2021 Oct 6
டைப் 1;
“எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை”
இவர்களை குடிகாரர்கள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவு ரகசியமாகவும் கட்டுப்பாட்டுடனும் குடிப்பவர்கள். குறிப்பாக குடும்பத்தாருக்கே இவர்கள் குடிப்பார்கள் என்று தெரியாது. மாதத்திற்கு ஒரு முறை, எப்போதோ, எங்கேயே, எந்த விதமான ரிஸ்க்கும் இல்லை என்று தெரிந்தால் மட்டுமே இவர்கள் களத்தில் இறங்குவார்கள். பெரும்பாலும் பியர் மட்டுமே குடிப்பார்கள். இவர்களை பொருத்தவரை இவர்கள் குடிக்கு அடிமை கிடையாது. இவர்கள் நினைத்தால் குடிப்பார்கள். குடித்துவிட்டு தூங்கிவிடும் சாதுக்கள்.
டைப் 2;
நான் குடிகாரன் கிடையாது
இவர்கள் மாதத்துக்கு ஒரு முறையாவது குடிப்பவர்கள். ஆனால் தங்களை குடிகாரர்களோடு ஒப்பிட இடம் கொடுக்க மாட்டார்கள். குடியை ஒரு கொண்டாட்டமாக செய்பவர்கள். ஒரு சில மாதம் கூட தாக்கு பிடிப்பார்கள் ஆனால் குடித்துவிடுவார்கள். இவர்களையும் பெரும்பாலும் வீட்டுக்கு தெரியாது. ஒரு சில குடும்பங்களுக்கு தெரிந்தாலும் இவர்களால் தொல்லை இல்லை என்பதால் விட்டுவிடுவார்கள். ஆனால் தங்களை ஒரு குடிகாரன் என்று சொல்ல யாருக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள். பணம் அதிகமாக இருந்தால் மட்டுமே குடிக்க இறங்குபவர்கள்.
டைப் 3;
எப்போது குடிக்கலாம்?
இந்த டைப் குடிகாரர்கள் வாரத்துக்கு ஒரு முறை குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். குடிக்காமல் ஒரு மாதம் கடப்பதென்பது இவர்களை பொருத்தமட்டில் பெரிய விடயம் தான். பெரும்பாலும் நண்பர்களோ அல்லது சரக்கு சக பாடிகளோ கிடைக்காத பட்சத்தில் தனியாக குடிக்க இறங்கி விடுவார்கள். மதுபான பாட்டில்களும் அவை செய்யும் லீலைகளும் நன்கறிந்தவர்கள். எந்த பாட்டில் என்ன செய்யும் என்று கதை விடுவார்கள். எப்போது எங்கே குடிக்கலாம் என்று மூளை அமைதியாக திட்டமிட்டபடியே இருக்கும்.
டைப் 4;
Mr. குடிமகன்
குடிக்கவில்லை என்றால் கை நடுங்கும். அதிகமான நேரம் தனியாக தான் குடிப்பார்கள். சக பாடிகள் இருப்பது குறைவு. குடிக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள். பெரும்பாலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சோக கதை இருக்கும். மாத வருமானத்தில், குடி ஒரு பெரும் பகுதியை எடுத்துக்கொள்ளும். சமயங்களில் குடிப்பதற்காகவே உழைப்பார்கள். பணம் இல்லாத நேரங்கள் எந்த நிலைக்கும் செல்ல கூடியவர்கள். பணக்காரர்களாக இருப்பின் சொத்தை அழிப்பவர்கள் இவர்கள் தான். இவர்கள் பகலில் கூட குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள். கண்ணில் எப்போதும் போதை தெரியும்.
டைப் 5;
Mr.90 ML
டீசன் குடிகார்கள். இவர்களும் மேலே சொன்னவர்களும் தினமும் குடிப்பவர்கள் தான். ஆனால் இந்த 90ml கமுக்கமானவர்கள். குடித்தவிடன் படுத்துவிடுவார்கள். பெரும்பாலும் மத்திய உயர் தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். வீட்டில் வைத்து தான் குடிப்பார்கள். நிம்மதியான தூக்கமே இவர்களின் எதிர்ப்பார்ப்பு. தினமும் ஒரு கட்டிங்கை போட்டு கவுந்துவிடுவார்கள். குறிப்பாக தினமும் 90ml குடிப்பது அரோக்கியம் என்று சொல்வார்கள்.
டைப் 6
நான் குடிகாரன் என்பதை நான் மட்டுமே அறிவேன்
விசித்திரமான குடிகாரர்கள். பெரும்பாலும் இவர்கள் குடிகாரர்கள் என்று யாரும் அறிய மாட்டார்கள். ஆனால் குடியில் சூரர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு என்று ஒரு நேரம், ஒரு காலம் இருக்கும் அப்போது தான் குடிப்பார்கள். எப்படியாவது இந்த பழக்கத்தில் இருந்து மீளவே விரும்புவார்கள். மனைவி மக்களிடம் குடிப்பதை நிருத்திவிட்டதாக பொய் கூட செல்லிவிடுவார்கள். என்ன செய்தாலும் குடியை விட முடியாமல் சிக்கி தவிப்பார்கள். ரகசிய குடிகாரர்கள்.