளும் சமூகம் பெரும்பாலும் குறைந்தளவு வன்முறையையும் அதிகளவிலான சகிப்புத் தன்மையையும் கொண்டிருக்கும்.  ஆனாலும் சமூதாய அளவில் அரசியலில் ஈடுபட எத்தனிக்கும் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு, அங்கீகாரம் அவர்களுக்கு கிடைக்குமாறு இருக்கின்றதா என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது. பல்கலைக்கழக மன்றங்களிலும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களிலும் பெண்களுடைய தலைமைப்பதவிப் பங்களிப்பு ஆக்கபூர்வமானதாகவும் உயர்வாகவும் இருக்கின்றது. ஆயினும், அரசியல் என்று எடுத்துக் கொள்ளும் போது பெண்கள் தலைமை பொறுப்புக்களை ஏற்கவும் பின்னிக்கின்றனர்.   இலங்கையில் பதியப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகள் 76 இலும் இரண்டு அல்லது ஒரு கட்சிகளில் தான் பெண்களின் பங்களிப்பு ஓரளவுக்கேனும் குறிப்பிடக்கூடியவாறு இருக்கின்றது. அத்துடன் அரசியல் பிரச்சாரத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய காரணிகளில் பிரதானமாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றது.கடந்த தேர்தல்களின் போது ஆண், பெண்களின் சமூக வலைத்தள பாவனையை ஒப்பிடுகின்ற போது பெண்களின் சமூக வலைத்தள பாவனை மிகக் குறைவாகவே இருக்கிறது.

இலங்கை தேர்தல் ஆணையகத்தின் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பான கருத்துப்படி இலங்கை கைச்சாத்திட்டுள்ள பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்ளையும் அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தின் மூலம் பெண்களின் சமமான அரசியல் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டது. அவ்வகையில் இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டதிட்ட முறைகளுக்கு அமைய பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமான சந்தர்ப்பம் மற்றும் உரிமைகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் இன்றுவரை பெண்கள் இரண்டாம் நிலைப் பிரஜைகளாகவே அணுகப்படுகின்றனர் என்று அறியப்படுகிறது. தந்தைவழி சமுதாயத்தினுள் ஆண்களை மட்டும் முன்னிலைப்படுத்திய சிந்தனைகள் மற்றும் தீர்மானங்களுக்கிடையில் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் கிடைப்பதில்லையென்ற கருத்து நிலவுவதையும் அவதானிக்க முடிகின்றது. அரசியல் பங்களிப்பு எனும் சொல் மிகப்பரந்த பொருளுடையது. இச்சொல் ஓட்டுரிமையை மட்டும் குறிப்பதன்று. ஆனால் அதேவேளை முடிவெடுக்கும் நடவடிக்கைகள், அரசியல் செயல்பாடுகள், அரசியல் விழிப்புணர்வு ஆகிய இன்னும் பலவற்றைக் குறிப்பதாகும்.

இவ்வாறாக இலங்கையின் அரசியலில் பெண்களுடைய பங்குபற்றுதல்கள் தொடர்பில் ஆராய்ந்தால் தற்போது மக்கள் பிரதிநிதிகள் நிறுவனங்களில் பெண்கள் பிரதிநிதித்துவமானது இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தில்  5.8% ஆகவும் மாகண சபைகளில் – 0 % ஆகவும் , உள்ளூர் அதிகார சபைகளில் – 1.9% காணப்படுகின்றமை வருத்தத்திற்குரியது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் பெண்களுக்கான ஒதுக்கீடுகள் இருக்கின்ற போதிலும் பல தரப்பட்ட பிற காரணிகளின் செல்வாக்கினால் அவை பெண்களால் நிரப்பப்படுவதில்லை அல்லது நிரப்ப முடிவதில்லை. ஆதலால் அரசியல் அடிப்படையில் பெண்களை வலுவூட்டலும் அரசியலில் பங்குபற்றுதல் தொடர்பான விளக்கங்களை பெண்கள் பெறுதலும் அவசியம் ஆகும்.

அதன் பொருட்டு உள்ளூரதிகார சபைத் தேர்தல்களின் சட்டத் திருத்தம், உள்ளூரதிகார சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம், அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் முகவர்கள், பெண் தொழிற்படுனர்கள் ஆகியோரை அறிவுறுத்தும் நிகழ்சித் திட்டங்கள் தேர்தல் ஆணைக்குழுவினால நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் சனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள், சர்வசன வாக்குரிமை மற்றும் உள்ளூரதிகார சபைகள் தேர்தல் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக நாடு பூராகவும் பரந்து வாழ்கின்ற பெண் தொழிற்படுனர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களூடாக தேர்தல்கள் செயன்முறைகள், சனநாயகம், சர்வஜன வாக்குரிமை மற்றும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் சட்டத் திருத்தம் தொடர்பாகவும் பெண்களின் அரசியல் பங்கேற்பு தொடர்பாகவும் பெண்களை அறிவுறுத்தும் செயலமர்வுகள் அணுகப்படுகின்றன. அத்துடன் இத்தகைய செயலமர்வுகளில் உள்ளூர் அதிகார சபை பிரதிநிதித்துவத்துக்காக பெண்களுக்காக 25% ஒதுக்கீடு மற்றும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான சமூக பிரச்சினைகள் கலந்துரையாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக 2017ம் ஆண்டின் 16ம் இலக்க சட்டத்தின் மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்படுள்ளது. இந்த முறை பெண்களை அரசியலில் உள்ளீர்க்கும் முகமாக கொண்டு வரப்பட்ட உந்துதல் ஆகும். இம்முறை மூலம் ஒவ்வொரு தேர்தல் வட்டாரத்திற்கும் வேட்பாளர்களில் குறைந்தது 10 சதவீதமானவர்கள் கட்டாயமாக பெண்களாக இருத்தல் வேண்டும். ஆகவே இம்முறை கிட்டத்தட்ட 2000க்கும் அதிகமான பெண்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமூலம் அரசியலுள் உள்வாங்கப்படுவர். இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் பெரும்பாலான கட்சிகளிடம் வேட்பாளர்களின் பட்டியலை பூர்த்தி செய்வதற்கான ஆளுமைகளுடன் திறமையான பெண்கள் இல்லை என்பதே. அதிக பெண்களை உள் வாங்குவதன் மூலம் நல்லிணக்கமும், சமாதானமும் உண்மையான சமூக அபிவிருத்தியும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணமும் விரைவில் பெற்றுக் கொள்ள வழி சமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

கடந்த கால அவதானிப்பின் படி பெரும்பாலான கட்சிகள் வெறுமனே 25% சதவீத பங்குபற்றலில் பெண்கள் இடம்பெற வேண்டும் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு பெண்களது பெயர்களை பட்டியலில் முழுமைப்படுத்தி இருந்தனர். 25% சதவீதமான பெண்களைத் தெரிவுசெய்வதை விட, தகுதிமிக்க அதிகளவிலான பெண்களைத் தெரிவுசெய்து, மாகாணசபை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தலில் பெண்களில் முன்னேற்றத்துக்கான முதலாவது படியாக, இந்தத் தேர்தலைப் பயன்படுத்த முடியுமெனும் விழிப்புணர்வை முதலில் அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  குறிப்பாக அரசியல் துறையில் பெண்களை வலுவூட்டுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகுமெனவும், அதிலிருந்து குறிப்பிடத்தக்க பயன்கள் கிடைப்பதில்லையெனவும் ஆய்வறிக்கைகள் மூலம் தெரியவருகின்றது.

இலங்கையின் அரசியலில், பெண்களை உள்நுழைப்பதற்கான சிறந்த திட்டம் அல்லது ஏற்பாடாக இவ் உள்ளூராட்சி சபைத் தேர்தலே அமைகின்றது அதனை ஆக்கபூர்வமானதாக பயன்படுத்தி உச்ச பயன் அடைய பெண்கள் முயல வேண்டும்.  அரசியல் புரிவதற்கு தகுதியான பெண்கள் இல்லை என்றும்  பெண்கள் முன்வருவதற்கு பின்னிக்கின்றார்கள் என்பதற்கு பதிலாக பெண்களுக்காக பெண்களது அரசியல் தலையீடூ உருவாக வேண்டும், இச்சமூகம் அதனை உருவாக்க வேண்டும். இங்கு பெருமளவிலான பெண்கள் அரசியலில் நுழைய விருப்பங்கள் தெரிவிக்கின்ற போதிலும் குடும்ப மற்றும் சமூக காரணங்கள், குடும்ப பொறுப்புக்கள், பிறழ்வான விமர்சனங்கள் அவர்களிற்கு முரணாக அமைகின்றது.

ஆக பெண்கள் அரசியலில் ஈடுபட குடும்ப அளவிலும் சமூக அளவிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசியம் ஆகும். ஆயினும் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர்தான் பெண்களால் அரசியலுக்குள் நுழைய இயலும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படுதல் ஆரோக்கியமானது அல்ல. மாற்றங்களை உருவாக்க முதலில் பெண்கள் மாற வேண்டும். சவால்களை ஏற்றுக்கொண்ட அரசியல் பிரவேசத்தின் மூலம் சமூக எண்ணக்கருக்களை மாற்ற இயலும். அத்துடன் அரசியல் அமைப்புக்களும் பெண்களுக்கான உரிய அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தையும் அளித்தல் அவசியம். பெண்கள் அரசியலில் பாதுகாப்பு மற்றும் போதிய ஆதரவினை கட்சிகள் உறுதி செய்தல் அவசியம். மாற்றங்களை உருவாக்க வேண்டும் எனில் முதலில் மாற்றங்களுக்கான கருத்துக்களிற்கு செயல்வடிவம் கொடுத்தல் அவசியம். ஆக பெண்களுடைய அரசியல் ரீதியான பிரவேசத்தை ஊக்குவிப்பதோடு உறுதுணையளிக்கும் சமூகச் சங்கிலிகளை வலுப்படுத்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php