கவிதைகள் உலகை நாடி ஆசிரியத்துவம்

ஆசிரியத்துவம்

2021 Oct 5

இவ் உலகில் வாழும் ஒவ்வொரு பிரஜையுடைய எதிர்கால வெளிச்சம் அவரவர் ஆசிரியர்களே. சிறந்த ஆசான் வாய்க்கப் பெறுமிடத்து சிறந்த வாழ்வே அமையும் என்பர். மனித குலம் எப்போது உருவானதோ அப்போதிலிருந்தே கற்றல் கற்பித்தலும் நிகழ் ஆரம்பித்து விட்டது. உலகில் எத்தனை தொழில்கள் இருந்தாலும் மற்றவர்களுக்கு அறிவு எனும் வெளிச்சத்தை கொடுக்கும் ஆசிரியர் சேவைக்கு தனியிடம் உண்டு. ஆசிரியத்துவம் என்னதான் தொழில்கள் என்ற வகைக்குள் அடங்கினாலும் அதனை சிறந்த சேவை என்றே கொள்ளமுடியும். “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று கூறுவார்கள். ஒரு சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாக இருக்கின்றதென்றால் அதற்கு அர்ப்பணிப்பும் நல்லெண்ணமும் கொண்ட ஆசிரியர்கள் தான் காரணமாக இருக்க முடியும்.கல்வி என்பது இயற்கையாக எழும் வளர்ச்சியாகும். மாணவர்களின் இவ் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் உந்து சக்தியை வளங்குகின்றார்கள்.

களிமண்ணாய் கிடந்த மாணவனை இணைத்து அவனுக்கு உரு கொடுத்து அவனை பக்குவப்படுத்தி இந்த உலகிற்கு நல்லதொரு குடிமகனாய் வழங்கும் பெருமை ஆசியருக்கே பொருந்தும். ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்வில் ஏதோ ஒரு ஆசிரியரை கட்டாயம் கொண்டிருப்பர், அது பாடசாலைகளில் கற்றலை போதிக்கும் ஆசானாக இருக்கட்டும், பெற்றோராக இருக்கட்டும், அனுபவம் தந்த பாடங்களாக இருக்கட்டும், படித்துணர்ந்த புத்தகமாக இருக்கட்டும், வாழும் வழியை காட்டும் வழிகாட்டியாகவும் அறிவை போதிக்கும் அகலாகவும் இருப்பவை யாவுமே ஆசிரியமே. ஒவ்வொரு குழந்தையின் திறமையைக் கண்டறிந்து அதில் அக்குழந்தையை சாதிக்க வைக்கும் சக்தி ஆசிரியர்களிடமே உண்டு.கல்வியறிவு இல்லாத ஒரு சமூகம் ஆக்கபூர்வமான சமூகமாக இருக்காது. பண்புகள், பழக்க வழக்கங்கள், நல்லறிவு, ஞானம் மற்றும் விழுமியங்கள் போன்றனவற்றை இச்சமூகத்துக்கு போதிப்பவர்கள் நல்லாசிரியர்களாகவே இருப்பார்கள். ஆசிரியப்பணியை அறப்பணி, தர்மப்பணி, வித்யாதானம் என்றெல்லாம் போற்றப்படுகிறது. ஏனெனில் உலகில் உருவாகும் அனைத்து தொழில்களுக்கும் ஏணியாக அமைவது ஆசிரியப்பணி ஆகும்.

இங்கு மாணவர்களுக்கு எழுத்தறிவைவும் எண்ணறிவையும் எதிர்கால ஏணியாகவும் திகழும் ஆசிரியர் என்ற அடிப்படையில் அணுகுகின்ற போது,  ஒவ்வொரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி அந்த நாட்டின் வகுப்பறையில் தான் உருவாக்கப்படுகிறது. ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பது தான் ஆசிரியரின் சிறப்புகளில் மிகவும் பிரதானமாக உள்ளது. மேலும் மாணவ சமூகத்துக்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்று அனைத்தையும் ஒரு சேர கற்றுக்கொடுத்து அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, நாணயமானவனாக, அறிஞராக, மேதையாக சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் உயரிய பொறுப்பு ஆசிரியரின் சிறப்பு. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இலங்கையில் அக்டோபர் 06ம் திகதி ஆசிரியர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய தொழில் துறையினரைக் காட்டிலும்; அதிகமான பொறுப்பும், முக்கியத்துவமும் வாய்ந்தவர்களாக இந்த ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.  பெற்றோர்கள் குழந்தையை உலகிற்கு தருகின்றனர் ஆனால் ஒரு நல்ல ஆசான் அந்த உலகையே குழந்தைக்கு வழங்குபவர்களாக காணப்படுகின்றனர். நான் உயிருடன் இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கின்றேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். எனும் அலெக்ஸாண்டரின் கருத்தும் அதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது. ஒரு பிள்ளை பிறந்ததிலிருந்து ஐந்து அல்லது ஆறு வயது வரைக்கும் பெற்றோரின் வழிகாட்டலில் வளர்கின்றனர் அதற்கடுத்ததாக பாடசாலைக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரைக்கும் அப் பிள்ளையை வழிநடாத்தும் ஒரு நபராக இவ் ஆசிரியரே விளங்குகின்றனர்.

கல்வியில் ஏற்படும் முன்னேற்றமானது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது ஒரு நாட்டின் வளமான எதிர்காலம் அந்நாட்டின் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியிலேயே தங்கியுள்ளது. கல்வியின் பண்புத் தரத்தில் ஆசிரியர் கொண்டுள்ள வகிபாகம் புறக்கணிக்க முடியாதளவு பிரதானமானது. இதற்கு ஆசிரியர் தனது வாண்மைத்துவ ஆற்றல்களை விருத்தி செய்தல் அவசியம். வாண்மை விருத்திக்கு கல்விப் புலன் குறித்த விரிவான அறிவும் முயற்சியும் இன்றியமையாதவை. பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறும் நோக்குடன் மாத்திரமே மாணவர்களை தயார் செய்தல் ஆசிரியருக்குரிய பணியன்று, மாறாக ஒவ்வொரு மாணவனும் அவரவருடைய வாழ்வில் சிறக்கவும் ஒழுக்கம் மிகுந்த பிரஜையாக வாழ்வும் வழிகாட்டுதலே. சமகால உலகில் எழுகின்ற புதிய சவால்களுக்கு முகம்கொடுக்கக் கூடிய அறிகைசார் ஆற்றல்களை, உயர் நிலைப்பட்ட சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் வளர்த்தெடுப்பது ஆசிரியர்களின் சமகாலக் கடமைகளில் பிரதானமானவை.

இவ்வாறு மகத்துவம் மிக்க ஆசிரிய பணியில் இன்றியமையாதது வகுப்பறைகளே. கற்றல் கற்பித்தல் நிகழும் இடமாக மட்டும் அல்லாமல் ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியில் முக்கிய இடம் வகிக்கும் தலைவர்களை உருவாக்குவதும் வகுப்பறையே. “நாட்டின் மிகச்சிறந்த அறிவு வகுப்பறையின் கடைசி இருக்கையில் இருக்கலாம் ” என்கின்றார் அப்துல் கலாம் அவர்கள். ஆக சிறந்த கற்றல் கற்பித்தலில் வகுப்பறை முகாமைத்துவம் இன்றியமையாதது. பல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும்  நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின்  தேவையற்ற  நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு அணுகுமுறையே வகுப்பறை முகாமைத்துவமாகும்.

வகுப்பறையானது நன்கு கட்டமைக்கப்பட்ட கற்றல் கவிநிலையை ஏற்படுத்துவதாகவும், தீய நடத்தைகளைக்  கட்டுப்படுத்தி, கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். சிறந்த பண்புகளை தம்முள் கொண்ட ஆசிரியர்கள் சிறந்த வினைத்திறனான மாணவ சமூதாயத்தை உருவாக்குவர். ஆகையால் ஆசிரியர்கள் மாற்றுத்திறனை ஏற்றுக்கொள்பவர்களாகவும், மாற்றத்தினை உருவாக்குபவர்களாகவும், தனது தொழிலை வளர்ச்சிநிலைக்கு கொண்டுசெல்பவராகவும், மாணவர்களிடையே நடுநிலை பங்கினை வகிப்பவராகவும், முன்மாதிரியானவராகவும் உளவியல் நுட்பம் அறிந்தவராகவும்,ஆலாசனை மற்றும் வழிகாட்டல் தன்மையுடன் புதியவற்றை படைக்கும் ஆற்றல் கொண்டவராகவும், மரபினையும் நவீனத்துவத்தினையும் பேணும் தன்மை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு சமூகத்தின் இலட்சியங்களையும் விதிமுறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரமாக, ஒவ்வொரு சமூகத்திலும் இளைய தலைமுறையின் வளர்ச்சியைப் பாதிக்கும் நபர்கள் எப்போதும் இருக்கிறார்கள். இதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான இடைத்தொடர்பானது மிகவும் இன்றியமையாதது. ஆசிரியர்கள் பிள்ளைகளுடன் சகஜமாகவும், அன்பாகவும் பழகும் ஆற்றலைக் கொண்டிருத்தல் கட்டாயமானதாகும்.  ஆனால் இன்றைய நிலையில் அவ்வாறு எல்லோரும் நடந்து கொள்கின்றனரா என்றால் அது கேள்விக்குறியே. மாணவர்களுக்கும் கற்பிக்கும் போது ஆசிரியரும் குழந்தையாக மாற வேண்டும் அப்போதுதான்  கற்பித்தல் சிறப்படையும் அவ்வாறு இல்லாதவிடத்து இருவருக்குமான உறவு நிலையும் கற்பித்தலும் பாதிப்படைகின்றது. ஆசிரியர்கள் அறிவைப்போதிப்பவராக மட்டுமே நின்று விடாமல், மாணவருடனான உறவு நிலை, அன்னியோன்யத்தையும் ஆரோக்கியமாக பேணுதல் அவசியம் ஆகும்.

வகுப்பறையில் ஆசிரியருடைய வகிபாகம் என்று அணுகுகின்ற போது கற்பித்தல் செயன்முறையை நெறிப்படுத்துபவர் என்ற வகையில் ஆசிரியரின் பொறுப்புகள் அதிகாரங்கள் கடமைகள் ஒழுக்கம் ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியதே ஆசிரியர் வகிபாகமாகும். ஆசிரியர் வகிபாகம் வகுப்பறைக்கோ, பாடசாலைக்கோ வரையறுக்கப்பட்டதல்ல. வகுப்பறைக்கு வெளியேயும் பாடசாலைக்கு வெளியேயும் விரிவடைந்து செல்லும். மாணவரிடமும் பாடசாலைக்கு வெளியே பெற்றோர் மற்றும் சமுதாயத்தினரிடமும், ஏனைய ஆசிரியர்களுடனும், ஆசிரியர் அல்லாத வேறு அதிபர்களுடனும், குழுக்களுடனும் என்றவாறாக பல்வேறு சமூகக் குழுக்கள் மற்றும் சந்தர்ப்பங்களுடன் தொடர்புடைய பணிகள் இதில் அடங்கும். ஆசிரிய தொழிலானது வைத்திய தொழில், தாதித் தொழில் போன்ற மனிதர்களோடு ஒன்றிணைந்து வேலை செய்கின்ற தொழிலாக கருதப்படுகின்றது. ஆக கற்பித்தல் மட்டுமே ஆசிரியருடைய பணி அன்று.

அதிகாரத்தின் அடிப்படையிலும் அதிஉச்ச கட்டுப்பாட்டு விதிகளுடனும் கற்றல் கற்பித்தல் நிகழ்வதை ஆசிரியர்கள் தவிர்த்தல் வேண்டும். அனைத்து மாணவர்களும் ஓரே திறமையையோ, குணாதிசயங்களையோ கொண்டிருப்பதில்லை எனவே அவர்களுக்கான கற்பித்தல் முறைகளும் மாறுபடும் தேவைகள் ஏற்படலாம். சில மாணவர்களுக்கு கணித அறிவு அல்லாமல் இருக்கலாம் ஆயினும் கணணி அறிவு இருக்கலாம்,   விளையாட்டில் சிறந்து விளங்கும் ஒரு பிள்ளை கல்வியல் மந்தமாக இருக்கலாம்,  எனவே அவர்களுக்கு  ஏற்றால் போல் ஆசிரியர்கள் கற்பித்தல் முறைகளை கையாள்வது முக்கியமானது என்பதுடன் ஒவ்வொரு மாணவர்களுடைய இயலுமைகள் மற்றும் இயலாமைகளை கண்டறிதலும் அவசியம் ஆகும். இவ்வாறு செயற்படும் பட்சத்தில் வகுப்பறை செயற்பாடுகள் சிறப்படையும்.

இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் தத்தமது கற்றல் கற்பித்தலில் பெருமளவிலான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. அவ்வகையில்  இலங்கையை பொறுத்த வரையிலும் வகுப்பறையில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் மிகப்பிரதான சவாலாக விசேட கவனிப்புக்கள் தேவைப்படும் மாணவர்களை அடையாளம் காணுதலே. ஆசிரியர்கள் விசேட தேவையுடைய மாணவர்களை இனங்காண வேண்டியது அவசியமாகும். ஆனால் ஆசிரியர்கள் விசேட தேவையுடைய மாணவர்களை முழுமையாக இனங்காண முடியாத நிலை காணப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் விசேட தேவையுடைய மாணவர்களை இனங்காண்பது தொடர்பான பயிற்சி, அனுபவங்கள் போதுமானதாக இன்மையே. பாடசாலையில் குறித்த வகுப்பில் விசேட தேவையுடைய மாணவர்கள் இருப்பார்களாயின் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் பொறுப்புக்கூறும் நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள்.வகுப்பறையில் இவ்வாறான மாணவர்களை இனங்காண்பது முக்கிய பிரச்சினையாக ஆசிரியர்களுக்கு உள்ளது. ஒரு மாணவன் சிறந்த தலைவராக உருவாக ஆசிரியர் எந்த அளவிற்கு காரணமாக இருக்கின்றாரோ அதே அளவிற்கு ஒரு மாணவனுடைய பிறழ்வான வெளிப்படுத்துகைகளுக்கும் ஆசிரியரே பொறுப்பாவார். ஆக மாணவ பராயத்திலேயே பிள்ளைகளுடைய தேவைகள், ஆளுமைகள் போன்றவற்றில் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்துதல் அவசியம்.

அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்களுக்கு வினைத்திறன் மிக்க கற்றலை போதிக்க போதிய வளங்கள் பெரும்பாலும் பற்றாக்குறையாக இருப்பதுடன். கல்விக்கலைத்திட்டமும் பெரும்பாலும் மாணவர்களுடைய நூற்கல்வியை மையப்படுத்தியும் பரீட்சையில் சித்தி பெறுதலை குறிக்கோளாக கொண்டிருத்தலும் ஆரோக்கியமானது அல்ல. அத்துடன் காலத்திற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களும் தத்தமது அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக தொழில்நுட்ப அறிவினை குறிப்பிட முடியும். ஆசிரியர் மற்றும் சமுகத்திற்கிடையான தொடர்பும் வலுவாக காணப்பட வேண்டும். சமூகத்தின் தற்கால மற்றும் எதிர்கால தேவைகளை அறிந்து அதற்கேற்ப கற்றலை வழங்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

இவை மட்டும் அல்லாமல் ஒரு மாணவனுடைய சமூகமயமாக்கல் முகவராக செயற்பட வேண்டிய தேவை ஆசிரியருக்கு உண்டு. இதற்கு ஆசிரியர்கள் சமூகத்தை நன்கறிந்தவர்களாக இருத்தல் அவசியம். சமூக தேவைகளுக்கு ஏற்கக்கூடிய கல்வித்திட்டம் ஒன்றை ஆசிரியர் மாணவர்களுக்கு அளித்தல் வேண்டும். அது தொடர்பான கற்பித்தல் முறைகள், தேவையான உபகரணங்களை தீமானிப்பதும் ஆசிரியரே ஆகும். ஆசிரியர் ஒரு பிள்ளையை தான்வாழும் சமுதாயத்திற்கு ஏற்புடையதாக மாற்றுகிறார். இங்கு சமூகத்தின் விழுமியங்களும் பெறுமானங்களும் கற்பிக்கப்படும் இவ்விடத்தில் ஆசிரியர் ஒரு முன்மாதிரியாக நடந்து கொள்ளல் இன்றியமையாதது.

ஆசிரியர்களான ஏணிகள் சில நேரங்களில் மிதிபடுவதில் வருத்தமில்லை. அந்த ஏணிகளில் ஏறி உயரே செல்லும் மாணவர்களைப் பார்த்து அவர்கள் பெருமை கொள்வதே சிறப்பு. தன்னை விட வளர்ந்து விட்டானே என்று பொறாமைப் படாமல் பெருமைப் படுபவர்கள் ஆசிரியர்களே. ஒரு மாணவனுடைய வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் முக்கிய பங்காற்றுவது ஆசிரியர்களே. இத்தகைய மகத்துவம் மிக்க ஆசிரியத்தொழிலை பெற்றோர்களும் சமூகத்தினரும் மதிப்பதுடன் மாணவர்களும் தத்தமது ஆசிரியர்களது மதிப்பினை உணர்தல் நன்று. இவை தவிர ஆசிரியர்களும் தமது பணியின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன்படி தியாக நோக்குடன் பணிசெய்தல் ஆரோக்கியமானது. மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். வாழ்க்கை என்ற பாடத்தை கற்பித்து மாணவர்களுக்கு ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். மாணவனுக்கு அன்னை போன்று அரவணைப்பு, தந்தை போன்று கண்டிப்பு தந்து நல்லறிவு ஊட்டி சமூகத்தில் நல்ல ஒரு குடிமகனாக மிளிரச் செய்ய வேண்டிய பொறுப்பு ஆசியர்களுக்கு உண்டு. மெழுகாய் தன்னை உருக்கி மாணவர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆசிரியர்களைப் போற்றுவோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php