2021 Oct 18
உலகம் தோன்றிய காலம் தொட்டு மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவன் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு இறைத்தூதரும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காகவும் ஓரிறைக்கொள்கையை நிலை நிறுத்துவதற்காகவும் பல இன்னல்களை அனுபவித்ததோடு பல தியாகங்களையும் செய்தனர். அப்பணியினை செவ்வனே செய்தும் காட்டினர். இறைவன் ஒருவனே அவன் அல்லாஹ் மட்டுமே என்ற அடிநாதத்தில் அசைக்க முடியாதவர்களாக அவர்கள் ஒவ்வொருவரும் விளங்கினர். இவ்வாரு ஒவ்வொரு கால கட்டத்திலும் ஓரிரைக்கொள்கையின் தூய்மை மாசு படும் போதெல்லாம் அதனை பரிசுத்தப்படுத்த இறைவன் ஒவ்வொரு சமூகத்திற்கும் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். அவ்வாறே அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப் பட்டவரே எமது கோமான் முஹம்மத் ஸல் அவர்கள்.
மக்கத்து மண்ணிலே இறைவனின் கட்டளைக்கு இணங்க அமைக்கப்பட்ட கஃபா எனும் புனித ஆலயத்தை சுற்றி இஸ்மாயீல் அலை அவர்களுடைய சந்ததிகள் தமது குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டனர். காலப்போக்கில் அவர்களுடைய சந்ததியினர் கஃபாவை அண்மிய பகுதிகளில் மட்டும் வாழ முடியாத அளவு பல்கிப்பெருகினர். இதனால் கஃபா அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வேறு பகுதிகளுக்கு சென்று அம்மக்கள் குடியேரினர். அவ்வாறு செல்பவர்கள் கஃபாவினுடைய கற்களை கொண்டு சென்று ஆராதனை செய்யத் தொடங்கினர். மேலும் அம்மக்களிடையே இணைவைக்கும் பழக்கமும் தொற்றிக் கொண்டது. இப்படி படிப்படியாக இறைவன் ஒருவனே என்கின்ற உண்மை மக்கள் மனங்களில் இருந்து மறையத் தொடங்கியது. இவ்வாறே அவ் அரேபிய மக்களிடையே ஜாஹிலிய்யத் என்கின்ற அறியாமை தொற்றிக் கொண்டது. இதனாலே அக்காலம் ஜாஹிலியாக் (அறியாமை) காலம் என அழைக்கப்பட்டது.
இருப்பினும் அம் மக்களுள் இப்ராஹிமிய வழிபாடுகளின் தூய்மையைப் பேணி வந்த சிலர் இருக்கத்தான் செய்தனர். அவர்கள் ‘ஹனீப்கள்’ என்று அழைக்கப்பட்டனர். மக்களை நன்நெறிப்படுத்த இறைத்தூதர் ஒருவர் தேவை என்பதனை அவர்கள் உணர்ந்திருந்தனர்.
இவை இவ்வாறு இருக்க, ஸஹ்ரா குலத்து தலைவர் வஹ்ப் என்பவரின் மகளான ஆமினா அன்னையாருக்கும் குறைஷிக் குலத் தலைவரான அப்துல் முத்தலிபினுடைய அருமைப் புதல்வர் அப்துல்லாஹ்வுக்கும் கி.பி 569 ஆம் ஆண்டு திருமணம் நடந்தேரியது. சில காலங்களிலே ஆமினா அம்மையார் கருவுற்றார். அன்னார் கருவுற்றிருந்த வேலையில் “தன் மக்களின் எஜமானனை நீர் உமது கர்ப்பத்தில் சுமந்திருக்கிறீர். குழந்தை பிறந்ததும் கூறுவீராக: ‘தீங்கிழைப்போர் அனைவரினதும் தீங்கிலிருந்தும் பாதுகாப்பாக ஒரே இறைவனது பொறுப்பிலேயே இவரை விடுகிறேன்.’ அத்தோடு குழந்தைக்கு முஹம்மத் எனப்பெயர் சூட்டுவீராக.” என்ற ஒரு அசரீரி கேட்டது. இதன் பின் கி.பி 571ஆம் ஆண்டு ரபிஉல் அவ்வல் மாதம் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகில் அவதரித்தார்கள். குழந்தை பிறக்கும் முன்னமே அப்துல்லாஹ் அவர்கள் மரணித்து விட்டார்கள். தன் கனவரின் மரணத்திற்குப் பின்னர் ஆமினா நாயகி அவர்களுக்கு இருந்த ஒரே ஆருதல் தன் மகன் முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டுமே.
பிறந்த சில காலங்களில் ஆண் குழந்தைகளை பாலைவனத்துக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் அராபியரிடையே காணப்பட்டது. பால் குடி மறப்பதற்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் குழந்தைகளை செவிலித் தாய்மாரிடம் ஒப்படைத்து விடுவர். அவ்வாரே முஹம்மத் (ஸல்) அவர்களும் ஹலீமா என்கின்ற பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். சிறுவர் தன்னுடன் இருந்த காலமெல்லாம் பல அதிசயங்களை அவர்களால் காணக்கூடியதாக இருந்தது. சில காலங்களுக்குப் பின் மீண்டும் சிறுவர் தன் தாயாரான ஆமினாவிடமே ஒப்படைக்கப்பட்டார்கள். சிறுவயது முதலே நபியவர்கள் நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தார்கள்.
சிறிது காலத்தில் தனது ஆறாவது வயதில் தாயையும் இழந்து நபியவர்கள் அநாதையாகவே தன் பாட்டனார் அப்துல் முத்தலிபின் பொறுப்பில் விடப்பட்டார்கள். ஆமினாவும் அப்துல் முத்தலிபும் சிறுவருக்கு மகத்தானதொரு எதிர்காலம் இருப்பதை அறிந்திருந்தனர். பின்னர் தன் பாட்டனார் அப்துல் முத்தலிபும் இறந்து விடவே தனது சிறிய தந்தை அபூதாலிபின் பொறுப்பின் கீழ் சிறுவர் வந்தார். தனது சிறிய தந்தை ஏழையாக இருந்ததால் தனது வாழ்வாதாரத்திற்காக சுயமாக சம்பாதிக்க வேண்டிய நிலை சிறு வயதிலேயே நபியவர்களுக்கு ஏற்பட்டது. நபியவர்கள் தனது ஒன்பது வயதில் (சிலர் பன்னிரண்டு என்றும் சொல்வர்) ஒரு வர்த்தகக்குழுவுடன் சிரியா வரை சென்றிருந்த வேலையில் போஸ்திராஸ்க்கு அருகில் ஒரு மடத்தில் அக்குழு இளைப்பார நின்றது. அப்போது அங்கு வாழ்ந்து வந்த பஹீரா எனும் கிறிஸ்தவ மதகுரு சிறுவருடன் நடத்திய கலந்துரையாடலின் மூலம் அவர் ஒரு இறைத்தூதர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். மேலும் அபூதாலிபிடம் “உமது சகோதரனது மகனுக்கு மகத்தானதொரு எதிர்காலம் இருக்கின்றது.” என்பதையும் உறுதிப்படுத்தினார்.
நபியவர்கள் தனது 25ஆவது வயதில் கதீஜா பிராட்டியாரை மணம் முடித்தார்கள். கதீஜா நாயகி அவர்கள் திருமணம் முடித்த நாள் தொட்டு நபியவர்களுடைய அனைத்து காரியங்களுக்கும் பக்க பலமாக இருந்தார்கள். ஆரம்ப காலம் தொட்டே அராபிய மக்களிடையே இருந்த அறியாமையை நினைத்து பெரிதும் மனம் உடைந்தவராக நபியவர்கள் காணப்பட்டார்கள். அதனால் மன நிம்மதிக்காக ஹிராக்குகைக்கு தியானத்தில் ஈடுபடுவதற்காக செல்வார்கள். இந்நிலை தொடரவே, தனது 40ஆவது வயதில் ரமழான் மாதத்தில் ஓர் இரவு வேளையில் நபியவர்களுக்கு தூதுத்துவம் கிடைத்தது. இக்ரஃ – “ஓதுவீராக படைத்த உமது இறைவனில் பெயரால்” என ஆரம்பிக்கும் (குர்ஆனிலே அத்தியாயம் 96இலுள்ள 1-5 வரையான வசனங்கள்) 5 இறைவசனங்கள் நபியவர்களுக்கு அருளப்பட்டன. ஹிராக்குகையில் தான் கண்ட காட்சிகளினால் அச்சம் கொண்ட நபியவர்களை கதீஜா நாயகி அவர்கள் வரகாஃ பின் நவ்பல் என்பவரிடம் அழைத்துச் செல்லவே அவர் நபியவர்களுக்கு தூதுத்துவம் கிடைத்திருப்பதையும் அதனால் வருங்காலத்தில் நிறைய இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் கதீஜா நாயகி , அபூபக்கர்(ரழி) உட்பட ஒரு சிலரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமையால் அவர்கள் பல இன்னல்களையும் அனுபவித்தனர். இருப்பினும் அவர்கள் தம் கொள்கையிலிருந்து விடுபடவில்லை. அதேவேலை இஸ்லாம் அடிமைகளை அதிகமாக தம் வசம் ஈர்த்துக்கொண்டிருந்தது. நபியவர்கள் தம் தூதினை மக்கத்து மக்களிடையே எடுத்தியம்பிய போது அன்னாரது குடும்பத்திலிருந்தே முதல் எதிர்ப்பு தோன்றியது. மனமுடைந்து போயிருந்த நபியவர்கள் அச்சமூகத்திடையே பல அநியாயங்களுக்கு ஆளானார்கள். இருப்பினும் தன் தூதுத்துவத்தை எத்தி வைக்கவென தாயிஃப் நகருக்குச் சென்றார். சென்ற இடங்களிலெல்லாம் கல்லடிகளுக்கும் சொல்லடிகளுக்கும் ஆளாயினர். ஆரம்ப காலங்களில் உண்மையாளர், நம்பிக்கைக்குறியவர் என்றெல்லாம் போற்றப்பட்ட நபியவர்கள் தனது தூதுத்துவத்தை எத்தி வைக்க முயற்சித்த போதெல்லாம் பொய்யர், கவிஞர், ஏமாற்றுக்காரர், சூனியக்காரர் மற்றும் பைத்தியக்காரர் என்றெல்லாம் இழிவு படுத்தப்பட்டார்கள். ஆயினும் தம் கொள்கையிலிருந்து நபியவர்களை இம்மியளவும் எதிரிகளால் அசைக்க முடியவில்லை.
இந்நிலை தொடரவே யத்ரிபிலிருந்து வந்த சில மக்கள் நபியவர்களின் போதனைகளைக் கேட்டு இஸ்லாத்தில் நுழைந்ததோடு தம் தேசத்திலும் இத்தூய மார்க்கத்தினைப் பரப்பினர்.
தனது சொந்த மண்ணில் கிடைடக்காத வரவேற்பும் மரியாதையும் யத்ரிப் மண்ணில் நபியவர்களுக்கு கிடைத்தது. மக்காவில் நபியவர்களும் அன்னாரின் வழி நடப்போரும் அடைந்து வந்த துன்பங்கள் ஏராளம். எனவே நபிகளார் தம்மை பினபற்றி நடக்கும் இறைநம்பிக்கைளயாளரகளை யத்ரிப் நோக்கி புலம் பெயருமாறு ஊக்குவித்தார்கள். அதன் பின் நபியவர்களும் இறைவனின் கட்டளைப்படி யத்ரிபுக்கு ஹிஜ்ரத் (குடிபெயர்ந்தார்) சென்றார்கள். அன்று முதல் அந்த யத்ரிப் நகரம் ‘மதீனத்துன் நபி’ (நபியினுடைய நகரம்) என அழைக்கப்பட்டது. அங்கு சென்றவுடன் மதீனத்து மண்ணிலே நபியவர்கள் மஸ்ஜிதுந் நபவியைக் கட்டினார்கள். அங்கு ஒரு தூய்மையான ஆட்சிையை நிலை நாட்டினார்கள்.
நபியவர்களுடைய நற்குணங்களும் இரக்க குணமும் உயரிய பண்புகளும் குர்ஆன்வழியிலான அன்னாரது வாழ்வும் பல கல் நெஞ்சங்களையும் கரைத்து கனிகளாக்கின. நபியவர்களைக் கொலை செய்வதாக சபதமிட்ட உள்ளங்களெல்லாம் அன்னாரின் உண்மை நிலை கண்டு சன்மார்க்கத்தைப் பேணி நடந்தன. மனதில் வன்மமும் பகையுணர்வும் கொண்டு மது ,மாது ,கொலை, கொல்லை, விபச்சாரம் என எதுவெல்லாம் பெரும்பாவங்களாகக் கருதப்பட்டனவோ அவற்றையெல்லாம் சர்வ சாதாரணமாக செய்து வந்த காட்டுமிராண்டித் தனமான உள்ளங்களை ஒரு பட்டப்பெயர் சொல்வதைக் கூட மகா பாவமாக கருத வைத்து , அரக்க குணம் கொண்ட மனிதர்களை உத்தமர்களாக மாற்றிக் காட்டிய மாண்பு கண்மணிகளாரையே சாரும். தம் எதிரிகளையும் மன்னித்து விடும் அவர்களது சிந்தை எதிரிகள் மனதிலும் வியத்தகு மாற்றங்களை உண்டு பன்னின. அதனால் அவர்கள் இஸ்லாத்தை தழுவவும் செய்தனர். இதனை பின்வருமாறு அல்குர்ஆன் விளக்குகிறது. ‘மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த, மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’. (68:4)
மேலும் நபிகளாருடைய வாழ்வு மனித குலத்திற்கு ஒரு முன்மாதிரியாகவே அமைந்திருந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதனை ‘’நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.’’ ( 33:21) என ஆல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
அரசியல், குடும்ப வாழ்வு, பொதுவாழ்வு என எல்லா நிலையிலும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவே அன்னாரது வாழ்க்கை அமையப்பெற்றிருந்தது. முஹம்மத் நபி(ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் இறைவனின் கட்டளைப்படியே அமைந்திருந்தன. எந்நிலையிலும் தன் சமூகத்தாரைப் பற்றியே தவிர தனக்கென எதையும் எதிர்பாராத தூய்மையான உள்ளத்தினைக் கொண்டவராகவே நபியவர்கள் விளங்கினார்கள். மேலும் அன்னார் எந்நிலையிலும் நீதி வழுவா ஆட்சியாளராகவே விளங்கினார்கள். “தனது மகள் பாத்திமா (ரழி) அவர்கள் தவறு செய்தாலும் நான் அவரை கண்டிப்பேன்.” என்று கூறிய அன்னாரது வார்த்தைகளிலிருந்து அவர்கள் எந்த அளவு நீதி தவறாத ஒரு ஆட்சியாளர் என்பதை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
அவர்களுடைய தலைமைத்துவம் மக்கள் மனதை ஈர்கக்கூடிய வகையில் அமையப்பெற்றிருந்தது.
மதீனாவிர் அமைதியானதொரு ஆட்சி நிலவிய போதிலும் நபியவர்களின் ஆட்சியை சீர்குழைத்துஅன்னாரை அழித்து விட வேண்டுமென மக்கத்து எதிரிகளும் மதீனாவின் நயவஞசகர்கள் சிலரும் முயற்சி செய்து வந்தனர். ஆயினும் அவ்வாரான சூழ்ச்சிகளையும் எதிரிகளின் தாக்குதல்களையும் முறியடித்து மக்காவை வெற்றி கொண்டார்கள். தனக்கு பாரிய இன்னல்களைக் கொடுத்த மக்கத்து மக்களின் முன் வெற்றி வாகை சூடிக்கொண்டு நின்ற போதிலும், தம்மை எதிர்த்து நின்றவர்கள் மீது எந்தவொரு பழிவாங்கள் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார்கள். அன்னாரது பெருந்தன்மையைக் கண்டு பெரும்பாலான மக்கா வாசிகள் இஸ்லாத்தினுள் நுழைந்தார்கள். கர்வம் கொண்டவர்களாகவும் இறைவனுக்கு
இணைவைத்தும் வந்த மக்களை ஒரே இறைவனை வணங்க வைத்து அரேபிய தீபகட்பம் முழுவதிலும இஸ்லாமிய ஆட்சியினை நிறுவினார்கள்.
இவ்வாறானதொரு தூய சமூகத்தை உருவாக்கிய நம் கண்மணிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜுக்குப் பின் தனது 63ஆவது வயதிலே இவ்வுலகை விட்டு இறைவனடி சேர்ந்தார்கள். (நிச்சயமாக நாம் அனைவரும் இறைவனிடமே மீளவிருக்கிறோம்.)
அன்று தொடக்கம் இன்று வரை முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடைய பெயரைக் கேட்கும் போதெல்லாம் சஞ்சரிக்கும் நெஞ்சங்களெல்லாம் சாந்தியடைந்து கொண்டிருக்கின்றன.